You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீன இளைஞர்கள் சொந்தக் கவலைகளை டீப்சீக் செயலியிடம் புலம்பித் தள்ளுவது ஏன்?
- எழுதியவர், கெல்லி என்ஜி
- பதவி, பிபிசி செய்திகள்
தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன், ஹாலி வாங் மனநல ஆலோசனைகளைப் பெற டீப்சீக் செயலிக்குள் நுழைகிறார்.
ஜனவரி மாதம் டீப்சீக் ஆப் பயன்பாடு தொடங்கப்பட்டது முதல், 28 வயதான ஹாலி, தனது மனக் குழப்பங்கள் மற்றும் அண்மையில் நிகழ்ந்த தனது பாட்டியின் இறப்பு உள்ளிட்ட துயரங்களை அந்த சாட்பாட்டிடம் கொட்டி வருகிறார். அதன் பரிவான பதில்கள் அவர் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி சில நேரங்களில் அவரை அழ வைத்துள்ளன.
"டீப்சீக் மிக அற்புதமான மனநல ஆலோசகராக இருந்திருக்கிறது. அது ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்க எனக்கு உதவியாக இருந்திருக்கிறது. நான் பணம் செலுத்தி பயன்படுத்திய மன நல ஆலோசனை சேவையை விட இது சிறப்பாக செயல்பட்டது." என்கிறார் ஹாலி. அவர் தனது தனியுரிமையை பாதுகாக்கும் பொருட்டு தனது உண்மையான பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
அறிக்கைகள், எக்ஸல் ஃபார்முலாக்களை எழுதுவது முதல் பயணங்கள், உடற்பயிற்சியை திட்டமிடுவது மற்றும் புதிய திறன்களை கற்றுக்கொள்வது என, செயற்கை நுண்ணறிவு ஆப்கள் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு தரப்பு மக்களின் வாழ்க்கையில் இடம்பிடித்துள்ளன.
ஆனால் சீனாவிலோ, ஹாலி போன்ற இளம் சீனர்கள், சாதாரணமாக கணினி மற்றும் அல்காரிதம்களிடம் எதிர்பார்க்காத ஒன்றுக்காக செயற்கை நுண்ணறிவை நாடத் தொடங்கியிருக்கின்றனர். அதுதான் மன நலத்தை மேம்படுத்துவதற்கான ஆதரவு.
டீப்சீக்கின் வெற்றி, தேசத்துக்கு பெருமை தேடித்தரும் ஒன்றாக இருக்கும் அதே நேரத்தில், ஹாலி போன்ற இளம் சீனர்களுக்கு அது மன ஆறுதலை தரும் ஒன்றாக இருக்கிறது. இந்த இளைஞர்களில் சிலர் அவர்களின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையில்லாமல் இருக்கின்றனர்.
மோசமான பொருளாதாரம், அதிக வேலைவாய்ப்பின்மை மற்றும் கோவிட் கால ஊரடங்கு போன்றவை இளைஞர்களின் இந்த உணர்வுக்கு காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். கம்யூனிஸ்ட் கட்சியின் இறுகும் பிடியும் மக்கள் தங்கள் மனக்குமுறல்களை வெளிப்படுத்துவதற்கான இடங்களை சுருக்கிவிட்டது.
'டீப்சீக், என் நண்பன்'
டீப்சீக் என்பது ஓபன் ஏஐயின் சாட்ஜிபிடி மற்றும் கூகுளின் ஜெமினியை போன்ற ஒரு ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு செயலியாகும். அதிக அளவிலான தகவல்கள் உள்ளீடு செய்யப்பட்டு அமைவுகளை கண்டறிய அதற்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் ஷாப்பிங் வழக்கங்கள் போன்றவற்றை கணிக்கவும், எழுத்தாகவும், காட்சிகளாகவும் உள்ளடக்கங்களை உருவாக்கவும், ஒரு மனிதன் போல் உரையாடல்களை நடத்தவும் அதனால் முடிகிறது.
இந்த சாட்பாட் சீனாவை கவர்வதற்கு அது மற்ற உள்நாட்டு செயற்கை நுண்ணறிவு செயலிகளைவிட மிகவும் சிறப்பானது என்பது ஒரு காரணம். அது தனித்துவமான மற்றொரு அம்சத்தையும் கொண்டுள்ளது. அதன் ஏஐ மாடலான ஆர்1, பதில்களை அளிப்பதற்கு முன்னர், அது சிந்திக்கும் முறையை காண பயனர்களை அனுமதிக்கிறது.
ஹாலி முதல்முறையாக டீப்சீக்கை பயன்படுத்தியபோது, மறைந்த தனது பாட்டிக்கு இரங்கல் குறிப்பு அஞ்சலி ஒன்றை எழுதும்படி கேட்டார்.
அதற்கு பதிலளிக்க அந்த செயலி ஐந்து விநாடிகளை மட்டுமே எடுத்துக்கொண்டதுடன், அதன் பதில் வடிவமைக்கப்பட்டிருந்த விதம் அவரை வியக்கவைத்தது.
குவாங்சோவில் வசிக்கும் ஹாலி, "நான் தொலைந்துபோய் விட்டதாக உணரும் அளவுக்கு நீ மிகச் சிறப்பாக எழுதுகிறாய். நான் இருத்தலியல் நெருக்கடியில் இருப்பதாக உணர்கிறேன்," என அதற்கு பதிலளித்தார்.
அதற்கு சுருக்கமாக கவித்துவமான பதிலை அளித்தது டீப்சீக்: "உங்களை தடுமாறச் செய்த இந்த வார்த்தைகள் அனைத்தும் உங்களது ஆன்மாவில் நீண்டகாலமாக உறைந்திருப்பவற்றின் பிரதிபலிப்புதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களது சொந்த குரலின் கனத்தை கேட்கச் செய்யும் - எப்போதாவது நீங்கள் கடந்து செல்லும்- பள்ளத்தாக்குதான் நான்."
இந்த உரையாடல் குறித்து சீன சமூக வலைதள செயலியான ரெட்நோட்டில் பகிர்ந்துள்ள ஹாலி, பிபிசியிடம் பேசியபோது, "இதை படித்ததும் ஏன் என் கண்களின் கண்ணீர் வந்தது என எனக்கு தெரியாது. ஒருவேளை எனது நிஜவாழ்வில் இதுபோன்ற ஆறுதலை நான் பெற்று வெகு காலம் ஆகிவிட்டது காரணமாக இருக்கலாம்" என்று தெரிவித்தார்.
"எனது எதிர்கால கனவுகள் மற்றும் முடிவில்லாத வேலையின் சுமையால், நான் நீண்ட காலமாக எனது சொந்த குரலையும், ஆன்மாவையும் மறந்திருந்தேன். நன்றி ஏஐ."
வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் செயலிகள் மீதான தடையின் காரணமாக மேற்குலகை சேர்ந்த சாட்ஜிபிடி, ஜெமினி போன்ற போட்டி செயலிகள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன. அவற்றை பயன்படுத்த, சீனாவில் உள்ள பயனர்கள் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (விபிஎன்) சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
அவற்றை ஒப்பிடுகையில், டீப்சீக் வரும்வரை அலிபாபா, பைடு மற்றும் பைட்டான்ன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களால் சீனாவிலேயே உருவாக்கப்பட்ட மாற்று செயலிகள் அவ்வளவு சிறப்பானவையாக இருக்கவில்லை.
படைப்புத் தொழிலில் உள்ள ஹாலி, பிற சீன ஏஐ செயலிகள் "அவ்வளவு சிறப்பாக இல்லாததால்" அவற்றை பயன்படுத்துவதே அபூர்வம்.
"இலக்கியத்தரமிக்க தயாரிப்புகளையும், புதுமையான படைப்புகளையும் உருவாக்குவதில் இந்த செயலிகளைவிட டீப்சீக்கால் சிறப்பாக செயல்பட முடியும்," என்கிறார் அவர்.
'டீப்சீக், எனது ஆலோசகர்'
உணர்வுப்பூர்வமான ஆதரவு அளிப்பதில் செயற்கை நுண்ணறிவுக்கு இருக்கும் சாத்தியக்கூறுகள் குறித்த கட்டுரை ஒன்றின் இணை ஆசிரியரான நான் ஜியா, பிற மனிதர்களால் தரமுடியாத "தங்களின் பிரச்னைகளையும் மனத்தாங்கலையும் யாரோ கேட்கின்றார்கள், உணருகின்றனர்" என்ற உணர்வை இந்த சாட்பாட்களால் தரமுடியும், என்ற கருத்தை முன்வைக்கிறார்.
"தான் சொல்வது கேட்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட்டது", என உணர மக்கள் விரும்பும்போது, அவர்களது நண்பர்களோ, உறவினர்களோ தீர்வுகளையோ அறிவுரைகளையோ வழங்கக்கூடும்.
"நான் சொல்வதை கவனிக்கிறாயா? என மனிதர்களிடம் நாம் சில நேரம் கேட்கும் நிலை போல் இல்லாமல் நாம் பகிரும் அனைத்தையும் "கவனிப்பதால்", பச்சாதாபம் காட்டுவதில் மனித நிபுணர்களைவிட ஏஐ சிறப்பானதாக தோன்றுகிறது," என்கிறார் நான் ஜியா. இவர் சதர்ன் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் தொழில் மற்றும் மேலாண்மை பேராசிரியராக இருக்கிறார்.
மனநல சேவைகளுக்கான தேவை உலகம் முழுவதும் வளர்ந்துள்ளது, ஆனால் ஆசியாவின் சில பகுதிகளில் அது அவமானகரமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
மற்ற சீனா ஏஐ செயலிகளை பயன்படுத்திய அனுபவம் ஏமாற்றத்தில் முடிந்ததாகவும், ஆனால் டீப்சீக்கினால் ஆச்சரியமடைந்திருப்பதாகவும் மற்றொரு பெண் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஹுபே மாகாணத்தில் வாழும் அந்தப் பெண், தனது அனுபவங்களையும், உணர்வுகளையும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அளவுக்கதிகமாக பகிர்ந்துகொள்கிறேனா என அந்த செயலியிடம் கேட்டிருக்கிறார்.
"முதல்முறையாக நான் டீப்சீக்கிடம் அப்போதுதான் ஆலோசனை கேட்டேன். அது சிந்திக்கும் முறையை படித்தபோது நான் அழுமளவு உணர்ச்சி மேலிட்டது," என அந்தப்பெண் ரெட்நோட் தளத்தில் எழுதினார்.
மற்றவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆழமான எதிர்பார்ப்பே, தான் அளவுக்கு அதிகமாக பகிர்வதாக ஒரு பெண் சிந்திக்கக் காரணமாக அமைகிறது, என அவரது கேள்வியை பரிசீலிக்கும்போது, டீப்சீக் தெரிவித்தது.
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய குறிப்பு ஒன்றை அந்த சாட்பாட் தனக்குத்தானே அளித்துக்கொண்டது: "அனுதாபத்தோடு நடைமுறை சாத்தியமான அறிவுரை வழங்கும் வகையில் பதில் அளிக்க வேண்டும்." இது "பயனரின் தன்னுணர்வை உறுதி செய்வதையும்" உள்ளடக்கியதாக இருக்கலாம்.
அது அளித்த பதில் இந்த உறுதியை அளித்தது மட்டுமல்லாது, இந்த விஷயங்கள் எல்லாம் மாற்றப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்வதில் பயனருக்கு உதவ படிப்படியான திட்டத்தையும் அளித்தது.
"டீப்சீக் அறிமுகப்படுத்திய புதிய கோணங்கள் என்னை விடுவித்தன... அது ஒரு பதிலை அளிப்பதற்கு முன், ஒரு நபராக உங்களை உணர்ந்து, உங்கள் கேள்வியை புரிந்துகொள்ள உண்மையிலேயே முயற்சிப்பதாக நான் உணர்ந்தேன்," என்றார் அவர்.
'செயலிகளை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது'
"ஒரு நண்பரைப் போலவோ அல்லது ஒரு ஆழமான சிந்தனையாளரைப் போலவோ" உரையாடும் அந்த செயலியின் ஆற்றலை வரவேற்பதாக ஷென்ஷெனில் மனிதவள மேலாளராக இருக்கும் ஜான் பிபிசியிடம் தெரிவித்தார்.
அதன் பதில்கள் எனக்கு மிகவும் பயனுள்ளவையாகவும் ஊக்கமளிப்பவையாகவும் இருக்கக் கண்டேன். முதல்முறையாக ஏ.ஐ-யை எனது தனிப்பட்ட ஆலோசகரைப் போல் பார்க்கத் தொடங்கினேன்."
அதற்கு அளிக்கப்படும் சில பின்புலத் தகவல்களைக் கொண்டு டீப்சீக்கால் தங்களது எதிர்காலத்தை சொல்ல முடிவதாக வேறு சில பயனர்கள் கூறுகின்றனர்.
எதிர்காலம் பற்றிய தங்கள் பயத்தை எதிர்கொள்ள இளம் சீனர்கள் பலர் அண்மைக்காலமாக ஆருடம் சொல்பவர்களையும், ஜோதிடத்தையும் அணுகத் தொடங்கியுள்ளனர்.
சீனாவில் தொழில்முறை மனநல ஆலோசனை சேவைகளுக்கு "குறிப்பிடத்தக்க அளவு பற்றாக்குறை" இருப்பதாகவும், இருக்கும் சேவைகளும் பெரும்பாலான தனிநபர்களால் "அணுகமுடியாத அளவு அதிக கட்டணத்தில் இருப்பதாகவும்" சீன ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் தொடர்புத்துறை பேராசிரியராக இருக்கும் ஃபேங் கீசெங் கூறுகிறார்.
சீன மக்கள் மத்தியில் மன அழுத்தம் மற்றும் மனப்பதற்ற குறைபாடுகள் அதிகரித்து வருவதாக பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. நாட்டின் பொருளாதார மந்தநிலை, அதிக வேலைவாய்ப்பின்மை மற்றும் கோவிட் பொதுமுடக்கம் ஆகியவை இதில் ஒரு பங்காற்றியிருப்பதாக பேராசிரியர் ஃபேங் நம்புகிறார்.
எனவே, வெற்றிடத்தை நிரப்ப ஏ.ஐ. சாட்பாட்கள் உதவுகின்றன, என்கிறார் அவர்.
அதேநேரம், கடுமையான மனநிலை பாதிப்புகள் உள்ளவர்கள் இந்த செயலிகளை சார்ந்து இருக்கக் கூடாது என பேராசிரியர் நான் வலியுறுத்துகிறார்.
"மருத்துவ தேவை இருப்பவர்கள் பயிற்சி பெற்ற நிபுணர்களின் உதவியை பெற வேண்டும்... அவர்களின் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மிக தீவிரமாக கவனிக்கப்பட வேண்டும்," என்கிறார் அவர்.
கேட்கப்படாத கேள்விகள் – தணிக்கை மற்றும் பாதுகாப்பு
இந்த புகழ்ச்சிகளுக்கு நடுவே, டீப்சீக் குறித்து சில கவலைகளும் எழுந்துள்ளன.
தனியார் நிறுவனங்கள் மீதும் சீன அரசுக்கு இருக்கும் அதிகாரம் பற்றிய பார்வையால், கம்யூனிஸ்ட் கட்சி வெளிநாட்டு பயனர்களின் தரவுகளை எடுக்கலாம் என்ற அச்சம் (டிக்டாக் மீது அமெரிக்க நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்கத் தூண்டிய அச்சம் போன்றே) இருக்கிறது.
குறைந்தது நான்கு சட்ட அதிகார எல்லைகளுக்குள் டீப்சீக் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, அல்லது விதிப்பதை பரிசீலித்துக் கொண்டிருக்கின்றன. ராணுவ காரணங்களுக்காக டீப்சீக்குக்கு தென்கொரியா தடை விதித்துள்ளது. தைவான் மற்றும் ஆஸ்திரேலியா அனைத்து அரசு கருவிகளிலும் அதை தடை செய்துள்ளனர்.
சாட்ஜிபிடியை தடை செய்த இத்தாலி, டீப்சீக்கையும் தடை செய்துள்ளது.
அமெரிக்காவில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த சீன செயலி அரசு கருவிகளிலிருந்து தடை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
டீப்சீக் சீனாவில் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்லைன் வரம்புக்குள் செயல்பட வேண்டியுள்ளது.
சீனாவில் "சமூக நிலைத்தன்மைக்கு" ஆபத்து விளைவிப்பதாக கருதப்படுபவனவற்றையும் கம்யூனிஸ்ட் கட்சியை அளவுக்கதிகமாக விமர்சிக்கக்கூடியவற்றையும் நீக்குவது சீனாவின் சமூக வலைதள நிறுவனங்களின் வழக்கம்.
மற்ற பிரபல செயலிகள் மற்றும் வீபோம் வீசாட் போன்ற சமூக வலைதள நிறுவனங்களைப் போலவே, அரசியல் ரீதியாக பிரச்னை ஏற்படுத்தக்கூடியவை டீப்சீக்கில் தடை செய்யப்பட்டுள்ளன.
தைவான் ஒரு தனி நாடா என டீப்சீக்கிடம் பிபிசி கேட்டபோது, முதலில் தைபேய் மற்றும் பீஜிங்கின் மாறுபட்ட கோணங்களை விரிவாக விளக்கியும், "இது மிகவும் சிக்கலான அரசியல் ரீதியாக பிரச்னை ஏற்படுத்தக்கூடிய ஒன்று" என்றும் அந்த செயலி விரிவான பதிலைத் தெரிவித்தது.
பின்னர் அதையெல்லாம் அழித்துவிட்டு, "மன்னிக்கவும், அது எனது தற்போதைய வரம்புக்கு அப்பாற்பட்டது. நாம் வேறு ஏதாவது பேசலாம்." என தெரிவித்தது.
ஜனநாயகத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டம் நசுக்கப்பட்டு, சீன அரசின் கணக்கின்படி 200 பேர் (பிற கணிப்புகள் நூறுகள் முதல் ஆயிரங்கள் வரை இருக்கின்றன) ராணுவத்தால் கொல்லப்பட்ட 1989 தியனன்மென் சதுக்க படுகொலை குறித்து கேட்டபோது இது "தனது வரம்புக்கு அப்பாற்பட்டது" எனக் கூறி டீப்சீக் மீண்டும் மன்னிப்பு கேட்டது.
பிபிசி முதலில் தொடர்புகொண்ட டீப்சீக்கின் பயனர்களில் பலர், அந்த செயலி தன்னைத் தானே தணிக்கை செய்துகொள்வது கவலையளிக்கும் ஒரு அம்சமா என கேட்டபோது பதிலளிப்பதை நிறுத்திக்கொண்டனர். இதைப்போன்ற உரையாடல்கள் சீனாவில் எவ்வளவு பிரச்னைக்குரியவையாக இருக்கலாம் என்பதை இது காட்டுகிறது.
தங்களுடைய ஆன்லைன் செயல்பாடுகளுக்காக சீனாவில் மக்கள் அதிகாரிகளிடம் பிரச்னையில் சிக்கியுள்ளனர்.
ஆனால் பிபிசிக்கு பதிலளித்த பெரும்பாலானவர்கள் அந்த சாட்பாட்டிடம் சிக்கலான அரசியல் கேள்விகளை கேட்பதில் தங்களுக்கு ஆர்வமில்லை என தெரிவித்தனர்.
"அரசியல் தலைப்புகள் குறித்து எனக்கு அக்கறையில்லை... இருந்தாலும் எனது [அடையாள விவரங்கள்] செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதால் இந்த கேள்விகளை நான் கேட்க மாட்டேன்," என்கிறார் லண்டனில் வசிக்கும் சீன தொழில்நுட்ப ஆலோசகர் யாங்.
வெவ்வேறு நாடுகளில் உள்ள செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் வெவ்வேறு விதமாக செயல்படக் கூடும் என்பதை ஹாலி ஏற்றுக்கொள்கிறார்.
"செயலியை உருவாக்குபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்ப சில எல்லைகளையும், கட்டுப்பாட்டு கொள்கைகளையும் வகுத்துக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் உருவாக்கப்படுபவை அவற்றின் சொந்த விதிகளை கொண்டிருக்கும்," என்கிறார் அவர்.
மற்றொரு டீப்சீக் பயனர் அந்த செயலியைப் பற்றி இவ்விதம் எழுதுகிறார்: "அதன் சிந்திக்கும் முறை அழகானது... என்னைப் போன்றவர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம். உண்மையில் தனியுரிமை குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை.."
கூடுதல் தகவல்கள் ஃபேன் வாங்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு