'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்' - பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?

    • எழுதியவர், தினுக் ஹேவாவிதாரண
    • பதவி, பிபிசி சிங்களம்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்

''எனது முன்னாள் காதலன் மூலமாகவே இது எனக்கு முதலில் அறிமுகமானது. அவர்தான் எனக்கு இதைக் பழக்கப்படுத்தியது'' என 27 வயதான நயோமி தனது அனுபவங்களை பிபிசியுடன் பகிர்ந்து கொண்டார்.

ஐஸ் போதைப்பொருள் என சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுகின்ற மெத்தம்பெட்டமைன் (methamphetamine) என்ற போதைப்பொருள் பாவனைக்கு தான் ஒரு வருடத்திற்கு முன்பாகப் பழக்கப்பட்டதாக நயோமி தெரிவிக்கின்றார்.

உடலுறவு கொள்ளும்போது தனக்கும், தனது முன்னாள் காதலனுக்கும் போதைப்பொருள் கட்டாயம் அவசியமான நிலைமை ஏற்படுவதாக அவர் மேலும் தனது அனுபவத்தைப் பகிர்ந்துக்கொண்டார்.

தனது அடையாளத்தைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய, அவரையும், அவரது அனுபவங்களைப் பற்றி கருத்து தெரிவித்தவர்களையும் குறிப்பிடுவதற்கு பிபிசி புனைப் பெயர்களைப் பயன்படுத்த தீர்மானித்தது.

கெம்செக்ஸ் என்றால் என்ன?

உடலுறவில் அதிக இன்பத்தை பெற்றுக்கொள்வதற்காக, உடலுறவுக்கு முன்பாக போதைப்பொருள் அல்லது மருந்து வகைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் செயற்பாடு கெம்செக்ஸ் (Chemsex) என அழைக்கப்படும் என்று பாலியல் நோய் தொடர்பான விசேட மருத்துவர் டொக்டர் வினோ தர்மகுலசிங்க பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.

''உடலுறவு செய்வதற்கு முன் ஏதேனும் ரசாயனப் பொருட்களை எடுத்துக் கொண்டால், அதை கெம்செக்ஸ் என அடையாளப்படுத்துவோம். பலர் இதை உடலுறவு இன்பத்தை அதிகரிப்பதற்காகப் பயன்படுத்துகின்றனர். என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாங்கள் கூறவில்லை'' எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், ''இவ்வாறான சந்தர்ப்பங்களில் மருத்துவர்களின் அனுமதியுடனான மருந்துகள் அல்லது அனுமதியற்ற மருந்துகள் அல்லது ரசாயனப் பொருட்களாக இருக்கக்கூடும். பார்ட்டி நிகழ்வுகளிலேயே அதிகளவானோர் இதைப் பயன்படுத்துகின்றனர். அவ்வாறான இடங்களில் பாதுகாப்பற்ற உடலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவ்வாறான இடங்களில் பாலியல் ரீதியான நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகளவில் காணப்படுகின்றது'' என்றார்.

மேலும், ''அதிகளவில் தெரிவு செய்யப்பட்ட குழுக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி தெளிவூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையில் இது தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் திட்டமொன்று இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது'' எனவும் மருத்துவர் குறிப்பிட்டார்.

ஆண், பெண் உறவின்போது உடலுறவு செயற்பாடுகளை அதிக நேரம் செய்வதற்கு மற்றும் அந்த செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு போதைப்பொருள் பயன்பாடு ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாக கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தினால் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி வெளியான அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக தன்பாலின உறவு உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் இந்த கெம்செக்ஸ் பாலியல் செயற்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக போதைப்பொருள் பயன்பாட்டிற்கு உட்படுவோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டில், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் புதிய எச்.ஐ.வி. தொற்றாளர்களில் 43 வீதம் ஆண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையில் உடலுறவு செயற்பாடுகளில் ஈடுபடுவோர் என எச்ஐவி/எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒன்றிணைந்த வேலைத்திட்டமான 'UNAIDS' 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுவோர் இடையில் கெம்செக்ஸ் அதிகரித்துள்ளதுடன், ஏனைய தரப்பினரும் இந்த செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

'அவரை காப்பாற்ற முயன்று நானும் சிக்கினேன்'

தனது முன்னாள் காதலனால், தான் முகம் கொடுத்த அனுபவங்கள் குறித்து நயோமி, பிபிசி சிங்கள சேவையுடன் பகிர்ந்துக்கொண்டார்.

''எனது முன்னாள் காதலன் வெளிநாட்டில் இருந்த ஒருவர். அவர் வெளிநாட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டிற்குப் பழகியுள்ளார். அந்த சந்தர்ப்பத்தில் அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் அவர் இலங்கைக்கு வந்தவுடன் ஐஸ் போதைப்பொருள் பயன்பாட்டை நிறுத்தியிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் இருவரும் நண்பர்களைப் போன்று பழகினோம்.''

''இந்த சந்தர்ப்பத்தில் எனது முன்னாள் காதலனை நேசித்த பெண் திடீரென வேறொரு திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்தச் சம்பவத்தை அடுத்து மன அழுத்தத்திற்கு உள்ளானமையால் மீண்டும் ஐஸ் போதைப்பொருளை அவர் பயன்படுத்த முற்பட்டார்.''

''நான் அவருடைய சிறந்த நண்பி என்பதனால், அவரை அந்த பழக்கத்தில் இருந்து வெளியில் கொண்டு வர முயற்சி செய்தேன். அவருடைய மனதை சரி செய்யும் அதேவேளை, மெதுவாக இதை நிறுத்துமாறு மனதை மாற்றினேன். இவ்வாறு சிறிது காலம் செல்லும்போது எங்களுக்கு இடையில் காதல் ஏற்பட்டது.''

''நான் குறிப்பாக போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றை ஏற்கெனவே பயன்படுத்தி இருந்தாலும், ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருக்கவில்லை. ஒரு சந்தர்ப்பத்தில் முயற்சி செய்து பார் என அவரே எனக்கு ஐஸ் போதைப்பொருளை ஒரு நாள் வழங்கினார். எனக்கிருந்த ஆர்வத்தால் நான் அதை முயற்சி செய்தேன்'' என அவர் கூறுகின்றார்.

போதைப்பொருளின் விளைவுகள்

ஐஸ் போதைப்பொருளை எடுத்துக்கொண்டதன் பின்னர் உடலுறவில் ஈடுபடும்போது தனக்கு இதற்கு முன்னர் ஏற்படாத உணர்வொன்று ஏற்பட்டதாகவும், சோர்வின்றி இருந்ததாகவும், தான் அதற்குப் பின்னர் தொடர்ச்சியாக இதைப் பயன்படுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

''நானும், காதலனும் சந்திக்கும்போது நாங்கள் அதைப் பயன்படுத்த பழகியிருந்தோம். அவர் வீட்டிலிருந்து வரும்போது அதைத் தேடி எடுத்துக்கொண்டு வருவார். நாங்கள் இருவரும் ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்திய பின்னர் உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் உணர்வில் மாற்றம் இருந்தது.''

''பல முறையும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உடலுறவில் ஈடுபட முடிந்தது. உடலுறவின்போது அதை எடுத்துக் கொள்வதால் ஒரு பலம் கிடைப்பதைப் போல் இருந்தது.''

''நாங்கள் ஒரு வருட காலத்திற்கு அண்மித்த காலம் ஐஸ் போதைப் பொருளை எடுத்துக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டோம். இறுதியாக நாங்கள் இருவரும் சந்திக்கும் வரை, இந்த போதைப்பொருள் இல்லாமல் முடியாதிருந்தது.''

''சிறிது காலத்திற்குப் பின்னர் போதைப்பொருளை எனது காதலனுக்கு கண்டுபிடிக்க முடியாது போகும்போது, எனக்கு அந்தத் தொடர்பு இருந்தது. இறுதியாக அவரைக் காப்பாற்ற வந்த நானே, அவருக்கு அதை வாங்கிக் கொடுக்கும் இடத்திற்குத் தள்ளப்பட்டேன்.''

''போதைப்பொருளை வாங்குவதற்காகவே என்னை அவர் தேடி வருகின்றார் என்பதைச் சிறிது காலம் செல்லும்போதே நான் உணர்ந்தேன். ஏனென்றால், இறுதியில் அதைத் தேடிக்கொள்ள முடியாத இடத்தில் அவர் இருந்தார்'' என அவர் குறிப்பிடுகின்றார்.

'இதன் பாரதூரத்தை நானே உணர்ந்தேன்'

சிறிது காலம் செல்லும்போது தனது காதலனின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டதாகவும், அவரும், தானும் மனதளவில் மாத்திரமன்றி, உடலளவிலும் பாதிக்கப்பட்டதாகவும் நயோமி தெரிவிக்கின்றார்.

''நானும், எனது காதலனும் போதைப்பொருள் உட்கொள்வதால் பாதிக்கப்பட்டுவதை சிறிது காலம் சென்றே உணர்ந்தேன். அதை பயன்படுத்தி ஒரு நாள் செல்லும் வரை எதையும் உட்கொள்ள முடியாது. நாங்கள் இருவரும் மெலிவடைந்தோம்."

"என்ன நடந்தது என நண்பர்கள் எங்களிடம் கேட்க ஆரம்பித்தார்கள். போதைப்பொருள் பயன்படுத்தி ஒரு வருடம் ஆகும்போது எனது காதலன் உடலுறவில் சராசரியாகச் செயல்படக்கூட சிரமப்பட்டார். அதன் பின்னர் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் வகையான மருந்துகளைக்கூட அவர் எடுத்துக்கொண்டார். அவர் உடலுறவில் ஈடுபட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்'' என்கிறார் நயோமி.

தொடர்ந்து விவரித்த நயோமி, ''எனது காதலன் அவரது வீட்டிற்குச் சென்று ஒரு வார காலம் அறையிலிருந்து வெளியில் வரவில்லை என நண்பர்கள் கூறும்போதே அதன் பாரதூரத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அதன் பின்னர் நான் அது தொடர்பில் தேட ஆரம்பித்தேன். சில வேலைகளில் வானொலி கேட்பேன். இசைகளைக் கேட்க ஆரம்பித்தேன்.''

''சிறிது காலம் செல்லும்போது எனது காதலனின் மூக்கில் ரத்தம் வடிய ஆரம்பித்தது. சில சந்தர்ப்பங்களில் 'மருத்துவரை நாடுவோம்' எனக் கூறும்போதுகூட இறுதி வரை அவர் அதற்கு இணங்கவில்லை. அவர் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தார். அவர் சண்டையிட்டார், சந்தேகப்பட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் என்னிடம்கூடச் சொல்லாமல் அவர் வெளிநாடு செல்லத் தீர்மானித்தார். நான் மனோ வைத்திய ஆலோசனைகளைப் பெற்று தற்போது சிறியளவு வழமைக்குத் திரும்பி வருகின்றேன்'' எனக் கூறினார்.

'பாலியல் சார்ந்த நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் அதிகம்'

''போதைப்பொருட்களைப் பயன்படுத்துவோர், பின்னர் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுகின்றனர். அதனூடாக ஹெபடைடிஸ் பி போன்ற பாலியல் ரீதியான நோய்களுக்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகம்" என பாலியல் நோய் தொடர்பான விசேட மருத்துவர் நிமாலி ஜயசூரிய பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

''இலங்கைக்குள் இந்த செயற்பாடுகள் இருக்கின்றன என்பது தொடர்பான தகவல்கள் இருக்கின்றன. எனினும், எங்களுக்கு அது தொடர்பில் சரியாகத் தெரியாது.

ஹெராயின் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் போன்றல்ல, சிறந்த கல்வி அறிவைக் கொண்ட 20 - 40 வயதுக்கு இடைப்பட்ட வயதுடையோர் ஐஸ் போன்ற போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது'' என அவர் குறிப்பிடுகிறார்.

'எனது தொழிலுடன் இதைப் பழகிக் கொண்டேன்'

தான் சில சந்தர்ப்பங்களில் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது சில போதைப்பொருட்களைப் பயன்படுத்துவதாக 20 வயதான யோமால் பிபிசி சிங்கள சேவையிடம் கூறியுள்ளார்.

''நான் பணியாற்றும் தொழிலுடன் பல சந்தர்ப்பங்களில் இசை நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பேன். அந்த நிகழ்ச்சிகளில் மக்களுடன் உணர்வை எடுக்க வேண்டும் என்றால், சில போதைப்பொருட்கள் இருக்கின்றன. அவற்றை நான் பயன்படுத்தினேன்.''

''அந்த போதைப்பொருளைப் பயன்படுத்தி 30 நிமிடங்கள் ஆகும்போது, அந்த உணர்வு உடலுக்குத் தெரியும். சில சந்தர்ப்பங்களில் 7 - 8 மணித்தியாலங்கள் ஆனாலும் ஆடிப்பாடி இருக்க முடியும். அதன் பின்னர் எனது காதலியுடன் நான் செக்ஸ் செய்துள்ளேன். அந்த சந்தர்ப்பத்தில் நான் அதிக நேரம் செக்ஸில் ஈடுபட்டுள்ளேன்,'' என்கிறார் யோமால்.

''எனினும், இந்த போதைப்பொருட்களைப் பயன்படுத்திய பின்னர், பல நாட்களுக்கு அதன் தாக்கம் எனக்கு இருக்கும். சில சந்தர்ப்பங்களில் நடுக்கம் ஏற்படும். அந்த சந்தர்ப்பத்தில் எனது அருகிலுள்ள நண்பர்களைக்கூட நான் தேடுவேன். போதைப்பொருளின் தாக்கத்தின் காரணமாகவே அவர்களைத் தேடுவேன். இரண்டு நாட்களுக்கு உணவு உட்கொள்ள முடியாது" என யோமால் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

'இதிலிருந்து மீண்டு வர முயல்கிறேன்'

அதிக நேரம் உடலுறவில் ஈடுபடும் ஆர்வம் காரணமாகப் பல்வேறு போதைப்பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்ததாக 36 வயதான பெத்தும் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.

''நான் திருமணம் செய்து 8 வருடங்கள் ஆகின்றன. இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். இதை எடுத்துக்கொண்டால், அதிக நேரம் உடலுறவில் ஈடுபட முடியும் என்று எனது நண்பர் ஒருவரே தெரிவித்தார்.''

''எனது நண்பருடன் ஒருநாள் நான் முயற்சி செய்தேன். அதன் பின்னர் ஸ்பா சென்றேன். அன்று அது உண்மை என்பதைப் புரிந்துக்கொண்டேன். அதன் பின்னர் மாதத்தில் ஒரு தடவை அல்லது இரண்டு தடவை பார்ட்டிகளில் பயன்படுத்துவேன். சில போதைப்பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்தேன்" என்று கூறுகிறார்.

தற்போது அதை நிறுத்துவதற்கு நான் பாரியளவில் முயற்சி செய்கின்றேன் என்று கூறிய அவர், "ஏனென்றால், நான் கதைக்கும் விதம்கூட மாறியுள்ளதை உணர்கின்றேன். இதை எடுத்துக்கொண்டால் தூக்கம் வராது. ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என்று எனது மனைவி கேட்கின்றார். என்னை அவர் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முயல்கின்றார். நான் போக மாட்டேன்'' என்கிறார்.

''நான் அவரிடம் சென்றால், நான் இவ்வாறானதைப் பயன்படுத்துவதே இதற்கான காரணம் என்பது சிறிது நேரத்தில் தெரிய வரும். நான் இதிலிருந்து மீண்டு வர பாரியளவில் முயற்சி செய்கின்றேன்," என்று பெத்தும் கூறுகின்றார்.

பாலியல் இன்பத்தை போதைப்பொருள் அதிகரிக்குமா?

மூட நம்பிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய கதைகள் காரணமாகவே உடலுறவை நீடிக்க போதைப்பொருள் பாவனைக்கு மக்கள் தூண்டப்படுகிறார்கள் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மனோஜ் பெர்ணான்டோ பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.

மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோர் போதைப்பொருளை பயன்படுத்துவது இலகுவான நிலைமை என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

''வெற்று நம்பிக்கை காரணமாகவே போதைப்பொருளைப் பயன்படுத்த அதிகளவான மக்கள் முன்வருகின்றனர். பாலியல் சக்தி வலுவடையும் என எந்தவிதமான விஞ்ஞான ரீதியான உறுதிப்பாடுகளும் இல்லை. அனைத்து போதைப்பொருட்களுக்கும் இந்தக் கதையே இருக்கின்றது. ஹெராயின், ஐஸ் போன்ற போதைப்பொருளுக்கு அடிமையானபோது மனிதனிடம் நம்பிக்கைகள் காணப்படுகின்றன. பாலியல் சக்தி அதிகரிக்கும், மகிழ்ச்சி இருக்கும் போன்ற கதைகள் சில இருக்கின்றன.''

''சிலர் மனதளவில் ஏற்படுகின்ற அழுத்தங்கள் காரணமாக போதைப் பொருட்களை எடுக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு பிம்பத்தை இந்த போதைப் பொருட்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர். திரைப்படங்களில் பார்க்கின்ற விடயங்கள் போன்றே போதைப்பொருள் பயன்பாட்டாளர்கள் பல்வேறு நடைமுறைகளை முன்னெடுக்கின்றனர். நண்பர்கள் ஏற்படுத்துகின்ற விடயங்கள் காரணமாகப் பலர் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர்'' என்கிறார் பெர்ணான்டோ.

"மருந்துகளுக்கு பாலியல் செயல்முறையை நீட்டிக்கும் திறன் இல்லை. இந்த மாதிரியான போதைப்பொருளைப் பயன்படுத்துபவர் நீண்ட நேரமாக உடலுறவு கொள்கிறார் என்று நினைக்கிறார். அப்படி நடந்தாலும், தாங்கள் அந்தச் செயலில் நீண்ட நாட்களாக ஈடுபட்டுவிட்டதாக மனதளவில் நினைக்கிறார்கள்'' என அவர் குறிப்பிடுகின்றார்.

"மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது சிலர் தூக்கமாகவும் உயிரற்று இருப்பதைப் போலவும் உணர்கிறார்கள். இந்த வகையான மருந்தை உட்கொள்பவர்கள் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக மாற நீண்டநேரம் எடுக்கும். எனவே, இந்த உயிர் சக்தியை அடைய எடுக்கும் நேரத்தை, உடலுறவில் ஈடுபட்ட நேரமாக அவர்கள் நினைக்கிறார்கள்."

ஆனால் உண்மை என்னவென்றால், ஐஸ், ஹெராயின் அல்லது பிற போதைப்பொருள்களால் பாலுறவு செயல்முறையை நீண்டதாக ஆக்க முடியாது என பெர்னாண்டோ கூறினார்.

(இங்கு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர்களின் பெயர்கள் அவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க மாற்றப்பட்டுள்ளன)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)