ரஷ்யா - யுக்ரேன் போர்: 2023-ல் நடக்க வாய்ப்புள்ள 5 சாத்தியங்கள்

பட மூலாதாரம், Getty Images
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கி பத்து மாதங்கள் கடந்துவிட்டன. போரில் ஈடுபட்டுள்ள இந்த இரண்டு நாடுகளிலும் 2023இல் களநிகழ்வுகள் எவ்வாறு அமையும் என்பதை ராணுவ ஆய்வாளர்கள் சிலரிடம் கேட்டோம். வரும் ஆண்டிலாவது இந்த போர் நிறைவடையுமா? அப்படி நடந்தால் அம்முடிவு போர்க்களத்தில் அமையுமா அல்லது பேச்சுவார்த்தையின் மூலமான தீர்வாக இருக்குமா? இல்லையென்றால் 2024ஆம் ஆண்டும் இப்போர் தொடருமா?
"முக்கியத்துவம் பெறும் வசந்தகாலம்"
மைக்கேல் கிளார்க், பிரிட்டன், எக்ஸிடெர்
உத்தியியல் ஆய்வுகள் நிறுவனத்தின் இணை இயக்குநர்
பரந்துவிரிந்த யூரேசியா பகுதிகளில் உள்ள நிலப்பரப்பை ஆக்கிரமிக்க முற்படும் நாடுகள் பெரும்பாலும் குளிர்காலங்களில் தடுமாறும். நெப்போலியன், ஹிட்லர் மற்றும் ஸ்டாலின் அனைவரும் தங்கள் படைகளை கடும் குளிர்காலத்தில் இப்பகுதிகளில் வழிநடத்த வேண்டியிருந்தது. ஆனால், தற்போது புதினின் படைகள் பின்னோக்கிச் செல்கின்றன. வசந்த காலத்தில் ஒரு புதிய தாக்குதலை மேற்கொள்வதற்காக புதின் தனது படைகளை தயார்படுத்துவதற்கான முயற்சி இது. இரு தரப்பினருக்கும் ஓய்வு தேவை. ஆனால் யுக்ரேனியர்கள் சிறப்பான தளவாடங்களோடு தொடர்ந்து செல்வதற்கான உந்துதலையும் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் டான்பாஸ் பகுதியிலாவது ரஷ்யா மீது அழுத்தத்தைச் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
கிரெமின்னா மற்றும் ஸ்வடோவ் பகுதிகளில் உள்ள ரஷ்யப் படைகளை 40 மைல் தொலைவிற்கு பின்வாங்கச் செய்து தங்களது அடுத்த இயற்கை அரணை நோக்கித் தள்ளுவதற்கான முயற்சியில் வெற்றிக்கு அருகில் இருக்கின்றனர் யுக்ரேன் படையினர். இது பிப்ரவரியில் ரஷ்யா போரைத் தொடங்கிய எல்லைப்பகுதி அருகே இருக்கும். உடனடியாக ஒரு வெற்றி கிடைக்கலாம் என்பதால் யுக்ரேன் தற்போதைக்கு தனது முயற்சியை நிறுத்தாது. அதேபோல, கெர்சன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து தென்மேற்கில் யுக்ரேன் தாக்குதல்கள் சற்று இடைநிறுத்தப்படலாம். கிரைமியாவிற்குள் நுழைவதற்கான ரஷ்யாவின் சாலை மற்றும் ரயில் இணைப்புகளைக் கைப்பற்றும் வகையில் டினிப்ரோ ஆற்றின் கிழக்குப் பகுதியை யுக்ரேன் கடப்பது கடினமான காரியமாக இருக்கலாம். ஆனால், யுக்ரேன் ஓர் எதிர்பாரா தாக்குதலைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஒருபோதும் நிராகரிக்க முடியாது. வசந்தகாலத்தில் யுக்ரேனின் தாக்குதல் எப்படி அமைகிறது என்பது 2023இல் ரஷ்யாவின் தலைவிதியைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும். புதிதாக அணிதிரட்டப்பட்ட துருப்புகளில் சுமார் 50,000 பேர் ஏற்கனவே களத்தில் இருப்பதாக புதின் ஒப்புக்கொண்டுள்ளார். இப்போது புதிதாக அணிதிரட்டப்பட்டவர்களில் மேலும் 250,000 பேர் பயிற்சியில் உள்ளனர். அந்த புதிய ரஷ்யப் படைகளின் செயல்பாடுகள் போர்க்களத்தில் கணிக்கப்படும் வரை மேலும் போரைத் தவிர வேறு எதற்கும் வாய்ப்பில்லை. ஒரு குறுகிய மற்றும் நிலையற்ற போர்நிறுத்தம் மட்டுமே இப்போது இருக்கும் வாய்ப்பு. போரை நிறுத்தப்போவதில்லை என புதின் தெரிவித்துள்ளார். மேலும், தங்களின் நாட்டிற்காக போராட்டத்தைத் தொடர்ந்து வருவதாக யுக்ரேனும் தெளிவுபடுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
"இழந்ததை மீட்கும் யுக்ரேன்"
ஆண்ட்ரி பியோன்ட்கோவ்ஸ்கி, வாஷிங்டன் டி.சி-யில் உள்ள ஆய்வாளர்
யுக்ரேன் 2023 வசந்த காலத்தில் அதன் இழந்த நிலப்பரப்பை மீட்டு வெற்றி பெறும். இரண்டு காரணிகள் இந்த முடிவை வடிவமைக்கின்றன. ஒன்று யுக்ரேனிய ராணுவம் மற்றும் ஒட்டுமொத்த யுக்ரேனிய தேசத்தின் உந்துதல், உறுதிப்பாடு மற்றும் தைரியம், இது நவீன போர் வரலாறு இதுவரை கண்டிராதது. மற்றொன்று, புதினின் பல ஆண்டுகால சமாதானங்களை நம்பிய பிறகு, மேற்கத்திய நாடுகள் தாங்கள் எதிர்கொண்டுள்ள வரலாற்றுச் சவாலினை எதிர்கொள்ளும் அளவிற்கு வளர்ந்துள்ளன. நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கின் சமீபத்திய அறிக்கையில் இது சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. "நாம் செலுத்தும் விலை பணத்தில் உள்ளது. ஆனால், யுக்ரேனியர்கள் செலுத்தும் விலை ரத்தமாக உள்ளது. தங்களது படைகள் வெற்றிபெறுவதை சர்வாதிகார ஆட்சியாளர்கள் கண்டால் நாம் அனைவரும் இன்னும் அதிக விலை கொடுக்க வேண்டிவரும். மேலும் உலகம் நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தான இடமாக மாறும். " யுக்ரேனின் உறுதியான வெற்றி என்பது நேட்டோ எவ்வளவு விரைவாக ராணுவத் தாக்குதல் ஆயுதங்களின் தொகுப்பை அவர்களுக்கு வழங்குகிறது என்பதைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படும். வரும் மாதங்களில் (ஒருவேளை வாரங்களில்) மெலிடோபோல் முக்கிய போர்க்களமாக மாறும் என எதிர்பார்க்கிறேன். மெலிடோபோலைக் கைப்பற்றிய பின்னர், யுக்ரேனியர்கள் எளிதாக அசோவ் கடற்பகுதியை நோக்கிச் செல்வதோடு, கிரைமியாவிற்கான ரஷ்யாவின் தகவல் தொடர்பு இணைப்புகளையும் திறம்படத் துண்டித்து விடுவார்கள். போர்க்களத்தில் யுக்ரேனின் முன்னேற்றங்களுக்குப் பிறகு ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மூலம் ரஷ்ய சரணடைதல் முறைப்படி ஒப்புக்கொள்ளப்படும். யுக்ரேன், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய வெற்றிகரமான சக்திகள் ஒரு புதிய சர்வதேச பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கும்.
"உடனடி முடிவு தென்படவில்லை"
பார்பரா சான்செட்டா, போர் ஆய்வுகள் துறை,
கிங்ஸ் கல்லூரி, லண்டன் யுக்ரேனின் மிகவும் சக்திவாய்ந்த அண்டை நாடுகளின் செயல்களை புதின் தவறாகக் கணித்தார். இந்த மோசமான கணக்கீடு ஒரு நீண்ட மோதலுக்கு வழிவகுத்தது. பார்வைக்கு எட்டிய தூரம்வரை இதற்கு முடிவு இல்லை. இந்த குளிர்காலம் கடினமாக இருக்கும். ஏனெனில் யுக்ரேனிய உள்கட்டமைப்பு மீதான ரஷ்யத் தாக்குதல்கள் ஏற்கனவே சிதைந்துபோன மக்களின் மன உறுதியையும் சகிப்புத்தன்மையையும் மேலும் உடைக்க முயற்சிக்கும். ஆனால், யுக்ரேனியர்களின் விடாமுயற்சி கவனிக்க வேண்டியது. அவர்கள் இனியும் உறுதியாக நிற்பார்கள். போர் நீண்டு கொண்டே போகும். பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறைவே. ஒரு வெற்றிகரமான சமாதான ஒப்பந்தத்திற்கு குறைந்தபட்சம் ஒரு தரப்பின் முக்கிய கோரிக்கைகள் மாற வேண்டும். ஆனால், இதற்கான எந்த சாத்தியக்கூறும் தெரியவில்லை. பிறகு எப்படித்தான் இந்த போர் முடிவுக்கு வரும்? பொருள் மற்றும் மனிதவள செலவுகள் ரஷ்ய அரசியல் உயரடுக்கின் திட்டங்களை உடைக்கக்கூடும். போர் முடிவிற்கான சாவி ரஷ்யாவிற்குள்ளேயே இருக்கும். தவறான கணக்கீடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் வியட்நாம் போரும் சோவியத் யூனியனின் ஆப்கானிஸ்தான் மீதான போரும் இவ்வாறே முடிவடைந்தன. தவறாகத் திட்டமிட்ட நாட்டில் அரசியல் நிலைமைகள் மாறி, அந்நாடு போரிலிருந்து வெளியேறுவது மட்டுமே ஒரே சாத்தியமான வழி. எவ்வாறாயினும், போரின் விளைவால் ஏற்பட்டுள்ள உள்நாட்டு அழுத்தங்களை எதிர்கொண்டு மேற்குலக நாடுகள் யுக்ரேனுக்கான ஆதரவில் உறுதியாக நின்றால் மட்டுமே இது நிகழலாம். துரதிர்ஷ்டவசமாக, இது நீண்டகால அரசியல், பொருளாதார மற்றும் இராணுவத் தீர்வுக்கான போராகத் தொடரும். 2023ஆம் ஆண்டின் முடிவிலும் இந்த போர் தொடரலாம்.

பட மூலாதாரம், Getty Images
"ரஷ்யத் தோல்வியைத் தவிர வேறு முடிவு இல்லை"
பென் ஹோட்ஜஸ், முன்னாள் காமாண்டிங் ஜெனரல்,
யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆர்மி ஐரோப்பா கியவ்வில் வெற்றி அணிவகுப்பைத் திட்டமிடுவதற்கு இப்போது வாய்ப்பில்லை. ஆனால், சூழல் தற்போது யுக்ரேனுக்கு சாதகமாக உளது. இந்த போரில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. அநேகமாக 2023இல் இது நடக்கலாம். குளிர்காலத்தில் பெரிய முன்னேற்றம் இருக்காது. ஆனால், பிரிட்டன், கனடா மற்றும் ஜெர்மனியிலிருந்து வரும் அனைத்து குளிர்கால உபகரணங்களையும் கொண்டு யுக்ரேன் படைகள் ரஷ்யாவை விட சிறப்பாக இந்த காலத்தைச் சமாளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஜனவரிக்குள், கிரைமியாவின் விடுதலை எனும் இறுதிக்கட்டத்திற்கு யுக்ரேன் சென்றுவிடும். போர் என்பது விடாமுயற்சிக்கான சோதனை என்பதை வரலாற்றிலிருந்து நாம் அறிவோம். யுக்ரேனிய மக்கள் மற்றும் படைவீரர்களின் உறுதியையும், யுக்ரேனின் தளவாட நிலைமை வேகமாக முன்னேறுவதையும் பார்க்கும்போது, ரஷ்யாவின் தோல்வியைத் தவிர வேறு எந்த விளைவையும் என்னால் சிந்திக்க முடியவில்லை. கெர்சனிலிருந்து ரஷ்யா வெளியேற்றப்பட்டது என்னை இந்த முடிவுக்கு இட்டுச் சென்றது. முதலில் யுக்ரேனிய மக்களுக்கு உளவியல் ரீதியாக ஊக்கம், இரண்டாவதாக ரஷ்யாவின் மோசமான தோல்வி, மூன்றாவதாக யுக்ரேனின் படைகளுக்கு ஒரு முக்கிய செயல்பாட்டு அனுகூலம் ஆகிய அனைத்தும் கிரைமியாவிற்குள் நுழையும் யுக்ரேனிய ராணுவத்தின் கைகளிலேயே உள்ளது. 2023ஆம் ஆண்டின் இறுதியில் கிரைமியா முழுவதுமாக யுக்ரேனியக் கட்டுப்பாடு மற்றும் இறையாண்மைக்குள் திரும்புவதைக் காணலாம் என்று நான் நம்புகிறேன், ஏதேனும் ஓர் உடன்படிக்கை மூலமாக செவஸ்டோபோலில் ரஷ்யாவின் கடற்படை இருப்பை படிப்படியாக (தோராயமாக 2025 வரை) அகற்ற அனுமதிக்கும். மரியபோல் மற்றும் பெர்டியன்ஸ்க் ஆகிய முக்கியமான துறைமுகங்கள் உட்பட அசோவ் கடற்கரையின் பகுதிகளை யுக்ரேன் புனரமைக்கும். மேலும், டினிப்ரோவிலிருந்து கிரைமியாவிற்கு தண்ணீரைத் திருப்பிவிடும் வடக்கு கிரைமியன் கால்வாயை மீண்டும் திறப்பது அதில் கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கும்.
"இதே நிலை தொடரலாம்"
டேவிட் ஜென்டெல்மேன், டெல் அவிவில் உள்ள ராணுவ நிபுணர்
போர் எப்படி முடியும் என்பதைவிட, இரு நாடுகளும் அடுத்த கட்டத்தில் எதனைச் சாதிக்க விரும்பும் என்பதைப் பார்ப்போம். ரஷ்யாவின் 300,000 அணிதிரட்டப்பட்ட துருப்புகளில் பாதி பேர் மட்டுமே ஏற்கனவே போர் நடக்கும் பகுதிகளில் உள்ளனர். மீதமுள்ளவர்கள், கெர்சனில் இருந்து பின்வாங்கிய பிறகு விடுவிக்கப்பட்ட வீரர்களுடன் இணைந்து புதியதொரு தாக்குதலை மேற்கொள்ளலாம். லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க் பகுதிகளின் ஆக்கிரமிப்பு தொடரும், ஆனால் டான்பாஸில் யுக்ரேனியப் படைகளைச் சுற்றி வளைக்க தெற்கிலிருந்து பாவ்லோகிராட் வரை ஒரு பெரிய ரஷ்யப்படை கட்டமைக்கப்பட்ட வாய்ப்பு குறைவு. தற்போதைய யுக்திகளே இனியும் தொடரும். பாக்முட் மற்றும் அவ்திவ்கா பகுதிகளைப் போல ஸ்வடோவ்-கிரெமின்னா பகுதிகளிலும் யுக்ரேனிய படைகள் மெதுவாக முன்னேறுவதே திட்டமாக இருக்கும். யுக்ரேனிய எரிசக்தி உள்கட்டமைப்பைக் குறிவைப்பது மற்றும் பிற தாக்குதல்கள் மூலம் யுக்ரேனை பலவீனப்படுத்தும் இந்த போர் யுக்தி முடிவுக்கு வரும். கெர்சனில் இருந்து ரஷ்ய பின்வாங்கலுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க யுக்ரேனியப் படைகளும் விடுவிக்கப்பட்டன. அவர்களுக்கு மூலோபாய ரீதியாக மிகவும் முக்கியமான திசை தெற்கு பக்கம்தான். தெற்குப்புறமாக மெலிடோபோல் அல்லது பெர்டியன்ஸ்க் நோக்கி முன்னேறுவதன் மூலம் ரஷ்ய எல்லையில் இருக்கும் கிரைமியா பகுதியைக் கைப்பற்ற முடியும். இது யுக்ரேனுக்கு ஒரு பெரிய வெற்றியாக இருக்கும். இதைத் தடுக்கவே ரஷ்யர்கள் மெலிடோபோலைப் பலப்படுத்துகிறார்கள். யுக்ரேனுக்கான மற்றொரு வழி ஸ்வடோவ். இப்பகுதியை யுக்ரேன் கைப்பற்றினால், அது வடக்கு திசையில் ரஷ்யாவுக்கு பெரும் ஆபத்தாக இருக்கும். இந்த கட்டத்தில் எவ்வளவு யுக்ரேனியப் படைகள் தாக்குதலுக்கு தயாராக இருக்கின்றன? அடுத்த சில மாதங்களில் எத்தனை புதிய ரிசர்வ் படைகள் கவச வாகனங்கள் மற்றும் கனரக ஆயுதங்களுடன் தயாராகும் என்பதும் தான் இங்கே பெரிய கேள்வி. குளிர்காலத்திற்கு பிறகு இந்த கேள்விக்கான பதில் நமக்கு கிடைக்கும். அப்போது இந்த போர் எப்படி முடியும் என்பதற்கான பதிலும் நமக்கு கிடைக்கும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













