You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோடையில் சூட்டைத் தணிக்கும் இளநீரின் உள்ளே தண்ணீர் உற்பத்தி ஆவது எப்படி?
- எழுதியவர், சாரதா மியாபுரம்
- பதவி, பிபிசி
தேங்காயை உடைக்கும்போது உள்ளே தண்ணீர் இருப்பதைப் பார்த்து நீங்கள் எப்போதாவது ஆச்சரியப்பட்டிருக்கிறீர்களா? தண்ணீர் எப்படி அதற்குள்ளே வந்தது என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?
ஒரு மரத்தின் உச்சியில் இருக்கும் தேங்காய் ஓட்டுக்குள், இனிப்பான, குளிர்ந்த நீர் எப்படி இருக்கிறது?
இளநீரில் கோடையில் தாகத்தைத் தணிக்கும், உடனடி ஆற்றலை வழங்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு இளநீரில் அதிக தண்ணீர் உள்ளது. அதோடு ஒப்பிடும்போது முதிர்ந்து பழுப்பு நிறமாக மாறும் தேங்காயில் குறைந்த அளவில் நீரும், அதிக வழுக்கையும் உள்ளது.
ஒரு தேங்காயில் தண்ணீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது?
வடிவம்
தென்னை மரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருப்பதால், தென்னை மரம் 'வாழ்க்கையின் மரம்' என்று அழைக்கப்படுகிறது.
தென்னை மரங்கள் பொதுவாக வெப்பமண்டலப் பகுதிகளிலும், உலகெங்கிலும் உள்ள நாடுகளிலும் காணப்படுகின்றன.
தேங்காய் ஓட்டுக்குள் நீர் எவ்வாறு உருவாகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன், அதன் அமைப்பை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
எக்ஸோகார்ப், மீசோகார்ப் மற்றும் எண்டோகார்ப் எனப்படும் மூன்று அடுக்குகளைக் கொண்டது இளநீர்.
எக்ஸோகார்ப் என்பது இளநீரின் வெளிப்புற அடுக்கு. இது பச்சை நிறத்திலும் மென்மையாகவும் இருக்கும். பச்சை அடுக்கின் கீழ் உள்ள நார் நிறைந்த பகுதி மீசோகார்ப் என்று அழைக்கப்படுகிறது. எண்டோகார்ப் என்பது உள் மையப்பகுதி. எண்டோகார்ப் உள்ளே உள்ள வெள்ளை வழுக்கையை பாதுகாக்கிறது.
எண்டோகார்ப் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. ஒன்று வழுக்கை. இது எண்டோஸ்பெர்ம் என்று அழைக்கப்படுகிறது. இளம் தேங்காய்களில் மென்மையாகவும் ஜெல்லி போலவும் இருக்கும் இந்த வழுக்கை, தேங்காய் முதிர்ச்சியடையும் போது கடினமடைகிறது.
இரண்டாவது உள்ளே இருக்கும் நீர். தேங்காய் வளரும்போது இயற்கையாகவே தண்ணீர் உருவாகிறது.
நீர் எப்படி வருகிறது?
அமெரிக்காவின் தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையத்தின் ஆய்வின்படி, தேங்காயில் உள்ள நீர் ஒரு வடிகட்டப்பட்ட திரவமாகும்.
மரத்தில் உள்ள வாஸ்குலர் அமைப்பு (தண்ணீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்லும் அமைப்பு) மூலம், நீர் வேர்களில் இருந்து தேங்காய்க்குச் செல்கிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது. குறிப்பாக மரத்தில் உள்ள xylem நாளங்கள் நீர் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தேங்காய் ஓட்டுக்குள் நீர் உருவாகும் செயல்முறையை இந்த ஆய்வு விளக்கியது.
தென்னை மரத்தின் வேர்கள் தரையில் இருந்து பூமிக்குள் சுமார் 1 முதல் 5 மீட்டர் ஆழம் வரை நீண்டுள்ளன. இந்த வேர்கள் சுற்றியுள்ள மண்ணிலிருந்து ஊட்டச்சத்துக்கள் கொண்ட நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றன. இந்த நீர் பின்னர் அதன் தண்டு வழியாக மேல்நோக்கி கொண்டு செல்லப்பட்டு இறுதியாக தேங்காயை அடைகிறது.
தேங்காயின் எண்டோகார்ப் அமைப்பு இந்த தண்ணீரை சேமிக்கிறது.
இந்த ஊட்டச்சத்து நிறைந்த நீர் இளநீர் முதிர்ச்சியடையும் போது ஒரு வெள்ளை வழுக்கையை (தேங்காய்) உருவாக்குகிறது.
தேங்காயின் நீர் இயற்கையாகவே மரத்தில் உருவாகிறது.
இளநீரில் என்ன இருக்கிறது?
இளநீரில் சுமார் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது, அதனால்தான் இது உடலை நீரேற்றம் செய்யும் ஒரு அதிசய திரவமாகக் கருதப்படுகிறது.
மீதமுள்ள 5 சதவீத இளநீரில் நமக்கு மிகவும் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இளநீரில் உள்ள சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்கள் நரம்புகள் மற்றும் தசைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்றன.
அமினோ அமிலங்கள் மற்றும் நொதிகள் போன்ற புரதங்கள், வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன.
பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகள் தண்ணீருக்கு இனிப்பு சுவையைத் தருகின்றன. அதோடு இதில் வைட்டமின் சி மற்றும் பி வைட்டமின்களும் உள்ளன.
ஒரு தேங்காய் ஓட்டுக்குள் எவ்வளவு தண்ணீர் உள்ளது?
ஒரு தேங்காயில் உள்ள நீரின் அளவையும் தரத்தையும் பல காரணிகள் பாதிக்கின்றன.
அவற்றில் ஒன்று தேங்காயின் வயது. ஒரு இளநீரில் தண்ணீரில் நிறைந்திருக்கும். ஆறு முதல் எட்டு மாதங்கள் வயதுடைய தேங்காய்கள் இளநீராகக் கருதப்படுகின்றன. அவற்றில் 300 மில்லி முதல் ஒரு லிட்டர் தண்ணீர் வரை உள்ளது.
முதிர்ந்த தேங்காய்கள், அதாவது 12 மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்டவை, குறைவான தண்ணீரைக் கொண்டுள்ளன. எண்டோஸ்பெர்ம் அதாவது உள்ளே இருக்கும் வழுக்கை தண்ணீரை உறிஞ்சுவதால் அவை குறைவான நீரைக் கொண்டிருக்கின்றன.
மழைப்பொழிவும் இதில் பங்கு வகிக்கிறது. அதிக மழை என்றால் அதிக நீர், தேங்காயை அடைகிறது. வறண்ட பகுதியில் தென்னை மரங்கள் வளரும்போது, குறைவான நீர் தேங்காயை அடைவதால் அதற்குள் குறைந்த நீரே உருவாகிறது.
கனிம வளம் நிறைந்த மண்ணில் வளர்க்கப்படும் மரங்கள் மிக உயர்ந்த தரமான, ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரைப் பெறுகின்றன.
மண் கனிம வளம் நிறைந்ததாக இல்லாவிட்டாலோ, வேர்களில் இருந்து காய்களுக்கு ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்ல முடியாவிட்டாலோ நீரின் தரம் சுமாராக இருக்கும்.
ஆரோக்கியமற்ற, நோயுற்ற மரங்கள் சிறிய காய்களை உற்பத்தி செய்கின்றன. அவற்றிலும் மிகக் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும்.
மண் பரிசோதனை மற்றும் இயற்கை உரங்களைப் பயன்படுத்துதல் போன்ற நிலையான விவசாய முறைகளைப் பின்பற்றுவதன் மூலம், தென்னை மரங்களில் ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்க முடியும். இதன் மூலம் தரமான இளநீரை உற்பத்தி செய்யலாம்.
- பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு