ஜார்கண்டில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. திடீர் ராஜினாமா - மேலும் ஒரு எதிர்க்கட்சி அரசுக்கு நெருக்கடியா?

    • எழுதியவர், ரவி பிரகாஷ்
    • பதவி, பிபிசி ஹிந்தி

ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. ஆனால் இங்கு அரசியல் நடவடிக்கைகள் தொடர்ந்து சூடுபிடித்து வருகின்றன.

அமலாக்க இயக்குநரகம் (ED) அனுப்பிய ஏழாவது சம்மனுக்குப் பிறகு, முதல்வர் ஹேமந்த் சோரன் மாற்று நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக யோசித்து வருகிறார். தேவை ஏற்படின் முதலமைச்சர் பதவியை மனைவி கல்பனா சோரனிடம் ஒப்படைத்துவிடுவார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சியின் மூத்த எம்எல்ஏ டாக்டர் சர்ஃபராஸ் அகமது திடீரென தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து இந்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. 2019 சட்டமன்றத் தேர்தலில், கிரிதி மாவட்டத்தின் காண்டே தொகுதியில் இருந்து இவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2023 ஆம் ஆண்டின் கடைசி நாட்களில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகரிடம் சமர்ப்பித்தார்.

டிசம்பர் 31 அன்று, சபாநாயகர் ரவீந்திர நாத் மஹதோ அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார், அது யாருக்கும் தெரியாது.

2024 ஆம் ஆண்டின் முதல் நாளில், அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக சட்ட சபைச் செயலகம் ஒரு அறிவிப்பை வெளியிட்ட போது இந்த செய்தி பகிரங்கமானது.

டாக்டர் சர்ஃபராஸ் அகமது ஏன் ராஜினாமா செய்தார்?

டாக்டர் சர்ஃபராஸ் அகமது பிபிசியிடம் பேசிய போது, அவர் ராஜினாமா செய்ததை உறுதிப்படுத்தியதோடு அவரது தனிப்பட்ட காரணங்களினால் பதவியை ராஜினாமா செய்ததாகக் கூறினார்.

பிபிசியிடம் பேசிய அவர், “நானே இந்த முடிவை எடுத்துள்ளேன். யாரும் வற்புறுத்தியதாலோ, கேட்டுக்கொண்டதாலோ நான் எனது பணியை ராஜினாமா செய்யவில்லை. எனது கட்சி ஜே.எம்.எம் மற்றும் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படக் கூடாது என நான் எண்ணினேன். எனவே எனது பதவியை நான் ராஜினாமா செய்வது மிகவும் பொருத்தமானது என்று நினைத்தேன். நான் கட்சியின் போர் வீரன். எனது முடிவு கட்சியின் நலன் சார்ந்தது,” என்றார்

கல்பனா சோரனுக்காக உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டீர்களா என்று கேட்டதற்கு, கட்சியின் நலன் கருதி நான் ராஜினாமா செய்துள்ளேன் என்று டாக்டர் சர்ஃபராஸ் அகமது கூறினார். இப்போதைக்கு அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது என்பதே உண்மை.

அவர் பதவி விலகியது குறித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அதிகாரப்பூர்வமாக எந்த பதிலும் அளிக்கவில்லை.

ஜார்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்காக முதல்வர் ஹேமந்த் சோரன் பாடுபட்டு வருவதாகவும், மத்திய அரசின் உத்தரவின் பேரில் அமலாக்கத்துறை அவரை தேவையில்லாமல் துன்புறுத்துவதாகவும் கட்சி எம்எல்ஏ ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இதை மாநில மக்கள் பார்த்து, புரிந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும், இதற்கு மக்கள் பதிலளிப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “சமூகத்தின் கடைசி வரிசையில் நிற்கும் மனிதனுக்காக ஹேமந்த் சோரன் குரல் கொடுத்துள்ளார். அது போன்ற மக்கள் உரிமைகள் உறுதி செய்ய பாடுபடுகிறார்கள். முதலமைச்சரின் தலைமையில் ஜேஎம்எம் வலுப்பெற்றுள்ளது. எனவே அவரது ஒவ்வொரு முடிவுக்கும் கட்சி துணை நிற்கும். எங்கள் கூட்டணிக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது, நாங்கள் எங்கள் முடிவுகளை சுதந்திரமாக எடுக்க முடியும்,” என்றார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி (BJP) தான் இந்த முழு பிரச்னைக்கும் காரணமாக அமைந்துள்ளது. கல்பனா சோரன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக டாக்டர் சர்ஃபராஸ் அகமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பல கட்சி தலைவர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர்.

பாஜகவின் ஜார்கண்ட் செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாதேவ் பிபிசியிடம் கூறுகையில், அமலாக்கத்துறை சம்மன்களைக் கண்டு முதல்வர் ஹேமந்த் சோரன் பயப்படுகிறார் என்றும், அதற்காகத்தான் எல்லா தந்திரங்களையும் செய்து கொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.

பிரதுல் ஷாதேவ் பிபிசியிடம் பேசுகையில், “ஜேஎம்எம் போன்ற குடும்ப கட்சிகள் குடும்பத்தைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை என்பதை சர்ஃபராஸ் அகமதுவின் ராஜினாமா நிரூபித்துள்ளது. இதனால்தான் அமலாக்கத்துறை நடவடிக்கை மற்றும் அதன் காரணமாக தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் உள்ள முதல்வர் ஹேமந்த் சோரன், அதற்கு மாற்றாக தனது மனைவி கல்பனா சோரன் பெயரை முன்வைக்கிறார். அவர் விரும்பினால், அவர் எந்த மூத்த ஜேஎம்எம் தலைவரையும் தனது வாரிசாக மாற்றியிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்ய மாட்டார், ” என்றார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதல்வராக கல்பனா சோரன் பதவியேற்பார் என்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே தனது 'எக்ஸ்' பதிவில் கூறியுள்ளார்.

அவர் தனது பதிவில், “ஜார்கண்ட் மாநிலத்தின் காண்டே எம்எல்ஏ சர்ஃபராஸ் அகமது தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த ராஜினாமா ஏற்கப்பட்டது. ஹேமந்த் சோரன் ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதல்வராக அவரது மனைவி கல்பனா சோரன் ஜி உருவெடுக்கப் போகிறார். சோரன் குடும்பத்திற்கு புத்தாண்டு மகிழ்ச்சிக்குப் பதிலாக வேதனையைப் பரிசளித்துள்ளது,” என எழுதியுள்ளார்.

இருப்பினும், தனது இரண்டாவது 'எக்ஸ்' பதிவில், மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, காண்டே சட்டமன்றத் தொகுதிக்கு இப்போது தேர்தல் நடத்த முடியாது என்றும் அவர் எழுதினார்.

ஏனெனில், ஜார்கண்ட் மாநிலத்தின் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் ஓராண்டுக்கும் குறைவாக உள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் ஆளுநரிடம் சட்ட ஆலோசனையைப் பெறுமாறு அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியா கூட்டணியின் அனைத்து கட்சிகளுடன் எங்கள் கட்சி இணைந்து பணியாற்றும். நாங்கள் ஜேஎம்எம்மின் கூட்டாளிகளாக இருக்கிறோம். அந்தக் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவோம்,” என்றார்.

மேலும், “சர்ஃபராஸ் சாகேப் ஒரு அனுபவம் வாய்ந்த தலைவர். அவர் ஜேஎம்எம்மில் இருந்து விலகவில்லை. எம்எல்ஏ பதவியை மட்டும் ராஜினாமா செய்துள்ளார். ஜேஎம்எம் கட்சியின் நலன் மற்றும் மாநில நலனுக்காக மட்டுமே அவர் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். அமலாக்கத்துறை போன்ற ஏஜென்சிகள் பாரபட்சத்துடன் செயல்படுவதையும், முதல்வர் ஹேமந்த் சோரன் துன்புறுத்தப்படுவதையும் நாம் அனைவரும் அறிவோம். பாஜக பெரும்பான்மையைப் பறிக்கத் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று தெரிவித்தார்.

அரசியல் ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

டாக்டர் சர்ஃபராஸ் அகமதுவின் ராஜினாமாவுக்குக் காரணம் இல்லாமல் இல்லை என்று ஜார்கண்ட் அரசியலில் நிபுணத்துவம் பெற்றுள்ள மூத்த பத்திரிகையாளர் சுரேந்திர சோரன் நம்புகிறார். இது முதல்வர் ஹேமந்த் சோரனின் அரசியல் நடவடிக்கையாகும் என்றும் இதில் எதிர்க்கட்சிகள் சிக்கிக் கொள்ளும் என்றும் கூறினார்.

சுரேந்திர சோரன் பிபிசியிடம் பேசுகையில், “ஹேமந்த் சோரன் முதல்வர் மட்டுமல்ல. அவர் தனது கட்சியின் செயல் தலைவரும் கூட. ஜேஎம்எம் மீதான அவரது பிடியும் மிகவும் வலுவானது. இதுபோன்ற சூழ்நிலையில், சர்ஃபராஸ் அகமதுவால் காலியான தொகுதியில் அவரது மனைவி கல்பனா சோரன் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டால் யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஹேமந்த் சோரனுக்கு பாதகமான சூழல்கள் ஏற்பட்டால், முதல்வர் பதவியை கல்பனா சோரனிடம் ஒப்படைத்துவிட்டு, ஷிபு சோரனின் ஆசிர்வாதத்தையும் பெறுவார்,” என்றார்.

இருப்பினும், கல்பனா சோரனை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க டாக்டர் சர்ஃபராஸ் அகமது ராஜினாமா செய்துள்ளார் என்று மூத்த பத்திரிகையாளர் மதுகர் நம்பவில்லை.

சர்ஃபராஸ் அகமது இனி ஜேஎம்எம் கட்சியுடன் பேரம் பேசும் நிலையில் இல்லை என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார். அவர் தனக்கென வேறு ஏதாவது அரசியல் பாதையைத் தேடியிருக்கலாம் என்றும், அதனால் தான் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்றே தான் நினைப்பதாகவும் கூறிய அவர், இதற்கு முன்பு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியில் அவர் இடம்பெற்றிருந்ததையும் சுட்டிக்காட்டினார்.

டிசம்பர் 29 அன்று, முதல்வர் ஹேமந்த் சோரனை விசாரிப்பதற்காக அமலாக்கத்துறை அவருக்கு கடிதம் அனுப்பியது. நில ஆவணங்களில் முறைகேடு தொடர்பான வழக்கு குறித்து முதலமைச்சரை விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை எழுதியிருந்தது.

எனவே, இதற்கு ஏற்ற இடம் மற்றும் தேதி குறித்து அவர் இரண்டு நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். ஆனால், இந்த அமலாக்கத்துறையின் கடிதத்திற்கு முதல்வர் பதிலளிக்கவில்லை.

இப்போது அவரை விசாரிக்க அமலாக்கத்துறை இன்னும் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஏனெனில் அமலாக்கத்துறை தனது கடிதத்தில் இது கடைசி சம்மனாக எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.

முன்னதாக முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஆறு சம்மன்கள் அனுப்பப்பட்டன. ஆனால் அவர் எந்த சம்மனுக்கும் பதில் அளிக்கவில்லை. அமலாக்கத்துறை பாரபட்சத்துடன் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றமும் சென்றிருந்தார். உச்ச நீதிமன்றம் அவரை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பியது. சம்மன் தேதி முடிந்துவிட்டதாக கூறி ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் அவரது மனுவை விசாரிக்கவில்லை. இதற்குப் பிறகும், முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை விசாரிக்க தொடர்ந்து முயற்சித்துவருகிறது.

இதுவரை அமலாக்கத்துறை அவருக்கு ஏழு முறை சம்மன் அனுப்பியுள்ளது.

முதல்வர் ஹேமந்த் சோரன் என்ன சொல்கிறார்?

ஜனவரி 1, 2024 அன்று, சர்ஃபராஸ் அகமதுவின் ராஜினாமா தொடர்பாக ராஞ்சியில் அரசியல் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது, ​​முதல்வர் ஹேமந்த் சோரன் ராஞ்சியில் இருந்து சென்று, கர்சன்வாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்திலும் பேசினார்.

முதல்வர் ஹேமந்த் சோரன் பேசுகையில், “பழங்குடியின சமூகத்தை உடைக்க சமூகத்தில் சில கூறுகள் முயன்றுவருகின்றன. சில சமயங்களில் பழங்குடியினரை நீர், காடுகள் மற்றும் நிலங்களில் இருந்து வேரோடு பிரிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழங்குடியினருக்கு பல்வேறு உரிமைகளை வழங்கும் சட்டங்களை அகற்றவும் சில சமயங்களில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பழங்குடியினரின் பாரம்பரியம், நாகரிகம், கலாச்சாரம் ஆகியவையும் தாக்கப்படுகின்றன. ஆனால், அனைத்து நலன்களையும் பெறும் வகையில் நீங்கள் இந்த அரசாங்கத்தை அமைத்துள்ளீர்கள். இத்தகைய சூழ்நிலையில், பழங்குடியினரின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையில் எந்த விதமான களங்கத்தையும் ஏற்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம். பழங்குடியின சமுதாயத்தை உடைக்க முயற்சிப்பவர்களுக்குத் தகுந்த பதில் அளிக்கப்படும்,” என்றார்.

முன்னதாக, பல பொது நிகழ்ச்சிகளில், முதல்வர் எப்போதெல்லாம் மாநிலத்தின் நலன்களுக்காக வேலை செய்ய விரும்புகிறாரோ, அப்போதெல்லாம் மத்திய அரசு அமலாக்கத்துறையைக் கொண்டு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது கூறியிருந்தார். இருப்பினும், அவர் கைதுக்கு பயப்படவில்லை என்றும் அவர் தெளிவாகக் கூறிவருகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)