You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முகலாய பேரரசு இந்தியாவில் வேரூன்ற காரணமான போரில் ராணாவை பாபர் வீழ்த்திய கதை
- எழுதியவர், ரெஹான் ஃபஸல்
- பதவி, பிபிசி ஹிந்தி
பதினைந்தாம் நூற்றாண்டில், மேவார் வட இந்தியாவில் ஒரு சக்தி வாய்ந்த ராஜ்ஜியமாக உருவெடுத்தது. குஜராத்தில் இருந்து வந்து ராஜஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் குடியேறிய பப்பா ராவல் என்பவரால் மேவார் நிறுவப்பட்டது.
தனது சகோதரர்களுடனான அதிகாரப் போராட்டத்திற்குப் பிறகு, 1508ஆம் ஆண்டில் ராணா சங்கா, மேவாரின் அரியணையைக் கைப்பற்றினார்.
அப்போது அவருக்கு 27 வயது. மேவாரின் அரியணையில் அமர்ந்த உடனேயே தனது படையெடுப்புகளைத் தொடங்கினார் ராணா சங்கா. முதலில் அபுவும், பூண்டியும் ராணா சங்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டன.
கடந்த 1517ஆம் ஆண்டு நடந்த போரில், ராணா சங்கா, மால்வாவின் ஆட்சியாளரான இரண்டாம் மஹ்மூதை பிடித்து சித்தூருக்கு அழைத்து வந்ததாக சதீஷ் சந்திரா தனது 'ஹிஸ்டரி ஆஃப் மெடிவல் இந்தியா' என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.
அதே ஆண்டில், இப்ராஹிம் லோடி மேவாரை தாக்கினார். ஆனால் கட்டௌலியில் ராணா சங்காவால் தோற்கடிக்கப்பட்டார்.
"இந்தப் போரில், ஓர் அம்பு ராணா சங்காவின் இடது கையின் கவசத்தைத் துளைத்தது. விஷம் அவரது உடல் முழுவதும் பரவும் அபாயம் இருந்ததால், ராணாவின் உயிரைக் காப்பாற்ற, மருத்துவர் அந்தக் கையை வெட்டி எடுத்தார். அவர் குணமடைய நீண்ட காலம் எடுத்தது. ஆனால் இப்போது அவருக்கு ஒரு கை மட்டுமே இருந்தது. ஆனால் ராணா சங்கா தைரியத்தை இழக்கவில்லை. அவர் ஒரு கையால் மட்டுமே வாள்வீசுவதற்குப் பயிற்சி செய்தார்."
ஃபெர்கானா பள்ளத்தாக்கில் பிறந்த பாபர் இந்தியாவின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்த நேரம் இது.
பாபரைத் தூதர்கள் அணுகினர்
கடந்த 1526ஆம் ஆண்டு நடந்த முக்கியமான பானிபட் போருக்கு சில மாதங்களுக்கு முன்பு, டெல்லி ஆட்சியாளர் இப்ராஹிம் லோடியின் மகன் திலாவர் கான் தலைமையில், அவரது அரசவையைச் சேர்ந்த சிலர், பாபரைச் சந்திக்க வந்தனர். அவர்கள் பாபரை இந்தியாவிற்கு வந்து லோடியை அதிகாரத்தில் இருந்து அகற்றுமாறு கேட்டுக் கொண்டனர்.
இப்ராஹிம் லோடி ஒரு சர்வாதிகாரி என்றும், அவரது அரசவை உறுப்பினர்களின் ஆதரவை இழந்துவிட்டார் என்றும் அவர் கூறினார்.
பாபர் தனது சுயசரிதையான 'பாபர்நாமா'வில், "நாங்கள் காபூலில் இருந்தபோது, மேவாரின் மன்னர் ராணா சங்காவின் ஒரு தூதர் தனது வாழ்த்துகளுடன் என்னிடம் வந்தார். ஆக்ராவில் இருந்து இப்ராஹிம் லோடியை தான் தாக்கத் திட்டம் வைத்திருப்பதாக அவர் என்னிடம் கூறினார். நான் டெல்லி மற்றும் ஆக்ரா இரண்டையும் கைப்பற்றினேன், ஆனால் அவர் எனக்குத் தனது முகத்தைக்கூட காட்டவில்லை" என்று எழுதினார்.
பாபரின் உறவினர் மிர்சா ஹைதர் தனது 'தாரிக்-இ-ரஷிதி' புத்தகத்தில் ராணா சங்காவின் தூதர் பாபரை சந்திக்க வந்ததாகக் குறிப்பிடுகிறார். பாபரின் மற்றொரு வாழ்க்கை வரலாற்றாசிரியர் ஸ்டான்லி லேன் பூல், ராணா சங்காவின் தூதர், பாபரை சந்தித்ததை தனது 'பாபர்' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு வரலாற்றாசிரியர் ரகுபீர் சிங் தனது 'ப்ரீ-மாடர்ன் ராஜஸ்தான்' என்ற புத்தகத்தில், "ராஜபுத்திரர்களுக்கு அரசியல் தொலைநோக்குப் பார்வை இல்லாததால், ராணா சங்கா, பலவீனமான இப்ராஹிம் லோடியை போரில் தோற்கடிக்க காபூலில் இருந்து பாபரை அழைக்கத் தூண்டினார். அதேபோல், ராணா சங்காவின் மரணத்திற்குப் பிறகு, அவரது ராணிகளில் ஒருவரான கர்மாவதி, தனது மூத்த மகன் விக்ரம்ஜித், மேவார் அரியணை ஏற உதவுவதற்காகத் தனது எதிரி பாபரின் உதவியை நாடுவதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை" என்று எழுதுகிறார்.
பானிபட் போரில் பாபர் இப்ராஹிம் லோடியை தோற்கடித்தார்
"அந்த நேரத்தில் பாபருக்கு பெரிய போர் வீரன் என்ற பெயர் எதுவும் இல்லை. மற்ற ராஜபுத்திர மன்னர்கள் யாருக்கும் தூதர்களை அனுப்பும் பாரம்பரியம் இல்லை" என்று ஜி.என். ஷர்மா தனது 'மேவார் மற்றும் முகலாய பேரரசர்கள்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், 1526இல் பானிபட் போரில் பாபர் இப்ராஹிம் லோடியை எதிர்த்துப் போரிட்டபோது, அங்கு ராணா சங்கா இருந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை. பாபர்நாமாவில் பாபர் இதை உறுதி செய்துள்ளார்.
பாபர்நாமாவில், "பானிபட் போரில், எங்கள் ராணுவத்தின் எண்ணிக்கை முப்பதாயிரம் மட்டுமே, இப்ராஹிம் லோடியின் வீரர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம்" என்று பாபர் எழுதியுள்ளார்.
"பாபரின் புத்திசாலித்தனமான தலைமை அவரது ராணுவத்தைவிட மூன்று மடங்கு பெரிய ராணுவத்தைத் தோற்கடித்தது. இப்ராஹிம் லோடியின் யானைகள் பீரங்கிகளைப் பயன்படுத்தியதால் கோபமடைந்தன. அவை தங்கள் சொந்த ராணுவத்தை மிதித்து ஓடத் தொடங்கின. பாபரின் ஒழுக்கமான மற்றும் திறமையான ராணுவம் இப்ராஹிம் லோடியை தோற்கடித்தது. பாபர் டெல்லியின் மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றினார்," என்று சதிஷ் சந்திரா எழுதியுள்ளார்.
ராணா சங்கா பாபரை ஆதரிக்கவில்லை
கடந்த 1519ஆம் ஆண்டு காக்ரான் போரில், மால்வாவை சேர்ந்த இரண்டாம் முகமது கில்ஜியை தோற்கடித்த பிறகு, ராணா சங்காவின் செல்வாக்கு, ஆக்ரா அருகே பாயும் பாலியாகர் நதி வரை பரவியது. கங்கை பள்ளத்தாக்கில் இருந்த பாபரின் பேரரசு இப்போது ராணா சங்காவுக்கு அச்சுறுத்தலாக மாறியது.
"ராணா சங்கா ஒப்பந்தத்தை மீறியதாக பாபர் குற்றம் சாட்டினார். ராணா சங்கா தன்னை இந்தியாவுக்கு அழைத்ததாகவும், இப்ராஹிம் லோடிக்கு எதிரான போரில் தனக்கு ஆதரவளிப்பதாக உறுதி அளித்ததாகவும், ஆனால் அப்படிப் போர் புரிய வந்தபோது அவர் தனக்கு உதவ முன்வரவில்லை என்றும் பாபர் கூறினார்.
ராணா பாபருக்கு என்ன வாக்குறுதி அளித்தார் என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை தைமூரை போலவே, பாபரும் கொள்ளையடித்த பிறகு திரும்பிச் செல்வார் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் பாபர் இந்தியாவில் தங்க முடிவெடுத்தது சூழலை முற்றிலுமாக மாற்றியது" என்று சதிஷ் சந்திரா எழுதுகிறார்.
இந்தியாவை கைப்பற்றும் தனது நோக்கத்திற்கு, மேவாரின் ராணா மிகப் பெரிய தடையாக இருப்பார் என்று பாபர் நம்பினார்.
ஹர்பன்ஸ் முகியா தனது 'தி மொகல்ஸ் ஆஃப் இந்தியா' என்ற நூலில், "லாகூரை கைப்பற்றிய பிறகு, டெல்லி மீதான தாக்குதலின்போது ராணா சங்கா, பாபருக்கு உதவி செய்வதாக உறுதியளித்துவிட்டு, உதவாமல் இருந்தபோதே பாபர், ராணா சங்காவின் ராஜதந்திரத்தைப் புரிந்து கொண்டார். ஆப்கானிய சக்தியை (லோடியை) பலவீனப்படுத்தி ராணா சங்கா டெல்லியை ஆள விரும்பினார் என்பதை பாபர் அறிந்து கொண்டார். ஆனால் பாபர் தானே டெல்லியை ஆள விரும்பினார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுபானத் தடை
கடந்த 1526ஆம் ஆண்டு, பானிபட் போரில் பாபர் வெற்றி பெற்ற பிறகு, ராணா சங்காவுடன் போர் புரிவதற்கான களம் அமைந்தது.
இந்தக் காலகட்டத்தில், இப்ராஹிம் லோடியின் தம்பி மஹ்மூத் லோடி உள்படப் பல ஆப்கானியர்கள், ஒருவேளை ராணா சங்கா பாபரை எதிர்த்து வெற்றி பெற்றால், மஹ்மூத் லோடி டெல்லியின் அரியணையை மீண்டும் பெற வாய்ப்புள்ளது என்ற நம்பிக்கையில் ராணா சங்காவுடன் இணைந்தனர்.
மேவாட் மன்னர் இலசான் கானும், ராணா சங்காவை ஆதரிக்க முடிவு செய்தார். கிட்டத்தட்ட எல்லா ராஜபுத்திர மன்னர்களும் ராணா சங்காவுக்கு ஆதரவாகத் தங்களது படைகளை அனுப்பினர்.
வில்லியம் ரஷ்புரூக் தனது 'பாபர்: அன் எம்பயர் பில்டர் ஆஃப் தி சிக்ஸ்டீந்த் சென்சுரி' என்ற புத்தகத்தில், "ராணா சங்காவின் புகழும், சமீபத்தில் பயானாவில் அவர் பெற்றிருந்த வெற்றியும், பாபரின் வீரர்களின் மன உறுதியைக் குலைத்துவிட்டன. தனது வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க, ராணா சங்காவுக்கு எதிரான போர் ஒரு 'ஜிஹாத்' என்று பாபர் அறிவித்தார்.
போருக்கு முன்பு, தான் எவ்வளவு தீவிரமான முஸ்லிம் என்பதைக் காட்ட அனைத்து மது பாத்திரங்களையும் உடைத்தார். தனது முழு ராஜ்ஜியத்திலும் மது விற்பனை மற்றும் வாங்குதலைத் தடை செய்தார். பாபர் தனது வீரர்களின் மன உறுதியை அதிகரிக்க ஓர் உணர்ச்சிமிக்க உரையை நிகழ்த்தினார்" என்று எழுதியுள்ளார்.
கடந்த 1527ஆம் ஆண்டு ராணா சங்காவுடன் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போருக்கு, ஆக்ராவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கான்வாவை தேர்ந்தெடுத்தார் பாபர்.
பாபர், ராணாவின் படை அணிவகுப்பு
கான்வா போரில், இரு தரப்பினரும் தங்கள் முழு பலத்தோடு போரிட்டனர். பாபர்நாமாவில், "ராணா சங்காவின் படையில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தனர், இதில் பத்தாயிரம் ஆப்கானியர்களும், ஹசன் கான் மேவதி அனுப்பிய அதே எண்ணிக்கையிலான வீரர்களும் அடங்குவர்," என்று பாபர் எழுதினார்.
பாபர் இந்த எண்களை மிகைப்படுத்தி எழுதியிருக்கலாம். ஆனால் பாபரின் படையினர் ராணா சங்காவின் படையினரைவிட எண்ணிக்கையில் மிகக் குறைவு என்பதில் சந்தேகமில்லை.
"பாபர் படையின் முன்பாகப் பொருட்கள் நிரப்பப்பட்ட வண்டிகளின் வரிசை இருந்தது. இந்த வண்டிகள் இரும்புச் சங்கிலிகளால் கட்டப்பட்டு அவரது படைக்கு பாதுகாப்புக் கேடயமாகச் செயல்பட்டன. இந்த வண்டிகளுக்குப் பின்னால் பீரங்கிகள் இருந்தன, அவை எதிரிக்குத் தெரியாது. அவற்றின் பின்னால் குதிரை வீரர்கள் வரிசையாக இருந்தனர்.
போர் வீரர்கள் முன்னும் பின்னும் நகர்ந்துகொள்ள வசதியாக வரிசைகளுக்கு இடையில் இடைவெளிகள் இருந்தன. அதற்குப் பின்னால் ஆயுதங்களுடன் கூடிய காலாட்படை வீரர்கள் இருந்தனர். அந்தப் பக்கத்தில் இருந்து தாக்குதல் ஏற்படும் பயம் இல்லாத அளவுக்கு, ராணுவத்தின் வலது மற்றும் இடதுபுறத்தில் தடைகள் அமைக்கப்பட்டன. ஒரு பக்கத்தில் ஒரு பள்ளம் தோண்டப்பட்டிருந்தன, மறுபுறம் பெரிய மரங்கள் வெட்டப்பட்டு வைக்கப்பட்டன" என்று ஜி என் ஷர்மா எழுதுகிறார்.
"மறுபுறம், ராணா சங்காவின் படை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. முன்புறத்தில் யானைகளின் வரிசை இருந்தது. யானையின் ஹவ்டா(அம்பாரி) ஒரு வகையான பாதுகாப்புக் கவசமாக இருந்தது. யானைகளின் தும்பிக்கைகளில் இரும்புக் கவசங்களும் அணிவிக்கப்பட்டு இருந்தன.
யானைகளுக்குப் பின்னால் ஈட்டிகளுடன் கூடிய குதிரை வீரர்கள் இருந்தனர். ராணா சங்கா முதல் வரிசையில் ஒரு யானையின் மீது அமர்ந்திருந்தார். அவரை அவரது வீரர்கள் அனைவரும் தூரத்தில் இருந்து பார்க்க முடிந்தது. அதேநேரம் பாபர் தனது படையின் முன்பக்கத்தில் இல்லை, நடுவில் இருந்தார்."
காயமடைந்த ராணா சங்கா
ராணா சங்கா பாபரின் வலது பக்க வியூகத்தைத் தாக்கி, அதைக் கிட்டத்தட்ட உடைத்துவிட்டார். போரில் ராணா சங்காவே போருக்குத் தலைமை தாங்கினார்.
"ராணா சங்கா ஒரு கண் இல்லாமல் இருந்ததைக் கண்டு அங்கிருந்த மக்கள் ஆச்சரியப்பட்டனர். அவரது ஒரு கை துண்டிக்கப்பட்டு இருந்தது. அவரது ஒரு கால்கூட வேலை செய்யவில்லை. அவரது உடல் காயங்களால் நிறைந்திருந்தது, ஆனால் இத்தனை இருந்த போதிலும் அவரது சுறுசுறுப்பு மற்றும் உற்சாகத்தில் எந்தக் குறைவும் இல்லை," என்று ஷர்மா எழுதுகிறார்.
ஆனால் முகலாய பீரங்கிகள் பெரும் அழிவை ஏற்படுத்தின. மெதுவாக ராணா சங்காவின் ராணுவம் பின்வாங்கத் தொடங்கியது.
"இதற்கிடையில், ஓர் அம்பு ராணா சங்காவின் நெற்றியில் பட்டது. அவர் தனது அம்பாரியிலேயே மயக்கமடைந்தார். அவரது தளபதிகள் சிலர் உடனடியாக அவரை அம்பாரியில் இருந்து கீழே இறக்கி, ஒரு பல்லக்கில் ஏற்றி வெளியே அனுப்பினர். ராணா சங்கா யானை மீது இல்லை என்பதை ராணாவின் படை கண்டது. இதைக் கண்டதும், அவர்களின் மன உறுதி உடைந்தது.
வீரர்கள் தங்கள் கால்களை இழந்தனர். ராஜபுத்திர தளபதியான அஜ்ஜு ஜாலா, ராணாவின் கிரீடத்தைத் தனது தலையில் வைத்துக்கொண்டு அவரது யானை மீது சவாரி செய்தார். ஆனால் அரசர் இல்லாததன் மோசமான விளைவு ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டது. ராஜபுத்திர ராணுவம் தைரியத்தை இழந்து சிதறியது" என்று ஜி.என். ஷர்மா போரை விவரித்துள்ளார்.
பாபர்நாமாவில், "நான் இஸ்லாத்தை பரப்புவதற்காக என் வீட்டைவிட்டு வெளியேறினேன். இந்தப் போரில் நான் தியாகியாக மரணமடைய முடிவு செய்திருந்தேன். ஆனால் கடவுள் என் வேண்டுகோளைக் கேட்டார். இரு படைகளும் சோர்வடைந்தன. ஆனால் பின்னர் ராணா சங்காவின் அதிர்ஷ்டமும் எனது அதிர்ஷ்டமும் மாறியது. ராணா மயக்கமடைந்தார். அவரது படையின் மன உறுதி உடைந்தது. நான் வெற்றி பெற்றேன்," என்று பாபர் எழுதினார்.
47 வயதில் உயிரிழந்த ராணா
ராணா சங்காவின் தோல்விக்குக் காரணம் அவரது படையில் ஒழுக்கமும் ஒருங்கிணைப்பும் இல்லாததுதான்.
"ராணா சங்காவின் படை எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால், முழு படைக்கும் ஒரே நேரத்தில் செய்தி அனுப்ப நேரம் பிடித்தது. முகலாயப் படையின் அமைப்பும் ஒழுக்கமும் ராணா சங்காவின் படையைவிட சிறப்பாக இருந்தது," என்று வில்லியம் ரஷ்ப்ரூக் எழுதுகிறார்.
கடந்த 1527இல் கான்வா போர் முடிந்த பிறகு, பாபரை தோற்கடித்த பின்னரே சித்தூருக்குள் நுழைவேன் என்று ராணா சங்கா சபதம் செய்தார். ஆனால், அவர் அதிக காலம் வாழவில்லை.
தனது 21 ஆண்டுகள் ஆரு மாதங்கள் ஆட்சிக் காலத்தில், மேவாரை பேரரசாக விரிவாக்கத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்ற ராணா சங்கா, 47 வயதில் இறந்தார்.
"பாபருக்கு எதிராகப் போரைத் தொடர வேண்டும் என்ற அவரது பிடிவாதத்தை, அவரது அரசவையினர் விரும்பவில்லை என்றும், அவர்கள் அவருக்கு விஷம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ராஜஸ்தானை சேர்ந்த இந்தத் துணிச்சலான மனிதரின் மரணத்துடன், ஆக்ரா வரை நீடித்த ஒருங்கிணைந்த ராஜஸ்தானின் கனவு ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்தது," என்று சதீஷ் சந்திரா எழுதியுள்ளார்.
கான்வா போர் டெல்லி-ஆக்ரா பகுதியில் பாபரின் நிலையை மேலும் வலுப்படுத்தியது. இதன் பிறகு, அவர் குவாலியர் மற்றும் தோல்பூர் கோட்டைகளையும் வென்றார். மேலும் ஆல்வாரின் பெரும்பகுதியைத் தனது ராஜ்ஜியத்துடன் இணைத்தார்.
"பானிபட்டில் அடைந்த வெற்றி இந்தியாவில் முகலாய ஆட்சிக்கு அடித்தளமிட்டது. ஆனால் இந்த அடித்தளம் பலப்படுத்தப்பட்டது, கான்வாவில் ராணா சங்காவுக்கு எதிரான பாபரின் வெற்றியால்தான்," என்று சதீஷ் சந்திரா குறிப்பிட்டுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு