You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நச்சுப் பாம்புகள் நிறைந்த காட்டில் 500 நாட்கள் தப்பிப் பிழைத்த நாய் மீட்கப்பட்டது எப்படி?
- எழுதியவர், பிராண்டன் ட்ரெனன்
- பதவி, பிபிசி நியூஸ்
ஆஸ்திரேலியாவின் காட்டுப் பகுதிகளில், சுமார் 500 நாட்களைக் கழித்த பிறகு 'மினியேச்சர் டாஷண்ட்' என்ற வகையைச் சேர்ந்த ஒரு நாய் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய கடற்கரைப் பகுதியில் உள்ள கங்காரு தீவில் 'வலேரி' என்ற பெயர் கொண்ட அந்த நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல நாட்கள் 'இரவும் பகலும்' செலவழித்ததாக கங்காலா வனவிலங்கு மீட்புக் குழு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவர்கள் செய்த ஒரு கேம்ப்பிங்க் (camping) பயணத்தின்போது வலேரி நாய் தங்களிடமிருந்து தொலைந்து போனதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
ஜார்ஜியா கார்டெனர், அவரது காதலர் ஜோஷுவா ஃபிஷ்லாக் ஆகிய இருவரும், வலேரியை விளையாடுவாதற்கான வலை போன்ற ஒரு அமைப்பில் (Playpen) விட்டுவிட்டு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வலேரியை காணவில்லை.
கடுமையான வெப்பம், நஞ்சுள்ள பாம்புகள் ஆகியவற்றிடம் இருந்து தப்பிப் பிழைத்து, சுமார் 529 நாட்கள் காட்டுப்பகுதியில் வாழ்ந்து வலேரி நாய் உயிர் பிழைத்தது.
ஜார்ஜியா கார்டெனரின் சட்டையில் இருந்து வரும் வாசத்தை வைத்து அதைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யப்பட்டதில் அந்த நாய் கண்டுபிடிக்கப்பட்டது.
"பல வாரங்கள் எடுக்கப்பட்ட தொடர்ச்சியாக முயற்சிக்கு பின், வலெரியை ஒருவழியாக பாதுகாப்பாக மீட்டுவிட்டோம். வலேரி ஆரோக்கியமாக இருக்கின்றது," என்று கங்கலா வனவிலங்கு மீட்புக் குழு சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளது.
தன்னார்வலர்கள் வலேரியைத் தேடி 1,000 மணி நேரத்திற்கும் மேலாக 5,000 கிமீ தொலைவு பயணித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மீட்பு முயற்சியில் கண்காணிப்பு கேமராக்களும், ஒரு கூண்டும் பயன்படுத்தப்பட்டது. அந்த கூண்டில், உணவு, ஜார்ஜியா கார்டெனரின் உடைகள், வலேரியின் பொம்மைகள் ஆகியவை இருந்தன.
கூண்டில் வலேரி பிடிபட்ட பிறகு ஜார்ஜியா கார்டெனரின் உடைகளை அவர் அணிந்து சென்று, வலேரியின் அருகில் சென்றதாகவும். அந்த நாய் முழுமையாக அமைதியாகும் வரை அதன் அருகிலே அமர்ந்திருந்ததாகவும் கங்கலா வனவிலங்கு மீட்புக் குழுவின் இயக்குநர் லிசா கரன் கூறினார்.
வலேரி காணாமல் போன முதல் சில நாட்களில் அங்கு தங்கிருந்த மற்ற சில பயணிகள் வலேரியை , அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் அடியில் கண்டதாகவும், அவர்களைப் பார்த்து பயந்து போன வலேரி புதர்க்காடுகளுக்குள் பயந்து ஓடியதாகவும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவிக்கிறது.
பல மாதங்கள் கழித்து, வலேரியின் பிங்க் நிற காலரைப் போன்ற ஒன்றைக் கண்டதாக தீவில் வசிப்பவர்கள் கூறியது கங்கலா வனவிலங்கு மீட்புக் குழுவின் மற்றொரு இயக்குநரான ஜேரட் கரனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"என்னைப் பொறுத்தவரை, எல்லா நாய் வகைகளிலும் இந்த இனம் காட்டுப்பகுதியில் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். ஆனால் இவற்றுக்கு நல்ல மோப்ப சதி உண்டு," என்றார் அவர்.
வலேரியை கண்டுபிடிக்க எடுத்த விறுவிறுப்பான முயற்சிகள் குறித்து சமூக ஊடகங்களில் வெளியிட்ட 15 நிமிட வீடியோ ஒன்றில் லிசா கரன் மற்றும் ஜேரட் கரன் விளக்கியுள்ளனர்.
கூண்டில் சரியான பகுதிக்கு வலேரி சென்று அமைதியாக இருக்கும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது என்றும், அப்போதுதான் அது மீண்டும் தப்பிக்க முயற்சி செய்யாது என்றும் லிசா கரன் கூறுகிறார்.
"கூடில் வலேரி எங்கு இருக்க வேண்டும் என்று விரும்பினோமோ, அந்த பகுதிக்கு அது சென்றது. அதன் பிறகு கதவை மூடுவதற்காக பட்டனை அழுத்தினேன். எல்லாம் சரியாக நடந்தது," என்றார் ஜேரட் கரன்.
"வலேரியை கண்டுபிடிக்க 'ஏன் இவ்வளவு நாட்கள் எடுக்கிறது' என்று மக்கள் ஆத்திரம் அடைவார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் வலேரியை கண்டுபிக்க நாங்கள் பல்வேறு முயற்சிகள் பின்னணியில் செய்து கொண்டிருந்தோம்," என்றார் அவர்.
பல நாள் காத்திருப்புக்குப் பின் வலேரி மீட்கப்பட்டபிறகு, ஜார்ஜியா கார்டெனர்சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "உங்கள் செல்லப்பிராணியை இழந்தவர்கள் யாராயினும், உங்கள் நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். சில நேரம் நல்லவர்களுக்கு நல்லதே நடக்கும்", என்று குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.