அரசின் கொள்கைக்கு எதிராக ரஷ்ய ராணுவத்தில் சேரும் நேபாள இளைஞர்கள் - என்ன காரணம்?

ரஷ்ய ராணுவத்தில் நேபாள இளைஞர்கள்
படக்குறிப்பு, நேபாளத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் படித்துவிட்டு வேலை தேடுவதில் சிரமங்களை சந்தித்து வந்த நிலையில் தான், யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.
    • எழுதியவர், ஸ்வச்சா ராவத்
    • பதவி, பிபிசி நேபாளி சேவை

நேபாள இளைஞரான ரமேஷ் (அவர் கேட்டுக் கொண்டதன்படி அவரின் பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது குடும்பத்தின் வறுமை நிலையை போக்க விரும்பினார். அதன் காரணமாக மாணவர் விசாவில் உயர்கல்வி பயில ரஷ்யாவுக்கு சென்றார். அங்கு அவர் விரும்பியபடி படிப்பை நல்லபடியாக முடித்தார்.

இருப்பினும் அதன் பின்னர் ரஷ்யாவிலேயே நல்ல வேலைத் தேடி கொள்வதா அல்லது நேபாளத்துக்கு திரும்பி அங்கே வேலைத் தேடுவதா என்ற கேள்வி எழுந்ததால் அவர் ஒருவித மன போராட்டத்துக்கு ஆளானார்.

நேபாள அரசின் 2017 -18 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, அந்நாட்டில் வேலை இல்லாதோர் விகிதம் 11.4 சதவீதமாக இருந்தது. அதற்கு முன், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, நேபாளத்தில் பெரும்பாலான பணிகள் அமைப்பு சாரா துறைகளில் தான் கிடைக்கப் பெறுவதாகவும், இந்தப் பணிகளை மேற்கொள்வோருக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.

வேலை கிடைப்பதில் சிக்கல்

"வெளிநாடுகளில் படித்துவிட்டு நேபாளத்திற்கு வரும் இளைஞர்கள் அனைவருக்கும் நல்ல வேலை கிடைப்பதில் இங்கு பல சிக்கல்கள் உள்ளன. இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதில்லை" என்று பிபிசி நேபாளி உடனான ஆன்லைன் உரையாடலின்போது ரமேஷ் தெரிவித்தார்.

இப்படி ரமேஷ் போன்ற நேபாளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் படித்துவிட்டு வேலை தேடுவதில் சிரமங்களை சந்தித்து வந்த நிலையில் தான், யுக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.

ரஷ்ய ராணுவத்தில் நேபாள இளைஞர்கள்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ரஷ்ய ராணுவ வீரரின் சித்தரிப்பு படம்

ரஷ்ய ராணுவத்தில் சேர வெளிநாட்டவருக்கு வாய்ப்பு

ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் போரில் இறந்தனர். அதன் விளைவாக ரஷ்ய ராணுவத்துக்கு நிறைய படை வீரர்கள் தேவைப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு, வெளிநாட்டவரும் ரஷ்ய ராணுவத்தில் சேர வகைச் செய்யும் விதத்தில், குறிப்பிட்ட சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டார். ரஷ்ய நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதிக ஊதியம், ரஷ்ய குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்குவது என ரஷ்ய ராணுவத்தில் சேர விரும்பும் வெளிநாடுகளை சேர்ந்த இளைஞர்களுக்கு அந்நாட்டு அரசு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தது.

ரஷ்ய ராணுவத்தில் நேபாள இளைஞர்

ரஷ்ய ராணுவத்தில் சேர்வதற்கு அளிக்கப்பட்டிருந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள ரமேஷ் விரும்பினார்.

தான் விரும்பியபடியே ரஷ்ய ராணுவத்தில் ரமேஷ் இணைந்தார். அதற்காக அவர் மருத்துவ பரிசோதனை மற்றும் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற வேண்டியிருந்தது. இந்தத் தேர்வுகளை எழுத 1,00,000 நேபாளி ரூபாயை செலவழித்தார். இவ்வளவு பெரிய தொகையை தனக்கு அளித்து உதவியவர் யார் என்ற தகவலை பகிரங்கமாக கூற அவர் மறுத்துவிட்டார்.

ரஷ்ய ராணுவத்துக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்த தனது மகிழ்ச்சியை ‘டிக்டாக்’ பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார்.

“வாழ்வில் வெற்றி பெற்று விடுவேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்தப் பணியை தேர்ந்தெடுத்துள்ளேன்” என்றும் அந்தப் பதிவில் ரமேஷ் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ளது எவ்வளவு கடினமான முடிவு என்பது குறித்தும் அவர் தன் வீடியோ பதிவுகளில் தெரிவித்திருந்தார்.

"செய் அல்லது செத்து மடி" என்பது ராணுவ வீரர்களுக்கான தாரக மந்திரம். எனவே இதனை உணர்ந்து, ராணுவத்தில் சேர்வதற்கு விருப்பம் இருந்தால் மட்டும் அதில் இணையுங்கள்" என்றும் டிக்டாக் வீடியோவில் அவர் கூறியிருந்தார்.

‘தகவல்’ என்ற தலைப்பில் ரமேஷ் மற்றொரு வீடியோவை டிக்டாக்கில் பதிவிட்டிருந்தார். “ ராணுவப் பணியில் இங்கு நிறைய சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. நிலைமை எதிர்பார்த்தது போல் இல்லை. ஏனெனில் ரஷ்யா மோதுவது யுக்ரேன் உடன் என்பதால், இதை வாழ்வின் மிகவும் கடினமான தருணம் என்று எண்ணுகிறேன்,” என அந்த வீடியோவில் ரமேஷ் உருக்கமாக கூறியிருந்தார்.

பிபிசி அவரை கடைசியாக தொடர்பு கொண்டபோது, தான் பயிற்சிக்காக பெலாரஸுக்கு அழைத்து செல்லப்படுவதால், உரையாடுவதற்கு போதிய நேரம் இல்லை என்று ரமேஷ் தெரிவித்திருந்தார். அதன் பின்னர் பிபிசி அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

ரமேஷ் மட்டுமல்ல. அவரை போன்று நிறைய இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்துள்ளனர் என்ற தகவல் பிபிசியின் ஒரு வார கால கள ஆய்வில் தெரிய வந்தது.

ரஷ்ய ராணுவத்தில் நேபாள இளைஞர்கள்
படக்குறிப்பு, நேபாள அரசின் 2017 -18 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, அந்நாட்டில் வேலை இல்லாதோர் விகிதம் 11.4 சதவீதமாக இருந்தது.

சட்டவிரோதம் என்று அறியாத நேபாள இளைஞர்

இதனிடையே, ராஜ் என்ற நேபாளத்தை சேர்ந்த இளைஞரும், ரமேஷை போல உயர் கல்வி பயில்வதற்காக ரஷ்யாவுக்கு சென்றிருந்தார் என்று தெரிய வந்தது. அங்கு அவர் இருந்தபோது தான், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களை ராணுவத்தில் சேர்ப்பது குறித்த அறிவிப்பை ரஷ்ய அரசு வெளியிட்டது.

அந்த அறிவிப்பு வெளியான உடனே, நேபாளத்தில் இருந்து பலர் ராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அவர்களுக்கு ரஷ்ய மொழி அவ்வளவு சரளமாக தெரியவில்லை என்பதால், அந்நாட்டு ராணுவத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்வதற்கு அவர்கள் ராஜின் உதவியை நாடினர்.

"எனக்கு அறிமுகமான சில நேபாளிகளுக்கு, அவர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர்வதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி புரிந்துள்ளேன். அதன் பின்னர் அவர்களே, இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளும்படி பலரிடம் எனது தொலைபேசி எண்ணை பகிர்ந்தனர்” என்று பிபிசி நேபாளியிடம் ராஜ் கூறினார்.

ரஷ்யாவில் உயர் கல்வி பயில விரும்பும் நேபாளத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவதை ராஜ் வழக்கமாக கொண்டிருந்தார். அதன்பின் நேபாள மாணவர்களுடன், ரஷ்ய ராணுவத்தில் சேர விரும்பிய அந்நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்களும் ராஜின் உதவியை நாடினர்.

ரஷ்ய ராணுவத்தில் நேபாள இளைஞர்கள்

பட மூலாதாரம், OFFICIAL PUBLICATION OF LEGAL ACTS/RUSSIA

படக்குறிப்பு, வெளிநாட்டவரும் ரஷ்ய ராணுவத்தில் சேர வகை செய்யும் சட்டத்தில் கையெழுத்திட்ட ரஷ்ய அதிபர் விளாதிர் புதின்.

முத்தரப்பு ஒப்பந்தம்

“நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைவது நாட்டின் கொள்கைக்கு இணக்கமானது அல்ல,” என்று நேபாள வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சேவா லாம்சல் பிபிசி நேபாளியிடம் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

நேபாள குடிமக்கள் வெளிநாடுகளின் ராணுவத்தில் சேர்வது தொடர்பாக, 1947 இல் நேபாளம், இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. நேபாள மக்கள் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அந்த ஒப்பந்தத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்கப்படும் நேபாளிகள் “கூலிப்படைகளாக கருதப்படமாட்டார்கள்” என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் பிரிட்டனை தவிர, பிற நாடுகளின் ராணுவத்தில் நேபாளிகள் சேர்வதை ஆதரிக்கும் கொள்கை இல்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக, மாஸ்கோவில் உள்ள நேபாள தூதர் மிலன்ராஜ் துலாதரை பிபிசி நேபாளி சேவை தொடர்பு கொண்டது.

“சுற்றுலா விசாவிலும், மேற்படிப்பு பயிலவும் ரஷ்யாவுக்கு வருகை தரும் நேபாள நாட்டினர், இங்கு வேறு எந்த பணியிலும் சேர முடியாது. தங்களின் குடிமக்கள் இந்தியா மற்றும் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்வது தொடர்பாக மட்டுமே அந்த நாடுகளுடன் நேபாள அரசு ஒப்பந்தம் புரிந்துள்ளது. இதுபோன்ற ஒப்பந்தம் ரஷ்ய அரசுடன் மேற்கொள்ளப்படவில்லை” என்று பிபிசி நேபாளி சேவையிடம் கூறினார் மிலன்ராஜ்.

நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணைந்துள்ளது தொடர்பான டிக்டாக் வீடியோக்களை தம்மால் ஆய்வு செய்ய முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஆவணப்படங்கள் ஆய்வு

இருப்பினும், ரஷ்ய ராணுவ பயிற்சி முகாம்களில் படமாக்கப்பட்ட இதுபோன்ற சில வீடியோக்களை சரிபாக்கும் பணியை பிபிசி மேற்கொண்டது.

ரஷ்ய ராணுவம் தொடர்பான ஆவணப்படங்களை கொண்ட வீடியோக்கள் பதிவிடப்பட்ட குறைந்தபட்சம் இரண்டு டிக்டாக் கணக்குகளை பிபிசியின் ரஷ்ய சேவையை சேர்ந்த செய்தியாளர் ஆன்ட்ரி கோசென்கோ சரிபார்த்தார்.

“ ரமேஷ் உள்ளிட்ட இரண்டு நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் இருப்பதை அந்த வீடியோக்கள் மூலம் அறிய முடிந்தது” என்று கூறினார் கோசென்கோ.

சம்பந்தப்பட்ட நபர்கள் ராணுவத்தில் வகிக்கும் நிலை (Rank), அவர்களின் முழு பெயர், உயரதிகாரிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் ஆவணப்படங்களில் இடம்பெற்றிருந்தன. அத்துடன் ராணுவத்தில் அவர்கள் பணிபுரியும் பிரிவுகள் குறித்த தகவல்களும் அவற்றில் இடம்பெற்றுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக, ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம், காத்மாண்டுவில் உள்ள ரஷ்யாவுக்கான தூதரை பிபிசி மின்னஞ்சலில் தொடர்பு கொண்டது. இருப்பினும். இந்த கட்டுரை வெளியிடப்படும் வரை ரஷ்ய அதிகாரிகள் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

நேபாள இளைஞர்கள் ரஷ்ய ராணுவத்தில் சேர என்ன காரணம்?

படித்த இளைஞர்களுக்கு நேபாளத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்காததால் தான் அவர்கள் வெளிநாடுகளின் ராணுவத்தில் சேர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“சுற்றுலா, மேற்படிப்பு போன்ற காரணங்களை சொல்லி நேபாளிகள் வெளிநாடுகளுக்கு பயணித்தாலும், அங்கு வேலை தேடி கொள்வதே அவர்களது பயணத்தின் பிரதான நோக்கமாக உள்ளது” என்று கூறுகிறார் திரிபுவன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியலாளரான திகாரம் கௌதம்.

“ரஷ்ய ராணுவத்தில் சேரும் நேபாள இளைஞர்கள் சில மாதங்களில் சம்பாதிக்கும் பணத்தை, பிற வழிகளில் சம்பாதிக்க அவர்களுக்கு சில ஆண்டுகள் ஆகும். இதன் காரணமாக அவர்கள் ரஷ்ய ராணுவத்தால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்” என்றும் அவர் கூறினார்.

ரஷ்யா -யுக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, பல்வேறு காரணங்களுக்காக மொத்தம் 1,729 நேபாளிகள் ரஷ்யாவுக்கு பயணித்துள்ளனர் என்று நேபாள அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

749 நேபாள மாணவர்கள் மேற்படிப்புக்காகவும், 356 பேர் வேலைக்காகவும் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என்று நேபாள அரசின் குடியேற்ற துறை தெரிவித்துள்ளது.

ராஜ் உள்ளிட்ட ரஷ்யாவில் இருக்கும் நேபாளிகளிடம் பிபிசி பேசியபோது, ரஷ்யா வந்ததற்காக அவர்கள் கூறிய காரணங்கள், சமூகவியலாளர் கௌதமின் கருத்தை பிரதிபலிப்பவையாக இருந்தன.

ரஷ்ய ராணுவத்தில் நேபாள இளைஞர்கள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, சித்தரிப்பு படம்

“பணம் சம்பாதிப்பதற்காக தான் நாங்கள் ரஷ்யாவுக்கு வந்தோம்” என்று நேபாள இளைஞர் ஒருவர் பகிரங்கமாக தெரிவித்தார். இதன் காரணமாக தான் ரஷ்ய ராணுவத்தில் சேர்ந்ததாகவும். அதுகுறித்து டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.

“ரஷ்யாவில் நாங்கள் சம்பாதிக்கும் பணத்தை நேபாளத்திலோ, வேறு எந்த நாட்டிலோ எங்களால் சம்பாதிக்க முடியாது. எனவே இதயம் சம்பந்தமான நோய்கள் இல்லாதவர்கள் தாராளமாக ரஷ்யாவுக்கு வரலாம்” எனவும் அந்த இளைஞர் தெரிவித்தார்.

“எங்கள் வாழ்வு மீதான அன்பின் காரணமாக நாங்கள் நேபாளத்திற்கு திரும்பலாம். ஆனால் அங்கு எங்களின் வேலைக்கு என்ன உத்தரவாதம் உள்ளது?” என்று மற்றொரு இளைஞர் கேள்வி எழுப்புகிறார்.

யுக்ரேன் போரில் பங்கேற்றுள்ள ராணுவ வீரர்களுக்கு அதிக ஊதியம் தருவதாக ரஷ்ய அரசு உறுதியளித்துள்ளதாக கூறினார் ராஜ். அதன்படி, ராணுவ பயிற்சி காலத்தில் 60 ஆயிரம் நேபாள கரன்சிக்கு இணையான ஊதியம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

பயிற்சி காலம் முடிந்ததும், தங்களுக்கு மாதாந்திர ஊதியமாக 1.95 லட்சம் ரூபிள்கள் வழங்கப்படும் என்று வேலைக்கான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் மற்றொரு நேபாள இளைஞர் தெரிவித்தார்.

இந்த தொகை மூன்று லட்சம் நேபாள கரன்சிகளுக்கு இணையானது என்கிறார் ராஜ். அத்துடன் ஓராண்டு ஒப்பந்தம் முடிந்த பிறகு, ராணுவ வீரர்கள் ரஷ்ய நாட்டின் பாஸ்போர்ட்டை பெற இயலும். அத்துடன் அவர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை ரஷ்யாவுக்கு அழைத்து வர முடியும் என்றும் கூறுகிறார் நேபாள இளைஞரான ராஜ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: