தமிழர் தேவசகாயத்துக்கு புனிதர் நிலை - நீண்ட இழுபறிக்கு பிறகு அங்கீகாரம், யார் இவர்?

பட மூலாதாரம், அமலகிரி எழில்
- எழுதியவர், மரிய மைக்கேல்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் முதல் மறைசாட்சியாக அறிவிக்கப்பட்ட தேவசகாயம், மே மாதம் 15ஆம் தேதி புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார். இதையொட்டி வத்திக்கானின் செயின்ட் பீட்டர் பசிலிக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தேவசகாயத்துக்கு புனிதர் நிலை அறிவிக்கப்பட்டது.
முன்னதாக நடைபெற்ற கலாசார நிகழ்வின்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அமைச்சர்கள் மனோ தங்கராஜ் , செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "தமிழக மண்ணிற்கு பெருமை சேர்க்கும் விதமாக நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழக மக்கள் சார்பில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி. அன்பு தான் எல்லாம் என்றிருக்கும் இந்த உலகில் அன்பைப் பரிமாறி கொள்ளத்தான் அன்பு மூலம் உங்களுக்கு நன்றி சொல்ல தான் முதல்-அமைச்சர் எங்களை இங்கு அனுப்பினார்" என்று தெரிவித்தார்.
இதுவரை புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்ட புனித அல்போன்சாள், புனித அன்னை தெரசா அனைவரும் ஏதாவது ஒரு துறவற சபையை சார்ந்தவர்கள். ஆனால், இந்தியாவில் பொதுநிலையினர் (சாதாரண மனிதர்) புனிதராக உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
பிறப்பு
வாசுதேவன் நம்பூதிரிக்கும், தேவகி அம்மையாருக்கும் மகனாக 1712ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி இந்து சமயத்தில் நாயர் குலத்தில் பிறந்தவர் தேவசகாயம். இவரது இயற்பெயர் நீலகண்டன்.
சிறுவயது முதலே தன் சமயத்தின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு எல்லா தெய்வங்களுக்கும் படையல் வைத்து அவர் வழிபட்டார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் புலமை பெற்றிருந்த அவர், வில்வித்தை, வர்ம கலை மற்றும் போர் பயிற்சியும் மிகச் சிறப்பாக கற்று தேர்ந்திருந்தார்.
அரசுப்பணி
திருவிதாங்கூர் மன்னரின் சமஸ்தானத்தில் ஒரு சாதாரண படைவீரராக வாழ்வை தொடங்கிய நீலகண்டன், பின்னாளில் அவருடைய புலமையாலும், அறிவாற்றலாலும், பத்மநபபுரம் நீலகண்டசுவாமி திருக்கோவிலின் அதிகாரியாக அமர்த்தப்பட்டார். அவருடைய நேர்மையான செயல்பாட்டால் கவர்ந்திழுக்கப்பட்ட திருவிதாங்கூர் மன்னர், நீலகண்டனை தன்னுடைய கருவூல அதிகாரியாக நியமித்தார்.
கடற்படை தலைவரோடு தொடர்பு

பட மூலாதாரம், Getty Images
1741-ஆம் ஆண்டு நெதர்லாந்தை சேர்ந்த கடற்படை தலைவராக விளங்கிய எஸ்தாக்கி டிலனாய், குளச்சல் போரில் தோல்வியை தழுவினார்.
சிறை கைதியான டிலனாயின் ஒவ்வொரு செயலும் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவுக்கு திருப்தியையும், நம்பிக்கையும் கொடுக்கவே, திருவிதாங்கூர் படையை வழிநடத்தும் பொறுப்பை டிலனாயிடம் மன்னர் ஒப்படைத்தார்.
எஸ்தாக்கி டிலனாய் தலைமையில் 1741 முதல் 1745 காலகட்டத்தில் உதயகிரி கோட்டை நவீனமயமாக்கப்பட்டபோது, கருவூல அதிகாரியாக செயல்பட்டு கொண்டிருந்த நீலகண்டனுக்கு, டிலனாயோடு பழகும் வாய்ப்பு கிடைத்தது. விளைவு, இருவரும் நண்பர்களாக மாறினர்.
இக்காலகட்டத்தில்தான் மேக்கோடு பகுதியை சேர்ந்த பர்கவியம்மாள் என்ற நாயர் குல பெண்ணை நீலகண்டன் திருமணம் செய்து கொண்டார்.
1744-ஆம் ஆண்டளவில் நீலகண்டன் தனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும் அனுபவித்த ஏராளமான துன்பங்கள் தெய்வத்தின் கோபத்தால் ஏற்பட்டது என்று நீலகண்டன் கலங்கினார்.
மனமாற்றம்
நீலகண்டனின் எல்லா துன்பங்களையும் துயரங்களையும் கேட்டறிந்த டிலனாய், விவிலியத்திலிருந்து சில நிகழ்வுகளை எடுத்து சொல்லி ஊக்கமூட்டினார்.
குறிப்பாக, யோபுவின் வாழ்வில் ஏற்பட்ட எல்லா துன்பங்களையும் கடவுளின் அளவில்லா அன்பு அவரை காத்து வழிநடத்தியதையும் விளக்கி சொன்னார்.
இதனை கேட்ட நீலகண்டன் கிறிஸ்தவத்தை முழுமையாக நம்ப தொடங்கினார்.
வடக்கன்குளம் சென்ற நீலகண்டன் அருட்பணி. புட்டாரி அவர்களை சந்தித்து கிறிஸ்தவராக மாறி திருமுழுக்கு பெறுவதற்கு விரும்புவதாக தெரிவித்தார்.
ஆனால் நீலகண்டன் உயர் குலத்தை சார்ந்தவராகவும், உயர் பதவியில் இருந்ததாலும் கத்தோலிக்க இறைநம்பிக்கையை ஏற்றுக்கொள்வதால் அவருடைய உயிருக்குகூட உத்தரவாதம் இருக்காது என அறிந்திருந்த அருட்பணி. புட்டாரி திருமுழுக்கு (ஞானஸ்தானம்) கொடுக்க காலம் தாழ்த்தியோடு, கிறிஸ்தவ மதத்தை நன்கு கற்றறிய சொன்னார்.
உயர்குலத்தைச் சார்ந்த ஒருவர் கிறிஸ்தவராக மாறுகின்றபோது சமூகத்திலிருக்கின்ற உயர் மதிப்பை இழக்க நேரிடும். ஏனெனில் தொடக்க நிலையில் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை தழுவியவர்கள் சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள். ஆனால், நீலகண்டன் தன்னை தாழ்த்திக்கொள்ள தயங்கவில்லை.
திருமுழுக்கு (ஞானஸ்தானம்) பெறுதல்

அருட்பணி. புட்டாரி நீலகண்டனின் நம்பிக்கை வாழ்வை கண்டு அதிசயித்து, அவரது 32-ஆவது வயதில், 1745-ஆம் ஆண்டு மே மாதம் 14-ஆம் தேதி திருமுழுக்கு கொடுத்தார். (பைபிளில் "லாசர்" என்பது தமிழில் தேவசகாயம் என மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.)
திருமுழுக்கு பெற்ற தேவசகாயம் தன்னுடைய மனைவி பர்கவியம்மாவையும் வடக்கன்குளம் அழைத்து சென்று அவரும் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை ஏற்று "ஞானப்பூ" என்ற பெயரில் திருமுழுக்கு பெற்றார். (தெரசா என்பதன் தமிழாக்கம்)
தொடங்கிய நெருக்கடி
நீலகண்டன் கிறிஸ்தவராக மாறிய செய்தி கேட்டு மன்னர் ஆச்சரியப்பட்டார். கத்தோலிக்க கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டதால் ஏராளமான அவமானங்களுக்கும், துன்பங்களுக்கும் தேவசகாயம் ஆளானார். அவர்மீது ஏரளமான பொய் குற்றச்சாட்டுகள் புனையப்பட்டன.
தேவசகாயம் ஏராளமான மனிதர்களை மதம்மாற்றிக் கொண்டிருக்கிறார். அவரை உடனே கைது செய்யவில்லை என்றால் மன்னர் பின்பற்றி வரும் மதம் அழிந்து போய்விடும் என மன்னரிடம் பொய்யுரைத்தபோது அதை உண்மையென நம்பி மன்னன் அவசரமாக ஆணை பிறப்பித்தார். தேவசகாயம் திருமுழுக்கு பெற்று நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் 1749-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள் கைது செய்யப்பட்டார்.
சிறையில் தேவசகாயம்

கைது செய்யப்பட்ட தேவசகாயம் மன்னரின் முன் நிறுத்தப்பட்டு, கத்தோலிக்க கிறிஸ்தவ நம்பிக்கையை மறுதலிக்க கேட்டுக்கொள்ளப்பட்டார். மறுதலிக்காவிட்டால், கடும் தண்டனை வழங்கப்படும் என எச்சரித்த பின்பும் தேவசகாயம் கத்தோலிக்க நம்பிக்கையிலிருந்து பின்வாங்கவில்லை.
உயிரை கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டாலும் கிறிஸ்துவை மறுதலிக்கமாட்டேன் என்பதில் மிக உறுதியாக இருந்தார் தேவசகாயம்.
கடும் கோபம் கொண்ட அரசன் தேவசகாயத்தை சிறையில் அடைக்க கட்டளையிட்டான். பின்னர், மரண தண்டனை நிறைவேற்ற ஆணை பிறக்கப்பட்டது.
அனுபவித்த சித்ரவதைகள்
எருக்கம் பூ மாலை அணிவித்து பதினாறு நாட்கள் கால்நடையாக நடக்கவைத்து தேவசகாயத்தை துன்புறுத்தினார்கள். எருமையின் மீது ஏற்றி கைகளை பின்புறமாக கட்டி அமர சொல்லி எள்ளி நகையாடி, முட்கள் நிறைந்த கம்பால் அவரைத் தாக்கி கொடுமைப்படுத்தினார்கள்.
காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்த நிலையில் உடலில் மிளகு தூள் பூசி கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்தும் சித்ரவதை செய்தார்கள்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் எவரும் கிறிஸ்தவத்தை தழுவக்கூடாது, தேவசகாயத்தின் வாழ்க்கை எல்லாருக்கும் பாடமாக இருக்க, அவரை பல இடங்களுக்கு இழுத்துச் சென்று துன்பப்படுத்தினர்.
பாறையில் இருந்து தோன்றி தாகம் தணித்த நீர்

இந்த சித்ரவதைகளின்போது புலியூர்குறிச்சி என்ற இடத்துக்கு வந்தபோது தேசகாயம் மிகவும் களைத்து, தாகமுற்றார். யாரும் தண்ணீர் கொடுக்காததால் கண்ணீரோடு பிரார்த்தனை செய்து, தன் முளங்கை முட்டால் பாறையில் இடிக்க அதிசயமாக பாறையிலிருந்து நன்னீர் சுரந்தது. தாகம் தீர தண்ணீர் குடித்தார். இன்று அந்த பாறை முட்டிச்சான் பாறை என்றழைக்கப்படுகிறது.
புலியூர்குறிச்சியிலிருந்து பெருவிளை என்ற இடத்துக்கு இழுத்து சென்று வேப்பமரம் ஒன்றில் மிக இறுக்கமாக கட்டி வைக்கப்பட்டார். அவரை அமரவும், துங்கவும் விடாமல் ஏறக்குறைய ஏழு மாதங்கள் துன்புறுத்தினர்.
ஆரல்வாய்மொழி சிறையில்...
இறுதியாக, ஆரல்வாய்மொழி கொண்டு சென்று அங்குள்ள சிறையில் அடைத்தார்கள். மலை பகுதியாக இருந்ததால், அதிக மக்கள் நடமாட்டம் இல்லாத அங்கு, இரகசியமாக அவரை கொலை அங்கு கொண்டு சென்றிருந்தனர்.
தேவசகாயம் ஆரல்வாய்மொழியில் இருப்பது மக்களுக்கு தெரிய வந்து, பலரும் வந்து சந்தித்தனர்.
மரணதண்டனை

தேவசகாயத்தை இனியும் உயிரோடு விட்டால் கிறிஸ்தவம் அதிகமாக வளரும் என அஞ்சிய ஆட்சியாளர்களை விரைவாக அவரை கொலை செய்ய திட்டம் தீட்டினர்.
1752ஆம் ஆண்டு சனவரி 14ஆம் நாள் இரவு படைவீரர்கள் காற்றாடிமலை என்னும் பகுதிக்கு இழுத்து வந்து, உயர்ந்த மலையில் ஏற கட்டாயப்படுத்தினர்.
தேவசகாயத்தால் மலையில் ஏற இயலாத தால், ஒரு கம்பில் கட்டி சுமந்து மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.
சாவது உறுதி என்பதெரிந்து கொண்ட கடைசி இறைவேண்டலுக்காக நேரம் கேட்டார்.
இறுதி இறைவேண்டல் முடித்த பின் படைவீர்கள் அவரை மலையில் நிற்கவைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றனர்.
கத்தோலிக்க மறைக்காக கொல்லப்பட்ட அவரது சடலத்தை யாரும் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக, உடலை விலங்குகளுக்கு இரையாக முட்புதருக்குள் வீசினார்கள்.
தேவசகாயத்தின் உடலை ஐந்து நாட்களுக்கு பிறகு கண்டுபிடித்த கிறிஸ்தவ மறைபணியாளர்கள், கிடைத்த பாகங்களை கோட்டார் தூய சவோரியார் பேரலாயத்தில் பீடத்தின் முன் அடக்கம் செய்தார்கள்.
ரோமுக்கு அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images
தேவசகாயத்தின் வீர மரணத்தை வீர மரணத்தை பற்றி அப்போதைய கொல்லம் மறை ஆயர் மிகச்சிறந்த உரையாற்றினார். அதன் பின்பு, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உரோமைக்கு அனுப்பப்படும் அறிக்கையில், பல பக்கங்கள் தேவசகாயத்தின் வீர மரணத்தை பற்றி எழுதப்பட்டுள்ளது.
அருளாளர் நிலை
தேவசகாயம் டிசம்பர் 2, 2012 அன்று அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். திருத்தந்தை பதினாறம் பெனடிக்ட் அவர்களின் இந்திய பிரதிநிதியாக கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ நிகழ்வுக்கு தலைமை தாங்கினார். இந்நிகழ்வு கோட்டாறு மறைமாவட்டத்தில் நடைபெற்றது
புனிதர் நிலை
அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டு பீட வணக்கத்திற்குரியவர் என்ற நிலையில், விரைவில் புனிதராக அறிவிக்கப்படுவதற்கு அனைத்து பணிகளும் விரைவாக நடந்தன. இந்தியாவின் முதல் மறைசாட்சி (martyr) புனிதராக அறிவிக்க திருத்தந்தை (போப்) பிரான்சிஸ் அவர்கள் 21-02-2020 அன்று புனிதர் பட்டத்திற்கு பரிந்துரைக்கும் பேராயத்தின் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, 2022ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி தேவசகாயம் புனிதர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












