'இன்ட்ரோவர்ட்' நபரா நீங்கள்? - உங்களிடம் ஒளிந்திருக்கும் திறமைகள் என்ன?

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

இன்று (ஜன. 02) உலக இன்ட்ரோவர்ட் தினம். இப்போது, சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் 'Introvert’ என்ற வார்த்தையை அதிகம் கேட்கிறோம். பலரும் தங்களை 'இன்ட்ரோவர்ட்' என்கின்றனர்.

பொதுவெளியில் பேசத் தயங்கும் கூச்ச சுபாவம் கொண்டவர்கள், சிலரிடம் மட்டும் பேசுவதை தவிர்ப்பவர்கள், இடம்-காலத்தைப் பொறுத்து தனிமையை விரும்புபவர்கள் பலரும் தங்களை `இன்ட்ரோவர்ட்` என கூறிக்கொள்கின்றனர். ஆனால், இது உண்மையல்ல. இவற்றில் பல தவறான புரிதல்கள் உள்ளன என உளவியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

இவர்களை புரிந்துகொள்ளும் விதமாகவும் அவர்களுடைய தனித்த திறன்களை பாராட்டும் வகையிலும் தான் இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது.

யாரெல்லாம் இன்ட்ரோவர்ட், அவர்களின் தனிப்பண்புகள், தனித்திறமைகள் என்ன, அப்படி இருப்பது ஒரு குறையா என்பதை இங்கு பார்ப்போம்.

யாரெல்லாம் இன்ட்ரோவர்ட்?

சென்னையை சேர்ந்த மனநல மருத்துவர் கிருபாகர் இதுகுறித்த சில கேள்விகளுக்கு பதிலளித்தார்.

"தான் நினைப்பதை வெளியில் சொல்லாமல் தனக்குள்ளேயே வைத்துக்கொள்வதை ‘இன்ட்ரோவர்ட்’ என்று சொல்லலாம். ஆனால், வெளியில் பேசுவதற்கோ, எதையாவது செய்வதற்கோ தயக்கம், கூச்சம் உள்ளவர்கள் ‘இன்ட்ரோவர்ட்’ அல்ல. புதியவர்களிடம் பேசுவதற்கு சிலருக்கு வெட்கமோ, தயக்கமோ இருக்கலாம். சிறிது நேரம் சென்றால் அவர்களாகவே இயல்பாகி பேசிவிடுவர். `இன்ட்ரோவர்ட்`-ஆக இருப்பவர்கள் எல்லோரிடமும் எல்லா நேரங்களிலும் அப்படித்தான் இருப்பார்கள். இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது" என்கிறார் கிருபாகர்.

இன்ட்ரோவர்ட்டுக்கு மாறாக உரக்க பேசுபவர்கள், அனைவரிடமும் நன்றாக பழகுபவர்களை `எக்ஸ்ட்ரோவர்ட்` என ஆங்கிலத்தில் கூறுகிறோம்.

பெரும்பாலானோர் நினைப்பது போன்று `இன்ட்ரோவர்ட்`-ஆக இருப்பது ஒரு குறையோ அல்லது மனநல பிரச்னையோ இல்லை என்கிறார், கிருபாகர். மாறாக, அப்படி இருப்பது ஒருவருடைய இயல்பான குணநலன் தான் என்கிறார் அவர்.

இன்ட்ரோவர்ட் ஆக இருப்பது ஒரு குறையா?

"சிறுவயதில் கண்டிப்பான பெற்றோர்களிடம் வளர்ந்தவர்கள் அல்லது சிறுவயதில் ஏதேனும் சிக்கல்களுக்கு ஆளானவர்கள் பயந்து நாளடைவில் யாரிடமும் பேசாமல் 'இன்ட்ரோவர்ட்'-ஆக மாறுவதற்கான வாய்ப்புண்டு. இது அவர்களுடைய குணநலன் தானே தவிர குறை அல்ல. பெரும்பாலும் இந்த பண்புகள் ஒருவரின் 18-20 வயதுக்குள் உருவாகிவிடும். அதன்பிறகு அதனை மாற்றுவது கடினம்" என்கிறார்.

சிறுவயது தாக்கம் தவிர்த்து ஒருவரின் சமூக காரணங்களும் 'இன்ட்ரோவர்ட்'-ஆக இருப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.

தங்களின் குழந்தைகள் யாரிடமும் பேசுவதில்லை, தனியாகவே இருக்கிறார்கள், அவர்களுக்கு நண்பர்கள் இல்லை என பெற்றோர்கள் இதற்கென மன நல ஆலோசனைகளுக்காக வருவதாக மருத்துவர் கிருபாகர் கூறுகிறார்.

இன்ட்ரோவர்ட் நபர்களின் திறன்கள் என்னென்ன?

"அப்படிப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் நன்றாக படிப்பார்கள், வரைவார்கள். அவர்களிடம் தனித்தன்மைகள் இருக்கும். சிலர் இசை போன்ற துறைகளில் கவனம் செலுத்துவார்கள். இதற்கு காரணம் ஒன்று, அவர்கள் பெரும்பாலும் தனியாக நேரம் செலவிடுவதால் அவர்களின் கவனம் ஒரு குறிப்பிட்ட ஒன்றில் அதிகமாக இருக்கும், கற்பனை வளத்துடன் இருப்பார்கள். மற்றொரு காரணம், யாரிடமும் பேசாமல் இருக்கும்போது தங்கள் மனதுக்குள் இருப்பதை மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு ஊடகம் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என நினைத்து அவற்றில் ஈடுபடுவார்கள்" என்கிறார் கிருபாகர்.

‘பிபிசி ரீல்ஸ்`-இல் வெளியான காணொளியின்படி, நமது மூளையில் டோபமின், அசிட்டைல்கலின் என இரண்டு ஹார்மோன்கள் உள்ளன. இதில் டோபமின் புதிய சூழல்கள், புதிய நபர்களை எதிர்கொள்ளும் ஆற்றலை வழங்குகிறது. மாறாக, `இன்ட்ரோவர்ட்` மூளைகளில் எந்தவொரு உணர்வையும் கட்டுப்பாட்டுடனும், மிக மெதுவாகவும் அணுகும் வகையிலான அசிட்டைல்கலின் ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது. இதனால், தங்களை ஒருமுகப்படுத்தி ஒன்றில் அவர்களின் கவனத்தை திருப்பும்போது அவர்கள் திறமையானவர்களாக வர முடியும் என்பது உளவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

பிபிசி ரீல்ஸ் காணொளியில் தன் கதையை விவரித்த சோஃப்ஜா உமாரிக் என்ற `இன்ட்ரோவர்ட்` நபர் தனக்கு மிககுறைவான எண்ணிக்கையில் நண்பர்கள் இருந்தாலும் அவர்களுடனான நட்பு ஆழமாக இருக்கிறது என தெரிவித்தார். மேலும், எதுவொன்றையும் தன்னால் கூர்ந்து கவனிக்க முடியும், அதனால் தான் சிறப்பானதாகவே இதனை கருதுகிறேன் என்றார்.

`இன்ட்ரோவர்ட்`-ஆக இருப்பவர்கள் பேசவே மாட்டார்கள் என்பதும் பொதுவான கற்பிதம் என்றே உளவியல் நிபுணர்கள் கருதுகின்றனர். தங்களுக்கு தேவையான இடங்களில் சரியானதை எப்படி பேச வேண்டும் என திறன் படைத்தவர்களாக அவர்கள் உள்ளனர் என்கிறார் கிருபாகர்.

சிகிச்சை தேவையா?

இதை சென்னையை சேர்ந்த மனநல ஆலோசகர் சுவாதிக்-கும் ஒப்புகொள்கிறார்.

"அவர்கள் பெரும்பாலும் தனிமையில் இருக்கும்போது ஒன்றை மேம்பட்ட வகையில் செய்கிறார்கள். குழுவாக அதனை செய்யும்போது சில பிரச்னைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன. அதற்காக `இன்ட்ரோவர்ட்` எல்லோரும் திறமையாளர்கள் என்று சொல்ல முடியாது. எப்படி அதனை பயன்படுத்துகிறார்கள் என்பது முக்கியம்" என்கிறார் சுவாதிக்.

பெரும்பாலும் பணியிடம், பொதுவெளி என்று வரும்போது உரக்க பேசுபவர்கள், தங்களை வெளிப்படுத்திக் கொள்பவர்களுக்கான இடமாக இருக்கும்போது `இன்ட்ரோவர்ட்` ஆக இருப்பவர்கள் தனித்துவிடப்பட்டது போன்று உணருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், 'இன்ட்ரோவர்ட்'-ஆக இருப்பவர்களுக்கு மனநல ஆலோசனைகளோ, சிகிச்சைகளோ தேவைப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த கிருபாகர், அவர்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் தான் தீர்வு தேவை என்றும் இதற்கென சிகிச்சைகள் தேவையில்லை என்றும் தெரிவித்தார். வேண்டுமென்றால், `பிஹேவியர் தெரபி` எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

'பிஹேவியர் தெரபி' தவிர்த்து, 'எக்ஸ்போஷர் தெரபி'யும் அவர்களுக்கு அளிக்கப்படலாம் என, சென்னையை சேர்ந்த மனநல ஆலோசகர் சுவாதிக் தெரிவிக்கிறார்.

"இந்த தெரபியில் அவர்களுக்கு பழக்கமில்லாத செயல்களுக்கு ஒவ்வொன்றாக பழக்கப்படுத்துவோம். ஒருவரிடம் பேசுவதிலிருந்து இந்த தெரபி தொடங்கப்படும்" என்கிறார் அவர். பின்னர், குழுவாக இருக்கும்போது அவர்களுக்கு என்ன மாதிரியான சிக்கல்கள் ஏற்படுகின்றன என்பதை பொறுத்து அதற்கேற்ப தெரபி அளிக்கப்படும்" என்கிறார், சுவாதிக்.

'இன்ட்ரோவர்ட்'-ஆக இருப்பது பாவமோ, குறையோ கிடையாது. அதனால், மற்றவர்களிடமிருந்து அவர்கள் தங்களை தாழ்த்திக்கொள்ள வேண்டாம்" என சுவாதிக் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)