முகலாய பேரரசர் முகமது ஷாவிடம் இருந்து கோஹினூர் வைரத்தை சாதுர்யமாக கொள்ளையடித்த நாதிர் ஷா

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி ஹிந்தி

முகலாயப் பேரரசு 18ஆம் நூற்றாண்டில் உலகின் செல்வாக்குள்ள பேரரசாக மட்டுமல்ல, செல்வம் மிக்க பணக்காரப் பேரரசுகளில் ஒன்றாகவும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட இந்தியாவின் வடக்குப் பகுதி, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதி என முகலாயப் பேரரசு பரந்து விரிந்திருந்தது.

வைரம் என்றாலே உலகின் மிகப் பிரபல வைரமான கோஹினூர் வைரத்தின் பெயர் பலரது நினைவுக்கு வரும். அந்த அரிய வைரம், அன்றைய முகலாய பேரரசர்களின் அலங்கார அரியணையான மயிலாசனத்தில் ஒளி வீசிக் கொண்டிருந்தது.

ஔரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு முகலாயப் பேரரசின் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்து வந்தாலும், காபூல் முதல் கர்நாடகா வரையிலான செழிப்பான நிலப்பரப்பு முகலாயர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

வில்லியம் டால்ரிம்பிள் மற்றும் அனிதா ஆனந்த் எழுதிய 'கோஹினூர் தி ஸ்டோரி ஆஃப் தி வேர்ல்ட்ஸ் மோஸ்ட் இன்ஃபேமஸ் டயமண்ட்' (Koh-i-Noor: The History of the World's Most Infamous Diamond) என்ற புத்தகத்தில், கோஹினூர் வைரம் தொடர்பான பல சரித்திரத் தகவல்கள் காணக் கிடைக்கின்றன.

"கடந்த 1739ஆம் ஆண்டுவாக்கில், முகலாய தலைநகர் டெல்லியின் மக்கள் தொகை சுமார் 20 லட்சம். இது லண்டன் மற்றும் பாரிஸின் ஒட்டுமொத்த மக்கள்தொகையைவிட அதிகம்."

இஸ்தான்புல் மற்றும் டோக்கியோவை போன்றே, டெல்லியும் மிகவும் பணக்கார, செல்வாக்கு மிக்க, அற்புதமான நகரமாக இருந்த காலகட்டம் அது. அப்போது முகலாயப் பேரரசை ஆட்சி புரிந்தவர் அரசர் முகமது ஷா, இவர் 'ரங்கீலா' என்றும் அறியப்படுகிறார்.

"ரோஷன் அக்தர் என்ற இயற்பெயர் கொண்ட முகமது ஷா, தனது 18வது வயதில் 1719ஆம் ஆண்டில் டெல்லியின் அரியணையில் ஏறினார். ஔரங்கசீப்பின் பேரனும், ஜஹான் ஷாவின் மகனுமான முகமது ஷா கட்டுக்கோப்பான உடல்வாகு கொண்டவர். அரசரான பின்னரும், கடும் வில்வித்தைப் பயிற்சிகளை மேற்கொண்ட அவர், அடிக்கடி வேட்டைக்குச் செல்லும் பழக்கத்தையும் கொண்டிருந்தார்" என்று ஜஹீருதீன் மாலிக் தனது 'தி ரெய்ன் ஆஃப் முகமது ஷா' (The Reign of Mohammed Shah) என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

ஒரு கட்டத்தில், அபின் போதை காரணமாக அவர் வயிறு தொடர்பான பிரச்னைகளால் அவதிப்பட்டார். ஆரோக்கியம் சீர்கெடத் தொடங்கியது, குதிரை சவாரி செய்வதே சிரமமானது என்று மாலிக் எழுதியுள்ளார்.

அரசரின் பயன்பாட்டிற்காக சிறப்பு சேணம் ஒன்று தயாரிக்கப்பட்டது. லக்னெளவை சேர்ந்த அஸ்ஃப்ரி என்ற குதிரை சேணம் தயாரிப்பாளர் தயாரித்த சிறப்பு சேணத்தைப் பயன்படுத்தி, முகமது ஷா குதிரையில் அமர்ந்து பயணிப்பார். இல்லையெனில் யானையின் அம்பாரியில் அமர்ந்து பயணிப்பதை வழக்கப்படுத்திக் கொண்டார்.

கலைகளை ஆராதித்து ஆதரித்த முகமது ஷா

முகலாய அரசவையில் இசை, ஓவியம் என கலைகளும் இலக்கியமும் ஆதிக்கம் செலுத்தச் செய்த முகமது ஷா, அழகை ஆராதித்தவர். பெண்கள் அணியும் அழகான 'லெஹங்கா' போன்ற ஆடை மற்றும் முத்து பதித்த காலணிகளை அணிவதில் விருப்பம் கொண்டவராக இருந்தார்.

நாட்டுப்புற இசை மரபிலிருந்த சிதார், தபேலா என இசைக் கருவிகளைத் தனது அரசவையில் இசைக்கச் செய்தவர் முகமது ஷா 'ரங்கீலா' என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர், முகலாய காலத்தின் தனித்துவமான ஓவிய வகையான முகலாய மினியேச்சர் ஓவியக் கலையை மீண்டும் உயிர்ப்பித்தார். முகலாய அரசவை வாழ்க்கையையும், ஹோலி கொண்டாட்டங்களையும் சித்தரிப்பதில் வல்லுநர்களாக இருந்த நிதமால், சித்ரமான் போன்ற புகழ்பெற்ற கலைஞர்கள் அவரது அரசவையில் இருந்தனர்.

யமுனை நதிக்கரையில் அரசர் ஹோலி விளையாடுவது, செங்கோட்டையில் உள்ள தோட்டங்களில் தனது அரசவை உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவது போன்றவை மினியேச்சர் ஓவியங்களாகத் தீட்டப்பட்டன.

ஔரங்கசீப்பின் 'வெறித்தனமான' மற்றும் 'ராணுவக் கட்டுப்பாடான' ஆட்சிக்குப் பிறகு, முகமது ஷாவின் ஆட்சியில் டெல்லியில் கலை, நடனம், இசை மற்றும் இலக்கியத்துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் முன்னேற்றம் கண்டது.

பிராந்திய ஆளுநர்களிடம் குவிந்த ஆட்சி அதிகாரம்

கலைகளை வளர்த்த முகமது ஷா 'ரங்கீலா', போர்க்களத்தில் சிறப்பாகச் செயல்படும் அரசராக இருந்ததேயில்லை. ஆட்சி செய்வதில் தனக்குப் பெரிய ஆர்வம் இல்லை என்பதை அவர் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்ததால் மட்டுமே அவர் அரசராக அதிகாரத்தில் நீடித்தார் என்று கூறப்படுகிறது.

"காலையில் யானைச் சண்டை மற்றும் பறவைச் சண்டையைப் பார்ப்பதில் பொழுதைப் போக்கியும், மதிய வேளையில், நடிகர்கள் மற்றும் கலைஞர்களுடன் பொழுதைக் கழித்தும் மகிழ்ந்த அரசர் முகமது ஷா, அரசு நிர்வாகத்தைத் தனது ஆலோசகர்களிடம் ஒப்படைத்திருந்தார்" என வில்லியம் டால்ரிம்பிள் மற்றும் அனிதா ஆனந்த் தங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

முகமது ஷா 'ரங்கீலா'வின் ஆட்சிக் காலத்தில், டெல்லியின் அதிகாரம், பிராந்திய ஆளுநர்களின் வசம் சென்றுவிட்டது. அரசியல், பொருளாதாரம், உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற முக்கியமான விஷயங்களிலும் ஆளுநர்கள் சுயமாகவே முடிவெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

வடக்கில் அவத் பகுதியைச் சேர்ந்த நவாப் சாதத் கான், தெற்கில் நிஜாம்-உல்-முல்க் ஆகிய இரண்டு பிராந்தியங்களின் ஆளுநர்கள், தன்னாட்சி ஆட்சியாளர்களாகத் தங்கள் செல்வாக்கை நிலைநாட்டும் முயற்சியைத் தொடங்கினார்கள்.

டெல்லியை தாக்கிய நாதிர் ஷா

முகலாய அரசின் மேற்கு எல்லையும், துருக்கியின் அரசர் நாதிர் ஷாவின் எல்லையும் அருகில் இருந்தது முகமது ஷா 'ரங்கீலா'வின் துரதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.

நாதிர் ஷா எப்படிப்பட்டவர்? இதைத் தனது சுயசரிதையில் பிரெஞ்சு எழுத்தாளர் பெரே லூயிஸ் பாஜான் இவ்வாறு விவரிக்கிறார்: "நாதிர் ஷாவின் தலைமுடி வெண்மையாக இருக்கும், சாயம் பூசிய தாடி மட்டும் கருப்பாக இருக்கும். கனமான குரலைக் கொண்டிருந்த அவர், காரியத்தைச் சாதிக்க வேண்டுமென்றால் மட்டும், தனது குரலை மென்மையாக்கிக் கொள்வார். தனக்கென தனி இருப்பிடத்தை வைத்துக் கொள்ளாத நாதிர் ஷா, தனது அரசவையை ராணுவ முகாமிலும் நடத்துவார், அதேபோல கூடாரத்தையே தான் தங்கும் அரண்மனையாகவும் பயன்படுத்திக் கொள்வார்."

வளமான முகலாய கருவூலத்தைக் கொள்ளையடிக்க நாதிர் ஷா திட்டமிட்டு இருப்பதாகவும், அதனால் அவர் டெல்லியை தாக்கக்கூடும் என்றும் செய்திகள், நாதிர் ஷா, காந்தஹார் மீதான தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே பரவியிருந்தன. இந்த வதந்திகள் ரங்கீலாவுக்கும் தெரியும். முகலாய பேரரசின் மீது தாக்குதல் நடத்துவதற்காக நாதிர் ஷா இரண்டு காரணங்களையும் கண்டுபிடித்துவிட்டார்.

"நாதிர் ஷாவின் அதிகாரத்தில் இருந்து தப்பி வந்த சில இரானிய கிளர்ச்சியாளர்களுக்கு முகலாயர்கள் அடைக்கலம் கொடுத்தார்கள் என்பது முதல் காரணம். இரானிய தூதரின் சில பொருட்களை எல்லையில் இருந்த முகலாய வீரர்கள் பறிமுதல் செய்தனர் என்பது இரண்டாவது காரணம்.

இந்தக் காரணங்களை முன்வைத்து, நாதிர் ஷா தனது தூதரை டெல்லிக்கு அனுப்பினார். முகலாயர்கள் நண்பர்களைப் போல நடந்து கொள்ளவில்லை என்று நாதிர் ஷாவின் தரப்பினர் புகார் கூறினார். ஆனால் இந்தப் புகாரை முகமது ஷா ரங்கீலா கண்டுகொள்ளவில்லை," என்ற செய்தியை வில்லியம் டால்ரிம்பிள் மற்றும் அனிதா ஆனந்த் தங்கள் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர்.

தூதரை அனுப்பிய மூன்று மாதங்களுக்குப் பிறகு, டெல்லிக்கு வடக்கே 100 மைல் தொலைவில் உள்ள கர்னால் என்ற இடத்திற்கு முன்னேறிய நாதிர் ஷா, அங்கு முகலாயப் படைகளைத் தோற்கடித்தார். அங்கு அவர் தோற்கடித்த மூன்று படைகளில் ஒன்று டெல்லியை சேர்ந்தது, மற்ற இரண்டு படைகள் அவத் மற்றும் தக்காணத்தைச் சேர்ந்தவை.

நாதிர் ஷா மற்றும் முகமது ஷா 'ரங்கீலா' இடையிலான ஒப்பந்தம்

முகலாயப் படை சுற்றி வளைக்கப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் தீர்ந்து போகத் தொடங்கிய நேரத்தில், ​​நாதிர் ஷா, முகலாய அரசர் முகமது ஷாவை பேச்சுவார்த்தைக்காக அழைத்தார்.

இந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளை மைக்கேல் எக்ஸ்வொர்த்தி தனது 'ஸ்வோர்டு ஆஃப் பெர்சியா' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"ரங்கீலாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்த நாதிர் ஷா அவரை நன்றாகவே நடத்தினார் என்றாலும், அவரைத் திரும்பிச் செல்ல விடவில்லை. முகமது ஷாவின் மெய்க்காப்பாளர்களின் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களுக்குப் பதிலாக நாதிர் ஷாவின் வீரர்கள் ரங்கீலாவை சுற்றி நிறுத்தப்பட்டனர். அதற்கு அடுத்தநாளே, முகலாய அரசரின் அரசவையினரும் ஊழியர்களும் நாதிர் ஷாவிடம் அழைத்து வரப்பட்டனர். முகலாய வீரர்களுக்கு உணவு கொடுக்காமல் பசியில் வாடவிட்ட நாதிர் ஷா, அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டார். ஆனால், அவர்களின் மன்னர் முகமது ஷாவை அனுப்பவில்லை."

இப்படி முகலாயப் படையின் அனைத்து தரப்பையும் நாதிர் ஷா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார். மெஹ்தி அஷாராபாதி தனது 'தாரிக்-இ-ஜஹான் குஷா-இ-நாத்ரி' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: "நாதிர் ஷாவிடம் இருந்த முகமது ஷா ஒரு வாரம் கழித்து டெல்லிக்குள் நுழைந்தபோது, ​​நகரமே அமைதியாக இருந்தது. அதற்கு அடுத்த நாள், மார்ச் 20 அன்று, நாதிர் ஷா 100 யானைகள் புடைசூழ ஊர்வலமாக டெல்லிக்குள் நுழைந்தார். டெல்லிக்கு வந்த நாதிர் ஷா, செங்கோட்டையில் உள்ள திவான்-இ-காஸ் அருகே ஷாஜகானின் படுக்கையறையில் தனது முகாமை அமைத்துக் கொண்டார். எனவே முகமது ஷா, ஆசாத் புர்ஜிற்கு அருகிலுள்ள கட்டடத்திற்குச் சென்றுவிட்டார்."

முகலாயப் பேரரசின் அரச கருவூலத்தை முழுமையாக நாதிர் ஷாவிடம் முகமது ஷா ஒப்படைத்தபோது, அதைத் தயக்கத்துடன் ஏற்றுக் கொள்வது போல நாதிர் ஷா நடித்தார்.

மார்ச் 21 பக்ரீத் தினத்தன்று, டெல்லியின் அனைத்து மசூதிகளிலும் நாதிர் ஷாவின் பெயரில் தொழுகை நடத்தப்பட்டது என்பதும், டெல்லி நாணயச் சாலையில் நாதிர் ஷாவின் பெயரில் நாணயங்கள் அச்சிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் படுகொலைகளை அரங்கேற்றிய நாதிர் ஷா

அடுத்த நாள் முகலாய தலைநகர் டெல்லியில் உதித்த சூரியன், அந்த நகரின் மிகவும் மோசமான நாளைப் பார்த்தது. நாதிர் ஷாவின் படை டெல்லிக்குள் நுழைந்தவுடன், தானியங்களின் விலைகள் திடீரென உயர்ந்தன. நாதிர் ஷாவின் வீரர்கள், டெல்லியின் முக்கியமான வணிகப் பகுதியான பஹார்கஞ்சில் வணிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றபோது, இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் உருவாகின.

டெல்லியின் மோசமான அந்த நாளைப் பற்றி வில்லியம் டால்ரிம்பிள் மற்றும் அனிதா ஆனந்த் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்: "செங்கோட்டையை காவல் காத்து வந்த பாதுகாவலர் ஒருவர், நாதிர் ஷாவை கொன்றுவிட்டதாக வதந்தி புயல் வேகத்தில் பரவியது. அதையடுத்து, ஒரு கூட்டம் நாதிர் ஷாவின் வீரர்களைத் தாக்கத் தொடங்கியது. நண்பகலுக்குள், நாதிர் ஷா படையின் 900 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்குக் கடுமையாக பதிலடி கொடுக்க உத்தரவிட்டார் நாதிர் ஷா."

மறுநாள், தனது படையினரின் செயல்பாடுகளைக் கண்காணிக்க அவர் அதிகாலையிலேயே செங்கோட்டையில் இருந்து வெளியே வந்து, சாந்தினி சௌக்கிற்கு அருகிலுள்ள கோட்வாலி மேடையில் நின்றுவிட்டார். காலையில் ஒன்பது மணிக்கே படுகொலைகள் அரங்கேறத் தொடங்கின. செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் சாந்தினி சௌக், தரியாகஞ்ச் மற்றும் ஜம்மா மசூதி அருகே இருந்தவர்களே அதிக அளவில் கொல்லப்பட்டனர்.

வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது கோரம் என்றால், உயிரிழந்த மக்களின் சடலங்களில் இருந்து எழுந்த துர்நாற்றம் நகரம் முழுவதும் பரவியது. அந்த ஒரே நாளில் டெல்லியில் சுமார் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.

டெல்லி மக்களைக் கொள்ளையடித்த நாதிர் ஷா

வில்லெம் ஃப்ளோர், 'New facts on Nadirshah's India campaign' என்ற தனது கட்டுரையில், இந்த நிகழ்வை நேரில் பார்த்த டச்சுக்காரர் மேத்யூஸ் வான் லெப்சாயை மேற்கோள் காட்டி இவ்வாறு குறிப்பிடுகிறார்: "சாதத் கான் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். முகலாய பேரரசர் முகமது ஷா, தலையில் எதுவும் அணியாமல், தனது கைகளைத் தலைப் பாகையின் இருபுறமும் கட்டிக்கொண்டு, நாதிர் ஷாவின் முன் மண்டியிட்டு இறைஞ்சினார்.

டெல்லி மக்கள் மீது இரக்கம் கொள்ள வேண்டும் என்று வேண்டிய அவர், அவர்களுக்குப் பதிலாகத் தன்னைத் தண்டிக்குமாறு கேட்டுக் கொண்டார். மண்டியிட்டு வேண்டிய அரசரின் வேண்டுகோளை ஏற்ற நாதிர் ஷா, படுகொலைகளை நிறுத்துமாறு தனது வீரர்களுக்கு உத்தரவிட்டார். அதுமட்டுமல்ல, தான் டெல்லியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்."

படுகொலைகள் நிறுத்தப்பட்டாலும் கொள்ளையும் சித்திரவதைகளும் தொடர்ந்தன. டெல்லி மக்களைக் காப்பாற்ற நாதிர் ஷாவுக்கு அடுத்த சில நாட்களுக்குள் ஒரு பெரிய தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட முகமது ஷாவின் நிலையோ மோசமாக இருந்தது. தனது மக்களிடமே நாதிர் ஷாவுக்கு நிதியளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

"டெல்லி முழுவதும் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒரு பெரிய தொகை கோரப்பட்டது. பணம் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டதுடன், வீடுகளும் இருப்பிடங்களும் அழிக்கப்பட்டன. இனி வாழவே வழியில்லை என்ற நிலையில் பலர் விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டனர், சிலர் கத்திகளால் தங்களைத் தாங்களே குத்திக் கொண்டு இறந்தனர். சுருக்கமாகச் சொல்வதெனில், 348 ஆண்டுகளில் முகலாயப் பேரரசு சேர்த்து வைத்த செல்வம் ஒரே நேரத்தில் வேறு ஒருவருடையதாக மாறியது" என்று ஆனந்த் ராம் முகிலிஸ், தனது 'தாஸ்கிரா' என்ற நூலில் எழுதியுள்ளார்.

மீண்டும் டெல்லியின் மன்னரான முகமது ஷா 'ரங்கீலா'

ஒருபுறம் இப்படி நடைபெற்றுக் கொண்டிருந்தால், மறுபுறம் முகமது ஷா 'ரங்கீலா' மீது நாதிர் ஷா கருணை காட்டுவதைப் போல நடந்து கொண்டார். உண்மையில், நாதிர் ஷாவின் அருகில், அவரது மெய்ப்பாதுகாவலர் போலவே முகமது ஷா நிற்க வைக்கப்பட்டிருந்தார்.

ஒரு மாதத்திற்குப் பிறகு, மே 12 அன்று, நாதிர் ஷா அரசவையைக் கூட்டி, கிரீடத்தை முகமது ஷா ரங்கீலாவின் தலையில் வைத்தார்.

பிரபல வரலாற்று ஆசிரியர் ஆர்.வி.ஸ்மித், தி இந்துவில் வெளியிட்ட 'ஆஃப் நூர் அண்ட் கோஹினூர்' என்ற கட்டுரையில், "முகமது ஷா ரங்கீலா தனது தலைப்பாகையில் கோஹினூர் வைரத்தை மறைத்து வைத்திருந்தார் என்பதை நடனக் கலைஞர் நூர் பாயிடம் இருந்து நாதிர் ஷா தெரிந்துகொண்டார். அதைச் சாமர்த்தியமாக பெற்றுக்கொள்ள விரும்பிய நாதிர் ஷா, 'நாம் இருவரும் சகோதரர்களைப் போன்றவர்கள், எனவே தலைப்பாகைகளை மாற்றிக் கொள்வோம்' என்று முகமது ஷாவிடம் கூறினார். அரசராக கிரீடம் சூட்டப்பட்ட முகமது ஷாவுக்கு வேறு வழியே இல்லை. கோஹினூர் வைரத்தைத் தனது கைகளாலேயே தாரைவார்த்துக் கொடுத்தார்."

"இந்தக் கதை மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அந்தக் காலத்தின் எந்த மூல நூலிலும் இந்தத் தகவல் குறிப்பிடப்படவில்லை. 19ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் வரலாற்றுப் புத்தகங்களில் இந்தத் தகவல் இடம்பெறத் தொடங்கியது. முகலாய அரசவையில் இடம் பெற்றிருந்த ஜுகல் கிஷோர், நாதிர் ஷா தனது தலைப்பாகையை முகமது ஷாவுக்கு கொடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்" என்று வில்லியம் டால்ரிம்பிள் குறிப்பிட்டுள்ளார்.

இரானுக்கு கொண்டு செல்லப்பட்ட மயிலாசனம், கோஹினூர் வைரம்

டெல்லியில் 57 நாட்களைக் கழித்த பிறகு, மே 14 அன்று இரான் நோக்கிச் சென்ற நாதிர் ஷா, எட்டு தலைமுறையாக முகலாயர்கள் சேர்த்து வைத்திருந்த செல்வங்கள் அனைத்தையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்.

இரானிய வரலாற்றாசிரியர் முகமது காசெம் மார்வி தனது "ஆலம் ஆரா-யே நாதெரி" (Alam Ara-ye Naderi) என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: "நாதிர் ஷா கொள்ளையடித்த செல்வங்களில் மிகவும் முக்கியமானது மயில் சிம்மாசனம். தங்கம், வெள்ளி மற்றும் விலை உயர்ந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அரிய மயிலாசனம் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் 700 யானைகள், நான்காயிரம் ஒட்டகங்கள் மற்றும் 12 ஆயிரம் குதிரைகள் மீது வைக்கப்பட்டு இரானுக்கு கொண்டு செல்லப்பட்டன."

செனாப் நதியின் பாலத்தைக் கடந்தபோது, நாதிர் ஷாவின் படையில் இருந்த வீரர்கள் ​​ஒவ்வொருவராக சோதனை செய்யப்பட்டனர். தாங்கள் கொள்ளையடித்து மறைத்து வைத்துள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என்ற அச்சத்தில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கமும் விலைமதிப்பற்ற ரத்தினங்களும், ஆற்றில் வீசப்பட்டன. மீண்டும் திரும்பி வரும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஆற்றின் அடிப்பகுதியில் இருந்து அவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் நம்பினார்கள்.

31 ஆண்டுகள் ஆட்சி செய்த முகமது ஷா ரங்கீலா

நாதிர் ஷா டெல்லியை கொள்ளையடித்துச் சென்ற பிறகு முகமது ஷா டெல்லியில் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். வாழ்க்கையின் இறுதி நாட்களில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

ஷேக் அஹ்மத் ஹுசைன் மசாக் தனது 'தாரிக்-இ-அஹ்மதி' என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "முகமது ஷாவின் இறுதிக் காலத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலவீனமாகிவிட்டார். இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, கோட்டைக்குள் இருந்த மசூதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு கூடியிருந்த அரசவை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதே முகமது ஷா மயங்கிக் கீழே விழுந்தார். அதன்பிறகு மீண்டும் எழுந்திருக்கவில்லை."

ஆட்சிப் பொறுப்பேற்ற 31வது ஆண்டில் 1748 ஏப்ரல் 17ஆம் தேதியன்று காலை முகமது ஷா காலமானார். அவரது விருப்பப்படியே, நிஜாமுதீன் அவுலியாவின் கல்லறை வளாகத்தில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.

முகமது ஷாவின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஜஹீருதீன் மாலிக் இவ்வாறு எழுதுகிறார்: "அவரிடம் பல குறைகள் இருந்தபோதிலும், தனது அவையில் ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் பராமரித்தார். தனது அரசவையை மது மற்றும் பாலியலின் குகையாக மாற்றிய ஜஹாந்தர் ஷாவை போலன்றி கலாசாரத்தைப் பின்பற்றினார்.

கடினமான சூழ்நிலைகளில் ஆட்சி செய்தபோதும், அவரால் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லி அரியணையைத் தக்க வைத்துக்கொள்ள முடிந்தது என்பது அவரின் அரசியல் சாதுர்யத்தையும் திறமையையும் எடுத்துக் காட்டுகிறது."

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு