கர்நாடகா: பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் கொடூரம் தொடர்வது ஏன்?

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் உங்களுக்கு மனச்சங்கடத்தை ஏற்படுத்தலாம்

இந்த மாதத் தொடக்கத்தில், இந்தியாவில் பெண் ஒருவரை நிர்வாணமாக இழுத்துச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது போன்ற நிகழ்வுகள் மன சோர்வடைந்த வழக்கமான நிகழ்வுகளாகவே மாறிப் போயுள்ளன. ஆனால் சட்ட வல்லுநர்கள் மற்றும் பாலின உரிமை ஆர்வலர்கள் இது குறித்துப் பேசுகையில், பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூரமான குற்றங்களுக்கு எதிராகப் போதுமான சட்டம் இன்னும் தயாராக இல்லை என்கின்றனர்.

டிசம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்குப் பிறகு, பத்துக்கும் மேற்பட்டோர் சசிகலாவின் வீட்டிற்குள் நுழைந்தனர்.

42 வயதுடைய அந்தப் பெண்ணை வெளியே இழுத்துச் சென்ற அவர்கள், ஆடைகளை அவிழ்த்து, கிராமத் தெருக்களில் நிர்வாணமாக இழுத்துச் சென்று, மின்கம்பத்தில் கட்டி வைத்து, பல மணி நேரம் தாக்கியுள்ளனர்.

கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஹோசா வந்தமுரி கிராமத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் அவருக்கு, அவரது 24 வயது மகன் 18 வயது காதலியை அழைத்துச் சென்றுவிட்டதால் இதுபோன்ற தண்டனையை அந்த கிராமம் ஒன்று திரண்டு அளித்துள்ளது.

அவரது மகனுடன் சென்றுவிட்ட அந்த இளம் பெண்ணுக்கு அவரது குடும்பத்தினரால் வேறு ஒருவருடன் மறுநாள் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்போது வீட்டை விட்டு அந்த இளம் பெண் காதலனுடன் சென்றதால் கோபமடைந்த அவரது குடும்பத்தினர், ஓடிப்போன தம்பதியினர் எங்கே இருக்கிறார்கள் என்பதை அறிய விரும்பினர். அந்த நோக்கத்திலேயே இத்தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தகவலறிந்து அதிகாலை 4 மணியளவில் கிராமத்திற்கு வந்த போலீசார், சசிகலாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. பின்னர் வந்திருந்த மாநில அமைச்சரிடம் "எனக்கும் எனது மனைவிக்கும் மகனின் அந்த உறவு பற்றி கூடத் தெரியாது" என்று அவரது கணவர் கூறினார்.

இந்தக் கொடூர தாக்குதல் தொடர்பாக பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன் உள்ளூர் காவல்துறை அதிகாரி ஒருவர் "கடமை தவறியதற்காக" பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தேசிய தலைப்புச் செய்தியாக மாறியது என்பதுடன் அதிகாரிகள் இந்நிகழ்வை முழுமையாக கவனத்தில் எடுத்துக் கொண்டனர். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இது மனிதாபிமானமற்ற செயல் என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி தேடித் தரவும் உறுதியளித்தார்.

இந்தியாவில் தொடர்கதையாகும் கொடூரம்

அரசாங்கம் அந்தப் பெண்ணுக்கு சில ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களையும், ரொக்கத்தையும் வழங்கியது. இருப்பினும் அவர் அனுபவித்த அவமானத்திற்கு இழப்பீடு எதுவும் இல்லை என்று அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பிரசன்னா வரலே மற்றும் நீதிபதி எம்.ஜி.எஸ். கமல் ஆகியோர், போலீஸாரை வரவழைத்து, தாங்களாகவே விசாரணையைத் தொடங்கினர். இது போன்ற சம்பவம் நவீன இந்தியாவில் நடக்குமா என்று தாங்கள் அதிர்ச்சியடைவதாகக் கூறினர்.

ஆனால் பெலகாவியில் நடந்த சம்பவம் உண்மையில் அரிதானது அல்ல, மேலும் இதுபோன்ற பல சம்பவங்கள் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் தலைப்புச் செய்திகளாக மாறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.

உலகளாவிய பொதுமக்களின் ஆத்திரத்தைத் தூண்டிய அத்தகைய ஒரு செய்தி ஜூலை மாதம் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் நடந்த கொடூர சம்பவத்தைப் பற்றியது. ஒரு வைரலான வீடியோவில் இரண்டு பெண்களை நிர்வாணமாக ஒரு கும்பலால் இழுத்து இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அவர்களில் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கொடூரமான அந்தத் தாக்குதலுக்கு அரசியல் காரணங்களும் இருந்தன. மணிப்பூர் குக்கி மற்றும் மெய்தேய் சமூகங்களுக்குள் நேர்ந்த இன மோதல்கள் மற்றும் வன்முறைகளின் உச்சகட்டத்தில் அது போன்ற கொடூர சம்பவம் நடந்தது.

ஆனால் பிற மாநிலங்களில் இருந்து வரும் செய்திகள், இதுபோன்ற சம்பவங்கள் பெரும்பாலும் சாதி அல்லது குடும்ப மோதல்களில் வேரூன்றியிருப்பதாகக் காட்டுகின்றன. பெண்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்படும் சம்பவங்கள் வாடிக்கையாக மாறுகின்றன.

ஆகஸ்ட் மாதம், ராஜஸ்தானில் 20 வயது கர்ப்பிணிப் பெண்ணை அவரது கணவர் மற்றும் மாமியார் நிர்வாணமாக இழுத்துச் சென்றனர். குஜராத்தில் 23 வயது பழங்குடியினப் பெண் ஜூலை 2021 இல் மற்றொரு ஆணுடன் சென்றதற்காக இதே முறையில் தண்டிக்கப்பட்டார்.

இந்தியாவில் பெண்ணை நிர்வாணமாக இழுத்துச் செல்லும் கொடூரம் ஏன்?

இவை தலைப்புச் செய்திகளான சில நிகழ்வுகள். ஆனால் இது போன்ற சம்பவங்கள் குறித்த தரவுகள் பொதுவாகக் குறைவாகவே உள்ளன. சில வழக்குகள் அரசியலாக்கப்படுகின்றன. எதிர்க்கட்சிகள் ஒரு மாநில அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் வகையில் இதுபோன்ற பிரச்னைகளைப் பெரிதுபடுத்துகின்றன. ஆனால், காவல்துறை மற்றும் நீதிமன்றங்களில் எழுப்பப்படவிருக்கும் கேள்விகளுக்குப் பயந்து பெண்கள் பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்கள் குறித்துப் புகாரளிப்பதில்லை என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

"பெண்கள் மீதான தாக்குதல் தொடர்பான வழக்குகள் எப்போதும் அவமானம் காரணமாக குறைவாகவே பதிவாகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் புகார் அளிக்கவும் குடும்பங்கள் முன்வருவதில்லை, ஏனெனில் இது மரியாதைக்குரிய விஷயம் என்பதுடன் இதுபோல் பாதிக்கப்பட்டவர்களை உள்ளூர் சமூக அமைப்புகள் ஆதரிப்பதில்லை அல்லது இந்த குற்றங்கள் குறித்துப் புகாரளிக்க அவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கித் தரவில்லை," என்கிறார் வழக்கறிஞர் மற்றும் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் ஆர்வலரான சுக்ரிதி சவுகான்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுதளத்தில், "ஒரு பெண்ணின் அடக்கம் மற்றும் அச்ச உணர்வுகளைத் தவறாகப் பயன்படுத்தும் நோக்கத்துடன் தாக்குதல்" எனப்படும் ஒரு பொதுவான விளக்கத்தின் கீழ் ஆடைகளை அவிழ்த்தல் உள்ளிட்ட செயல்கள் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இது பொதுவெளியில் துன்புறுத்துதல், பாலியல் சைகைகள், வாயுரிசம் மற்றும் அனுமதியின்றிப் பின்தொடர்தல் போன்ற செய்கைகளுடன் குற்றத்தை தொடர்புபடுத்துகிறது. கடந்த ஆண்டு, இது தொடர்பாக 85,300 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் 83,344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர் கால சட்டம் அவசியமா?

இத்தகைய வழக்குகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் 354வது பிரிவின் கீழ் கையாளப்பட்டு, மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் - இது "மிகவும் போதுமானதாக இல்லை" என்று சவுகான் கூறுகிறார்.

"இது நீதியைக் கேலி செய்வது போன்றதாகும். சட்டம் அதைத் தடுக்கும் போது மட்டுமே முழுமையாகச் செயல்படுவதாக ஏற்றுக்கொள்ள முடியும். தற்போது இது போன்ற சட்டங்களால் பெண்கள் குறைத்து மதிப்பிடப்படுகின்றனர். தண்டனையை அதிகரிக்கும் வகையில் இது போன்ற சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.

பெலகாவியில் நடந்த தாக்குதல் குறித்துக் கவலை தெரிவித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள், அந்த சம்பவத்தை "50-60 கிராம மக்கள்" பார்த்துக் கொண்டிருந்தனர் என்றும், "ஒருவர் மட்டுமே தலையிட முயன்றார், அவரும் தாக்கப்பட்டார்" என்றும் குறிப்பிட்டனர்.

இத்தகைய கொடூரக் குற்றச் செயல்களைத் தடுக்க "கூட்டுப் பொறுப்பின்" அவசியத்தை எடுத்துரைத்த நீதிபதிகள், 1830 களில், இந்தியா ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டபோது, ஒரு குற்றத்திற்காக ஒரு முழு கிராமமும் தண்டிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய ஒரு வழக்கை மேற்கோள் காட்டினர்.

"எல்லா கிராம மக்களும் இதுபோன்ற கொடூரச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டும். யாராவது அதைத் தடுக்க முயற்சித்திருக்கலாம்," என்றும் அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மகாபாரதத்தில் ஆடைகள் அவிழ்க்கப்பட்ட போது திரௌபதியைக் கிருஷ்ணர் காத்தது போல் நடைமுறையில் யாரும் காக்கமாட்டார்கள் என்று தலைமை நீதிபதி வராலே தனது கருத்தை அப்போது தெரிவித்தார்.

"நாங்கள் திரௌபதிகள் இல்லை. எடுப்பதற்கு ஆயுதங்கள் எதுவும் எங்களிடம் இல்லை. மேலும், பெண்கள் பாதிக்கப்படும் போது பொறுப்பை அவர்கள் மீதே சுமத்தக்கூடாது. சட்டம் தவறு செய்பவரைத் தண்டிக்க வேண்டும். ஆனால் அது இன்னும் பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்கிறது," என அவர் சொல்கிறார்.

"நாங்கள் பெற வேண்டிய செய்தி என்னவென்றால், உங்கள் இன, சாதி மற்றும் குடும்ப சண்டைகளை எங்கள் உடல்களில் நடத்தாதீர்கள். எங்கள் உடல்கள் உங்களுடைய போர்க்களம் அல்ல," என்று அவர் மேலும் கூறுகிறார்.

பாலின சமத்துவத்தில் இளைஞர்களுடன் பணிபுரியும் ஆராய்ச்சி ஆய்வாளர் மௌமில் மெஹ்ராஜ், ஒரு பெண்ணின் உடல் ஒரு போர்க்களமாக கருதப்படுவதற்கு, அது அவருடன் இணைந்திருப்பதுடன் அவரது குடும்பம், சாதி மற்றும் சமூகம் என நீடிப்பதே காரணம் என்கிறார்.

"பாதிப்புகள் ஏற்படும் போது பெண்கள் கூடுதல் சுமைகளை சுமக்க வேண்டியது ஏன்," என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

இதுபோன்ற சம்பவங்கள், அவை பார்க்கப்பட்டு, படமாக்கப்பட்டு, மீண்டும் பார்க்கப்படுவதால் இதிலும் வாயூரிஸத்தின் ஒரு அங்கம் உள்ளது என்று அவர் கூறுகிறார்.

பெலகாவியில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் மைனர். இது போன்ற குற்றங்கள் இயல்பானவைதான் என்ற எண்ணத்தை அடுத்த தலைமுறையினருக்கு ஏற்படுத்தும் அளவுக்கு வழக்கமானவையாக மாற்றப்பட்டுள்ளன என்பதை இது குறிக்கிறது என்கிறார் அவர்.

"அப்படியானால், இதுபோன்ற குற்றச் செயல்களை எதிர்கொள்ள ஒரே ஒரு சட்டம் போதுமானதாக இருக்குமா? சிறந்த ஆண் குழந்தைகளை வளர்ப்பதே ஒரே தீர்வு என்று நான் நினைக்கிறேன். ஒரு பெண்ணின் உடலை அவளது கவுரவத்துடன் இணைத்துப் பார்ப்பது பிரச்னையானது என்பதை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டியது அவசியம்," என்று தொடர்ந்து பேசும் போது அவர் கூறுகிறார்.

"இது ஒரு கடினமான பணி, ஆனால் முன்கூட்டியே தொடங்க வேண்டும். இல்லையெனில் பெண்களுக்கு எதிரான இந்த கொடூரமான வன்முறை சம்பவங்கள் தொடரும் என்பதைத் தவிர வேறு எதுவும் சொல்லமுடியாது."

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)