கிறிஸ்துமஸ் திருவிழாவிற்கும் பிளம் கேக்கிற்கும் என்ன தொடர்பு?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கிறிஸ்துமஸ் திருவிழாவின் முக்கியமான இனிப்பாக இடம்பிடிப்பது பிளம் கேக். மற்ற கேக் வகைகளை விட, பிளம் கேக் விரும்பப்படும் இனிப்பாகவும், கிறிஸ்துமஸ் திருவிழாவில் வாழ்த்து சொல்லி பரிசாக கொடுக்கும் இனிப்பாகவும் உள்ளது. ஐரோப்பிய உணவான கேக், இந்தியாவில் கிறிஸ்துமஸ் திருவிழாவில் தவிர்க்கமுடியாத இனிப்பாகிவிட்டதற்கு ஒரு கதை இருக்கிறது. அந்த கதை இந்தியாவின் தென்பகுதியில் இருந்து தொடங்குகிறது என்றும் அந்த கதைக்கு பின்னர் பல காலமாக கிறிஸ்துமஸ் கேக் இந்தியாவிலும் பிரபலமான இனிப்பாக மாறிவிட்டது என்றும் தெரிவிக்கிறார் பிரபல சமையல் கலை நிபுணர் தாமு. ''1880களில் கேரளாவில் தலச்சேரி பகுதியில் உள்ள பிஸ்கட் தயாரிப்பாளரான மாம்பள்ளி பாபு என்பவரிடம் முர்டாக் பிரவுன் என்ற ஆங்கிலேயர் ஐரோப்பாவில் இருந்து கொண்டுவந்திருந்த கேக் ஒன்றை காட்டினார். அதேபோல கேக் ஒன்றை செய்துதரமுடியுமா என கேட்டுள்ளார். கேக் தயாரிக்கப்பட்ட விதத்தை விளக்கியுள்ளார்.
மாம்பள்ளி பாபுவிடம் அவர் கேக் தயாரிக்க தேவையான ஒரு சில பழங்கள்(dry fruits), பொருட்களையும் கொடுத்துள்ளார். கேக் தயாரிக்கும்போது பிரெஞ்சு பிராந்தியை அதில் சேர்க்கவேண்டும் என்றார். மாம்பள்ளி பாபு எல்லாபொருட்களுடன், தலசேரயில் கிடைக்கும் பழத்தை சேர்த்து அவன்(oven) இல்லாமல் கேக் தயாரித்தார். அந்த கேக்தான் முதன்முதலில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் கேக்,''என்கிறார் தாமு.
''கேரளாவில் மாம்பள்ளி பாபு செய்த கேக் இந்தியாவில் பல இடங்களுக்கும் பரவியது என்றும் தற்போதும் மாம்பள்ளி பாபுவின் குடும்பத்தினர் பேக்கரியை நடத்திவருகிறார்கள். அன்றில் இருந்து இந்தியாவில் பல இடங்களிலும் பிளம் கேக் கிறிஸ்துமஸ் திருவிழாவில் தரப்படும் இனிப்பாக உள்ளது. இந்த கேக்கில் பலவகையான பழங்கள், ஆரஞ்சு தோல், பேரீச்சம்பழம், பாதாம்,முந்திரி போன்றவை ஒரு மாத காலத்திற்கு வைன் அல்லது ரம்மில் ஊரவைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் விழாவுக்கு முந்தைய நாள் தயாரிக்கப்படும்.
ஆரம்பத்தில், ஆங்கிலோ இந்தியன் குடும்பத்தினர்தான் வீடுகளில் கேக் செய்தார்கள். 1970களில் மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பது ஒரு நிகழ்வாக நடைபெற்றது. அதன் பின்னர், அதனை ஒரு விழாவாக பல ஓட்டல்களிலும் நடத்த தொடங்கினார்கள். தற்போது, வீட்டில் கிறிஸ்துமஸ் கேக் செய்வதை பலர் ஒரு தொழிலாக செய்கிறார்கள்,''என்கிறார் தாமு.
மேலும், பிளம் கேக் என்ற பெயர் வர காரணம் என்ன என்று கேட்டபோது, ''ஐரோப்பிய நாடுகளில் திராட்சை வகைகள் அதிகமாக விளையும். பலவகையான திராட்சைகளை கேக்கில் சேர்ப்பார்கள். திராட்சைகளை பிளம் என்று அவர்கள் சொல்வது வழக்கம். அதை முன்னிறுத்தி கூட இந்த பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக பிளம் கேக்கில் பிற கேக் வகைகளில் இருப்பதுபோல கிரீம் இருக்காது, திகட்டும் சுவை ஏற்படாது, ஒரு கசப்பு சுவை சாப்பிட்டு முடிக்கும்போது ஏற்படும், அது ரம் அல்லது வைன் பானத்தில் திராட்சைகள் கலந்திருப்பதால் ஏற்படும் சுவை,''என்கிறார் தாமு.

பட மூலாதாரம், Chef Damu
கிறிஸ்துமஸ் விழாவில் பிளம் கேக் இடம்பிடித்ததற்கு மதரீதியான காரணமும் உண்டு என்கிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த அருட்தந்தை சர்ச்சில். கிறிஸ்துமஸ் விழாவிற்கு முந்தைய இரண்டு நாட்கள் விரதம் இருக்கும் நடைமுறை ஐரோப்பாவில் இருந்தது என்றும் விரதத்தில் இருந்து விருந்துக்கு செல்வதற்கான உணவாக பிளம் கேக் கருதப்பட்டது என்றும் தெரிவிக்கிறார். ''பண்டைய காலத்தில், ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் விழாவின் முந்திய இரண்டு நாட்களுக்கு விரதம் இருப்பவர்கள், இனிப்பு சேர்ந்த கஞ்சியை அருந்தி விரதத்தை முடிப்பார்கள். அந்த கஞ்சியில் பலவிதமான தானியங்கள், திராட்சைகள் அடங்கியிருக்கும். கஞ்சியில் சேர்க்கப்பட்ட பொருட்கள் காலத்திற்கு ஏற்ப மாற தொடங்கின. அதில் மாவு சேர்க்கப்பட்டு, பழக்கலவைகள் என பிற பொருட்கள் சேர்க்கப்பட்டு பின்னர் கேக் வடிவம் வந்தது. கடந்த 100 ஆண்டுகளில் பிளம் கேக் பரிசளிப்பது என்பது பல வீடுகளில் பின்பற்றப்படுகிறது,''என்கிறார் அருட்தந்தை சர்ச்சில்.

பட மூலாதாரம், Getty Images
'அறியப்படாத கிறிஸ்துவம்' என்ற நூலை எழுதியுள்ள நிவேதிதா லூயிஸ் பேசுகையில்,
''நம் ஊர்களில் கிறிஸ்துமஸ் பண்டிகைகாக கேக் செய்யும் நடைமுறை ஆங்கிலேயர் காலத்தில் உருவானதுதான். கேக் என்பது மேற்கத்திய உணவாக இருந்தாலும், வீடுகளில் கேக் செய்யும் நடைமுறை பல ஊர்களில் தற்போது காணப்படுகிறது. சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு பழங்களை ரம்மில் ஊறவைப்பார்கள். கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாளில் இந்த கேக் செய்வார்கள். சென்னையில், ராயபுரம் பகுதியில், பல கேக் கடைகளில், கேக்கில் சேர்க்கவேண்டிய பொருட்களை தனியாக கொடுத்துவிடுவார்கள், அவர்களின் சுவைக்கு ஏற்ப கேக் செய்து தரப்படுகிறது,''என்கிறார்.
மேலும் தமிழகத்தின் பல கிராமங்களில், பாசிப்பருப்பு சுழியம், பனைவெல்ல கொழுக்கட்டை மற்றும் அச்சுமுறுக்கு செய்யும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













