'ஜல்லிக்கட்டு' தீர்ப்பு அளித்தவர்: கரூர் வழக்கில் சிபிஐ விசாரணையை கண்காணிக்க உள்ள நீதிபதியின் பின்னணி

பட மூலாதாரம், Bar And Bench
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
கரூர் நெரிசல் சம்பவ வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள இந்திய உச்ச நீதிமன்றம், அந்த விசாரணையைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையில் ஒரு குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது. நீதிபதி அஜய் ரஸ்டோகி யார்? அவரது பின்னணி என்ன?
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்ட மக்கள் சந்திப்புப் பயணத்தின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை விசாரிக்க தமிழ்நாடு அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தது. இதற்குப் பிறகு, ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்தது.
இதனை எதிர்த்து விஜய் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என கோரப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்டவர் தரப்பு உட்பட மேலும் 4 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவர்கள் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமென கோரியிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த விவகாரத்தை ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா தலைமையிலான அமர்வு விசாரித்துவந்தது. இந்த வழக்கில் கடந்த வாரம் வாத - பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பில், வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி தலைமையிலான மூன்று பேர் குழு கண்காணிக்கும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அஜய் ரஸ்டோகி தவிர்த்த மற்ற இருவரும் தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பார்கள் என்றாலும் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கைக் கண்காணிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்டோகி, ஜல்லிக்கட்டு வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தவர்.
அஜய் ரஸ்டோகி யார்?

பட மூலாதாரம், ANI
அஜய் ரஸ்டோகி 1958ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி ராஜஸ்தானில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ஹரீஷ் சந்திர ரஸ்டோகியும் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் புகழ் பெற்ற சிவில் வழக்கறிஞராக இருந்தவர். 1982ல் சட்டப்படிப்பை முடித்த பிறகு அஜய் ரஸ்டோகி வழக்கறிஞராக பணி செய்ய ஆரம்பித்தார்.
பெரும்பாலும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான, சேவை சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் அவர் ஈடுபட்டு வந்தார். 1990ல் ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக (Standing Counsel) நியமிக்கப்பட்டார்.
இதற்குப் பிறகு 2004ஆம் ஆண்டு ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும் 2006ஆம் ஆண்டில் அதே உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார் அஜய் ரஸ்டோகி. இதற்குப் பிறகு 2018ஆம் ஆண்டு திரிபுரா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையில் 2016ஆம் ஆண்டின் ஏப்ரல் - மே மாதங்களில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் அவர் செயல்பட்டு வந்தார். 2018ஆம் ஆண்டு நவம்பரில் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் ஓய்வுபெற்றார். அவர் உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிந்த நான்கரை ஆண்டுகளில் 506 அமர்வுகளில் இடம்பெற்று, 158 தீர்ப்புகளை எழுதியதாக Supreme Court Observer குறிப்பிடுகிறது.
தீர்ப்பு வழங்கிய முக்கிய வழக்குகள்

பட மூலாதாரம், Getty Images
2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்றாம் தேதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இடம்பெற்றிருந்த ஹேமந்த் குப்தாவும் அஜய் ரஸ்டோகியும் உச்ச நீதிமன்ற வரலாற்றில் அதற்கு முன் இல்லாத ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதாவது, நீதிமன்ற அறைக்குவரும்போது, எவ்வித கோப்புகளையும் எடுத்துவராமல், தங்கள் மடிக்கணினியை மட்டும் எடுத்துவந்து வழக்குகளை விசாரிக்க ஆரம்பித்தனர். உச்ச நீதிமன்றத்தில் காகிதங்கள் இல்லாமல் வழக்குகளின் விசாரணைகளை நடத்துவதற்கு இது துவக்கமாக அமைந்தது.
சில முக்கிய வழக்குகளிலும் அஜய் ரஸ்டோகி இடம்பெற்ற அமர்வுகள் குறிப்பிடத்தகுந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளன. 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி கே.எம். ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வு தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கை விசாரித்தது. இந்த அமர்வில் அஜய் ரஸ்டோகியும் இடம்பெற்றிருந்தார்.
இந்த அமர்வு அளித்த தீர்ப்பின்படி, இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்வுசெய்யும் குழுவில் இந்தியப் பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் இடம்பெற வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்த வழக்கில் அஜய் ரஸ்டோகி எழுதிய தீர்ப்பில், தலைமைத் தேர்தல் ஆணையரின் பதவிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்க வேண்டுமானால், உச்ச நீதிமன்ற நீதிபதியை நீக்கும் வழிமுறைகளையே பின்பற்ற வேண்டும் என அஜய் ரஸ்டோகி தனது தீர்ப்பில் எழுதினார்.

பட மூலாதாரம், Getty Images
அதேபோல, 2022ஆம் ஆண்டு ஏப்ரலில் மாவட்ட வளர்ச்சி அலுவலருக்கு எதிராக மணிபென் பகன்பாய் பாரியா என்பவர் ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார். பணிக்கொடை (Gratuity)பலன்களை தனக்கு வழங்க வேண்டுமெனக் கோரி இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் அஜய் ரஸ்டோகியும் ஏ.எஸ். ஓகாவும் விசாரித்து தீர்ப்பு வழங்கினர்.
இவர்கள் வழங்கிய தீர்ப்பில் அங்கன்வாடிப் பணியாளருக்கு பணிக்கொடையை வழங்க வேண்டுமெனத் தீர்ப்பு வழங்கினர். "அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தை நலத் திட்டங்களை நிறைவேற்றுவதில் நாட்டின் முதுகெலும்பாக செயல்படுகின்றனர்; சிறு குழந்தைகளில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதில் அவர்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றனர். ஆனால், இன்னும் அவர்கள் குறைந்த ஊதியம் பெற்று, பல நலன்களிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். இது மாற்றப்பட வேண்டும்" என அஜய் ரஸ்டோகி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அதேபோல 2020ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையைச் சேர்ந்த பெண் அதிகாரிகளை, அவர்கள் சேர்ந்த ஆண்டை கணக்கில் கொள்ளாமல் நிரந்தரமாக்க வேண்டும் என்ற தீர்ப்பையும் வழங்கினார். 2020ஆம் ஆண்டில் ஆனி நாகராஜா என்பவரை முன்வைத்து இந்தியக் கடற்படையின் 17 பெண் அதிகாரிகள் ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தனர்.
அந்த வழக்கில் 14 ஆண்டுகள் நாங்கள் பணிபுரிந்தும் தங்களுக்கு நிரந்தர நியமனம் (Permanent Commission) இல்லை, தங்களை நிரந்தர அதிகாரிகளாக நியமிக்க வேண்டுமெனக் கோரியிருந்தனர். ஆனால், 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு கடற்படையில் சேர்ந்தவர்களையே நிரந்தரமாக்க முடியுமென அரசுத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அஜய் ரஸ்டோகியும் டி.ஒய். சந்திரசூட்டும் அடங்கிய அமர்வு இவர்களை நிரந்தரமாக்க வேண்டுமெனத் தீர்ப்பளித்தது.

நீண்ட காலமாக நோயுடன் போராடும் நோயாளிகள், கண்ணியத்துடன் மரணமடைவதற்கான உரிமையை 2018ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. இதற்கான விதிமுறைகளையும் வகித்தது. ஆனால், விதிமுறைகள் கடுமையாக இருந்த நிலையில், 2023ல் நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்டோகி, அநிருத்த போஸ், ஹ்ரிஷிகேஷ், சி.டி. ரவிக்குமார் அடங்கிய அமர்வு இந்த விதிகளை எளிமைப்படுத்தியது.
ஜல்லிக்கட்டு வழக்கு

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு தொடர்பான ஜல்லிக்கட்டு வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலும் அஜய் ரஸ்டோகி இடம்பெற்றிருந்தார்.
2014ஆம் ஆண்டில் இந்திய விலங்குகள் நல வாரியம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல் முறையீடு 2015ல் தள்ளுபடி செய்யப்பட்டது. 2016ல் சில கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஏற்றபடி தமிழ்நாடு அரசு ஒரு புதிய திருத்தச் சட்டத்தை இயற்றியது.
இதனை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. 2018-ம் ஆண்டில் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரைத்தது.
ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டிப் பந்தையம் ஆகியவை கலாச்சார உரிமைகளா, மாநிலங்களுக்கு உரிமை உண்டா என்பதை இந்த அமர்வு விசாரிக்க வேண்டியிருந்தது. நீதிபதிகள் கே.எம். ஜோசப், அஜய் ரஸ்டோகி, அநிருத்த போஸ், ஹ்ரிஷிகேஷ், சி.டி. ரவிக்குமார் இந்த வழக்கை விசாரித்து 2023ம் ஆண்டு தீர்ப்பளித்தனர்.
ஜல்லிக்கட்டு, கம்பளா உள்ளிட்ட விளையாட்டுகளை அனுமதிக்கும் சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












