You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முதல் காதல் உணர்வு ஏன் வாழ்நாள் முழுவதும் இன்பமாக இருக்கிறது?
- எழுதியவர், மேத்யூ சையத்
- பதவி, பிபிசி - ரேடியோ 4-ல் வெளியான ‘சைட்வேஸ்’ தொடர்
1989 ஆம் ஆண்டில், கேத்தின் வயது 17. பிரிட்டனின் டேவன் நகரில் தனது தாய் மற்றும் நண்பருடன் விடுமுறையை அனுபவித்துக்கொண்டிருந்த போது முதன்முதலாக அவருக்கு காதல் உணர்வு ஏற்பட்டது. அது மிகவும் ஆச்சரியமளிக்கும் உணர்வு.
அப்போது குன்தர் என்ற இளைஞர் கலைக் கல்லூரியில் தனது முதல் ஆண்டைத் தொடங்க இருந்தார். அவரும் விடுமுறை தினத்தில் அதே பகுதியில் இருந்தார். அவர்கள் ஒரு பப்பில் முதன்முதலாக பார்த்துக் கொண்டனர்.
"நான் அந்த இளம் பெண்ணை ஒரு பாரில் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்து சிரித்ததை நான் நன்றாகக் கவனித்தேன்" என்று குன்தர் நினைவு கூர்ந்தார்.
"அவர் இனிப்பு சாப்பிட்டுக்கொண்டிருந்தார். சாப்பிட்டுக்கொண்டே என்னைப் பார்த்தார். ஆனால் அவர் என்னைப் பார்த்துவிட்டு சட்டென திரும்பிக் கொள்ள முயன்றார்," என்று அவர் கூறுகிறார்.
"அது பிளம் கேக்கையும் க்ரீமையும் கலந்து சாப்பிடுவது போல் மிகவும் சுவையாக இருந்தது!"
குன்தர் ஜெர்மனி நாட்டின் பவாரியாவைச் சேர்ந்தவர்.
"அந்த இளம் பெண் கருப்பு உடை அணிந்திருந்தார் என்று எனக்கு நினைவிருக்கிறது. என்ன ஒரு அழகான சிரிப்பு. அந்தச் சிரிப்பை நான் எப்போதும் மறக்கமுடியாது. அப்போது நான் பேசாமல் இருந்தேன்.
பின்னர்,'காபி சாப்பிடலாம்' என்று நான் கூறினேன்."
"அடுத்த நாள், நாங்கள் கப்பலுக்கு அருகே நடந்து கொண்டிருந்தோம். அவர் என் கையைப் பிடித்து, என் பக்கம் திரும்பி அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தார். அது தான் காதல். மிகவும் இனிமையான உணர்வு அது. அது மிகச் சரியான முதல் முத்தம்."
"நான் உடனடியாக அந்த இளம் பெண்ணைக் காதலிக்கத் தொடங்கினேன். ஆனால் இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் ஜெர்மனிக்குத் திரும்ப வேண்டியிருந்தது."
சில மணிநேரங்களில், கேத் மற்றும் குன்தர் இடையே 1,500 கிலோமீட்டர் தூரம் இடைவெளி ஏற்பட்டது.
அவர்கள் தொடர்பில் இருக்கப் போகிறார்கள் என்று அப்போதே அவர்களுக்குத் தெரியும், ஆனால் அந்த காலகட்டத்தில் அது மிகவும் கடினமாக இருந்தது. செல்போன்கள் இல்லை. மின்னஞ்சல்கள் கிடையாது. எஸ்எம்எஸ் இல்லை. அது லேண்ட்லைன்கள், ஃபோன் பூத்கள் அல்லது கடிதங்களின் உலகம்.
புத்தாண்டை வரவேற்க இங்கிலாந்தில் கேட் உடன் இருந்த குன்தருக்கு அப்போது 18 வயது.
நான்கு மாதங்களுக்குப் பிறகு கேத் ஜெர்மனியில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் இம்முறை அந்த சந்திப்பு வேறுவிதமாக இருந்தது.
"நாங்கள் ஒன்றாக படுக்கையில் இருந்தோம். அவர் கூறினார், 'நாம் இருவரும் எப்போதும் ஒன்றாக இருக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். உன்னால் ஜெர்மனிக்கு வரமுடியுமா?”
குன்தர் பிரிட்டனுக்குச் சென்று கேத்துடன் இருக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்தார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. அதன் பின் முடிவு எடுக்கும் பொறுப்பு கேத்திடம் வந்தது.
"இல்லை என்ற பதிலைச் சொல்லத்தான் நான் அவரை அழைத்தேன். அது என் வாழ்க்கையில் நான் எடுத்த ஒரு கடினமான முடிவு. ஆனால் அதற்கான காரணத்தை நான் அவரிடம் சொல்லவில்லை.”
"நான் வீட்டை விட்டு வெளியேறுவதை என் அம்மா விரும்பவில்லை. அந்த நேரத்தில் எனது எதிர்காலம் எப்படியிருக்கும், நான் என்ன வேலை செய்யப்போகிறேன், என்ன தொழிலை நான் செய்ய விரும்புகிறேன் என்று எதுவுமே எனக்குத் தெரியவில்லை.”
"ஆனால் என்னுடைய முடிவு இதயத்தை நொறுக்குவதாக இருந்தது."
இருப்பினும் அவர்கள் தொடர்ந்து கடிதப் பரிமாற்றம் செய்துகொண்டனர். அவர்களால் அந்த உணர்வுக்கு விடைகொடுக்கமுடியவில்லை. ஆனால் 1993 இல் அவர்கள் தங்கள் இருவருக்குமான தொடர்பை முற்றிலும் இழந்தனர் .
நாம் பலரை நேசிக்க முடியும் என்பது மட்டுமின்றி நம் வாழ்வில் மிகவும் அர்த்தமுள்ள பல உறவுகளை வைத்திருக்க முடியும். ஆனால் அந்த ஆரம்ப காதல் உணர்வு என்பது தீப்பொறி போன்ற மர்மமான மற்றும் ஆழமான ஒன்றாகவே இருக்கும்.
எவ்வளவு காலம் கடந்தாலும், அது வித்தியாசமான, விசித்திரமான உணர்வாகவே தொடர்கிறது.
ஆனால் இந்த முதல் காதல் உணர்வுகள் ஏன் மிகவும் தனித்துவமானவை என்பதை புரிந்து கொள்ள, நம் இதயங்களை மட்டும் பார்க்காமல் மூளைக்குள் சென்று ஆராய்வதே சரியானதாகும்.
வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் உளவியல் பேராசிரியரான கேத்தரின் லவ்டே கூறுகையில், "எனது ஆராய்ச்சியானது மக்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களின் நினைவுகளைப் பற்றியது. நான் அவர்களின் 80 மற்றும் 90 வயதுகளில் உள்ளவர்களை நேர்காணல் செய்துள்ளேன். மேலும் அவர்களின் மிக முக்கியமான சில நினைவுகள் அந்த ஆரம்பகால உறவுகளைப் பற்றியதாக இருப்பதையும் கண்டறிந்துள்ளேன்," என்கிறார்.
அவரது தற்போதைய ஆராய்ச்சி ‘சுயசரிதைகளில்’ கூறப்பட்டுள்ள நினைவுகளில் கவனம் செலுத்துகிறது. மேலும் மிகவும் தெளிவான நினைவுகளை உள்வாங்க இளமைப் பருவம் தான் சரியான காலகட்டம் என்று அவர் நம்புகிறார்.
"தகவலைப் பதிவுசெய்வதில் மூளை மிகச்சிறந்த இடம். நாம் நமது இளமைப்பருவத்தில் இருக்கும்போது, நினைவுகளை மிக மிகத் தெளிவாக உருவாக்க முடியும் மூளையில் சேமிக்கமுடியும்.”
"மேலும், அதிக உணர்ச்சிவசப்படும் எதையும் மூளை சிறப்பாகப் பதிவுசெய்கிறது. முதல்முறையாக ஏதாவது நடந்தாலோ அல்லது மிக அதிகமான வெகுமதி அல்லது அதிக வலி ஏற்பட்டாலோ, நம் மூளை அதை நன்றாக நினைவில் பதிவுசெய்துகொள்கிறது. இதே போல் முதன்முதலில் ஏற்படும் காதல் உணர்வும் இப்படித்தான் மூளையில் சேமிக்கப்படுகிறது,”
"அதற்கு மேல், ஒவ்வொரு முறையும் அந்த அனுபவங்களை நினைவில் வைத்துக் கொள்ளும்போது, மூளையில் அந்த நரம்பியல் பாதைகள் வலுவடைகின்றன."
இந்த அனுபவங்கள் எந்தளவுக்கு உருவாகின்றன என்பதைக் கருத்தில் கொண்டு மட்டும், அவற்றை நிராகரிக்க முடியாது.
உளவியலில் இருந்து நாம் இப்போது அறிந்திருப்பது என்னவென்றால், இந்த ஆரம்பகால காதல் நினைவுகள் குறிப்பிடத்தக்கவை என்பது மட்டுமல்ல, அடிப்படையானவை என்பதும் கூட.
உறவுகளால்தான் மனிதர்கள் வாழ்கிறார்கள்.
"முதல் முறையாக காதலிப்பது மிக முக்கியமான அனுபவங்களில் ஒன்றாகும். ஏனெனில் இது முந்தைய உறவுகளை விட வேறுபட்ட குணங்களைக் கொண்டுள்ளது. நமது நெருங்கிய வட்டத்திற்கு வெளியே ஒருவரை நம்புவதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்."
அது மயக்கமான மகிழ்ச்சியாக இருந்தாலும் அல்லது இதயத்தை நொறுக்கினாலும், முதல் காதலுடன் தொடர்புடைய உணர்ச்சிகள் நம்பமுடியாத அளவிற்கு தீவிரமாக இருக்கும்.
நரம்பியல் விஞ்ஞானி தொடர்ந்து பேசுகையில், குறிப்பாக பருவமடையும் போது, இந்த ஆழமான உணர்வுகள் நம் உடல் மற்றும் மூளையில் செயல்படும் ஒரு இரசாயன காக்டெய்ல் மூலம் இயக்கப்படுகின்றன என்றார்.
முதலில், ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் ஆகிய பாலியல் ஹார்மோன்களின் அதிகரிப்பு ஒருவித ஈர்ப்பை உண்டாக்குகிறது.
பின்னர், ஒரு உறவு தொடங்கியவுடன், செரோடோனின், டோபாமைன் மற்றும் ஆக்ஸிடாஸின் போன்ற ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. அவை வெகுமதி, அரவணைப்பு, மகிழ்ச்சி மற்றும் இணைப்பு போன்ற உணர்வுகளுடன் தொடர்புடையவை.
"இந்த வெவ்வேறு ரசாயனங்கள் அனைத்தும் காதலில் விழுவது மற்றும் காதலிப்பது போன்ற அனுபவத்தின் ஒரு பகுதியாகும். இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு இரசாயன கலவையினால் ஏற்படுகிறது."
மக்களை ஈர்க்கும் வகையில் நாம் எடுக்கும் முடிவுகள் மற்றும் நாம் உருவாக்கும் நினைவுகள் வரவிருக்கும் ஆண்டுகளில் ஒரு வகையான அளவுகோலாக அமைகின்றன.
நமது முதல் காதல் உணர்வுகள் நம் வாழ்வில் நீங்கா நினைவுகளாகப் பொறிக்கப்பட்டுள்ளன. அவற்றை நினைவில் கொள்வதற்காக நாம் நரம்பியல் ரீதியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளோம்.
ஆனால் சில சமயங்களில் ஞாபகம் வருவது போதாது என்று கூட நமக்குத் தோன்றலாம்.
நீங்கள் எப்போதாவது சமூக ஊடகங்களில் உங்கள் முதல் காதலியின் பெயரைத் தட்டச்சு செய்து, மீண்டும் இணைவதற்கு எதிர்பார்த்திருந்தால், நீங்கள் மட்டும் அப்படிச் செய்யவில்லை என்பதில் உறுதியாக இருங்கள்.
கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி உளவியல் நிபுணரும், பேராசிரியருமான டாக்டர் நான்சி கலிஷ் , 15 வருடங்கள் இந்த தலைப்பை ஆராய்ச்சி செய்த பிறகு, மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்ட காதல் சம்பந்தமான துறையில் நிபுணரானார்.
அவர் இரண்டு ஆய்வுகளை நடத்தினார். அது உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட 3,000 நபர்களிடமிருந்து - தங்கள் நீண்டகால காதலர்களுடன் மீண்டும் இணைந்தவர்களிடமிருந்து - பதில்களை சேகரித்தது.
முதலில், 1993 இல், இழந்த காதலருடன் மீண்டும் ஒன்றிணைவது சரியான சூழ்நிலையில் அந்தக் காதல் தனது பயணத்தைத் தொடங்கியதைக் கண்டுபிடித்தார்.
அந்த ஆய்வில், மீண்டும் இப்படி இணைந்தவர்களில் பெரும்பாலோர் ஒற்றை நபராகவோ அல்லது கணவரையோ, மனைவியையோ இழந்தவர்களாக இருந்தனர். மேலும், அவர்கள் சில வாரங்களுக்குள் மீண்டும் ஒன்றாக இணைந்தனர்.
குறிப்பிடத்தக்க அளவில் 72 சதவிகிதத்தினர் மீண்டும் திருமணம் செய்து கொண்டனர் .
பின்னர் 2004 இல், கலிஷ் மீண்டும் அதே போன்ற ஒரு ஆய்வை மேற்கொண்டார். ஏனெனில் அப்போது தான் இணையம் என்ற தகவல் தொடர்பு முறை ஒரு பெரிய வளர்ச்சி ஏற்பட்டது.
இது போன்ற சூழ்நிலையில் கணக்கெடுக்கப்பட்டவர்களில் 62% பேர் தங்கள் முன்னாள் காதலர்களுடன் தொடர்பு கொண்டுள்ளனர் என்பதை அவர் கண்டுபிடித்தார்.
ஆனால் மீண்டும் அவர்கள் இணைந்து வாழ்வதில்- அதாவது திருமணம் போன்ற உறவில் இணைவதன் வெற்றி விகிதம் 5% ஆகக் குறைந்துள்ளது .
இணையத்தின் காரணமாக முன்னாள் காதலர்களுக்கு ஒருவரையொருவர் கண்டுபிடித்து மீண்டும் தொடர்பை ஏற்படுத்துவதை மிகவும் எளிதாக்கியது என்றாலும், சில வழிகளில், அவர்கள் குறைவான அர்ப்பணிப்பை மட்டுமே உணர்ந்தனர்.
முதல் காதல் குறித்த நினைவுகள் உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் இருக்கும்.
சிலர் அவற்றை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சி செய்கிறார்கள். மற்றவர்கள் அதைச் செய்ய விரும்புவதில்லை.
ஆனால், உங்கள் தற்போதைய துணையைப் பொறுத்தவரை, கடந்த காலத்தை நினைவில் கொள்ளத் தகுதி இல்லை என்று பொருள் அல்ல.
"காதல் ஏக்கம் என்பது உங்கள் தற்போதைய காதல் துணையுடன் கடந்த காலத்திற்கான ஏக்கமும் பாசமும் ஆகும்" என்று ஏக்கம் என்ற உணர்வு குறித்து ஆராய்ச்சி செய்யும் டெக்சாஸில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆடம் ஃபெட்டர்மேன் விளக்குகிறார்.
அவரது பட்டதாரி மாணவர்களில் ஒருவர் காதல் உறவுகளின் பின்னணியில் ஏக்கத்தை ஆய்வு செய்யும்படி சவால் விடுத்தார்.
நமது தற்போதைய உறவுகளுக்கு பயனளிக்கும் வகையில் நமது மூளை செயல்படும் விதத்தை நாம் பயன்படுத்தலாம் என்று அவர்களின் ஆராய்ச்சி காட்டுகிறது.
"உங்கள் முதல் காதல் உணர்வு ஏற்பட்ட நாளைப் பற்றி சிந்திப்பது உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் இந்த ஏக்கம் பிறக்கிறது. நீங்கள் திரைப்படங்களுக்குச் சென்றிருந்தால், அந்தத் திரைப்படத்தை மீண்டும் பார்ப்பது உங்களுக்கு அந்த காதல் ஏக்கத்தைத் தருகிறது" என்று ஃபெட்டர்மேன் கூறுகிறார்.
"காதல் ஏக்கம், ஒரு காதல் துணையுடன் காலப்போக்கில் நாம் அனுபவித்த அந்த அதீத உணர்வுகளை, நம்மால் வெளிப்படுத்த முடியாவிட்டாலும், அவற்றை மீண்டும் அனுபவிக்கச் செய்யும்.
"எங்கள் ஆய்வுகளின் முடிவு என்ன கூறுகிறதென்றால், காதல் ஏக்கத்தில் இருப்பவர்கள் அவ்வாறு இருக்கும் போது ஒரு அதிக திருப்தியை உணர்கிறார்கள். அவர்கள் அதிக அர்ப்பணிப்புணர்வையும், அன்பையும் அப்போது உணர்கிறார்கள்."
“உங்கள் துணையை நீங்கள் சந்தித்த முதல் நாளை நினைத்துப் பார்ப்பது, நீண்ட கால உறவின் ஆண்டுகளை நினைத்து மகிழ்வதற்கும், முதலில் உங்களை ஒன்றிணைத்த காரணங்களை நினைவில் கொள்வதற்கும் ஒரு அற்புதமான வழியாகும்.”
தொடர்பை இழந்த மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு, குன்தரின் கடிதங்களை கேத் ஒரு அலமாரியில் தற்செயலாகக் கண்டார். இதையடுத்து அவரது நினைவுகள் மீண்டும் காதல் உணர்வு வெள்ளத்தில் மூழ்கின.
"நான் அழுதேன், அழுதேன், அழுதேன்," என்று அவர் அதை நினைவு கூர்ந்தார்.
"எனது இதயத்தை உடைத்த அந்த அற்புதமான மனிதனைப் பற்றி நான் நினைத்துக்கொண்டே இருந்தேன்."
அவள் குன்தரின் குடும்ப வணிகத்தின் முகவரியைப் பார்த்து, அவர் பதிலளிப்பாரா என்று தெரியாமல் அவருக்கு ஒரு கடிதத்தை எழுதினார்.
" நவம்பர் 22 அன்று சரியாக 12:36 மணிக்கு, எனது தொலைபேசி ஒலித்தது. இது ஜெர்மனியில் இருந்து வந்த அழைப்பு என்பதை நான் கண்டுகொண்டேன். அப்போது என் இதயம் துடித்தது,” என்று கேத் அதை நினைவு கூர்ந்தார்.
அந்த தொலைபேசி அழைப்பில் அவர்கள் பல மணிநேரம் பேசினார்கள். சில வாரங்களுக்குப் பிறகு, குன்தர் அவரைச் சந்திக்க மான்செஸ்டருக்கு விமானத்தில் பறந்து சென்றார்.
"நான் அவரைப் பார்த்தேன், நாங்கள் ஒருபோதும் பிரிந்ததில்லை என்பது போல் அப்போது இருந்தது."
இப்போது, கேத் மற்றும் குன்தர் திருமணம் ஆகிய இருவரும் செய்துகொண்டனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக ஏறிய ஒரு மலையின் உச்சியில் இருவரும் திருமணம் செய்த முடிவெடுத்த பின் இப்போது அது நிகழ்ந்துள்ளது.
“அடிக்கடி உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைப்பதில்லை. நான் ஒவ்வொரு நாளும் அதைப் பார்க்கிறேன். நான் ஒரு விஷயத்திற்கு வருத்தப்படவில்லை,” என்கிறார் கேட்.
குன்தர் ஒப்புக்கொள்கிறார், "நான் அவரை இனி ஒருபோதும் விடமாட்டேன்."
நமது முதல் காதல் உணர்வுகள் ஒரு வகையான கால இயந்திரத்தால் அடித்துச் செல்லப்படுவதில்லை.
நாம் அவற்றை மீண்டும் தூண்டும் போது அல்லது ஒரு இடம், ஒரு வாசனை, ஒரு ஒலி போன்ற ஏதாவது தூண்டும் நினைவுகள் ஏற்படும் போது நாம் மீண்டும் அதே போன்ற உணர்வுகளுடன் இணைகிறோம்.
அந்த உணர்வுகளும் நாம் நம்முள்ளே பொதித்துவைத்துள்ள பொக்கிஷம் தான்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)