You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BTS இசைக்குழுவை காண தனியே தென் கொரியா செல்ல துணிந்த தமிழக சிறுமிகள் - அதில் அப்படி என்ன சிறப்பு?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
“நீ தயங்குகிறாய் என்று எனக்கு தெரியும். ஏனென்றால், நீ உண்மையை கூறினாலும் கூட, கடைசியில் அவை வடுக்களாக திரும்பி வரும்.
“உன் வலிமையை கண்டுபிடி” என்று நான் அப்பட்டமாக கூறபோவதில்லை.
என் கதையை கேளு. கேளு.”
இவை எந்த நாட்டவருக்கும், எந்த மதத்தவருக்கும், எந்த வயதினருக்கும் பொருந்தக் கூடிய வரிகள். அனைவரும் தங்கள் வாழ்வில் நடந்த வெவ்வேறு தருணங்களுடன் இந்த வரிகளை தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும்.
இதுவே கொரிய இசைக்குழு BTS மீது உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களுக்கு ஈர்ப்பு ஏற்பட காரணம் ஆகும். BTS (Bangtan Sonyeondan) என்ற பெயர் கொண்ட இசைக்குழு ஏழு இளைஞர்களை கொண்டது. கடந்த 2013ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
நம்பிக்கை, அவநம்பிக்கை, உத்வேகம், காதல், உற்சாகம், இழப்பு, கடின உழைப்பு என அனைவராலும் எளிதில் தொடர்புப்படுத்திக் கொள்ளக் கூடிய கருக்களை கொண்டு BTS குழுவினரின் பாடல்கள் அமைந்துள்ளன. இந்த பாடல்கள் கடந்த சில வருடங்களாகவே உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகின்றன.
“I do believe your galaxy” என்ற வரிகளை தனது கைகளில் பச்சை குத்தியுள்ளார் BTS ரசிகையான ரம்யா. “ இந்த வரிகளை கேட்கும் போது, நம் மீது பிறர் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதுவும் மிகவும் உற்சாகம் அளிக்கிறது” என்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர், தற்போது அமெரிக்காவில், பயோ மெடிக்கல்ஸ் பாடப்பிரிவில் முதுநிலை படித்து வருகிறார்.
BTS பாடல்களின் மற்றொரு ரசிகையான சீதாவிடம், எப்படி வேற்று மொழிப் பாடல்களை விரும்பி கேட்டு, புரிந்துக் கொண்டு, அதன் மீது ஆர்வம் ஏற்படுகிறது என்று கேட்ட போது, “தமிழ் ரசிகர்கள் எப்படி தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற வேறு மொழிப் பாடல்களை கேட்டு ரசிக்கின்றனரோ, அதேபோன்று தான் கொரிய பாடல்கள். எனக்கு கொரிய மொழி அந்நியமாக தெரியவில்லை” என்கிறார் சீதா.
BTS ரசிகர்கள் அந்த இசைக்குழுவினரை போலவே ஆடைகள் அணிந்து கொள்வது, காலணிகள் போட்டுக் கொள்வது புதிய கலாசாரமாக இளைஞர்கள் மத்தியில் இருந்து வருகிறது. சில ஆடை அங்காடிகளில் கொரிய கலாசார ஆடைகள், பொருட்களை விற்பதற்கு தனி பிரிவுகளே உள்ளன.
இந்த இசைக்குழுவின் ரசிகர்கள் உலகம் முழுவதும் தங்களை BTS Army என்று அழைத்துக் கொள்கின்றனர். இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா என பல மாநிலங்களில், கிராமம், நகரம் என்ற வித்தியாசம் இல்லாமல், பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த பாடல்களுக்கு அடிமையாகி உள்ளனர். அந்த குழுவினரை நேரில் சந்திக்க வேண்டும் என்பது பலரது மிக பிடித்த கனவாகும்.
அப்படி ஆசை கொண்ட தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதி ஒன்றிலிருந்து மூன்று 13 வயது சிறுமிகள், தென் கொரியா செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து, வீட்டை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.
செல்போன் மூலம், BTS இசைக்குழுவைப் பற்றி தெரிந்து கொண்ட அந்த மூன்று சிறுமிகளும், பாடல்களை தொடர்ந்து கேட்டு அதனால் ஈர்க்கப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களாக தீவிரமாக BTS பாடல்களை கேட்டு வந்த சிறுமிகள் தென் கொரியாவுக்கு செல்ல வேண்டும் என்று ஆசை கொண்டனர். அதற்காக கடந்த மூன்று மாதங்களாக திட்டமிட்டு வந்துள்ளனர். ரயில் மூலம் சென்னை வந்து, சென்னையிலிருந்து எப்படியாவது விசாகப்பட்டினம் சென்று அங்கிருந்து கப்பல் மூலம் கொரியா செல்வது அவர்களின் திட்டமாக இருந்தது.
சிறுமிகள் ஒருவரின் தாத்தா வைத்துள்ள டீக்கடையிலிருந்து சிறிது தொகையை எடுத்து வைத்துள்ளனர். பள்ளி சென்ற சிறுமிகள், சீருடைகளை மாற்றி விட்டு அங்கிருந்து ஜனவரி 4ம் தேதி புறப்பட்டுள்ளனர். அருகில் உள்ள ரயில் நிலையத்துக்கு சென்று, அங்கிருந்து ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
“ சென்னையில் தங்குவதற்கு இடம் தேடி அலைந்து, இரண்டு ஹோட்டல்களில் இடம் கிடைக்காமல், மூன்றாவதாக ஒரு இடத்தில் ரூ.1,500க்கு ஒரு அறையில் தங்கியுள்ளனர். பின்பு, கொரியா செல்வது சாத்தியமில்லை என்று உணர்ந்த அவர்கள், வீடு திரும்பலாம் என முடிவு செய்து மீண்டும் சென்னையிலிருந்து ரயில் ஏறினர்.
காட்பாடி ரயில் நிலையத்தில், உணவு சாப்பிட இறங்கிய போது, அவர்களின் ரயில் புறப்பட்டு சென்று விட்டது. அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ரயில் நிலையத்திலேயே நின்றிருந்த சிறுமிகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் பார்த்து, விசாரித்துள்ளனர். பின்பு மாவட்ட குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் தெரிவித்தனர். தாங்கள் கொண்டு வந்த ரூ.14,000 பணத்தில் தங்கள் செலவுகள் போக, மீதம் 8,059 ரூபாய் கொண்டிருந்தனர்” என்று பி. வேதநாயகம், வேலூர் குழந்தைகள் நலக்குழு தலைவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
வீட்டிலிருந்து புறப்பட்ட சிறுமிகள் தங்கள் கைகளில் கைபேசிகள் எதுவும் கொண்டு செல்லவில்லை. சிறுமிகள் பள்ளியில் தங்களது நண்பர் ஒருவரிடம் தங்கள் திட்டத்தைப் பற்றி கூறியுள்ளனர். அதன் மூலம் சிறுமிகள் குறித்த தகவல்கள் கிடைத்தன.
சிறுமிகள் BTS குழு பற்றி நன்கு அறிந்திருந்தனர் என்று வேதநாயகம் கூறுகிறார். “கடந்த சில மாதங்களாகவே அந்த இசைக்குழுவை சிறுமிகள் பின்தொடர்ந்து வருகின்றனர். ஆங்கிலவழி பள்ளியில் படிக்கும் மாணவிகள், கூகுள் செய்து, கொரிய பாடல்களின் அர்த்தத்தை புரிந்து கொண்டனர். அந்த இசைக்குழுவில் உள்ள அனைவரது பெயர்களும் அவர்களுக்கு தெரியும். இசைக்குழுவினர் அணிந்திருக்கும் ஆடை, காலணிகள், உணவு என அனைத்தையும் ஆர்வமாக தேடி தெரிந்து கொண்டிருந்தனர்.
இசைக்குழுவினர் பயன்படுத்துவது போன்ற ஆடைகள், காலணிகளை, ஆன்லைனில் நண்பர்கள் வீட்டு முகவரியில் பெற்று, அதனையும் தாங்கள் புறப்பட்டு செல்லும் போது பைகளில் வைத்திருந்தனர்.” என்றார்.
வேலூரில் நான்கு பேர் கொண்ட குழந்தைகள் நலக்குழுவினர், சிறுமிகளுக்கு ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கினர். “ஒரு சிறுமி மட்டும் தனது தாயை பார்த்த உடன் அழுதார். மற்ற இருவர் அழவில்லை. எனினும், மீண்டும் ஒருமுறை இது போன்று செய்ய மாட்டோம் என்று சிறுமிகள் கூறினர்” என்றார் வேதநாயகம். சனிக்கிழமை இரவு சிறுமிகள் அவர்களின் வீடுகளை அடைந்தனர்.
இந்த சிறுமிகளில் ஒருவரது தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர், ஒரு சிறுமியின் தாய், தந்தை பிரிந்து வாழ்கின்றனர்.
கடந்த பத்து ஆண்டுகளாக இயங்கி வரும் BTS ஜின், ஆர்.எம்., ஜுங்கூக், ஜே-ஹோப், சுகா, வி மற்றும் ஜிமின் , ஆகிய ஏழு இளைஞர்களை கொண்டது. அவர்களின் பாடல் வரிகளும், இசைக்குழ்வினரின் எளிய அறிமுகமும், தங்கள் ரசிகர்ளுடன் அவர்கள் கொண்டிருக்கும் தொடர்பும் இந்த குழுவின் மீது பலருக்கு தீவிர ஆர்வம் ஏற்பட காரணமாக உள்ளது.
நேரலையில் வந்து ரசிகர்களிடம் பேசி, அவர்களின் குறுஞ்செய்திகளை வாசித்து, தங்கள் சொந்த போராட்டங்கள், வாழ்க்கை துயரங்களைப் பற்றியும் பகிர்ந்து கொள்கின்றனர்.
சேலத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சீதா, கொரோனா ஊரடங்கு காலத்தில், BTS இசைக்குழுவின் பாடல்களை கேட்க ஆரம்பித்துள்ளார். “அந்த நேரத்தில் இருந்த தனிமை உணர்விலிருந்து வெளிவர அவர்கள் பாடல்கள் மிகவும் உதவின. மனநலம், நம்பிக்கை, கடுமையான உழைப்பு ஆகியவை அவர்கள் பாடல்களின் முக்கிய கருவாகும். இவற்றோடு என்னால் தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது” என்றார்.
BTS குழு பிரபலமாகியிருப்பதற்கு, அந்த குழுவில் இருப்பவர்களின் எளிய பின்னணியும் காரணமாக உள்ளது. “BTS-ன் ஆரம்ப நாட்களில் ஒரு நிகழ்ச்சியில் கடைசியாக பாட இருந்த இந்த சிறிய குழு மேடை ஏறும் முன், நிகழ்ச்சி முடிந்து விளக்குகள் அணைத்துவிட்டனர். ஆனால், இருட்டிலும் ரசிகர்களுக்காக பாடினர் BTS. அந்த இடத்திலிருந்து தங்கள் கடுமையான உழைப்பினால், இன்று உயர்ந்து வந்துள்ளனர். அவர்களின் கதையே நமக்கு உத்வேகம் அளிக்கக் கூடியதாகும். தேர்வுக்கு புறப்படும் முன், FIRE என்ற பாடலை கேட்டு செல்வது உற்சாகமாக இருக்கும். ” என்று சீதா கூறுகிறார்.
அந்த பாடல்களுடன் தன்னால் மிக எளிதாக தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்தது தான், BTS பாடல்கள் கேட்க ஆரம்பித்ததற்கான முக்கிய காரணம் என்கிறார் பயோ மெடிக்கல் முதுநிலை படிக்கும் ரம்யா. “2018ம் ஆண்டு முதல் நான் BTS பாடல்களை கேட்டு வருகிறேன். நமது அன்றாட வாழ்வை குறித்து அவர்கள் பாடல்கள் பேசுகின்றன்”. என்கிறார்.
பாடல்கள் மட்டுமில்லாமல், BTS குழுவினர், தங்கள் சொந்த அனுபவங்களை, போராட்டங்களை பகிர்ந்து கொள்ளும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர். அதில் அவர்கள் ஒவ்வொருவரின் இயல்பையும் ரசிகர்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் அவர்களுடன் மேலும் தொடர்புபடுத்திக் கொள்கின்றனர்.
“அந்தக் குழுவில் இருப்பவருக்கு ஆங்கிலம் தெரியாது. மிகவும் எளிமையாக இருப்பார்கள். அவர்கள் பாடல்கள் எதுவும் வன்மத்தை தூண்டும் வகையில் இருக்காது. தீங்கில்லாத கருத்துகளை அவர்கள் கூறுகிறார்கள்” என்றார் சீதா.
அவர்களின் பணிவு மிகவும் பிடித்திருப்பதாக ரம்யா கூறுகிறார். “எல்லா நட்சத்திரங்களை போல அவர்களுக்கும் பணம் கிடைக்கும். ஆனால் அவர்கள் அந்த பணத்தைக் கொண்டு, நிறைய உதவிகள் செய்து வருகின்றனர். நல்ல கருத்துகளை மட்டுமே சொல்கின்றனர். தங்களை பொழுதுபோக்காக மட்டுமே பாருங்கள், தங்களை எல்லாவற்றிலும் பின்பற்ற வேண்டாம் என அவர்களே கூறுவார்கள்” என்கிறார், ரம்யா.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)