இரவில் வாயை ஒட்டி வைத்துக்கொண்டு தூங்கினால் ஆழ்ந்து உறங்க முடியுமா? எப்படி?

    • எழுதியவர், சோபியா பெட்டிசா
    • பதவி, பிபிசி உலக சேவை

சமூக ஊடகங்களில் பரவும் ஸ்லீப்மேக்ஸிங் (உறக்கத்தை அதிகப்படுத்துதல்) உத்தி, சிறந்த இரவு உறக்கம் தரும் எனக் கூறப்படுகிறது.

நன்றாக உறங்குவதற்கு, தங்களது வாயை ஒட்டி வைப்பது முதல் படுக்கைக்கு செல்லும் முன்பு கிவி பழம் உண்பது வரை, இளைஞர்கள் முறையாக பின்பற்றும் பல்வேறு நுணுக்கமான செயல்முறைகளை கொண்ட மில்லியன் கணக்கான வீடியோக்கள் டிக் டாக்கில் பரவி வருகின்றன.

ஆனால், தேவையான உறக்கத்தைப் பெறுவதற்கான தேடல் அளவுக்கு மீறிச் செல்லுமா?

சில முறைகள் பாதிப்பில்லாதவையாக தோன்றினாலும், அனைத்தும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. மேலும்,சில முறைகள் நல்ல முறையில் பயனளிப்பதற்குப் பதிலாக அதிகமான தீங்கையும் ஏற்படுத்தக்கூடும்.

உறக்க நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களிடம் பேசி, நடைமுறையில் எந்தெந்த முறைகள் பயனளிக்கின்றன என்பதை நிறுவுவதற்கு பிபிசி முயல்கிறது.

நல்ல உறக்கத்தைப் பெற மெக்னீசியம் உதவுமா?

மிகவும் பிரபலமான ஸ்லீப்மேக்ஸிங் குறிப்புகளில் ஒன்று மெக்னீசியத்தை உள்ளடக்கியது.

குறிப்பாக வைரஸ் "ஸ்லீப்பி கேர்ள் மாக்டெயில்" எனப்படும் புளிப்பு செர்ரி சாறு மற்றும் கார்பனேற்றப்பட்ட தண்ணீரின் கலவையில் மெக்னீசியம் ஒரு முக்கிய மூலப்பொருளாகும்.

மது அல்லாத இந்தப் பானம், 2024 ஆம் ஆண்டில் உறக்கத்தைத் தூண்டும் அதன் நன்மைகளுக்காக சமூக ஊடகங்களில் பிரபலமடைந்தது.

"மெக்னீசியம் உட்பொருள்கள் (சப்ளிமெண்ட்ஸ்) உறக்கத்தை மேம்படுத்த உதவக்கூடும் என்பதற்கான சில ஆதாரங்கள் உள்ளன, ஆனால் அது மெக்னீசியம் குறைபாடு உள்ளவர்களுக்கே பயன்படும்," என பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தூக்கமின்மை குறித்த முனைவர் பட்டம் பெற்ற தூக்க நிபுணர் மருத்துவர் லிண்ட்சே பிரவுனிங் கூறுகிறார்.

மேலும், அதிகப்படியான மெக்னீசியத்தை உட்கொள்வது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் அல்லது சில மருந்துகளுடன் இணைந்து எதிர்மறையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர் பிரவுனிங் எச்சரிக்கிறார்.

"இந்த பானங்களில் மெக்னீசியத்தின் அளவு சில நேரங்களில் மிகவும் அதிகமாக இருக்கலாம், என்றும் இது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக்கூடும். இது நிச்சயமாக எந்த விதத்திலும் உங்களது உறக்கத்துக்கு உதவாது" என்றும் அவர் பிபிசியிடம் கூறுகிறார்.

அதற்கு மாறாக, சூடான பால் அல்லது புளிப்பான செர்ரி சாறு போன்ற, இயற்கையாகவே மெலடோனின் கூறுகளை உள்ளடக்கி, உறக்கத்தைத் தூண்டும் மாற்று பானங்களை அவர் பரிந்துரைக்கிறார்.

மவுத் டேப்பிங்: ஆபத்தான போக்கா?

டிக் டாக்கில் பரவியுள்ள மிகவும் சர்ச்சைக்குரிய ஸ்லீப்மேக்ஸிங் முறைகளில் ஒன்று, நாசி மூலம் சுவாசத்தை ஊக்குவிக்க, வாயை மூடிக்கொண்டு, உதடுகளை பிரிக்க இயலாதவாறு ஒட்டிக்கொள்ளும் முறையாகும்.

லண்டனில் உள்ள உடல்நலப் பயிற்சியாளரான லிசா டீ மற்றும் நியூயார்க்கில் உள்ள சமூக வலைதளப் பிரபலமான டெவோன் கெல்லி ஆகிய இருவரும் தங்கள் உறங்குவதற்கு முன்பு தாங்கள் கடைபிடிக்கும் நடைமுறைகளின் ஒரு பகுதியாக இதை பின்பற்றுகிறார்கள்.

"பல வருடங்களாக பற்களை இறுக்கிப் பிடிப்பதால் ஏற்படும் தாடை வலியுடன் போராடி, இரவில் வாயை பிரிக்க இயலாதவாறு ஒட்டிக்கொள்ளும் பழக்கத்தை நான் கடைபிடிக்கத் தொடங்கினேன்" என்று தனது அனுபவங்களை, தன்னைப் பின்தொடரும் ஆயிரக்கணக்கான மக்களுடன் வீடியோக்கள் மூலம் பகிர்ந்து கொள்கிறார் கெல்லி.

"இது எனக்கு பெரிதும் உதவியது, இப்போது ஐந்து வருடங்களாக எனக்கு எந்த வலியும் இல்லை" என்கிறார் கெல்லி.

'ஹெல்தி ஹேப்பி ஏடிஹெச்டி' என்ற புத்தகத்தை எழுதிய லிசா, அவர் ஸ்லீப்மேக்ஸிங் முறைகளை பின்பற்றத் தொடங்கியதிலிருந்து, அவரது ஏடிஎச்டி அறிகுறிகள் குறையத் தொடங்கியதாகக் கூறுகிறார்.

அவரது டிக்டாக் வீடியோக்களில் அக்குபிரஷர் தலையணை மற்றும் பெரிய எடையுள்ள முகமூடியும் காட்டப்படுகின்றன.

"நான் அதிகமாக கவனம் செலுத்துபவராகவும், குறைவான அழுத்தத்தையும் உணர்கிறேன்."

ஆனால் இந்த முறை குறித்த சில கவலைகள் இருப்பதாக பிபிசியிடம் பேசிய நிபுணர்கள் கூறியுள்ளனர்.

"இது மிகவும் ஆபத்தானது," எனக் கூறும் மருத்துவர் பிரவுனிங்,

"நீங்கள் இரவில் சுவாசிக்க சிரமப்படும்போது, உங்கள் வாயை மூடிக்கொண்டிருந்தால், உங்களால் முழுமையாக மூச்சை உள்ளிழுக்க முடியாது.

இது உங்கள் இதயத்தை அழுத்தலாம் அல்லது மாரடைப்பைத் தூண்டலாம்" என்றும் குறிப்பிடுகிறார்.

மேலும், இரவு உறக்கத்தில் சுவாசம் அவ்வப்போது நின்றுவிடும் ஒரு வகையான மூச்சுத்திணறல் பலருக்கும் கண்டறியப்படாமல் இருப்பதாகவும், மருத்துவர் பிரவுனிங் சுட்டிக்காட்டுகிறார்.

அவர்கள் வாயை மூடிக்கொண்டு உறங்குவது தீவிரமான ஆபத்துகளை உருவாக்கக்கூடும்.

தொடர்ந்து பேசும் அவர், இந்த நடைமுறையானது வாய் பகுதியில் ஒவ்வாமை அல்லது எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பிடுகிறார்.

"நன்றாக உறங்குவதற்கு உங்களது வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை" என்று மருத்துவர் கார்லியாரா வெயிஸ் கூறுகிறார்.

அவரது முனைவர் பட்ட ஆராய்ச்சி நடத்தை தூக்க மருத்துவத்தில் கவனம் செலுத்துகிறது.

டிக் டாக்கில் இந்த விஷயம் வைரலாக இருப்பதால் அதைப் பின்பற்ற வேண்டாம் என்று அவர் எச்சரிக்கிறார்.

நாசியை விரிவாக்கும் பொருட்களைப் பயன்படுத்துதல்

நாசி குழாய்களை விரிவுபடுத்தும் சாதனங்கள், இரவில் சுவாசத்தை எளிதாக்க உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. சில சமூக ஊடக பயனர்கள் அவற்றை குறட்டைக்கு ஒரு நல்ல தீர்வாக பரிந்துரைக்கின்றனர்.

மூக்கடைப்பு காரணமாக தூங்குவதில் சிக்கல் உள்ள சிலருக்கு, நாசியை விரிவாக்கும் இந்தப் பொருட்கள் குறிப்பிட்ட நிவாரணத்தை அளிக்கலாம்.

இருப்பினும், மருத்துவர் பிரவுனிங் கூறுகையில், பெரும்பாலான மக்களுக்கு, கவலை, மன அழுத்தம் அல்லது சரியான படுக்கை நேர ஓய்வு இல்லாததால் உறக்கம் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகின்றன என்கிறார்.

எடுத்துக்காட்டாக, புளோரிடா மாநில பல்கலைக்கழகத்தின் 2022ம் ஆண்டு ஆய்வில், கவலை அல்லது மனச்சோர்வு உள்ளவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

"நாசியை விரிவாக்கும் பொருட்கள் அந்த சிக்கல்கள் எதற்கும் உதவப் போவதில்லை," என்று மருத்துவர் பிரவுனிங் கூறுகிறார்.

நாசி துவாரத்தை விரிவாக்கும் பொருட்களைப் பயன்படுத்துவது, தூக்கத்தை மேம்படுத்துவதற்கோ அல்லது குறட்டையை குறைப்பதற்கோ உதவும் என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லையென மருத்துவர் வெயிஸ் கூறுகிறார்.

மேலும் குறட்டை விடுவது உறக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறல் அல்லது விரிவாக்கப்பட்ட டான்சில்ஸின் அறிகுறியாக இருக்கலாம் என்று அவர் எச்சரிக்கிறார்.

தொடர்ந்து பேசும் அவர், "கண்டறியப்படாத தூக்கக் கோளாறு இருப்பது ஆபத்து. நீங்கள் ஒரு தூக்க நிபுணரை அணுக வேண்டும்" " என்றும் கூறுகிறார்.

கிவி பழங்களை உண்ணுங்கள்

கிவி பழங்களை உண்பது உறக்கத்தை மேம்படுத்தும் என்று பரிந்துரைக்கும் வீடியோக்களால் டிக் டாக் நிரம்பியுள்ளது.

தைவானில் உள்ள தைபே மருத்துவப் பல்கலைக்கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஒரு சிறிய ஆய்வில், படுக்கைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு கிவி பழங்களை, நான்கு வாரங்களாக உண்டவர்கள் சிறந்த உறக்கத்தைப் பெற்று, எளிதாக உறங்க முடியும் என்று கூறியுள்ளனர்.

கிவியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் செரோடோனின் அளவு அதிகம்.

மூளையில் உள்ள செரோடோனின் என்ற வேதிப்பொருள், மனநிலை, உறக்கம் மற்றும் பிற செயல்பாடுகளை பாதிக்கிறது.

ஆய்வின் படி, இது தூக்கக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பயனுள்ளதாக இருக்கக்கூடும்.

இருப்பினும், கிவி பழங்களை உண்பதன் மூலம் நன்றான உறக்கத்தைப் பெற முடியும் என்பதை நிரூபிப்பதற்கு இன்னும் அதிகமான ஆராய்ச்சி தேவை என்று மருத்துவர் பிரவுனிங் சுட்டிக்காட்டுகிறார்.

குளிர்ந்த அறையில் உறங்குவது

நன்றாக உறங்குவதற்காக, சமூக ஊடகப் பிரபலங்களின் வீடியோக்களால் பரவலாகப் பகிரப்பட்ட இந்த உதவிக் குறிப்பு அறிவியலால் ஆதரிக்கப்படுகிறது.

நாம் தூங்கும்போது, நமது உடல் வெப்பநிலை சுமார் ஒரு டிகிரி குறைகிறது, இது தூக்கத்தை ஒழுங்குபடுத்த உதவும் மெலடோனின் என்ற ஹார்மோனை உடல் உற்பத்தி செய்ய சமிக்ஞை அளிக்கிறது.

நாம் உறங்கும் அறை மிகவும் சூடாக இருந்தால், நமது உடல்கள் சரியாக குளிர்ச்சியடையாது.

குளிரான அறை, உறக்கத்துக்கு நன்மை பயக்கும் அதே வேளையில், மிகவும் குளிரான அறையில் உறங்குவதும் உறக்கத்துக்கு எதிர்மறையான மற்றும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ஓய்வெடுக்கும்போது அசௌகரியம் ஏற்படுவது, உறக்கத்துக்கு இடையூறு விளைவிப்பதால், அது தூக்கத்தை கடினமாக்கும் என்று மருத்துவர் பிரவுனிங் எச்சரிக்கிறார்.

"முக்கியமானது "உகந்த" வெப்பநிலையை பராமரிப்பது, அதாவது சிறந்த உறக்கத்தைப் பெறுவதற்கு சுமார் 18 ° செல்ஸியஸை பராமரிப்பது " என்று அவர் கூறுகிறார்.

மெலடோனின் எடுத்துக்கொள்வது

மெலடோனின் கூறு உள்ள பொருட்கள், குறிப்பாக பளிச்சென்ற நிறத்தில் சிறிய கரடி வடிவத்தில் உள்ள மிட்டாய்கள், உறக்கத்துக்கு உதவுவதாக சமூக ஊடகங்களில் பிரபலமடைந்துள்ளன.

இவற்றில் நாம் இயற்கையாக உற்பத்தி செய்யும் ஹார்மோன் உள்ளது.

இவை நமது உடலிடம், இது உறங்குவதற்கான நேரம் என்று சுட்டிக்காட்டும்.

அவை பல நாடுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன மற்றும் பெரும்பாலும் விமானப் பயணத்தால் ஏற்படும் உடல் சோர்வை சரி செய்ய பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், மெலடோனின் உறக்கம் சார்ந்த பிரச்னைகளுக்கு விரைவான தீர்வாக மாறினாலும், அது தூக்கமின்மைக்கான மூல காரணத்தை நிவர்த்தி செய்யாது என்று மருத்துவர் பிரவுனிங் எச்சரிக்கிறார்.

"உங்களுக்கு விமானப் பயணத்தினால் அயர்ச்சி ஏற்படவில்லை என்றால் அல்லது உங்களது சர்க்காடியன் ரிதம் சரியான நேர மண்டலத்தில் இருந்தால், உங்களது உடலே படுக்கைக்கு முன்பு மெலடோனினை உற்பத்தி செய்கிறது" என்று மருத்துவர் பிரவுனிங் கூறுகிறார்.

அதனை அதிக அளவு எடுத்துக்கொள்வது மற்றும் மெலடோனினை அதிகம் பயன்படுத்துவது ஆகியவை அடுத்த நாள் உடல் நலக்குறைவை ஏற்படுத்தலாம், நீங்கள் உட்கொள்ளும் மற்ற மருந்துப் பொருட்களுடன் இணைந்து எதிர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தலாம் மற்றும் உங்கள் ஹார்மோன்களை சீர்குலைக்கலாம் என்று அவர் மேலும் கூறுகிறார்.

படுக்கைக்கு முன்பு திரை செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல்

உறக்கத்தை மேம்படுத்துவதற்காக சொல்லப்படும் மிகவும் பிரபலமான உதவிக் குறிப்புகளில் ஒன்று படுக்கைக்கு செல்வதற்கு முன்பு (மின்னனு சாதனங்களின்) திரைகளில் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துவதாகும்.

ஏனெனில், திரைகளின் மூலம் வெளியாகும் பிரகாசமான நீல ஒளி மெலடோனின் உற்பத்தியில் தலையிடக்கூடும்.

ஆனால், இந்த வகை ஒளியானது முன்பு நினைத்தது போல் பிரச்னைக்குரியதாக இல்லாமல் இருக்கலாம் என்று சமீபத்திய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

குறிப்பாக, மக்கள் மாலை நேரங்களில் தங்கள் சாதனங்களின் பிரகாசத்தை மங்கச் செய்தல் மற்றும் அவர்கள் திட்டமிட்ட நேரத்திற்குப் பிறகு அவற்றை பயன்படுத்தாமல் இருக்கும்போது, இது குறைவான பாதிப்பையே ஏற்படுத்தும்.

"உறக்கத்தை மேம்படுத்துவதற்கு ஒரு மந்திர தீர்வாக, படுக்கைக்கு முன்பு திரைகளை முற்றிலுமாக அகற்றும் இந்த யோசனை தற்போது கேள்விக்குள்ளாக்கப்படுகிறது," என்கிறார் மருத்துவர் பிரவுனிங்.

ஸ்வீடனில் உள்ள ஓரெப்ரோ பல்கலைக்கழகத்தின் 2024ம் ஆண்டின் ஆய்வை அவர் சுட்டிக்காட்டுகிறார், இது படுக்கைக்கு செல்வதற்கு முன் திரைகளைப் பயன்படுத்துபவர்கள், தூங்குவதற்கு ஒன்று முதல் ஒன்பது நிமிடங்களை மட்டுமே கூடுதலாக எடுத்ததாகக் வெளிப்படுத்துகிறது.

உங்கள் திரையின் பிரகாசத்தை மங்கச் செய்யவும், இரவுப் நேரத்தில் பயன்படுத்துவதற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட முறைகளை பயன்படுத்தவும், உறக்க நேரத்துக்கான நினைவூட்டலை உருவாக்கி வைத்துக்கொள்ளவும் அவர் பரிந்துரைக்கிறார்.

எடையுள்ள முகக் கவசம் அல்லது போர்வையைப் பயன்படுத்துதல்

உடல்நலப் பயிற்சியாளர் லிசா டீ அத்தகைய பொருட்களில் முதலீடு செய்வது மதிப்புக்குரியது என்று நம்புகிறார்.

"எடை அதிகமுள்ள எனது போர்வையை எனக்கு மிகவும் பிடிக்கும். அது இப்போது எனது படுக்கையின் முக்கியப் பகுதியாக உள்ளது.

ஏடிஹெய்ச்டி மற்றும் மன அழுத்தம் உள்ள பலர் இரவில் அமைதியின்மையுடன் போராடுகிறார்கள், மேலும் எடையுள்ள போர்வையின் மென்மையான, அழுத்தமும் கூட உடலை நிதானமாகவும் பாதுகாப்பாகவும் உணர உதவும். இது ஒரு அணைப்பு போன்றது"என்கிறார் லிசா.

பொதுவாக உங்கள் உடல் எடையில் 10 சதவீதம் போன்ற அளவில், இவ்வகையான போர்வைகளை சரியான எடையுடன் தேர்ந்தெடுப்பது முக்கியமானது.

எனவே இது உடலை கட்டுப்படுத்துவதை விட ஆறுதல் அளிக்கிறது.

ஆனால் அவை ஏதேனும் வித்யாசத்தை ஏற்படுத்துகிறதா என்பதில் மருத்துவர் பிரவுனிங் சந்தேகம் கொண்டுள்ளார்.

"அதிக எடை உங்கள் மீது அழுத்துவது உங்களது சுவாசத்தைத் தடுக்கலாம் அல்லது ரத்த ஓட்டப் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்" மேலும் "அவை மிகவும் தடிமனாக இருப்பதால், உடல் அதிக வெப்பமடைவதற்கும் வழிவகுக்கும்."என்று அவர் கூறுகிறார்.

அதிக எடையுள்ள முககவசங்களைக் குறித்து, பல டிக் டாக் பயனர்கள், உடலை அமைதிப்படுத்தும் அவற்றின் விளைவுகள் பற்றி ஆவலுடன் கூறினாலும், அவற்றின் பயன்பாட்டை ஆதரிக்கும் அறிவியல் சான்றுகள் குறைவாகவே உள்ளன.

இது "உறக்கத்தை ஒரு பொருளாக வணிகமயமாக்குவதுடன் தொடர்புடையது" எனக் கூறும் மருத்துவர் வெயிஸ்,

"நல்ல உறக்கத்தை பெறுவதற்கு அதிகமான பொருட்களை வாங்க வேண்டும் என நாம் மக்களை தள்ளக்கூடாது." என்றும் குறிப்பிடுகிறார்.

ஸ்லீப்மேக்ஸிங் இளைஞர்களிடையே ஏன் மிகவும் பிரபலமானது?

ஜென் ஸி தலைமுறையைச் சேர்ந்தவர்கள், முந்தைய தலைமுறைகளைச் சேர்ந்தவர்களை விட சுய-கவனிப்பில் அதிக கவனம் செலுத்துகிறது, மோசமான தூக்கத்துடன் தொடர்புடைய மனச்சோர்வு, உடல் பருமன் மற்றும் டிமென்ஷியா போன்ற கடுமையான உடல் நல அபாயங்களைப் பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளார்கள்.

தூக்கத்தை மேம்படுத்துவதற்கான தெளிவான, கட்டமைக்கப்பட்ட திட்டத்தை வழங்குவதால், ஸ்லீப்மேக்ஸ்சிங் மக்களை ஈர்க்கிறது என்று டாக்டர் வெயிஸ் விளக்குகிறார், ஆனால் சிலர் அதை வெகுதூரம் எடுத்துச் செல்லக்கூடும் என்று எச்சரிக்கிறார்.

" உறங்குவதற்கு முன்னர் செய்ய வேண்டிய பணிகள் என்று ஒரு பெரிய பட்டியலை வைத்திருந்து, அவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற உணர்வு உண்மையில் மன அழுத்தத்தை உருவாக்கி, தூக்கத்தின் தரத்தை எதிர்மறையாக பாதிக்கலாம்."

லிசா இதனை ஏற்கவில்லை.

அவரின் பார்வையில், "களைப்பாகவும், உணர்ச்சி ரீதியில் நிலையற்றவராகவும், எரிச்சலாகவும் உணர்வதைக் காட்டிலும்" ஸ்லீப்மேக்ஸ்சிங் நடைமுறைகளைப் பின்பற்றுவது மக்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர உதவுமானால், அதனைப் பயன்படுத்துங்கள் என்கிறார் அவர்.

"இது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறை என்பதாலும் அதற்காக நிறைய பொருட்களை வாங்க வேண்டும்" என்பதாலும் இந்த ஸ்லீப்மேக்சிங் மோகம் நீடிக்குமா என்பதில் மருத்துவர் வெயிஸுக்கு சந்தேகம் உள்ளது.

அதே சமயம், ஸ்லீப்மேக்ஸ்சிங் மோகம் நீடிக்குமா என்று மருத்துவர் வெயிஸ் சந்தேகிக்கும் அதே வேளையில், தூக்கத்தை முன்னிலைப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்படும் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.