இந்தியரை மணந்த பாகிஸ்தான் பெண் சந்திக்கும் சவால்- கர்ப்பிணி மருமகளை பிரிய மறுக்கும் குடும்பம்

    • எழுதியவர், குர்ப்ரீத் சிங் சாவ்லா
    • பதவி, பிபிசிக்காக

"நான் வேலையில் இருக்கும்போது எனக்கு அழைப்பு வந்தது. வீட்டுக்குப் போனால் எல்லாரும் அழுது கொண்டிருக்கிறார்கள். எங்கள் வீட்டுக்குக் காவல்துறையினர் வந்திருந்தனர். அவர்கள் மரியாவை அவளது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு உடனடியாகச் செல்லும்படி கூறினர். நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று எனக்குப் புரியவில்லை".

குர்தாஸ்பூர்வாசியான சோனு, இந்த வார்த்தைகளைச் சொல்லும்போதே உணர்ச்சிவயப்படுவது போலத் தெரிந்தார்.

பஹல்காமின் பின்விளைவுகள் அரசியல் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, சமூகம் மற்றும் குடும்பங்களையும் கூட பாதிக்க ஆரம்பித்துள்ளது. இதன் விளைவுகளை இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியப் பெண்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.

அப்படி ஒரு விஷயம்தான் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரிலும் நடந்துள்ளது. குர்தாஸ்பூரின் கிராமமான சதியாலியைச் சேர்ந்த இளைஞர் சோனு மாஷி. இவர் தனது மதத்தைச் சேர்ந்த மரியா என்னும் பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா பகுதியைச் சேர்ந்த பெண்ணை 2024, ஜூலை 8 அன்று மணமுடித்தார்.

இளைஞர் சோனு மாஷியின் மனைவி மரியா 7 மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறார். மரியாவை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறச் சொல்லி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சோனு கூறுகிறார்.

"இந்தப் பிரச்னையால் எங்கள் குடும்பம் பெரும் மன உளைச்சலுக்குள்ளாகி உள்ளது. இந்த உத்தரவில் இருந்து திருமணமான பெண்களை விடுவிக்கும்படி பஞ்சாப் அரசுக்கும், இந்திய அரசுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்," என்கிறார் சோனு.

ஆறு வருடங்கள் காத்திருந்து தங்கள் திருமணம் நடந்தது என்றும், குழந்தையின் வரவுக்காக தன் குடும்பம் ஆவலுடன் காத்திருந்ததாகவும் குறிப்பிடும் சோனு தற்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது என்கிறார்.

அவர்கள் சந்திப்பு எப்படி நடந்தது?

சோனு ஒரு பெயிண்டராக வேலை செய்கிறார். அவரும், மரியாவும் ஆறு ஆண்டுகள் முன்பு சமூக ஊடகத்தின் மூலம் சந்தித்ததாக அவர் கூறுகிறார்.

அவர்கள் நட்பு விரைவில் காதலாக மலர்ந்து, அவர்கள் கர்தார் சாஹிப்பில் சந்திக்கவும்செய்துள்ளனர்.

"பின்னர், மரியாவை இந்தியாவுக்கு வரவழைத்துத் திருமணம் செய்து கொள்வது என்று முடிவெடுத்தோம். கடந்த சில ஆண்டுகளாக அது தொடர்பாக நிறைய சிரமங்களை சந்தித்தோம். கடைசியாக சென்ற ஆண்டு ஜூலையில் மரியாவுக்கு விசா கிடைத்ததும் அவர் இந்தியா வந்தார்", என்கிறார் சோனி.

"அந்த சமயத்தில் பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் வசித்து வந்த எங்கள் இரு குடும்பங்களிலும் மகிழ்ச்சி மட்டுமே இருந்தது. தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு, ஜூலை 8 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டோம்.

இரண்டு குடும்பங்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்த பின் நடந்த திருமணம் நடைபெற்றது. அதோடு அவரது மனைவி மரியாவும் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

காவல்துறையினர் சமீபத்தில் அவர்கள் வீட்டுக்கு வந்ததாகவும், அவரிடம் நீண்ட கால விசா (LTV) இல்லாததால், மரியாவை அவரது நாட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறியதாகவும் சோனு குறிப்பிடுகிறார்.

தங்களுக்கு ஜூலையில் திருமணமான உடனேயே LTVக்கு விண்ணப்பித்ததாகவும், இத்தனை மாதங்கள் கழித்தும் அந்த விசாவிற்கான கோப்பு பரிசீலனையிலேயே இருக்கிறது எனவும் குறிப்பிட்டார் சோனு.

மரியா திரும்பிச் செல்ல வேண்டும் என்ற உத்தரவு வந்ததில் இருந்து மொத்தக் குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளது என்று குறிப்பிட்ட சோனு தனது குடும்பத்தில் தான் மட்டுமே சம்பாதிக்கும் உறுப்பினர் என்றார். அவருடன் மனைவி மரியாவைத் தவிர, அம்மாவும், சகோதரியும் அவரது வீட்டில் உள்ளனர்.

கவலையில் மரியா

மரியா பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா என்ற நகரத்தைச் சேர்ந்தவர்.

"அவர்கள் என்னைத் திரும்பிச் செல்லச் சொல்கிறார்கள். அது எனக்கு மிகக் கடினமான விஷயம். எல்லாரும் வருத்தத்தில் உள்ளனர். இன்னும் 24 மணி நேரத்தில் என் சொந்த நாடான பாகிஸ்தானுக்குத் திரும்பச் செல்லும்படி என்னிடம் அவர்கள் கூறியுள்ளனர்," என்கிறார் மரியா.

"நான் இரவு முழுவதையும் மருத்துவமனையில்தான் கழித்திருக்கிறேன். மன உளைச்சலில் உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டது. நான் திரும்பிச் செல்ல விரும்பவில்லை. நான் இங்கே என் கணவருடனும், குடும்பத்தினருடனும் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்," என்கிறார் மரியா.

பாகிஸ்தானில் இருக்கும் மரியாவின் குடும்ப உறுப்பினர்களும் மனவருத்தத்தில் உள்ளனர்.

"நாங்கள் அனுப்ப விரும்பவில்லை"

அதே நேரம், சோனுவின் அம்மா யும்னா, தன் மருமகள் மரியாவைத் திருப்பி அனுப்ப விரும்பவில்லை என்றிருக்கிறார். மாமியார், மருமகள் இருவரும் பரஸ்பரம் அன்பு பாராட்டுகின்றனர்.

"நான் அவர்களுடன் இருக்கிறேன். எனக்கு கணவர் கிடையாது. அவளுக்காக என் மகனும் அங்கே சென்றால் எங்களுக்கு யார் ஆதரவு தருவார்கள்? என் மருமகளும், மகனும்தான் எங்களைப் பார்த்துக் கொள்கிறார்கள். அவள் எங்கள் வீட்டை விட்டுச் செல்வதை நாங்கள் விரும்பவில்லை," என்கிறார் அவர்.

இந்தத தகவல் தெரிந்ததில் இருந்து மரியா மிகவும் கவலையுடன் இருக்கிறார் என்று யும்னா குறிப்பிடுகிறார்.

"அந்தப் பெண்ணின் தவறு என்ன இருக்கிறது? விசாவுக்கு நாங்கள் விண்ணப்பித்ததற்கான ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. சீக்கிரம் விசாவை வழங்கி மரியா எங்கள் வீட்டிலேயே இருப்பதற்கு அரசாங்கம்தான் உதவி செய்ய வேண்டும். எங்கள் வீட்டுக்கு ஒரு புது உயிர் வர இருக்கிறது," என்றார்கள் அவர்கள்.

இதற்கிடையே குர்தாஸ்பூர் மாவட்டத்தின் காவல்துறை மூத்த ஆய்வாளர் ஆதித்யா, இந்த விஷயம் குறித்து பிபிசியுடன் தொலைபேசியில் பேசியபோது, "LTV விசாக்கள் வைத்திருப்போர் மட்டும் இந்தியாவில் தங்க அரசாங்கம் அனுமதித்திருக்கிறது. இது அமைச்சரவையின் முடிவு என்பதால் இது குறித்து நாங்கள் எந்த கருத்தும் வெளியிட முடியாது," என்று குறிப்பிட்டார்.

தற்போது மரியா சில நாட்கள் மட்டுமே தங்கி இருக்க முடியும் என்பதால் நீதிமன்றத்தின் வாயிலைத் தட்டிக் கொண்டிருக்கிறது இந்தக் குடும்பம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு