நடுக்கடலில் மூழ்கிய கப்பல் 1,500 கி.மீ. தாண்டி மும்பை அருகே வந்த அதிசயம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிபிசி குஜராத்தி
- பதவி, புது தில்லி
1500க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பல் மூழ்கிய துயரச் சம்பவம் நிகழ்ந்து 111 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அந்த விபத்து தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை, சமீபத்தில் டைட்டன் நீர்மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தும் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
இதேபோல், 2011 ஜூலையில் மும்பை ஜுஹு கடற்கரையில் எம்வி பவிட் என்ற இந்தியாவுக்கு சொந்தமான எண்ணெய் சரக்கு கப்பல் கரை ஒதுங்கியது. அதிர்ச்சிகரமான அச்சம்பவம் நிகழ்வதற்கு ஆறு வாரங்களுக்கு முன், கப்பல் மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கப்பல் கரை ஒதுங்கியபோது அதில் யாரும் இல்லை. ராட்சத கப்பல் கரை ஒதுங்கிய சம்பவம் உள்ளூர் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கப்பல் கரை ஒதுங்கிய சில நாட்களுக்கு பிறகு, கொட்டும் மழையில் கருப்பு உடையணிந்த சிலர் அதனுள் இறங்கியதை அப்பகுதி மீனவர்கள் பார்த்தனர். அவர்களின் நடவடிக்கை மீனவர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கப்பல் கரை ஒதுங்கிய நிகழ்வு, ஊடகங்களில் பரபரப்பு செய்தியானது.இந்திய பாதுகாப்பு முகமைகளின் செயல்பாடுகள் தொடர்பான பல்வேறு கேள்விகளையும் எழுப்பியது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து பாலிவுட் திரைப்படமும் எடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
நடுக்கடலுக்கு வந்த பிரிட்டன் கடற்படை கப்பல்
ஜூன் 2011 இல், இந்தியாவுக்கு சொந்தமான 'எம்.வி. பவிட்' என்ற சரக்கு கப்பல், ஓமன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு எண்ணெய் கொண்டு சென்றது. 77 மீட்டர் நீளம் ,12 மீட்டர் அகலமும் கொண்ட அந்த கப்பல் நடுக்கடலில் ஆபத்தில் சிக்கியபோது, அதற்கான சமிக்ஞையை கப்பல் பணியாளர்கள் அனுப்பினர். கப்பலின் என்ஜின் பழுதடைந்து விட்டதாகவும், என்ஜின் அறைக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பிரிட்டனின் போர்க்கப்பலான HMS ALPANS மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் இருந்து பணியாளர்களை பத்திரமாக மீட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
“அந்த நேரத்தில் கடலில் மூன்று முதல் நான்கு மீட்டர் உயரத்திற்கு அலைகள் அடித்து கொண்டிருந்தன. அத்துடன் பலத்த காற்றும் வீசி்க் கொண்டிருந்ததால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. எங்களுக்கு கிடைத்த சமிக்ஞையின் மூலம் ( சி ஸ்டேட் சிக்னல் ஃபைவ்) கடலில் நிலவிய அசாதாரண சூழலை நாங்கள் உணர்ந்தோம். அத்துடன், கப்பலில் பிரச்னை என்ற தகவலும் எங்களுக்கு கிடைத்தது. ஆனால் என்ன பிரச்னை என்று திட்டவட்டமாக தெரியவில்லை” என்று அந்த சம்பவத்தை விவரித்தார் பிரிட்டன் போர்க்கப்பலின் தளபதியான டாம் ஷார்ப்.
“எனவே நிலைமையை மதிப்பிடுவதற்காக எங்கள் ஹெலிகாப்டர் ஒன்றை அங்கு அனுப்பினேன். அதன் விமானி கப்பலுக்கு மேலே பறந்தவாறே கப்பல் பணியாளர்களுடன் தொடர்பு கொண்டார். அப்போது கப்பலின் என்ஜின் அறைக்குள் புகுந்த கடல் நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியதை விமானி கண்டார் . இதனால் கப்பலை முன்னோக்கி நகர்த்த முடியவில்லை. கப்பல் கடலில் மூழ்கிவிடும் என்று எண்ணி பயந்த பணியாளர்கள் அதிலிருந்து எப்படியாவது வெளியேறிவிட வேண்டும் என்று விரும்பினர்” என்றும் கூறினார் டாம் ஷார்ப்
பலத்த காற்றுக்கு மத்தியில் கப்பலுக்கு மேல் பறந்த ஹெலிகாப்டர் மூலம், 12 மணி நேர நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதில் இருந்த 13 பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் ‘எம்.வி.ஜக்புஷ்பா’ என்ற மற்றொரு கப்பலில் ஏற்றப்பட்டு, குஜராத்தின் சிக்கா பண்டருக்கு பயணித்தனர்.
அதன்பின் கப்பல் மூழ்கியதாக அறிவிக்கப்பட்டது. கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த பணியாளர்கள், மற்றொரு பிரிட்டிஷ் கப்பலின் உதவியுடன் காப்பாற்றப்பட்ட பரபரப்பு சம்பவம், இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் செய்தியானது. ஆனால், அப்போதுதான் கப்பல் மூழ்கியது குறித்த மர்மம் தொடங்கியது.

பட மூலாதாரம், ATLANTIC PRODUCTIONS/MAGELLAN
திடீரென கரை ஒதுங்கி எம்.வி. பவிட் கப்பல்
கடலில் மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்ட ஆறு வாரங்களுக்கு பிறகு, 2011 ஆகஸ்டில், எம்.வி. பவிட் சரக்கு கப்பல் மும்பை கடற்கரையை அடைந்தது. அப்போது அந்த இடம் உள்ளூர்வாசிகளின் சுற்றுலா தலமாக மாறியது. கப்பலின் அருகே நின்று பொதுமக்கள் ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இருப்பினும், கப்பல் கரை ஒதுங்கிய சம்பவம், இந்திய கடல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியது. காரணம், இந்தச் சம்பவம் நிகழ்ந்ததற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான், சிறிய படகில் கடல் வழியாக பயணித்து மும்பைக்குள் புகுந்த பயங்கரவாதிகள். அங்கு பயங்கரவாதத்தை பரப்பினர்.
அத்துடன், கப்பல் மூழ்கிவிட்டதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அப்படியானால் அது எப்படி கடலின் அடிதளத்தில் இருந்து மேலெழுந்து வந்தது? பொதுவாக இந்த அளவுள்ள கப்பலை கையாள குறைந்தபட்சம் 10 மாலுமிகள் தேவை. ஆனால், கப்பல் கரை சேர்ந்தபோது அதில் ஏன் ஒருவர் கூட இல்லை?
எம்.வி பவிட் கப்பல் மத்திய கிழக்கு கடல் பகுதியில் மூழ்கவில்லை என்றால், கேப்டன் மற்றும் பணியாளர் குழுவினர் இல்லாமல் அது மும்பைக்கு எப்படி வந்தது? ஒருவேளை அதில் விளக்குகள் இல்லாததால், மற்ற படகுகள் அல்லது மீன்பிடி படகுகள் மீது மோதியிருக்கலாம். மும்பையில் உள்ள எண்ணெய் கிணறுகளையும் சேதப்படுத்தி இருக்கலாம்.
அப்போது பருவமழை காலம் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. ஒருவேளை அவர்கள் கடலுக்கு சென்றிருந்தால் அவர்களின் படகின் மீது கப்பல் மோதியிருக்கலாம். எனினும், கடலில் அன்று ராட்சத அலை வீசியதால், கப்பல் மீனவர்களின் வீட்டுக்கு அருகே வந்துவிட்டது. கடலலை விளைவாக அவர்களின் வீட்டிற்குள் கடல் நீர் புகுந்திருக்கலாம்.
இந்த சம்பவத்தை மையமாக வைத்து ஹிந்தியில் ‘பூத் -முதல் பாகம்: தி ஹாண்டட் ஷிப்’ (Bhoot -Part One: The Haunted Ship) என்ற பெயரில் திரைப்படம் எடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
கடலிலும், கடற்கரையிலும் எழுந்த மர்ம சுழல்கள்
பொதுவெளியில் வெளியிடப்பட்ட தகவலின்படி, கப்பலின் குழாய் ஒன்றில் டென்னிஸ் பந்தின் அளவுக்கு துளை இருந்துள்ளது. அப்போது கடல் நீரின் ஓட்டம் முன்னோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
கப்பல் குழாயில் ஏற்பட்டிருந்த துளையை, எந்தவொரு மீனவரும் ஒரு மரத்துண்டை நிரப்பி சரிசெய்துவிட முடியும். அப்படியானதொரு சாதாரண சிக்கலுக்காக கப்பல் பணியாளர்கள் பீதியடைந்தார்களா?
ஒவ்வொரு முறையும் கப்பல் கைவிடப்படும் போதும் அது மூழ்கி விட வேண்டிய அவசியமில்லை.
ஒவ்வொரு கப்பலிலும் ஓர் தானியங்கி அடையாள அமைப்பு இருக்கும். இது செயற்கைகோளின் வழியாக கப்பலை கண்காணிக்கும். அத்துடன் இந்த அமைப்பு கப்பலின் இருப்பிடம் குறித்து கடல்சார் அதிகாரிகளுக்கும், சர்வதேச நிறுவனங்களுக்கும் தகவல் அளிக்கும். பி.வி. பவிட் கப்பலில் இருந்த ஏ.ஐ.எஸ். டிரான்ஸ்பாண்டர் பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்தது. ஆனால் கப்பல் பணியாளர்கள் மீட்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன் அதன் செயல்பாடு நிறுத்தப்பட்டது. டிரான்ஸ்பாண்டர் இயல்பாக அணைக்கப்பட்டதா அல்லது பழுதின் காரணமாக அணைக்கப்பட்டதா? என்பன போன்ற கேள்விகள் எழுந்தன.
கப்பலின் காப்பீடு தொடர்பாக ஏதேனும் மோசடி செய்யப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்தது.
ஆனால், கப்பலின் உரிமையாளர் ஒருவர், காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து ஒரு பெரிய தொகையை சேகரிக்க விரும்பினால், அவர்கள் கப்பலை மூழ்கடிப்பது எளிது. ஆனால், அதற்கு அவர்கள் கடல் சீற்றமாக இருக்கும் நேரத்தை தேர்வு செய்யக்கூடாது.
இந்த கப்பல் ஆப்பிரிக்க கடற்கொள்ளையர்களுக்கு எண்ணெய் விநியோகம் செய்ததா? ஏனெனில் 2011 ஆம் ஆண்டுகளி்ல் ஆப்பிரிக்க கடல் பகுதிகளில் கடற்கொள்ளையர்களின் ஆதிக்கம் பெருமளவு இருந்தது. அவர்களிடம் எண்ணெய்யை விற்பதன் மூலம் பெரும் லாபத்தை ஈட்டும் வாய்ப்பும் அப்போது இருந்தது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இரவோடு இரவு பெய்த மழைக்கு நடுவே கறுப்பு உடை அணிந்த சிலர் கப்பலுக்குள் இறங்கியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் எம்.வி. பவிட் கப்பல் குறித்த சந்தேகத்தை அதிகப்படுத்தியது.
கப்பல் பணியாளர்களின் ஊதியம் மற்றும் பணி நிலைமைகள், குறைந்த வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, வரி புகலிட நாடுகளில் கப்பல்கள் பதிவு செய்யப்படுவது வழக்கம்.
எம்.வி.பவிட், பனாமாவில் பதிவு செய்யப்பட்ட, இந்தியர் ஒருவருக்கு சொந்தமான கப்பலாகும். இந்த விவகாரம் பூதாகரமான போது, அதன் உரிமையாளர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சில முறை சந்தித்தார். ஆனால் அதன்பின் அவர் திடீரென காணாமல் போனார்.
அதாவது முதலில் கப்பலில் பயணித்த பணியாளர் குழுவும், அதன் பின்னர் அதன் உரிமையாளரும் கப்பலை கைவிட்டனர். அதன் காரணமாக அவர்கள் கப்பலை கரைக்கு கொண்டு வர செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அத்துடன் அதை விற்கவோ, அதில் இருந்து தங்களுக்கு லாபகரமாக ஏதேனும் கிடைக்கும் என்றோ அவர்கள் நம்பவில்லை. இவ்வாறு வரும் முதல் கப்பலோ அல்லது எம்.வி. பவிட் கப்பலுக்கு மட்டும் தான் இப்படி நேர்ந்தது என்று சொல்ல முடியாது. இந்தியா உட்பட எல்லா இடங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழத்தான் செய்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
வெளிவந்த பல ரகசியங்கள்
எம்.வி. பவிட் கப்பல் மூழ்கியது குறித்த நீடித்த மர்மம், பிரிட்டன் நாளிதழ் ஒன்றின் தவறான புரிதல் மற்றும் தவறான தகவல் தொடர்பு காரணமாக ஏற்பட்டதாக தெரிய வந்தது. உண்மையில் கப்பல் மூழ்கவில்லை. கடலில் வீசிய காற்றின் உதவியுடன் ஆறு வாரங்களில் 1500 கிலோமீட்டர் தொலைவு பயணித்து மும்பை கடற்கரையை அடைந்தது.
கோடிக்கணக்கான சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட பரந்துபட்ட கடலில் இதுபோன்று கப்பல்கள் தொலைந்து போனால் அவற்றை கண்டுபிடிப்பது கடினமான பணி தான்.
சர்வதேச கடல்சார் அமைப்பின் கூற்றுப்படி, 2004 முதல் சுமார் 500 கப்பல்கள் கைவிடப்பட்டுள்ளன. சில நேரங்களில் துறைமுகங்களுக்கு பணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக உல்லாச கப்பல்கள் அவற்றின் உரிமையாளர்களால் கைவிடப்படுகின்றன.
காப்பீட்டு நிறுவனமான அலையன்ஸ் குளோபலின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் 50 முதல் 75 கப்பல்கள் இவ்வாறு காணாமல் போகின்றன. அதாவது சராசரியாக ஒவ்வொரு வாரமும் ஒன்றுக்கு மேற்பட்ட கப்பல்கள் காணாமல் போகின்றன. இந்த எண்ணிக்கை 1990களில் இருந்து குறைந்து வருகிறது.
நடுக்கடலில் கைவிடப்பட்ட அல்லது மூழ்கிய கப்பல்கள், குறிப்பாக எண்ணெய் டேங்கர்களால் கடலில் மாசு ஏற்படுகிறது. இதனால் கடல் வாழ் உயிரினங்கள், சுற்றுச்சூழல், மீன்வளம், கடல் சுற்றுலா உள்ளிட்டவற்றுக்கு சேதம் உண்டாகிறது. ஆனால் இவற்றால் ஏற்படும் சேதங்கள் குறித்த ஆய்வு தகவல்கள் இல்லை. அதேநேரம் கைவிடப்படும் கப்பல்கள் கடல் ஆய்வாளர்கள், கடல்சார் அதிகாரிகள் மற்றும் அரசாங்கங்களுக்கு தொந்தரவாக மாறி வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images
கைவிடப்பட்ட கப்பலுக்குள் கருப்பு உடையில் இறங்கியவர் யார் என்ற முக்கியமான கேள்விக்கு கேப்டன் ஹரிஷ் காத்ரி விடை அளிததார். இந்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்துடன் தொடர்புடைய அவர், மும்பை போலீஸ் அதிகாரிகள் நான்கு அல்லது ஐந்து பேர் விசாரணைக்காக, கருப்பு ரெயின் கோட் அணிந்து கப்பலுக்குள் சென்றனர் என்று காத்ரி விளக்கம் அளித்தார்.
அத்துடன் கடல் கொள்ளையில் ஈடுபடும் கப்பல்கள் பற்றி அவர் நன்கு அறிந்திருந்தார். எனவே, எம்.வி.பவிட் அதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்தப்பட வில்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அத்துடன் கைவிடும் அளவுக்கு கப்பல் மோசமான நிலையில் இருக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு, இதுபோன்றதொரு நிகழ்வு மீண்டும் நடைபெறாமல் இருக்கும் நோக்கில், கடல்சார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மகாராஷ்டிரா கடல்சார் வாரியம், எம்.வி.பவித் கப்பலை ஜுஹு கடற்கரையில் இருந்து அகற்றுவதற்கான ஒப்பந்தத்தை அளித்தது. அதையடுத்து கப்பல் திகி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மும்பை கடற்கரையில் இருந்து கப்பலை இழுத்து செல்வதற்கான செலவு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு. அது ஓட்டை உடைசல் பொருளின் கணக்கில் (Scrap) விற்கப்பட்டது. அத்துடன் பணியாளர்கள் இல்லாமல் கரை ஒதுங்கிய கப்பலின் மர்ம கதை முடிவுக்கு வந்தது.
நமது புரிதலுக்கு அப்பாற்பட்டு நடுக்கடலில என்னவெல்லாம் நிகழும் என்பதை எம்.வி. பவித் தெளிவுபடுத்தியது. இவ்வளவு பெரிய கப்பல் கடலின் நீரோட்டம் மற்றும் காற்றின் உதவியுடன் மட்டுமே பயணிக்க முடியும் என்பதையும் உணர்த்தியது. டைட்டானிக் கப்பல் மூழ்கியதன் ரகசியத்தை கடல் மறைத்தால், அந்த மர்மமும் எம்.வி. பவித் வடிவில் வெளி வரலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












