நாய்க்கு பாலியல் துன்புறுத்தல்: குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஹிருணிகா முறைப்பாடு

பட மூலாதாரம், HIRUNIKA PREMACHANDRA'S FACEBOOK
நாய் ஒன்றை இலங்கை அரசியல்வாதி ஆஷு மாரசிங்க பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் மீது குற்றம் சாட்டிய ஹிருணிகா பிரேமசந்திர வலியுறுத்தியுள்ளார்.
நாயை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ஆஷு மாரசிங்க, தன் மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக இருந்தார். ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆதர்ஷா கரந்தனா ஆகிய இருவரும் குற்றச்சாட்டுகளை வெளியிட்ட செய்தியாளர் சந்திப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன் அப்பதவியில் இருந்து விலகினார்.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணை கோரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர நேற்று முன்னிலையாகியிருந்தார். ஆஷு மாரசிங்க தனது முன்னாள் காதலியின் நாயை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கடந்த 23ம் தேதி ஊடக சந்திப்பொன்றில், ஹிருணிகா பிரேமசந்திர மற்றும் ஆஷு மாரசிங்கவின் முன்னாள் காதலி என கூறப்படும் ஆதர்ஷா கரந்தனா ஆகியோர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

பட மூலாதாரம், ASHU MARASINGHE FACEBOOK PAGE
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆஷூ மாரசிங்க, கடந்த 24ம் தேதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தனது வழக்கறிஞருடன் சென்று முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார். தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும், ஆஷு மாரசிங்க நிராகரித்திருந்தார். இந்த நிலையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் பிரிவின் தேசிய அமைப்பாளருமான ஹிருணிகா பிரேமசந்திர குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று சென்றிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தி, நடவடிக்கைகளை எடுக்குமாறு ஹிருணிகா பிரேமசந்திர, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ''நாய்க்குட்டிக்கு பதிலாக ஒரு வயதேயான சிறுமியோ அல்லது சிறுவனோ இருந்திருந்தால், அவர்களாலும் இந்த இடத்தில் பேசியிருக்க முடியாது. அந்த குழந்தைகளுக்கு தெரியாதல்லவா? இந்த நாய் குட்டிக்கும் ஒரு வயது. ஒரு வயதான குழந்தையாக இருந்திருந்தால், இந்த நபர் செய்ததை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நீங்கள் யாரும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள். இதிலுள்ள பாரதூரமான விடயத்தை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

இவர் சாதாரண நபர் கிடையாது. நாட்டிலுள்ள ஜனாதிபதியின் ஆலோசகர். இந்த நபருக்கு தூதுவர் பதவி வழங்கி வெளிநாட்டிற்கு அனுப்ப ஜனாதிபதி முயற்சிக்கின்றாராம். இந்த இடத்தில் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என சிலர் கூறியுள்ளார்கள். இந்த இடத்தில் இதை விட என்ன நடக்க வேண்டும். நீங்கள் அனுதாபம் ஏற்படக்கூடிய ஒன்றா நடக்க வேண்டும். இந்த நபர், இந்த மிருகத்துடன் வேறு எவ்வாறு நடந்து கொண்டார் என்பதற்கான வேறு வீடியோக்களை தேடுவதை விடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் புரிந்து கொள்வதற்கு, இந்த வீடியோவே போதுமானது. இந்த சம்பவம் தொடர்பில் சரியான புரிந்துணர்வு இல்லாத மக்களிடம் ஒன்றை கேட்டுக் கொள்கின்றேன். இந்த இடத்தில் இருந்தது நாய் குட்டி கிடையாது, ஒரு வயதேயான குழந்தை என்பதை உங்களின் கண்களை மூடி சிந்தித்து பாருங்கள். அப்போது இந்த இடத்திலுள்ள பாரதூரமான விடயத்தை புரிந்து கொள்ள முடியும்," என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
போலியான காணொளி - ஆஷு மாரசிங்கவின் வழக்குரைஞர்
இந்த வீடியோ எடிட் செய்யப்பட்ட ஒன்று என ஆஷு மாரசிங்கவின் சட்டத்தரணி பிரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.
ஆஷு மாரசிங்க மற்றும் பெண்ணொருவர் பணிப்பாளர் பதவி வகிக்கும் நிறுவனமொன்றில் ஏற்படும் பிரசினையே, இந்த குற்றச்சாட்டுக்கான பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டதா அல்லது உண்மையானதா என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகளின் ஊடாகவே கண்டறிய முடியும் என ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












