You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹிப்னாட்டிஸம் என்றால் என்ன? உண்மையில் உங்கள் மனதை வேறொருவரால் கட்டுப்படுத்த முடியுமா?
- எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
- பதவி, பிபிசி தமிழ்
அந்நியன், 7ம் அறிவு படங்களை பார்த்த பலருக்கும் ஹிப்னாட்டிஸம் பற்றி தெரிந்திருக்க கூடும். ஒருவரை கண்களால் பார்த்தே நோக்குவர்மம் மூலம் கட்டுப்படுத்தி விட முடியும், ஆழ்ந்த ஓய்வு நிலைக்கு அழைத்து சென்று அவரின் ஆழ்மன தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்றெல்லாம் பரவலாக ஹிப்னாட்டிஸம் குறித்து கேட்டிருப்போம்.
ஆனால், உண்மையில் ஹிப்னாட்டிஸம் என்றால் என்ன? அதன் மூலம் ஒரு மனிதரை மற்றொருவர் கட்டுப்படுத்த முடியுமா? இது குறித்து மனநல மருத்துவத்தின் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் சொல்வது என்ன?
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 4-ஆம் தேதி உலக ஹிப்னாட்டிஸம் தினம் பல்வேறு நாடுகளை சேர்ந்த குழுக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஹிப்னாட்டிஸம் மற்றும் அதன் பயன்கள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த தினம் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்த மருத்துவ சிகிச்சை குறைந்தபட்ச முக்கியத்துவம் வாய்ந்த பட்டியலில் இருந்து வருகிறது.
ஹிப்னாட்டிஸம் என்றால் என்ன?
ஹிப்னாட்டிசம் என்பது என்ன, அதனால் பயன்கள் ஏதேனும் உண்டா? படங்களில் பார்ப்பது போல் நம்மை ஒருவரால் கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்விகளை அது சார்ந்த நிபுணர்களிடம் முன்வைத்தோம்.
நமது மனதை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று வெளிமனம் (Conscious Mind) மற்றொன்று உள்மனம் (Subconscious Mind). இந்த உள்மனதில் நமது சிறுவயதில் இருந்து நடந்த, உணர்வுகள் அடிப்படையிலான எல்லாமும் சேமிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக, ஒருவரை அவரது 4 வயதில் ஒரு நாய் கடித்திருந்தால், அவருக்கு நாய்கள் தொடர்பான அச்சம் அவரது வாழ்நாள் முழுவதிலும் தொடரும் வாய்ப்புண்டு.
ஹிப்னோதெரபியைப் பயன்படுத்தி அவரது உணர்வுகளை, மனநிலையை, நம்மால் மாற்றி அமைக்க முடியும். ஹிப்னாடிஸத்தில் துயில் நிலை வழியாக அவரை அவரது குழந்தைப் பருவத்துக்குக் கொண்டு சென்று, நான்கு வயதில் அவருக்கு நடந்த அந்த நிகழ்ச்சியை மீட்டெடுத்து, நாய்கள் குறித்த அச்சத்தை மாற்றி அமைக்க முடியும்.
இதனைப் பாசிட்டிவ் போஸ்ட் ஹிப்னாடிக் சஜஷன் (Positive Post Hypnotic Suggestions) என்று கூறுவார்கள். ஆழ்துயில் நிலையில் தேவையற்ற அச்சங்களைப் போக்கி நேர்மறையான எண்ணங்களை விதைக்கும் பிரிந்துரைகளை அளிப்பதன் மூலம் இது சாத்தியமாகிறது. இதன் பிறகு அவர் நாய்களைக் கண்டு அஞ்ச மாட்டார் என்கிறார் கவுன்சிலிங் மற்றும் சைக்கோதெரபி ஹிப்னோதெரபிஸ்ட்டான சோஷினா.
மனிதர்களை கட்டுப்படுத்த முடியுமா?
பல திரைப்படங்களிலும் நோக்குவர்மம் மூலம் ஒருவரை கட்டுப்படுத்தி எது வேண்டுமானால் செய்ய வைக்க முடியும் என்று காட்டப்படுகிறது. அது உண்மையா என்ற கேள்வியை முன்வைத்த போது பெரும்பாலும் பதில் ‘இல்லை’ என்பதாகவே இருந்தது.
ஹிப்னட்டிக் நிலை என்பது ஒரு அரை தூக்க நிலை (Semi Sleep Stage). தூக்கமும் இல்லாமல், விழித்தும் இல்லாத ஒரு இடைநிலை. இதில் நீங்கள் சொல்லும், வெளியே நடக்கும் அனைத்தும் ஹிப்னடைஸ் செய்யப்பட்ட நபருக்கு தெரியும் என்கிறார் சோஷினா.
அதே சமயம் கிழக்கத்திய ஹிப்னடிக்ஸில் வேண்டுமானால் ஒருவரை கட்டுப்படுத்தும் முறைகள் இருக்கலாம், அதுவும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் மேற்கு மற்றும் இந்திய பாரம்பரியத்தில் பெரும்பாலும் மருத்துவ ரீதியான ஹிப்னாடிசம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கிறார் அவர்.
“ஹிப்னடைஸ் என்பது நீங்கள் ஒருவரின் மூளையை முழுவதுமாக கட்டுப்படுத்துவது கிடையாது. பதற்றம் அல்லது சஞ்சலமான நிலையில் இருக்கும் ஒருவரின் மனதை ஆசுவாசப்படுத்தி அதை ஓய்வு நிலைக்கு கொண்டு வந்து அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணுதல் தான் ஹிப்னடைஸ் செய்வது” என்கிறார் மனநல மருத்துவரான ராதிகா முருகேசன்.
பல சூழலில் ஒருவரை மற்றொருவர் மூளை சலவை செய்து விட்டார் என்பதை கேட்டிருப்போம். ஆனால், ஹிப்னாட்டிஸமில் அது போன்று செய்ய முடியாது. உங்கள் மூளை நான் சொல்வதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே உங்களை நான் ஹிப்னடைஸ் செய்ய முடியும். அதுவும் முழு கட்டுப்பாடை எடுத்துக்கொள்ள முடியாது. பொறுமையாக ஒருவர் சொல்வதை காதில் கேட்க செய்ய முடியுமே தவிர, இதை செய்யுங்கள், அதை செய்யுங்கள் என்று உத்தரவெல்லாம் போட முடியாது என்று கூறுகிறார் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவர் பூர்ணசந்திரிகா.
திரைப்படங்கள் ஹிப்னாட்டிஸம் பற்றி உருவாக்கி இருக்கும் பிம்பம் என்ன?
படங்களால்தான் மனநலன் சார்ந்த பல தவறான உருவகங்கள் உருவாகி உள்ளது. அதில் ஹிப்னாட்டிஸமும் விதி விலக்கல்ல என்று கூறுகிறார் ராதிகா முருகேசன்.
“பெரும்பாலும் படங்களில் ஹிப்னாட்டிசத்தை எதார்த்தத்திற்கு எதிராக மிகைப்படுத்தி காட்டுவதால் பலருக்கு அது தவறான புரிதலை கொடுத்து விடுகிறது. குறிப்பாக என்னிடம் பேசும் பலர் என் பழைய காதலியின் நினைவை அழிக்க முடியுமா? என் பொண்ணு யாரையோ காதலிக்கிறா அவளை ஹிப்னடைஸ் செய்து யாருனு கண்டுபிடிச்சி சொல்ல முடியுமா? இப்படியெல்லாம் கேட்கிறார்கள். படங்களை பார்த்து ஏற்படும் தவறான புரிதல் இது. ஆனால், உண்மையில் அப்படியெல்லாம் செய்ய முடியாது” என்கிறார் அவர்.
அதே போல் பலர் மேடையில் ஹிப்னாடிஸம் செய்வதையே ஹிப்னாட்டிஸம் என்று நினைத்து கொள்கிறார்கள். ஆனால், அது எதுவும் உண்மை இல்லை. பெரும்பாலும் அது பேசி வைத்து கொண்டு செய்வது போல் தான் இருக்கும். அதற்கும் மருத்துவ ரீதியான ஹிப்னாட்டிஸத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்று கூறுகிறார் ராதிகா முருகேசன்.
மூடநம்பிக்கைகளும், ஹிப்னாஸிஸ் தெரபியும்
பேய் வருவது, சாமியாடுதல் என்பதெல்லாம் உளவியலோடு தொடர்பு கொண்டது என்ற விவாதம் நீண்ட காலமாக இருக்கிறது. அதற்கும் ஹிப்னாட்டிஸமில் தீர்வு இருக்கிறதா என்று கேட்டபோது, அதன் தன்மையை பொறுத்து என்று பதிலளித்தார் ராதிகா.
“பேய் வருதல், சாமியாடுதல் என்றெல்லாம் சொல்வார்கள். அதில் பெரும்பாலும் அவர்கள் நடிப்பதில்லை. இது போன்றவற்றில் அவர்களின் மனதிற்குள் இருக்கும் பிரச்னையை வித விதமான வழிகளில் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இது போன்ற தொடக்க நிலைகளில் அவர்களிடம் ஹிப்னோதெரப்பி வழியாக பேச முடியும். இதன் மூலம் தீர்வுகளை காணலாம். ஆனால், அதுவே மனப்பிறழ்வு பிரச்னையோடு வரும் நபர்களுக்கு இதில் சிகிச்சை வழங்க முடியாது” என்கிறார் அவர்.
ஹிப்னாட்டிஸம் எதற்கெல்லாம் பயன்படுகிறது?
பலரும் இதை பல்வேறு உடல்நல தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர். தான் அதை பல்வேறு விதமான கடந்த கால ட்ராமாக்களை(Trauma) சரி செய்வதற்காக பயன்படுத்துகிறேன் என்கிறார் சோஷினா.
“என்னிடம் வருபவர்களுக்கு முதலில் நான் கிளன்சிங் முறையை பரிந்துரைக்கிறேன். இதன் மூலம் முதன் முதலில் அவர்களின் மனம் எங்கு அந்த பயத்தை பெற்றதோ அங்கு அவர்களை அழைத்து சென்று படிப்படியாக அதன் வழித்தடத்தை அறிந்து உள்மனதிற்கு தற்போதைய உண்மைநிலையை புரிய வைக்கிறேன்” என்கிறார் அவர்.
அதே போல் பதற்றத்தை குறைப்பது, வலியை குறைப்பது, துக்கத்தை குறைப்பது, புகை பிடித்தலை குறைப்பது, ஏதோ ஒரு தீவிர பழக்கத்தை குறைப்பது போன்றவற்றிற்கும் இது உதவுவதாக கூறுகிறார் ராதிகா முருகேசன்.
மேலும், இந்தியா முழுவதும் சைக்கோசோமாட்டிக் பிரச்னைகளால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கிறார் அவர். இந்த மக்கள் மனதளவில் இல்லாமல், உடலளவில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்கு ஐபிஎஸ் என்று சொல்லக்கூடிய வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னை. காலையில் எழுந்த உடனே வயிற்றில் ஏதோ ஒரு உணர்வு இவர்களுக்கு ஏற்படுமாம். அதற்கெல்லாம் கூட இதில் சிகிச்சை உண்டு என்கிறார் மருத்துவர் ராதிகா முருகேசன்.
ஹிப்னோதெரபிக்கு மாற்று இருக்கிறதா?
ஹிப்னோதெரப்பியை விட உயர்ந்தது மற்றும் அதற்கான மாற்று என்று யோ-ஜென் என்ற தெரபி முறையை அறிமுகப்படுத்தி வழங்கி வருகிறார் உளவியல் நிபுணர் மோகன் பாலகிருஷ்ணன். இதில் யோகா மூலமாக தெரபி வழங்கி வருபவர்களின் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று கூறுகிறார் அவர்.
குறிப்பாக படிப்பே வராத குழந்தைக்கு ஒரே நாளில் முதல் மதிப்பெண் எடுக்குமாறு மாற்ற முடியும், ஆண்களுக்கு பெண்கள் குரல் இருக்கும் பிரச்னை இருந்தால் ஒரே நாளில் அவர்களின் குரல் பிரச்னையை தீர்க்க முடியும். அதே போல் பிறக்கும் போதே எந்த மனரீதியான பிரச்னையில்லாமல் பிறந்து, இடையில் பல்வேறு நிகழ்வுகளால் பாதித்து மனரீதியான எந்த வித பிரச்னை ஏற்பட்டவர்களையும் சரி செய்ய முடியும் என்கிறார் இவர்.
அரசு மருத்துவமனைகளில் இல்லாதது ஏன்?
ஹிப்னோதெரபி பெரும்பான்மையான இந்திய அரசு மருத்துவமனைகளில் இல்லை. ஆனால், நன்கு பயிற்சி பெற்ற மருத்துவரிடம் ஒரு பகுதியாக ஹிப்னோதெரபி எடுத்துக்கொள்ள அனுமதி உண்டு. இதற்கான காரணத்தை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவர் பூர்ணசந்திரிகா அவர்களிடம் கேட்டோம்.
“ஹிப்னாட்டிஸம் என்பது ஒரு பழைய கால சிகிச்சை முறை என்று சொல்லலாமே தவிர, அதையெல்லாம் தாண்டி நாம் வெகுதூரம் முன்னேறி வந்துவிட்டோம். சிகிச்சை முறையில் மருந்தியல் சிகிச்சை, மருந்தில்லா சிகிச்சை, CBT என பல விதமான சிகிச்சைகளை பயன்படுத்த தொடங்கி விட்டோம். இதில் ஹிப்னாட்டிஸம் தொலைந்துவிட்டது என்றே சொல்லலாம். ஏனெனில் அந்தளவு ஆதாரபூர்வ தீர்வாக அதை பார்க்க முடியவில்லை” என்கிறார் அவர்.
மேலும், சிறுவயது ஆழ்மன ட்ராமா, லேசான பதற்ற நிலை உள்ளிட்ட ஒரு சில விஷயங்களுக்கு வேண்டுமானால் அது பயன்படலாமே தவிர வேறு எதற்கும் இதை பரிந்துரைக்க முடியாது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போல மன ரீதியான சில நோய்களும் மருந்துகளால் கட்டுக்குள் வைக்க கூடிய விஷயங்கள் தான். எனவே, ஸ்கிசோஃப்ரினியா (schizophrenia) போன்ற மனசிதைவு நோய்கள் போன்றவற்றை மாத்திரை மூலம் மட்டுமே கட்டுக்குள் வைக்க முடியும்.
ஹிப்னாட்டிஸம் மூலம் மனதில் ஒரு நேர்மறை எண்ணத்தை விதைக்க பயன்படுத்தலாமே தவிர, அதனால் உடனடியாகவோ அல்லது நீண்டகால அளவிலோ எந்த பிரச்னையையும் குணப்படுத்த முடியாது. எனவே இதையும் ஒரு உடற்பயிற்சி போல பயன்படுத்தி கொள்ளலாமே தவிர இதையே முழு சிகிச்சையாக எடுத்து கொள்ள முடியாது என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)