You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இமயமலை: எவரெஸ்ட் சிகரம் ஆண்டுக்கு 2 மி.மீ வளரக் காரணமான அருண் நதி
- எழுதியவர், நவீன் சிங் கட்கா
- பதவி, சுற்றுச்சூழல் நிருபர், பிபிசி உலக சேவை
சமீபத்திய ஆராய்ச்சியின் படி, ஒரு நதி எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் உள்ள பாறைகள் மற்றும் மண்ணை அரிப்பதன் மூலமாக, அதை சற்று மேல்நோக்கி தள்ளுகிறது. இது எவரெஸ்ட் சிகரம் கூடுதலாக 15-50 மீட்டர்கள் உயர வழிவகுத்துள்ளது என அந்த ஆய்வு கூறுகிறது.
எவரெஸ்ட் பகுதியிலிருந்து 75 கிமீ (47 மைல்) தொலைவில் உள்ள அருண் நதிப் படுகையில் ஏற்படும் நிலப்பரப்பு இழப்பின் காரணமாக, உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் ஆண்டுக்கு 2மி.மீ வரை உயர்கிறது என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரி (University College London- யுசிஎல்) ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
"இது ஒரு கப்பலில் இருந்து சரக்குகளை தூக்கி எறிவது போன்றது. அவ்வாறு செய்தால் கப்பல் இலகுவாகி, சில அடிகள் மேலே உயர்ந்து மிதக்கும். இதேபோல், மேலோடு (Crust) இலகுவாக மாறும்போது, மலைகள் சற்று உயர்ந்து மிதக்கும்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
சுமார் 40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மற்றும் யுரேசிய தட்டுகளின் மோதலால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக இமயமலை உருவானது. அவற்றின் தொடர்ச்சியான உயர்வுக்கு கண்டத்தட்டு இயக்கவியல் (plate tectonics) முக்கிய காரணமாக உள்ளது.
ஆனால் இந்த மலைகளின் எழுச்சிக்கு அருண் நதியும் ஒரு காரணியாக உள்ளது என்று யுசிஎல் குழு தெரிவித்துள்ளது.
அருண் நதி இமயமலை வழியாக பயணிக்கும்போது பூமியின் மேலோட்டில் (Crust) உள்ளவற்றை அரித்துச் செல்கிறது, இங்கு மேலோடு என்றால் நதிப் படுகை.
இது மேலோட்டிற்கு கீழே இருக்கும் மூடகத்தின் (Mantle) மீது உள்ள விசையைக் குறைக்கிறது. இதனால் இலகுவாக மாறும் மேலோடு வளைந்து, மேல்நோக்கி மிதக்கிறது.
இந்த விளைவு ஐசோஸ்டேடிக் ரீபவுண்ட் (Isostatic rebound) என அழைக்கப்படுகிறது. நேச்சர் ஜியோசைன்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில்,
“இந்த மேல்நோக்கி தள்ளும் விசையானது எவரெஸ்ட் மட்டுமல்லாது, உலகின் நான்காவது மற்றும் ஐந்தாவது உயரமான சிகரங்களான இலோட்ஃசே மற்றும் மக்காலு உட்பட அருகில் உள்ள பிற சிகரங்களையும் மேல்நோக்கி நகர்த்துவதற்கு காரணமாகிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
"எவரெஸ்ட் சிகரம் மற்றும் அதன் அருகிலுள்ள சிகரங்கள் உயர்ந்து வருகின்றன, ஏனெனில் ஐசோஸ்டேடிக் ரீபவுண்ட் விளைவு, நதியின் மண்ணரிப்பைக் காட்டிலும் மலைகளை வேகமாக உயர்த்துகிறது" என்று ஆய்வின் சக ஆசிரியர் டாக்டர். மேத்யூ ஃபாக்ஸ் பிபிசியிடம் கூறினார்.
"ஜிபிஎஸ் கருவிகளைப் பயன்படுத்தி அவை வருடத்திற்கு சுமார் இரண்டு மில்லிமீட்டர்கள் உயர்வதை நாம் காணலாம், இப்போது அதை இயக்குவது என்ன என்பதை நாங்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளோம்" என்கிறார் ஃபாக்ஸ்.
ஆய்வில் ஈடுபடாத சில புவியியலாளர்கள் இந்தக் கோட்பாடு நம்பத் தகுந்ததாக இருப்பதாகக் கூறினர், ஆனால் இன்னும் நிச்சயமற்றதாக இருக்கும் விஷயங்கள் ஆராய்ச்சியில் அதிகம் உள்ளது.
எவரெஸ்ட், சீனாவிற்கும் நேபாளத்திற்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ளது. அதன் வடக்குப் பகுதி சீனாவின் பக்கத்தில் உள்ளது. அருண் நதி திபெத்தில் இருந்து நேபாளத்தில் பாய்ந்து பின்னர் வேறு இரண்டு நதிகளுடன் இணைந்து கோசி (Kosi) நதியாக மாறி வட இந்தியாவில் நுழைந்து கங்கையுடன் இணைகிறது.
மலைகளின் செங்குத்தான தன்மை மற்றும் நதியின் சக்தி வாய்ந்த ஓட்டத்தின் காரணமாக, இந்த நதி பாயும் பாதையில் இருக்கும் பாறைகள் மற்றும் மண்ணை அதிகளவில் அரித்துவிடுகிறது. இதனால் அதிக வண்டல்-விளைச்சல் தரும் நதியாகவும் இது உள்ளது.
இருப்பினும் யுசிஎல் நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த அருண் நதி 89,000 ஆண்டுகளுக்கு முன்பு திபெத்தில் மற்றொரு நதி அல்லது நீர்நிலையை ஆக்கிரமித்து, அதன் உண்மையான சக்தியைப் பெற்றுள்ளது. இது புவியியல் காலவரிசையில் ஒரு சமீபத்திய நிகழ்வாகும்.
சீன புவி அறிவியல் பல்கலைக்கழகத்தின் கல்வியாளர் முனைவர் சூ ஹான், இந்த யுசிஎல் ஆய்வில் முதன்மை ஆசிரியராக இருந்தார்.
"எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் ஏற்படும் மாற்றம், உண்மையில் பூமியின் மேற்பரப்பின் இயங்குநிலை தன்மையை எடுத்துக்காட்டுகிறது," என்று ஹான் கூறினார்.
"அருண் நதியின் மண்ணரிப்பு மற்றும் பூமியின் மூடகத்தின் (Mantle) மேல்நோக்கிய அழுத்தம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு எவரெஸ்ட் சிகரத்திற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கிறது. இந்த விசை அதை மேல்நோக்கி தள்ளுகிறது." என்றும் அவர் கூறுகிறார்.
திபெத்தில் இருந்த மற்றொரு நதி அல்லது நீர் அமைப்பைக் ஆக்கிரமித்த பிறகு, அருண் நதியானது அசாதாரணமான அளவில் பாறைகள் மற்றும் பிற பொருட்களை அரிக்கும் திறனைப் பெற்றிருக்கலாம் என்று யுசிஎல் ஆய்வு கூறுகிறது.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் மையத்தின் பேராசிரியர் ஹக் சின்க்ளேர், யுசிஎல் குழுவால் அடையாளம் காணப்பட்ட இந்த அடிப்படை செயல்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்கிறார். இவர் இந்த ஆய்வில் கலந்துகொள்ளவில்லை.
ஆனால் நதி மண்ணரிப்பின் துல்லியமான அளவுகள் மற்றும் கால வரிசைகள் குறித்தும், அதன் விளைவாக அருகிலுள்ள சிகரங்கள் உயர்வது குறித்தும், சில சந்தேகங்கள் உள்ளன என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
"முதலாவதாக, ஒரு நதி மற்றொரு நதி அல்லது ஏரியைப் பிடிக்கும்போது ஏற்படும் வடிகால் பிடிப்புக்கு எதிர்வினையாக, இதுபோன்ற பரந்த நீர்வழிப்பாதை கொண்ட நதிகள் எப்போது மண்ணரிப்பை ஏற்படுத்தும் என்று கணிப்பது கடினம்” என்று பேராசிரியர் சின்க்ளேர் கூறுகிறார்.
இந்த சந்தேகங்களை ஆய்வில் ஈடுபட்ட ஆசிரியர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இரண்டாவதாக, ‘மண்ணரிப்பு ஏற்பட்ட அந்த குறிப்பிட்ட பகுதியில் இருந்து மலைகள் எவ்வளவு உயரும் என்பதை கணிப்பதும் மிகவும் கடினம்’ என்று பேராசிரியர் சின்க்ளேர் சுட்டிக்காட்டுகிறார்.
"ஆனால் இந்த வரம்புகள் இருந்தாலும், ஒரு நதிக்கும் எவரெஸ்ட் சிகரத்தின் அசாதாரண உயர அதிகரிப்பிற்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்பதே ஆர்வத்தை தூண்டக்கூடிய ஒரு புதிரான கண்டுபிடிப்புதான்." என்கிறார் பேராசிரியர் சின்க்ளேர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)