இறந்த தந்தைக்கு ஏஐ மூலம் சாட்போட் வடிவில் உயிர்கொடுத்த மகன்

பட மூலாதாரம், James Vlahos
கடந்த 2016ஆம் ஆண்டு ஜேம்ஸ் விலாஹோஸின் தந்தைக்கு குணப்படுத்த முடியாத புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. கலிபோர்னியாவின் ஓக்லாந்தை சேர்ந்த ஜேம்ஸ், "நான் என் அப்பாவை நேசித்தேன், அவரை இழந்து கொண்டிருந்தேன்” என்றார்.
தனது தந்தைக்கு மிச்சமிருக்கும் குறுகிய காலத்தில் அவரோடு நேரத்தைச் செலவழிக்கும் வேண்டும் என்று முடிவு செய்தார் ஜேம்ஸ்.
"நான் அவரோடு சேர்ந்து வாய்வழி வரலாற்றுத் திட்டப்பணி ஒன்றை தொடங்கினேன். அதில் ஏரளாமான மணிநேரங்களை அவரோடு செலவிட்டு அவரது வாழ்க்கைக் கதையை ஆடியோ வடிவில் பதிவு செய்தேன்," என்றார் ஜேம்ஸ்.
அப்போதுதான் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பணிகளில் கொஞ்சம் முன்னேறத் தொடங்கியிருந்த ஜேம்ஸுக்கு எதிர்பாரா விதமாக இந்த சந்தர்ப்பமும் உதவ, விரைவிலேயே அவரது திட்டப்பணியும் வளர்ச்சியடையத் தொடங்கியது.
"கடவுளே, இதிலிருந்து ஏதாவது பயனுள்ள விஷயத்தை உருவாக்க முடிந்தால் எப்படியிருக்கும்?" என்றுதான் நினைத்ததாகக் கூறுகிறார் ஜேம்ஸ்.
"எல்லாவற்றுக்கும் மேலாக அவரது நினைவுகளைச் சிறப்பாகப் பாதுகாப்பது மற்றும் அவரது குணநலன்களில் சில உணர்வுகளை இங்கே சேமித்து வைத்திருப்பது அற்புதமானது."
ஜேம்ஸின் தந்தை ஜான் 2017இல் இயற்கை எய்தினார். ஆனால் அதற்கு முன்பே ஜேம்ஸ் அவர் பதிவுசெய்த அவரது அப்பாவின் கதைகளை செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் சாட்போட்டாக மாற்றி அவரது அப்பாவின் வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு அவரது அப்பா குரலிலேயே பதிலளிக்கும்படி ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருந்தார்.
அவதார் மூலம் இறந்த நபருக்கு உயிர் கொடுக்கும் தொழில்நுட்பம்

பட மூலாதாரம், Getty Images
செயற்கையாக மக்களை மீண்டும் உயிர்ப்பிக்கக் கூடிய செயற்கை நுண்ணறிவின் தற்போதைய சாதனைகள் அனைத்துமே நீண்டகாலமாக அறிவியல் புனைகதைகளில் மட்டுமே பேசப்பட்டு வந்தன. ஆனால் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இப்போது நிஜ வாழ்க்கையிலேயே அதைச் சாத்தியமாக்கியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டில், ஜேம்ஸ் தனது சாட்போட்டை HereafterAI என்ற செயலியாகவும், அதையே ஒரு தொழிலாகவும் மாற்றினார். இது மக்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் இறந்த பின்னும்கூட அவர்களை செயற்கை வழியில் பூமியில் தக்க வைக்க உதவுகிறது.
சாட்போட் தனது அப்பாவின் மரணம் தந்த வலியைப் போக்கவில்லை என்றாலும், அவர் இல்லை என்ற உணர்வில் இருந்து நீங்கி கொஞ்சம் ஆறுதலாக இருப்பதாக ஜேம்ஸ் கூறுகிறார்.
"இதில் அவரது தெளிவற்ற நினைவுகளுக்குள் நான் தொலையவில்லை. மாறாக என்னிடம் அவரது நினைவுகளுடன் உரையாடும் ஓர் அற்புதமான வழி உள்ளது."
HearafterAI செயலியின் பயனர்கள் தங்கள் அன்புக்குரியவரின் புகைப்படங்களைப் பதிவேற்றுவதன் மூலம், அவர்கள் செயலியைப் பயன்படுத்தும்போது அவர்களின் ஸ்மார்ட்போன் அல்லது கணினியின் திரையில் அன்புக்குரியவர்களின் முகம் தோன்றும்.
இதேபோல் மற்றொரு நிறுவனம் மக்களை செயற்கை நுண்ணறிவு சாட்போட்களாக மாற்றுகிறது. தென் கொரியாவின் DeepBrain AI ஆனது, ஒரு நபரின் முகம், குரல் மற்றும் பழக்க வழக்கங்களைப் பல மணிநேர வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்வதன் மூலம் வீடியோ அடிப்படையிலான அவரைப் போன்ற அவதாரை உருவாக்குகிறது.
இதுகுறித்துப் பேசியுள்ள DeepBrain நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மைக்கேல் ஜங், "உண்மையான நபரின் உருவத்தோடு 96.5% ஒத்துப்போகும் அளவிற்கான உருவத்தை குளோனிங் செய்கிறோம்," என்றார்.
ஏஐ அவதார் பயன்பாட்டில் ஏன் கவனம் தேவை?

பட மூலாதாரம், Getty Images
"எனவே, இறந்த நபரின் AI அவதாரோடு பேசினாலும்கூட, பெரும்பாலும் குடும்பத்தினர் அசௌகரியமாக உணர மாட்டார்கள்."
இந்தத் தொழில்நுட்பம் "நிறைவான மரணம்" என்ற கலாசாரத்தை வளர்ப்பதில் ஒரு முக்கியப் பங்காக இருக்கும் என்று நிறுவனம் நம்புகிறது.
இதன் மூலம் முன்பே நமது மரணத்திற்குத் தயாராகி, குடும்ப வரலாறுகள், கதைகள் மற்றும் நினைவுகளை "வாழும் மரபு" வடிவமாக சேமித்து வைத்துவிட்டுச் செல்ல முடியும்.
இந்த சேவையைப் பெறுவதற்கான கட்டணம் மலிவு கிடையாது. அதேபோல், மேலும் பயனர்கள் சொந்தமாக அவதார்களை உருவாக்கவும் முடியாது. இந்த சேவையைப் பெற வேண்டுமெனில், அவர்கள் 50,000 அமெரிக்க டாலர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இதன் விலை அதிகமாக இருந்தாலும்கூட, சில முதலீட்டாளர்கள் இது பிரபலமடையும் என்று நம்புகிறார்கள். மேலும் DeepBrain அதன் கடைசி நிதிச் சுற்றில் 44 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியுள்ளது.
இருப்பினும் உளவியலாளர் லாவெர்ன் ஆன்ட்ரோபஸ் இதுகுறித்துப் பேசுகையில், “உணர்ச்சிகள் பொங்கும் வேளையில் இத்தகைய "துக்கம் சார்ந்த தொழில்நுட்பத்தை" பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்,” என்கிறார்.
"இழப்பு என்பது நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் ஒன்று” எனக் கூறும் அவர், “நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கலாம், ஆனால், ஏதோ ஒன்று உங்களை மீண்டும் இழப்பின் துக்கத்திற்குள் இழுத்துச் சென்றுவிடும்,” என்கிறார்.
"இறப்புக்குப் பிறகு அவர்களின் குரலைக் கேட்கவும், அவர்களால் பேசப்படும் வார்த்தைகளைக் கேட்கவும் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற சிந்தனை மிகவும் குழப்பமானதாக இருக்கலாம்."
எனவே தாங்கள் இழக்கும் அன்புக்குரியவரின் சாட்போட்டை பயன்படுத்த மக்கள் அவசரப்படக்கூடாது என்கிறார் அவர்.
மேலும், "இதுபோன்ற ஒன்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு நீங்கள் மிகவும் உறுதியாக உணர வேண்டும். ஒவ்வோர் அடியையும் மிக மிக மெதுவாக எடுத்து வையுங்கள்," என்று கூறுகிறார் லாவெர்ன்.
இறந்தவர்களின் குடும்பங்கள் சுமக்கும் சுமைகள்

பட மூலாதாரம், Deepbrain AI
ஒவ்வொருவருக்கும் துக்கம் என்பது தனித்துவமானது என்ற போதிலும், அதற்கு அர்த்தம் அதுகுறித்த பொதுவான ஒரு உணர்வு அல்லது அனுபவம் இல்லை என்பதல்ல.
அதில் ஒன்றுதான் ஒருவரின் இறப்புக்குப் பிந்தைய நிகழ்வுகள். உங்கள் அன்புக்குரியவர் பயன்படுத்திய வங்கிக் கணக்குகள், தொழில்கள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் உள்ளிட்ட பலவற்றையும் மொத்தமாக நிறுத்துவதற்கு நீங்கள் ஏராளமான ஆவணங்களோடு அலைய வேண்டியிருக்கலாம்.
"இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அழைப்பு கொடுத்து எனது கணவரின் மரணம் குறித்து அவர்களிடம் கூற வேண்டியிருந்தது," என்கிறார் தெற்கு டெவோனை சேர்ந்த 41 வயதான எலினோர் வுட். இவரது கணவர் ஸ்டீபன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
"சில நிறுவனங்கள் மிகச் சிறந்தவை மற்றும் நேரடியானவை. சில முற்றிலும் திறனற்றவை மற்றும் இரக்கமற்றவை. நான் ஏற்கெனவே மோசமான நிலையில் இருக்கும் நேரத்தில் அவை கூடுதல் மன அழுத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தின.”
சமீப காலமாக இறந்தவர்களின் குடும்பங்கள் மீதான நிர்வாக ரீதியான சுமைகளைக் குறைப்பதற்காக, செட்டில்ட்(Settld) என்ற பிரிட்டன் இணையதளம் இயங்கி வருகிறது. இது இறந்தவர்களின் சார்பாக தனியார் துறை நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தேவையான அலுவல் பணிகளைச் செய்ய உதவுகிறது.
இறந்தவர்களைச் சார்ந்த யாரோ ஒருவர் தேவையான ஆவணங்களையும், தொடர்புகொள்ள வேண்டிய அனைவரின் பட்டியலையும் இதில் பதிவேற்ற வேண்டும். பின்னர் செட்டில்ட் தானாகவே அவர்களுக்கு மின்னஞ்சல்கள் மூலம் செய்தி அனுப்புகிறது. அந்தப் பயனர் மீண்டும் உள்நுழைந்து நிறுவனங்களிடம் இருந்து பதில் வந்துள்ளதா என்பதையும், சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளனவா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளலாம்.
வங்கிகள், சமூக ஊடக நிறுவனங்கள், பயன்பாட்டு நிறுவனங்கள் என 1,400 அமைப்புகளுடன் இணைந்து இந்தத் தளம் செயல்படுகிறது. இது 2020ஆம் ஆண்டில் விக்கி வில்சனால் அவரது பாட்டியின் மரணத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது.
"இந்த நிர்வாக ரீதியான சுமைகளைக் குறைக்க தொழில்நுட்பத்தை எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு சிறந்தது," என்கிறார் அவர்.
"ஒருவர் இறந்துவிட்டால், அவர் சார்ந்த நிர்வாகப் பணிகளைக் கையாள, நாங்கள் 146 விதமான பணிகளில், சுமார் 300 மணிநேரங்களைச் செலவிடுகிறோம்."
"பொதுவாக இது முடிவடைய ஒன்பது மாதங்கள் ஆகும். அதில் 70% வேலைகள் தானியங்கியாக இருக்கலாம் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்."

பட மூலாதாரம், Settld
தொழில்நுட்ப செய்தி இணையதளமான டெக்ரவுண்டின்படி (TechRound), "டெத் டெக்" என்று அழைக்கப்படும் துக்கத் தொழில்நுட்பத் துறையின் உலகளாவிய மதிப்பானது 100 பில்லியன் பௌண்டுக்கும் அதிகம்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால்தான் இந்தத் துறையின் வளர்ச்சி அதிகரித்ததாக செய்தி இணையதளத்தின் தலைமை ஆசிரியர் டேவிட் சோஃபர் கூறுகிறார்.
"வாழ்க்கையின் முக்கியத்துவத்தை கொரோனாவே மக்களுக்கு உணர்த்தியதாக" கூறும் அவர், இது மரணம் குறித்த ஒரு சில மூடநம்பிக்கைகளை உடைத்துள்ளது என்கிறார். இது துக்கத்தின் ஒரு பகுதியாக தொழில்நுட்பத்தை அதிகளவில் ஏற்றுக்கொள்ள பாதையமைத்துக் கொடுத்துள்ளது என்றும் கூறுகிறார் அவர்.
"ஒரே நேரத்தில் பலருக்கும் தகவலைக் கொண்டு சேர்ப்பது, குரல் பதிவுகள் அல்லது காட்சிப் பதிவுகள் மூலம் இறந்தவர்களை நினைவில் வைத்துக்கொள்வதும் முக்கியம்," என்று அவர் கூறுகிறார்.
ஆனால் இந்த ட்ரெண்டுக்கு மேலும் ஆழமான அர்த்தம் இருப்பதாக நம்புகிறார் டேவிட்.
"தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுவது நல்லது," என்று கூறும் அவர், "அதே தொழில்நுட்பம் அது சாராத சிக்கல்களான துக்கம் போன்ற விஷயங்களைத் தீர்க்க உதவுவதுதான் தொழில்நுட்பத்தின் உண்மையான நோக்கம்" என்கிறார்.
இருப்பினும் துக்கத்திலிருந்து மீள்வதற்கு மனித ஆதரவைத் தாண்டி, வேறெதுவும் மாற்றாக இருக்க முடியாது என்று எச்சரிக்கிறார் லாவெர்ன்.
“துக்கத்தைப் போக்குவதில் பாரம்பரிய முறைகளான மனிதர்களுடன் நெருக்கமாக உணர்தல், அக்கறை செலுத்தப்படுவதை உணர்தல் மற்றும் அங்கீகரிக்கப்படுவதாய் உணர்தல் போன்றவற்றுக்கு தொழில்நுட்பம் மாற்றாக வருவதை என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.”
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












