ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த பேரண்டத்தின் படங்கள் - விண்வெளி அறிவியல் அதிசயம்

பட மூலாதாரம், NASA/ESA/CSA/STScI/Webb ERO Production Team
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. உலகிற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலரில் அளிக்கப்பட்ட கொடை இது. இந்திய மதிப்பில் சுமார் 80,000 கோடி ரூபாய்.
சரியாக ஓராண்டுக்கு முன்னர், கிறிஸ்துமஸ் நாளில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. திட்டம், வடிவமைப்பு, கட்டுமானம் என இதற்காக 30 ஆண்டுகளாயின.
புகழ் பெற்ற ஹபிள் தொலைநோக்கிக்கு அடுத்தபடியாக தயாரிக்கப்பட்ட இந்த தொலைநோக்கி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா என்று பலரும் எண்ணினர்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் பிரதானமான, முதன்மை கண்ணாடியை நிலைநிறுத்தி பிரபஞ்சத்தை நோக்கவும், பிற பாகங்களை பரிசோதித்து, மதிப்பிடவும் நாம் சில மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
ஆனால், அவர்கள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் செயல்பாடு எவ்வாறெல்லாம் இருக்கும் என்று கூறினார்களோ அப்படியே கச்சிதமாக அமைந்தது.
கடந்த ஜூலை மாதம், இந்தத் தொலைநோக்கி எடுத்த முதல் வண்ணப் படத்தை வெளியிட்டு, அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் கனடிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தினர் கொண்டாடினர். அதன் பின்னர் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை பார்க்கலாம்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி காட்டும் அகச்சிவப்பு பிரபஞ்சம்
Your device may not support this visualisation
பூமியில் இருந்து 6,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஈகிள் நெபுலா. பெருந்திரளாக தூசு, வாயுக்கள் அல்லது நட்சத்திரக் கூட்டம் ஆகியவை விண்வெளியில் இருப்பது ஆங்கிலத்தில் 'நெபுலா' (nebula) எனப்படும்.
ஜேம்ஸ் வெப் பற்றி நீங்கள் முதலில் நினைவில் கொள்ள வேண்டியது இது ஓர் அகச்சிவப்பு தொலைநோக்கி. அது நம் கண்களால் அறிய முடியாத, ஒளியின் அலைநீளத்தில் விண்வெளியைப் பார்க்கிறது.
வாயு மற்றும் தூசுகளாலான மிகப்பெரிய கோபுரங்கள் போன்ற பிரபஞ்சத்தின் பகுதிகளை ஆராய வானியலாளர்கள் இதன் வெவ்வேறு கேமராக்களைப் பயன்படுத்துகின்றனர். தூண்கள் போன்ற அமைப்புடைய 'தி பில்லர்ஸ்' எனும் ஈகிள் நெபுலாவின் ஒரு பகுதி ஹபிளின் பிரதான இலக்காக இருந்தது. ஒளியின் வேகத்தில் பயணித்தால் கூட, இந்தப் படத்தில் தெரியும் முழு பரப்பையும் கடக்க உங்களுக்குப் பல ஆண்டுகள் ஆகும்.

கரினா நெபுலா

பட மூலாதாரம், NASA/ESA/CSA/STScI
இந்த காட்சியை காஸ்மிக் கிளிஃப்ஸ் (Cosmic Cliffs) என்று அழைக்கிறார்கள். இது கரினா எனப்படும் மற்றொரு தூசி நிறைந்த, நட்சத்திரத்தை உருவாக்கும் நெபுலாவிற்குள் ஒரு பிரம்மாண்டமான, வாயு குழியின் விளிம்பில் உள்ளது.
இந்த குழியானது தீவிரமான புற ஊதா கதிர்வீச்சு மற்றும் வெப்பமான இளம் நட்சத்திரங்களின் காற்றினால் செதுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் தோராயமாக 15 ஒளி ஆண்டுகள் தொலைவு உள்ளது. ஒரு ஒளி ஆண்டு என்பது சுமார் 9.46 டிரில்லியன் கி.மீ (5.88 டிரில்லியன் மைல்கள்) ஆகும். ஒரு டிரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி. அப்படியானால் இந்தத் தொலைவு 9.46 லட்சம் கோடி கிலோ மீட்டர் அளவுள்ளது.

கார்ட் வீல் நட்சத்திரக் கூட்டம்

பட மூலாதாரம், NASA/ESA/CSA/STScI/Webb ERO Production Team
வலதுபுறம் உள்ள இந்த பெரிய நட்சத்திரக் கூட்டம் 1940களில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வானியலாளர் ஃபிரிட்ஸ் ஸ்விக்கியால் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் சிக்கலான 'கார்ட் வீல்' (வண்டிச் சக்கரம்) அமைப்பு, இந்த நட்சத்திரக் கூட்டம் மற்றொரு நட்சத்திரக் கூட்டத்தின் மீது நேருக்கு நேர் மோதியதால் ஏற்பட்ட விளைவாகும். இதன் விட்டம் சுமார் 1,45,000 ஒளி ஆண்டுகள்.


நெப்டியூன் கிரகம்

பட மூலாதாரம், NASA/ESA/CSA/STScI
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பிரபஞ்சத்தை மட்டும் உற்று நோக்கவில்லை. நமது சூரிய குடும்பத்தையும் ஆய்வு செய்கிறது. சூரியனிலிருந்து எட்டாவது கோளாக, வளையங்களுடன் காணப்படும் இது நெப்டியூன் கிரகமாகும். அதைச் சுற்றியுள்ள சிறிய வெள்ளைப் புள்ளிகள் அதன் துணைக்கோள்கள் ஆகும்.
மேலே பெரிய புள்ளி நட்சத்திரமாக தோன்றுவது நெப்டியூனின் மிகப்பெரிய துணைக் கோளான ட்ரைட்டன். (Triton) அதன் ஸ்பைக்குகள் போன்ற கூர்முனைகள், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் கண்ணாடி அமைப்பு கட்டமைக்கப்பட்ட விதத்தின் சிறப்பம்சமாகும்.

ஓரையன் நெபுலா

பட மூலாதாரம், NASA/ESA/CSA/STScI-PDRs4All ERS Team
வானத்தில் நமக்கு பரிச்சயமான பகுதிகளில் ஒன்று ஓரையன் நெபுலா. பூமியில் இருந்து சுமார் 1,350 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இது ஒரு நட்சத்திரங்கள் உருவாகும் பகுதி அல்லது நெபுலா ஆகும். இங்கே, அடர்த்தியான வாயு மற்றும் தூசியின் சுவர் போன்ற அமைப்பான 'ஓரையன் பார்' என்று அழைக்கப்படும் வெப் புகைப்படங்கள் உள்ளன.

டிமார்ஃபோஸ்

பட மூலாதாரம், NASA/ESA/CSA/STScI/C.Thomas/I.Wong
டிமார்ஃபோஸ் என்ற 160 மீட்டர் விட்டம் கொண்ட விண்கல்லின் பாதையை மாற்ற முடியுமா என்று விண்கலம் ஒன்றை அனுப்பி நாசா மேற்கொண்ட முயற்சி இந்த ஆண்டில் பெரிய அளவில் பேசப்பட்ட விண்வெளி முயற்சிகளில் ஒன்றாகும். பூமி மீது மோதும் வகையில் அச்சுறுத்தும் விண்கற்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் உத்தியின் பரிசோதனை இது. மழையாகப் பொழிந்த 1,000 டன் விண்கற்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது.

டபிள்யூ.ஆர். - 140

பட மூலாதாரம், NASA/ESA/CSA/STScI/JPL-Caltech
இந்த ஆண்டின் மிகவும் சுவாரஸ்யமான ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிப் படங்களில் இதுவும் ஒன்றாகும். "WR" என்பது Wolf-Rayet என்பதைக் குறிக்கிறது. இது ஆயுட்காலம் முடிவடையும் காலத்தில் உள்ள பெரிய நட்சத்திரத்தின் வகைப்பாடாகும்.
இவை பெரிய வாயுக் காற்றை விண்வெளிக்குள் செலுத்துகின்றனர். இந்த படத்தில் காணப்படாத இணை நட்சத்திரம் அந்த காற்றை அழுத்தித் தூசியை உருவாக்குகிறது. நீங்கள் பார்க்கும் தூசி நிறைந்த கோளங்கள் 10 டிரில்லியன் கிலோ மீட்டருக்கு மேல் வெளியே நீண்டுள்ளது. இது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட 70,000 மடங்கு அதிகம்.

ஃபேண்டம் நட்சத்திரக் கூட்டம்

பட மூலாதாரம், NASA/ESA/CSA/STScI
ஃபேண்டம் கேலக்ஸி என்று அழைக்கப்படும் M74, அதன் ஆடம்பரமான சுழல் கைகளுக்கு பெயர் பெற்றது. ஃபேண்டம் (phantom) எனும் ஆங்கிலச் சொல்லுக்கு 'பூதம்' என்று பொருள். இது பூமியிலிருந்து சுமார் 3.2 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள மீனம் (Pisces) விண்மீன் மண்டலத்தில் உள்ளது.
M74 நட்சத்திரக் கூட்டம் கிட்டத்தட்ட பூமியை நோக்கி அமைந்துள்ளதால், அதன் உருவம் மற்றும் அமைப்பின் துல்லியமான தோற்றத்தை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் படம் பிடிக்க முடிகிறது. வாயு மற்றும் தூசியின் அனைத்து நுண்ணிய இழைகளையும் துல்லியமாகப் படமாக்குவதில் தொலைநோக்கியின் டிடெக்டர்கள் சிறப்பாக உள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












