You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இருளில் மூழ்கிய ஐரோப்பிய நாடுகள் - ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் மின்சாரமின்றி தவித்தது ஏன்?
ஒரு நாள் முழுவதும் ஒட்டுமொத்த நாடே மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கினால் என்ன ஆகும். அதைத் தான் தற்போது ஸ்பெயின், போர்சுகல், பிரான்ஸ் நாட்டின் சில பகுதிகளில் வாழும் மக்கள் அனுபவித்தனர்.
சுவிட்ச் போட்டால் காற்று, வெளிச்சம் என இன்று நமது வாழ்க்கை முழுவதும் மின்சாரமானது ஒரு இன்றியமையாத விஷயமாக இருக்கின்றது.
மில்லியன் கணக்கான மக்கள் நேற்று (ஏப்ரல் 28) முழுவதும் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். இது அந்த நாடுகளில் பல்வேறு சிரமங்கள் மற்றும் பிரச்னைகளையும் ஏற்படுத்தியது.
தற்போது மின்சாரம் வந்துவிட்டது, ஆனாலும் நேற்று ஏற்பட்ட மின் துண்டிப்பு காரணமாக வந்த பிரச்னைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
பிரான்ஸுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான மின்சார இணைப்பில் ஏற்பட்ட ஒரு பிரச்னை காரணமாக இந்த மின்சார தடை ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்று ஐரோப்பாவின் மின்சாரத் தொழிலை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வர்த்தக அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.
ஆனால் இந்த மின்வெட்டு ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் அதிகாரப்பூவமாக தெரியவரவில்லை.
ஸ்பெயின் மற்றும் போர்சுகல் நாட்டின் அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு முழுவதும் மின்வெட்டுக்கான காரணத்தைக் கண்டறிய முயற்சித்து வந்தனர்.
"சைபர் தாக்குதல் நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை" என்று ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா கூறினார்.
ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இவ்வாறு மீண்டும் நடக்காது என்றும், மேலும் அவரது அரசாங்கம் இந்த நிகழ்வு ஏன் நடந்தது என்பதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தும் என்றும் கூறியுள்ளார்.
இந்த மின்வெட்டால் பொதுப்போக்குவரத்து நிறுத்தம், விமானங்கள் தாமதம், போக்குவரத்து நெரிசல் என குழப்பமும் இடையூறும் ஏற்பட்டது. இதனால் ஸ்பெயினில் அவசர கால நிலையும் பிறப்பிக்கப்பட்டது.
கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்கள் இருளில் மூழ்கியதால், மக்கள் செய்வதரியாமல் தவித்தனர்.
இந்த மின்தடையால் கார்டு மூலம் பணம் செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டதால், பணம் எடுக்கும் இயந்திரத்தில் நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டின் மெட்ரோ ரயில் நிலைய வலையமைப்பில் சிக்கிக் கொண்ட பயணிகள் குழப்பமடைந்து பீதியடைந்தனர்.
மக்கள் மிகவும் குழப்பத்திலும் அச்சத்திலும் இருந்தனர். என்ன நடக்கிறது என்றே புரியாமல் இருந்தது என்று ஸ்பெயினில் வசிக்கும் சாரா ஜோவோவிச் பிபிசியிடம் தெரிவித்தார்.
மொபைல் போன்கள் வேலை செய்யவில்லை, இதனால் யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.
"மக்கள் "நாய்களைப் போல தரையில் தூங்கினர்". என்று பார்சிலோனா ரயில் நிலையத்தில் ஒரு பெண் தெரிவித்தார்.
மின் தடை ஏற்பட்டபோது தெற்கு மாட்ரிட்டில் உள்ள ஒரு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உயிர் இழந்தார்.
எல் பைஸ் செய்தித் தாளின்படி, அவர் வீட்டில் எரிந்த மெழுகுவத்தி காரணமாக இந்த தீ ஏற்பட்டிருக்கலாம் என்று தேசிய காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
ஒரு நடுத்தர வயது பெண் இறந்துள்ளதாகவும், மேலும் 13 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஐந்து பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அவசர சேவை நிறுவனமான SAMUR தெரிவிக்கின்றது.
மாட்ரிட்டின் பிற இடங்களில், தீயணைப்பு வீரர்கள் 200க்கும் மேற்பட்டவர்களை மீட்டதாகவும், அவர்களில் பெரும்பாலோர் மின்வெட்டுக்குப் பிறகு லிஃப்டுகளில் சிக்கி இருந்ததாகவும் அவசர கால சேவைகள் தெரிவிக்கின்றன.
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் விளையாட்டு அமைப்பாளர்கள், திங்கள்கிழமை அன்று நடைபெற இருந்த விளையாட்டு போட்டிகளை ரத்து செய்ய முடிவு எடுத்தனர்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தம்பதி திங்கள்கிழமை அன்று இரவு தூங்குவதற்காக ஒரு இடத்திற்காக மாட்ரிட்டின் தெருக்களில் நான்கு மணி நேரம் தேடித் திரிந்தனர்.
ஐரோப்பாவுக்கு சுற்றுலா வந்திருந்த நான்கு மணி நேரம் தாங்கள் முன்பதிவு செய்திருந்த Airbnb-யில் மின்சாரத்தால் இயக்கப்படும் கதவுகள் வேலை செய்யாததால், தங்க இடம் இல்லாமல் சிக்கித் தவித்தனர்.
போர்சுகல் விமான நிலையங்களிலிருந்து புறப்படும் மொத்தம் 185 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன, மேலும் 187 விமானங்களின் வருகையும் ரத்து செய்யப்பட்டன.
மேலும் ஸ்பெயின் விமான நிலையங்களிலிருந்து புறப்படும் 205 விமானங்கள் மற்றும் 205 விமானங்களின் வருகையும் ரத்து செய்யப்பட்டன என்று விமானப் போக்குவரத்து தரவு நிறுவனமான சிரிம் தெரிவிக்கின்றது.
வணிகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்பெயினில் உள்ள சில ஐகியா சூப்பர் மார்க்கெட் கிளைகள் டிக்கையாளர்கள் அதன் கடைகளுக்குள் நுழைவதை தடுத்தன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.