உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ஒவ்வாமை இரட்டையர்களுக்கு ஒன்றுபோல வருமா?

    • எழுதியவர், ப்ரீன் ஹாயெஸ் ஹானே
    • பதவி,

இரட்டையர்களில் ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் அது மற்றவரையும் பாதிக்குமா?

மகரந்தத்தால் ஏற்படும் தும்மல், சில உணவுகள் காரணமாக ஏற்படும் சுவாசப் பிரச்னை போன்ற ஒவ்வாமைகள் ஒருவரின் மரபு மற்றும் அவர் வாழும் சூழலைப் பொறுத்து அமைகிறது.

இந்த இரண்டையும் அதிகமாக இரண்டு பேர் பகிர்ந்து கொள்ளும்போது, இத்தகைய சூழல்களில் அந்த இருவருக்குமே ஒவ்வாமைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இரட்டையர்களுக்குப் பல விஷயங்கள் பொதுவாக இருப்பதால் அவர்களுக்கு ஒவ்வாமையும் பொதுவாக இருக்கும். ஆனால் அது அதோடு நின்றுவிடுவதில்லை. ஒவ்வாமை மிகவும் சிக்கலானது. மேலும் யாருக்கு ஒவ்வாமை ஏற்படும், யாருக்கு ஒவ்வாமை ஏற்படாது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

ஒவ்வாமை என்றால் என்ன?

உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு, பாதுகாப்புப் புரதங்களான ஆன்டிபாடிகளை (antibodies) உருவாக்குகின்றன. ஆபத்தை ஏற்படுத்தும் நோய்கள், கிருமிகள் உடலுக்குள் வருவதைக் கண்காணித்து, உங்கள் உடல் நிலை மோசமடைவதற்குள், அவற்றை அழிப்பதுதான் இந்தப் புரதத்தின் பணி.

உங்கள் உடலுக்குத் தீங்கிழைக்காத பொருளை, உணவை ஆபத்தை உண்டாக்கும் அச்சுறுத்தலாக உடல் நினைக்கும்போது ஒவ்வாமை ஏற்படுகிறது.

இவை ஒவ்வாமையைத் தூண்டும் 'அலெர்ஜென்' மூலக்கூறுகளைத் தூண்டுகிறது. இந்த மூலக்கூறுகளில் ஆன்டிபாடிகள் உறிஞ்சும் கோப்பையைப் போல் ஒட்டிக் கொள்கின்றன. இது நோய் எதிர்ப்பு வினையைத் தூண்டுகிறது.

இதன் காரணமாக தும்மல், மூக்கு ஒழுகுதல், அரிப்பு, கண்களில் நீர் வடிதல் மற்றும் இருமல் ஏற்படுகிறது. இந்த அறிகுறிகள் எரிச்சலூட்டக் கூடியதாக இருந்தாலும் சிறிய அளவு பாதிப்பைத்தான் ஏற்படுத்தும்.

உயிருக்கே ஆபத்தாகும் ஒவ்வாமைகள்

மேற்கூறிய ஆபத்தில்லாத ஒவ்வாமைகள் போக, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒவ்வாமையும் சில நேரங்களில் ஏற்படக்கூடும்.

அனஃபிலாக்சிஸ் (anaphylaxis) எனப்படும் இந்த வகையான ஒவ்வாமைகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படும். உதாரணத்திற்கு ஒருவருக்கு ஒவ்வாத உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு உடனடியாக தொண்டைப் பகுதி வீக்கமடைந்து, சிவந்து போய்விடும். இது அனஃபிலாக்சிஸ் என்று அழைக்கப்படுகிறது.

இத்தகைய சூழல் ஏற்படும்போது, வழக்கமாக எபினெஃபைரின் என்ற ஹார்மோன் மருந்து, கால் தசையில் ஊசி மூலம் செலுத்தப்படும். ஒவ்வாமையால் பாதிப்பை எதிர்கொள்ளும் நபர்கள் தங்களுடன் எப்போதும் அவசரத் தேவைக்காக இத்தகைய ஊசிகளை எடுத்துச் செல்வது வழக்கம். தற்போது நாசி மூலமாகச் செலுத்தப்படும் எபினெஃபைரின் ஸ்ப்ரே மருந்துகளும் கிடைக்கின்றன. அதுவும் மிக விரைவாகச் செயல்படும்.

வீட்டிற்கு வெளியே, புல்வெளி, பூக்களின் மகரந்தம், தேனீக்கள் கொட்டுதல் போன்ற காரணங்களால் ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்படக் கூடும். அதேபோன்று வீட்டுக்குள் செல்லப் பிராணிகள், தரை விரிப்புகள் மற்றும் படுக்கைகளில் காணப்படும் தூசுக் கரையான்கள் (dust mites) போன்ற சிறிய வண்டுகள் மூலமாகவும் ஒவ்வாமை ஏற்படும்.

உணவுகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். மக்கள் தொகையில் 4% முதல் 5% பேர் இத்தகைய ஒவ்வாமைக்கு ஆளாகின்றனர். பசும்பால், முட்டை, கோதுமை, சோயா, நிலக்கடலை, மீன், பாதாம் போன்ற விதைகள், எள், மட்டி போன்ற உணவுகளால் ஒவ்வாமையை எதிர்கொள்வார்கள். காலப்போக்கில் இது சிலருக்குச் சரியாகக் கூடும். சிலருக்கு இது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

யாருக்கெல்லாம் அலர்ஜி ஏற்படும்?

ஒவ்வொரு ஆன்டிபாடிக்கும் தனிப்பட்ட இலக்கு இருக்கும். அதன் காரணமாகவே சில மனிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட பொருளால் மட்டுமே ஒவ்வாமை ஏற்படுகிறது.

ஒவ்வாமை ஏற்படுவதற்கும், உங்கள் உடல் சந்திக்கும் ஒட்டுண்ணிகளை அழித்துச் சுத்தம் செய்வதற்கும் ஆன்டிபாடிகளே பொறுப்பேற்கின்றன. நவீன மருந்துகளின் காரணமாக மக்கள் அரிதாகவே ஒட்டுண்ணிகளை எதிர்கொள்கின்றனர்.

இருப்பினும், அந்த ஆன்டிபாடிகள் நோய் எதிர்ப்புகளை எதிர்த்துச் சண்டையிடத் தயாராகவே இருக்கின்றன. அதனால்தான் சில நேரங்களில் மகரந்தம் அல்லது உணவு போன்ற சாதாரண விஷயங்களுக்கு எதிராக ஆன்டிபாடிகள் வேலை செய்கின்றன.

உங்களுடைய சுகாதாரமும் இருப்பிடச் சூழலும் ஒவ்வாமை ஏற்படுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இளம் வயதில் அதிக அளவிலான பாக்டீரியாக்களுக்கு ஒருவரை வெளிப்படுத்திக் கொள்ளும்போது ஒவ்வாமை குறைவாகவே ஏற்படும்.

பண்ணைகளில் வளரும், ஐந்து வயதுக்கு முன்பே வீடுகளில் செல்லப் பிராணிகளுடன் பழகும், அதிகமாக உடன் பிறந்தவர்களைக் கொண்டிருக்கும் நபர்களுக்குக் குறைவாகவே ஒவ்வாமை ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. தாய்ப்பாலை குடிக்கும் குழந்தைகள் ஒவ்வாமைகளில் இருந்து பாதுகாக்கப்படுகின்றனர்.

காற்று மாசுபாடு காரணமாக, நகர்புறத்தில் வளரும் குழந்தைகளுக்கு அதிக அளவில் ஒவ்வாமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதே போன்று புகை பிடிப்பவர்கள் மத்தியில் வாழும் குழந்தைகளுக்கும் ஒவ்வாமை ஏற்படும்.

விதவிதமான உணவுகளை இளம் வயதிலேயே உட்கொள்ளப் பழகும் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. சில நேரங்களில் பணிசூழல் காரணமாகவும் இளைஞர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. சிகை அலங்காரம் செய்பவர்கள், அடுமனைப் பணியாளர்கள், கார் மெக்கானிக் போன்றோர் தங்கள் பணியிடத்தில் உள்ள ரசாயனங்கள் காரணமாக ஒவ்வாமைக்கு ஆளாகின்றனர்.

ஒருவருக்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கு அவரின் மரபணு ஒரு முக்கியக் காரணம். சுற்றுச்சூழல் மற்றும் உணவுகள் காரணமாக பெற்றோருக்கு ஒவ்வாமை ஏற்பட்டால் அவரது குழந்தைகளுக்கும் அதே பாதிப்புகள் ஏற்படலாம்.

குறிப்பாக நிலக்கடலை உண்பதால் பலருக்கு ஒவ்வாமை ஏற்படுவது உண்டு. உங்கள் பெற்றோர் அல்லது உடன் பிறந்தோருக்கு நிலக்கடலையால் ஒவ்வாமை ஏற்பட்டால் உங்களுக்கும் அதே ஒவ்வாமை ஏற்படுவதற்கு 7 மடங்கு வாய்ப்புள்ளது.

இரட்டையர்களுக்கு ஒரே மாதிரியான ஒவ்வாமை

இரட்டையர்களுக்கு ஒரே மாதிரியாக ஒவ்வாமை ஏற்படுமா? இந்தச் சந்தேகம் குறித்துப் பார்ப்போம்.

ஆம். ஒரே சூழல், பொருட்கள் காரணமாக இரட்டையர்களுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். ஆனால் அனைத்து நேரங்களிலும் அப்படி இருக்காது.

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் 60 முதல் 70% இரட்டையர்களுக்கு ஒரே மாதிரியான சுற்றுச்சூழல் ரீதியான ஒவ்வாமை இருப்பது கண்டறியப்பட்டது. ஒத்த தோற்றம் கொண்ட இரட்டையர்களுக்கு (identical) ஒரே மாதிரியான ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஒற்றைக் கருமுட்டையில் உருவான இரட்டையர்கள் (Identical twins) 100% ஒரே மரபணுவைப் பகிர்ந்து கொள்கின்றனர். இரண்டு கருமுட்டைகளில் உருவான ஃப்ராடர்னல் இரட்டையர்கள் (fraternal twins), மற்ற சகோதர சகோதரிகளைப் போன்று 50% மரபணுவைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

மரபு மற்றும் உணவு ஒவ்வாமை தொடர்பாகப் பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. நிலக்கடலைக்கு எதிரான ஒவ்வாமை தொடர்பாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், ஃப்ராடர்னல் இரட்டையர்களைக் காட்டிலும் ஒரே தோற்றத்தைக் கொண்ட இரட்டையர்கள் அதிக அளவில் நிலக்கடலை உணவுகளால் ஒவ்வாமைக்கு ஆளாகின்றனர் என்பது கண்டறியப்பட்டது.

பகிரப்பட்ட மரபு, ஒன்றாக வளரும் சூழல் அடிப்படையில் ஒரே பொருள் அல்லது சூழல் காரணமாக இரட்டையர்களுக்கு ஒவ்வாமை ஏற்படும். ஆனால் அனைத்து இரட்டையர்களும் ஒரே மாதிரியான பொருட்கள் மற்றும் சூழலால் தானாகவே ஒவ்வாமைக்கு ஆளாகிறார்கள் என்று கூற இயலாது.

ஒருவேளை இரட்டையர்கள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு சூழலில் வளர்க்கப்படுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒருவர் செல்லப் பிராணிகளுடன் பண்ணையில் வளர்க்கப்படுகிறார். மற்றொருவர், நகரத்தில் வளர்க்கப்படுகிறார் என்றா? பிரிக்கப்பட்ட இரட்டையர்களில், ஒருவரின் பெற்றோர் புகைப் பிடிக்கின்றனர், மற்றொரு வீட்டில் அவ்வாறு இல்லை என்றால்? ஒருவர் நிறைய உடன் பிறந்தோரோடு வளர்கிறார், மற்றொருவர் ஒற்றைக் குழந்தையாக வளர்க்கப்படுகிறார் என்றால்?

அந்த இரட்டையர்களுக்குச் சில பொருட்களால் ஒவ்வாமை ஏற்படலாம் அல்லது ஒவ்வாமை முழுமையாக ஏற்படாமலும் போகலாம்.

ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான தங்கள் ஆராய்ச்சிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்தக் கேள்விக்கான அதிக பதில்களை நாம் எதிர்காலத்தில் பெறுவோம் என்று நம்புவோம்.

கட்டுரையாசிரியர், மேற்கு விர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் நோய்எதிர்ப்பியல் நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு