You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான்: நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை பலிகொண்ட குண்டுவெடிப்புகளுக்கு காரணம் யார்? அமெரிக்கா கூறியது என்ன?
இரானின் புரட்சிகரப் படைகளின் தளபதி காசெம் சுலேமானி அமெரிக்காவால் படுகொலை செய்யப்பட்டதன் நான்காம் ஆண்டு நினைவு நாளில், அவரது கல்லறை அருகே நடத்தப்பட்ட இரண்டு குண்டுவெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறுகிறது.
ஊடகம் சார்பாக வெளியான காணொளியில், தெற்கு நகரமான கெர்மனில் உள்ள சாஹேப் அல்-ஜமான் மசூதிக்கு அருகே நடந்த ஊர்வலத்தில் குண்டுகள் வெடித்துள்ளன எனவும், இந்த தாக்குதலில் இருநூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அரசு செய்தி தொடர்பாளர் இரிப் கூறினார்.
இதுவரை தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இது ஒரு "பயங்கரவாத தாக்குதல்" என்று கெர்மனின் துணை ஆளுநர் கூறியுள்ளார். இரானின் ஒரு சாலையில் பல உடல்கள் கிடப்பதை இணையத்தில் வைரலான அந்த காணொளியில் பார்க்க முடிகிறது.
2020இல் அண்டை நாடான இராக்கில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஜெனரல் காசெம் சுலேமானியை நினைவுகூரும் நாளின் ஒரு பகுதியாக புதன்கிழமை நூற்றுக்கணக்கான மக்கள் கல்லறையை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இரானில் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு மிகவும் சக்தி வாய்ந்த நபராக காசெம் சுலேமானி இருந்தார்.
இரானின் புரட்சிகர ராணுவ படையானது, அந்நாட்டின் இஸ்லாமிய கட்டமைப்பை பாதுகாக்க 40 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டது.
இந்த படையின் Quds என்ற பிரிவு, மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள கூட்டணி அரசுகள் மற்றும் ஆயுதம் ஏந்திய போராளிகள் குழுவிற்கு ரகசியமாக பணம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பயிற்சி மற்றும் ஆலோசனை போன்ற உதவிகளை வழங்கும்.
இதன் மூலம் இரானின் ஆதிக்கத்தை மத்திய கிழக்கு பகுதிகளில் விரிவுபடுத்தும் லட்சியம் முன்னெடுக்கப்பட்டது. இதற்கு பின்னால் இருந்த முக்கிய புள்ளிதான் காசெம் சுலேமானீ.
போர் என்று வரும்போது அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் போன்று இவர் செயல்பட்டார் என்கிறார் பிபிசியின் சர்வதேச தலைமை செய்தியாளர் லைஸ் டவுசட்.
2020-ம் ஆண்டில் அவரை கொல்ல உத்தரவிட்ட அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசெம் சுலேமானியை "உலகின் நம்பர் ஒன் பயங்கரவாதி" என்று குறிப்பிட்டார்.
காஸாவில் 2 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால் மத்திய கிழக்கில் ஏற்கனவே உச்சக்கட்ட பதற்றம் நிலவி வரும் வேளையில், இரானில் நடந்துள்ள இந்த குண்டுவெடிப்பு அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இறந்தவர்கள் குறித்த விவரம்
குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் குறித்த விவரம் சில மணிநேரங்களில் வெளியிடப்படும் என இரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஷாஹித் பஹோனார் மருத்துவமனையிலிருந்து செய்திகளை சேகரித்து வரும் அரசு தொலைக்காட்சி நிருபர், பாதிக்கப்பட்ட தனது உறவினர்களை தேடி மருத்துவமனைக்குள் மக்கள் நுழைய வேண்டாம், அது சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் என்று அதிகாரிகளின் சார்பாக மக்களைக் கேட்டுக் கொண்டார்.
மேலும் இறந்தவர்களின் பெயர் விவரம் வரும் சில மணி நேரத்தில் ஆன்லைனில் வெளியிடப்படும் என்றார். கொல்லப்பட்டவர்களில் இரானிய செஞ்சிலுவைச் சங்கத்தின் உறுப்பினரான மெலிகா ஹொசைனியும் ஒருவர் என அரசு சார்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன
பதிலடி நிச்சயம்- இரான்
இரானில் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி செய்தியாளர்களிடம் பேசுகையில், "இரானிய நாட்டின் எதிரிகள் மீண்டும் ஒரு பேரழிவை உருவாக்கியுள்ளனர், கெர்மானில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். இந்த பேரழிவிற்கு மோசமான பதிலடி நிச்சயம் உண்டு" என்று கூறினார்.
ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்
இரட்டை குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
"இரானில் உள்ள கெர்மன் நகரில் நடந்த குண்டுவெடிப்பை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக கண்டிக்கிறது. இந்த சமயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் இரானிய மக்களுடன் துணை நிற்கிறது.
இந்த பயங்கரவாதச் செயலால் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தது மற்றும் காயமடைந்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பின்னணியில் இஸ்ரேலா?
இரானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடான இஸ்ரேல் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை குண்டுவெடிப்புகள் பற்றி பேசுகையில், "அமெரிக்கா எந்த வகையிலும் இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை, இதன் பின்னணியில் நாங்கள் இருக்கிறோம் எனக் கூறுவது அபத்தமானது" என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், "இந்த குண்டுவெடிப்பில் இஸ்ரேலுக்கு பங்குள்ளது என்று நம்புவதற்கு எங்களுக்கு எந்த காரணமும் இல்லை," என்று தினசரி செய்தி மாநாட்டின் போது கூறினார்.
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பியும், "குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பதற்கான எந்தவித ஆதாரமோ அல்லது காரணத்தையோ அமெரிக்கா கண்டறியவில்லை, எனவே இஸ்ரேலை இதில் தொடர்புபடுத்த வேண்டாம்" என்று கூறினார்.
"இந்த கொடூரமான குண்டிவெடிப்புகளில் இறந்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு நாங்கள் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்," என்று மில்லர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)