கராத்தே ஹுசைனி மரணம்: நடிகர், சினிமா, அரசியல் என பன்முகம் கொண்டவரின் வித்தியாசமான சாகசங்கள்

நடிகரும் கராத்தே நிபுணருமான ஷீஹான் ஹுசைனி சென்னையில் காலமானார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்தார். இருந்தபோதும் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை அவர் காலமானார். அவருக்கு வயது 60.

ஷீஹான் ஹுசைனிக்கு ரத்தப் புற்றுநோய் இருப்பது சில நாட்களுக்கு முன்பாக கண்டறியப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். கடந்த 22 நாட்களாக அவர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

பொதுமக்களும் அவருடைய மாணவர்களும் அஞ்சலி செலுத்துவதற்காக ஹுசைனியின் உடல் அவரது பெசன்ட் நகர் இல்லத்தில் ஏழு மணி வரை வைக்கப்படும் என்றும் அதற்குப் பிறகு சொந்த ஊரான மதுரைக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1970களின் மத்தியில் ஏகப்பட்ட சீனத் திரைப்படங்கள் ஆங்கிலத்திலும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் மதுரையில் வெளியாகிக் கொண்டிருந்தன. மதுரையின் தெற்கு வாசல் பகுதியைச் சேர்ந்த சையது அலி முர்துஸா ஹுசைனி மீது இந்தப் படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

புரூஸ் லீயைப் போலவே அவரும் கராத்தே கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். விரைவிலேயே மற்றவர்களுக்கு கற்றுத்தரும் அளவுக்கு அதில் தேர்ச்சியடைந்தார். மதுரையிலேயே கராத்தே வகுப்புகளையும் நடத்திவந்த அவர், ஒரு கட்டத்தில் மதுரையிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தார்.

இதற்குப் பிறகு, இயக்குநர் பாலச்சந்தரின் கண்களில் பட்டார். இதனால், 1986ல் வெளிவந்த புன்னகை மன்னன் திரைப்படத்தில் ஒரு எதிர்மறைக் கதாபாத்திரத்தில் ஷீஹான் ஹுசைனியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதற்குப் பிறகு தொடர்ச்சியாக, ரஜினியின் வேலைக்காரன், Bloodstone, ராபர்ட் - ராஜசேகரின் பறவைகள் பலவிதம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தில் ரியாஸ் கான் பாத்திரத்தின் கோச்சாக நடித்தார் ஹுசைனி.

அரசியலிலும் ஈடுபாடு

திரைப்படங்களின் மூலம் அவருக்கு ஒரு அடையாளம் கிடைத்தது என்றாலும், அவரது அடிப்படையான அடையாளம் கராத்தே, வில்வித்தை நிபுணர் என்பதாகத்தான் இருந்தது. திடீரென சென்னையின் சாலைகளில் வெள்ளை நிற போஸ்டரில் சிவப்பு நிற வட்டத்துடன் இவருடைய கராத்தே வகுப்புகள் பற்றிய போஸ்டர்கள் தென்படும். தொடர்ச்சியாக, கராத்தே மற்றும் வில்வித்தை வகுப்புகளை அவர் சென்னையில் நடத்திவந்தார்.

ஹுசைனிக்கு அரசியல் ஈடுபாடும் இருந்தது. துவக்கத்திலிருந்தே அவர் அ.தி.மு.க. ஆதரவாளராக இருந்தார். 1998ல் முதல்வன் திரைப்படத்தின் வீடியோ பிரதிகள் கேபிளில் ஒளிபரப்பாகாமல் தடுக்க, இவரே நேரடி நடவடிக்கையில் இறங்கிய போது கைது செய்யப்பட்டார். அவரது சில செயல்கள், கடுமையான விமர்சனத்தையும் ஏற்படுத்தின.

கடந்த 1994ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் 56வது பிறந்த நாளை ஒட்டி தனது ரத்தத்தால் 56 ஓவியங்களை வரைந்தார். 2013ஆம் ஆண்டு ரத்தத்தால் ஜெயலலிதாவின் சிலையை வடிவமைத்தார். 2015-ல் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு முதல் நாள், தனது கை, கால்களில் ஆணியால் சிலுவையில் அறைந்துகொண்டு சுமார் 6 நிமிடங்கள் நின்றார். அவர் மீண்டும் முதல்வராவதற்காக இதைச் செய்ததாகச் சொன்னார் ஹுசைனி.

ஹுசைனியின் வித்தியாசமான சாகசங்கள்

ஷீஹான் ஹுசைனி பல விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டியவர். அவரது சில முயற்சிகள் சர்ச்சைக்குள்ளானாலும் அவை கவனத்தை ஈர்க்கத் தவறியதேயில்லை. கனமான ஐஸ் கட்டிகளை தலையால் மோதி உடைப்பது, பாம்புகளுடன் இருப்பது என பல வித்தியாசமான சாகசங்களுக்கும் சொந்தக்காரராக இருந்தார் ஹுசைனி.

இதற்கு நடுவில் இஷின்ட்ரியு கராத்தே, டேக்வான்டோ, கோபுடு, வில்வித்தை பயிற்சிகளையும் அவர் தொடர்ந்து நடத்திவந்தார். ரியோ ஒலிம்பிக் போட்டிகளின்போது, கொரியாவின் வில் வித்தை அணிக்கு மன ரீதியான பயிற்சியாளராக இருந்ததாக அவருடைய இணையதளத்தில் இருக்கும் ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.

டேக்வான்டோவிலும் கராத்தேவிலும் ஐந்தாம் நிலை பிளாக் பெல்ட்டை வாங்கியிருப்பதாகவும் அவரது இணையதளம் கூறுகிறது. வில்வித்தைக்காக ஆர்ச்சரி அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு என்ற அமைப்பை நிறுவி, அதன் பொதுச் செயலாளராகவும் இருந்துவந்தார் ஹுசைனி.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு