இமயமலை: நூறாண்டுக்கு முன்பே ஆபத்துகளை கடந்து புகைப்படக் கலைஞர் எடுத்த அரிய படங்கள்

    • எழுதியவர், சுதா ஜி திலக்
    • பதவி, டெல்லி

இத்தாலியை சேர்ந்த புகைப்படக் கலைஞர் விட்டோரியோ செல்லா 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எடுத்த புகைப்படங்கள், மலைகளின் புகைப்படக் கலை மற்றும் மலையேறுதலின் வரலாற்றை வடிவமைத்தது.

இமயமலையின் சிறந்த அடையாளங்களாக கருதப்படும் புகைப்படங்களுள் அவர் எடுத்த அரிய புகைப்படங்கள் இன்றும் முக்கியத்துவம் பெறுகின்றன.

'விட்டோரியோ செல்லா: போட்டோகிராபர் இன் தி ஹிமாலயா' என்ற தலைப்பில் டெல்லியில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சி, அவரது கேமரா லென்ஸ் வழியாக இமயமலையின் பிரமாண்ட கம்பீரத்திற்கு உயிரூட்டி கண் முன்னே நிறுத்தியுள்ளது.

புகழ் பெற்ற பிரிட்டிஷ் ஆய்வுப் பயணியும், எழுத்தாளருமான ஹூ தாம்சனால் தேர்வு செய்யப்பட்டு, டெல்லி ஓவியக் கூடத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் கண்காட்சி, விட்டோரியோ செல்லாவின் இந்தியா குறித்த புகைப்படங்களை அதிகமாகக் கொண்ட கண்காட்சிகளில் ஒன்று.

இதில், உலகின் மூன்றாவது உயரமான மலை உச்சியான கஞ்சன்ஜங்கா மற்றும் உலகின் இரண்டாவது பெரிய கே2வின் உயரத்தில் ஒரு நூற்றாண்டுக்கு முன் எடுக்கப்பட்ட ஆரம்பக்கால புகைப்படங்கள் சில இடம்பெற்றுள்ளன.

வடக்கு இத்தாலியில் கம்பளி வர்த்தகத்திற்குப் பெயர் பெற்ற பியெல்லாவில் பிறந்த செல்லா(1859-1943), முதல் முறையாக ஆல்ப்ஸ் மலையில் ஏறினார்.

"கம்பளி ஆலைகளும், தனது தந்தையும் கற்றுத் தந்த பொறியியல் மற்றும் வேதியியல் திறன்களை செல்லா அவரது வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தினார்," என்கிறார் தாம்சன்.

தனது 20களிலேயே கோலோடியன் பிராஸஸ் போன்ற புகைப்பட நுணுக்கங்களை அவர் கற்றுத் தேர்ந்திருந்தார். இதனால் மோசமான சூழ்நிலைகளிலும் பெரிய அளவு கண்ணாடி பிளேட்களை டெவலப் செய்ய அவரால் முடிந்தது.

தொழில்நுட்ப முழுமையுடன் உருவாக்கப்பட்ட அவரது பனோரமிக் புகைப்படங்கள் உலகெங்கும் புகழ் பெற்றன.

கடந்த 1899இல் பிரிட்டிஷ் ஆய்வுப் பயணியான டக்ளஸ் ஃபிரெஷ்ஃபீல்டுடன் கஞ்சன்ஜங்காவை சுற்றி வரும் பயணத்தில் இணைந்த போது விட்டோரியோ செல்லாவின் இமயமலைப் பயணம் தொடங்கியது.

அந்த மலையைச் சுற்றி வரும் எந்தப் பயணமும், தனி நாடாக இருந்த நேபாளத்துக்கு உள்ளேயும் இட்டுச் சென்றிருக்கும்.

குழுவின் மலையேற்றம் ஓய்வில்லாத மழையால் தடைப்பட்ட போது, அந்த சந்தர்ப்பத்தை பனி மூடிய மலை முகடுகளைப் படம் பிடிக்க செல்லா பயன்படுத்திக் கொண்டார். அவர் ஓய்வில்லாமல் புதிய தொழில்நுட்பங்களை ஆய்வு செய்து, கஞ்சன்ஜங்காவின் டெலிபோட்டோ புகைப்படங்களை முயற்சி செய்தார். அவரது புகைப்படங்கள் பார்வையாளர்களை காலத்தால் அழிக்கப்பட முடியாத ஓர் உலகுக்கு இட்டுச் சென்றன.

அந்தப் பயணத்திற்குப் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து, அப்ருஸ்ஸியின் சீமானுடன் கே2 மலையை ஏறிய போது செல்லா தனது கலைப் படைப்புகள் மூலமாகவும் சரி நிஜத்திலும் சரி புதிய உயரங்களைத் தொட்டார்.

உலகில் ஏறுவதற்கு மிகக் கடினமான மலைத்தொடரின் புகைப்படங்கள் அவரது ஆற்றலுக்கும், திறனுக்கும் சான்றாக உள்ளன. 30 கிலோ எடையுள்ள கேமரா கருவிகளைத் தூக்கிக் கொண்டு செல்லா, அபாயகரமான நிலப்பரப்புகளைக் கடந்து, மலைகளைப் புகைப்படம் எடுக்கும் கலையை வரையறை செய்த சிறந்த புகைப்படங்களை உருவாக்கினார்.

'கே2: தி ஸ்டோரி ஆஃப் தி சேவேஜ் மவுன்டைன்' என்ற நூலை எழுதிய ஜிம் கர்ரன், செல்லாவை "மிகச் சிறந்த மலை புகைப்படக் கலைஞர்" என்கிறார்.

"விட்டோரியோ செல்லாவின் பெயர் தொழில்நுட்ப நேர்த்தி மற்றும் அழகியல் நுண்மைக்குப் புகழ் பெற்றது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

கனமான புகைப்படக் கருவிகளைச் சுமந்து கொண்டிருந்தாலும் ஆல்ப்ஸ் மலைகளைக் குறிப்பிடத்தக்க வேகத்தில் கடந்த செல்லா அவரது அசாதாரண வலிமைக்கும் பெயர் பெற்றிருந்தார்.

கேமராவை சுமக்க அவர் பயன்படுத்திய கருவியும், அவரது காலணியும் பியெல்லாவில் உள்ள புகைப்பட நிறுவனத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இவை நவீன கால கருவிகளைவிட மூன்று மடங்கு அதிக எடையுள்ளவை.

அவரது உடை மட்டுமே 10 கிலோவுக்கு மேல் இருந்தது. டால்மெயர் கேமரா, டிரைபாட், பிளேட் உள்ளிட்ட அவரது புகைப்பட உபகரணங்கள் கூடுதலாக 30 கிலோ வரை எடையைக் கூட்டின. இது இன்று விமானத்தில் அனுமதிக்கப்படும் உடைமைகளின் எடையைவிட அதிகம்.

கே2 பயணத்தின் போது செல்லா தனது ராஸ் அண்ட் கோ கேமரா மூலம் நான்கு முதல் ஐந்து மாதங்களில் சுமார் 250 புகைப்படங்களை எடுத்தார். கஞ்சன்ஜங்காவில் சுமார் 200 புகைப்படங்களை எடுத்தார் எனக் குறிப்பிடுகிறார் தாம்சன்.

"நவீன டிஜிட்டல் தரங்களின் அடிப்படையில் பார்க்கையில் இதுவொரு பெரிய எண்ணிக்கை இல்லை. அனலாக் ஃபிலிம் ரோல்கள் பயன்படுத்தப்பட்ட இறுதிக் காலத்திலும் கூட இது எட்டு ரோல்களுக்கு இணையானதாகத்தான் இருந்திருக்கும். 1970களில் ஒரு புகைப்படக் கலைஞர் இவற்றை ஒரே நாள் காலையில் ஒரு மலையின் மீது பயன்படுத்தியிருப்பார். ஆனால் செல்லா புகைப்படம் எடுத்த காலத்தில், இது கணிசமான எண்ணிக்கை" என்கிறார் தாம்சன்.

அவரது கூற்றுப்படி, ஒப்பீட்டளவில் அவரிடம் குறைவான புகைப்பட பிளேட்களே இருந்தன என்பதால் அவர் ஒவ்வொரு புகைப்படத்திற்கும் மிக அதிக கவனமும், அக்கறையும் காட்ட வேண்டிருந்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, புகழ் பெற்ற மலையேறும் புகைப்படக் கலைஞர் ஆன்ஸல் ஆடம்ஸ், "விட்டோரியோ செல்லாவின் பார்வை, பார்ப்பவர்களை ஓர் ஆத்மார்த்தமான பிரம்மிப்பில் ஆழ்த்தும்" என்று எழுதினார்.

உயரமான மலைகளின் மீது புகைப்படங்களை எடுப்பதில் பல அபாயங்கள் இருந்தன. ஈரப்பதம் அதிகமுள்ள சூழ்நிலை அவரது பல புகைப்படங்களைப் பாழ்படுத்தியது.

அவற்றில் தப்பிப் பிழைத்தவை அவரது தேர்ச்சியைக் காட்டுகின்றன, எனக் குறிப்பிடுகிறார் தாம்சன்.

"பனியில் இருக்கும் பாதச்சுவடுகள், அந்தச் சுவடுகளை ஏற்படுத்திய மலையேறிகளைப் போன்றே புகைப்படத்தின் ஒரு முக்கிய அங்கம் என்பதை முதன் முதலில் உணர்ந்தவர் விட்டோரியோ செல்லா."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)