இந்தியா கைவிட்ட திட்டத்தை இரான் பாகிஸ்தானுடன் இணைந்து நிறைவேற்ற காரணம் என்ன?

பாகிஸ்தான்-இரான் எரிவாயுத் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், தன்வீர் மாலிக்
    • பதவி, மூத்த பத்திரிகையாளர், இஸ்லாமாபாத்

சமீபத்தில், இரானில் இருந்து பாகிஸ்தானுக்கு எரிவாயு வழங்கும் திட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், இரான் எல்லையில் இருந்து பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானின் கடலோர நகரமான குவாடர் வரை குழாய் பதிக்க பாகிஸ்தான் அரசின் எரிசக்திக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த எரிவாயு குழாய் திட்டத்தின் கீழ் இரான் எல்லையில் இருந்து குவாதார் வரை குழாய் பதிக்க பாகிஸ்தான் ஒப்புதல் அளித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு, இரான் பாகிஸ்தானுக்குள் குண்டுகளை வீசியதால், பாகிஸ்தானுக்கும் இரானுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இரானுக்குள் பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பதிலடித் தாக்குதலுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்ததால் பதற்றம் குறைந்தது.

இரான்-பாகிஸ்தான் எரிவாயு குழாய் திட்டம் ஒரு பழைய திட்டம். பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசாங்கத்தின் கடைசி நாட்களில் 2013-இல் இரானுக்கு சென்றிருந்த அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு இந்த திட்டத்தில் குறிப்பிடத்தக்க பணிகள் எதுவும் செய்ய முடியவில்லை.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் ஆகியவற்றின் ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் நடக்கவில்லை.

பாகிஸ்தான் ஜனநாயக இயக்கதின் (பி.டி.எம்) அரசாங்கத்தின் போது, பிரதம மந்திரி ஷாபாஸ் ஷெரீப் ஜனவரி 2023-இல் இந்தத் திட்டத்தில் பணியாற்றுவதற்காக ஒரு குழுவை அமைத்தார்.

இப்போது, ஒரு வருடத்திற்கு பின், அரசாங்கத்தின் எரிசக்திக்கான அமைச்சரவைக் குழு இந்தத் திட்டத்தின் ஒரு பகுதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த திட்டத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. அதற்கு இரான் மீது விதிக்கப்பட்ட சர்வதேச தடைகள் தான் காரணம்.

இருப்பினும், இப்போது பாகிஸ்தான் ஒரு பகுதியில் குழாய் பதிக்க ஒப்புதல் அளித்துள்ளதால், இந்த திட்டத்தில் வேலை செய்யாததற்காக சர்வதேச அமைப்புகள் மூலம் இரான் பாகிஸ்தானுக்கு விதிக்கக்கூடிய அபராதத்தை தவிர்க்க முடியும்.

இரான்-பாகிஸ்தான் எரிவாயு குழாய் திட்டம் என்றால் என்ன?

பாகிஸ்தான்-இரான் எரிவாயுத் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு வருடத்திற்கு பின், அரசாங்கத்தின் எரிசக்திக்கான அமைச்சரவைக் குழு இந்தத் திட்டத்தின் ஒரு பகுதிக்கு ஒப்புதல் அளித்துள்ளது

இரான்-பாகிஸ்தான் எரிவாயு குழாய் திட்டத்தின் கீழ் இரான் எல்லையில் இருந்து கடலோர நகரமான குவாதர் வரை குழாய் பதிக்க பாகிஸ்தான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பாகிஸ்தானின் பெட்ரோலிய அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஜி.ஏ.சப்ரி இந்த திட்டத்தில் பணியாற்றியுள்ளார்.

1990-களில் பெனாசிர் பூட்டோவின் ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டம் பரிசீலிக்கப்பட்டதாக அவர் பிபிசியிடம் கூறினார். முன்னதாக இந்தத் திட்டம் இரான்-பாகிஸ்தான்-இந்தியா எரிவாயு குழாய் திட்டமாக இருந்தது.

பின்னர் இந்த திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேறியது. இதற்குக் காரணம் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள். சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் இருந்ததால் இது அவ்வளவு பெரிய பிரச்னை இல்லை.

உண்மையில், இரானிடம் இருந்து பெறும் எரிவாயுவின் விலையை பாகிஸ்தான் முதலில் தீர்மானிக்க வேண்டும், அதன் பிறகு அந்த திட்டம் செயல்படுத்தலாம் என்று இந்தியா விரும்பியது, ஆனால் அது நடக்கவில்லை. அதன் பிறகு இந்த திட்டத்தில் இந்தியா பங்கேற்க மறுத்து, வெளியேறியது.

இஸ்லாமாபாத்தில் உள்ள எரிசக்தி துறையின் மூத்த பத்திரிகையாளர் காலிக் கயானி, இந்த திட்டத்தைப் பற்றி நீண்ட காலமாக எழுதி வருகிறார். இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி ஆசிப் சர்தாரியுடன் இரானுக்கான தூதுக்குழுவில் அவரும் ஒரு பகுதியாக இருந்தார்.

காலிக் கயானி பிபிசியிடம், இந்தத் திட்டம் குறித்த விவாதங்கள் முதன்முதலில் 1990-களில் தொடங்கியதாகக் கூறினார்.

பின், 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன என்றார். அதற்குப் பிறகு, 2013-இல், அப்போதைய அதிபர் சர்தாரி மற்றும் இரான் அதிபர் அஹ்மதி நிசாத் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்தியா வெளியேறியதற்கான காரணங்களை விவரித்தார் காலிக் கயானி. “இந்தியாவும் தனக்கான எரிவாயு விநியோகம் பாகிஸ்தானில் இருந்து வரும் என்பதை உணர்ந்து கொண்டது. பாகிஸ்தான் அதை எந்த நேரத்திலும் நிறுத்தலாம், எனவே இந்தியா இந்த திட்டத்தை விட்டு வெளியேறியது. அதன் பிறகு அது இரான்-பாகிஸ்தான் எரிவாயு குழாய் திட்டமாக மாறியது,” என்றார்

பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டபோது, இரான் பெரும்பாலான குழாய்களை சொந்தமாக அமைத்ததாக காளிக் கயானி கூறினார். அப்போது, பாகிஸ்தான் எல்லையில் இருந்து 70-80 கிலோமீட்டர் தூரத்திற்கான பணிகள் நிலுவையில் இருந்தன.

திட்டம் முடங்கியதற்கான காரணம் என்ன?

பாகிஸ்தான்-இரான் எரிவாயுத் திட்டம்
படக்குறிப்பு, 1990-களில் பெனாசிர் பூட்டோவின் ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டம் பரிசீலிக்கப்பட்டது

மார்ச் 2013-இல், அப்போதைய பாகிஸ்தான் மற்றும் இரான் அதிபர்கள் இத்திட்டத்தை துவக்கி வைத்த பிறகு, இத்திட்டத்தின் பணிகளில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த திட்டத்தின் பணிகள் நிறுத்தப்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் இரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் என்றும், ஆனால் இதைத் தவிர வேறு சில நாடுகளும் இந்தத் திட்டம் நடைபெறுவதை விரும்பவில்லை என்பதும் உண்மை எனறார் ஜிஏ சபரி.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) மற்றும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று காலிக் கயானி கூறினார்.

அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியாவுடன் சிறந்த உறவைப் பேண வேண்டும் என்ற இரு அரசாங்கங்களின் கொள்கையே இதற்குக் காரணம். இந்த திட்டத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.

இரான் மீதான சர்வதேச தடைகள் காரணமாக, அதன் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளதாக காலிக் கூறினார். அதனால், இந்தத் திட்டத்தில் பணிபுரியும் நிறுவனமும் பொருளாதாரத் தடைகளுக்கு இலக்காக வேண்டியிருக்கும்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் அமைச்சரவைக் குழுவும் இது தொடர்பாக சர்வதேச சட்ட நிறுவனமான 'வில்கி ஃபார் & கல்லாஹ'ரிடமிருந்து ஆலோசனையைப் பெற்றுள்ளது என்பதை நினைவில் கொள்ளலாம். இரானுடன் இணைந்து இந்த திட்டத்தில் பணிபுரியும் நிறுவனம் சர்வதேச தடைகளை சந்திக்க நேரிடும் என்று கூறினார் காலிக்.

இரான் குழாய் பதிக்க பாகிஸ்தான் ஒப்புதல் அளித்தது ஏன்?

பாகிஸ்தான்-இரான் எரிவாயுத் திட்டம்
படக்குறிப்பு, எரிவாயு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 50,000 கோடி ரூபாய் உள்ளது, அதன் மூலம் இதற்கான பணிகள் தொடங்கப்படும்

இந்த ஆண்டு ஜனவரி மாதம், பாகிஸ்தான் எல்லைக்குள் இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால், பாகிஸ்தான் மற்றும் இரான் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது. தீவிரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக இரான் கூறியுள்ளது.

இரானின் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானும் இரானுக்குள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது, அதில் பயங்கரவாதிகளை கொன்றதாகக் கூறியது.

இரு தரப்பிலிருந்தும் தாக்குதலுக்குப் பிறகு இராஜதந்திர மட்டத்தில் இந்த பிரச்னை தீர்க்கப்பட்டது, ஆனால் இந்த பதற்றத்திற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, இரு நாடுகளுக்கு இடையிலான எரிவாயு குழாய் திட்டத்திற்கு பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது ஒரு முக்கியமான முன்னேற்றம்.

இது குறித்து காலிக் கயானி கூறுகையில், இந்த அனுமதி திடீரென வழங்கப்படவில்லை என்றும், அதற்கான பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

இரான் மீதான பொருளாதாரத் தடைகள் காரணமாக, இந்தத் திட்டத்தில் பணிபுரியும் எந்த நிறுவனமும் தடைசெய்யப்படலாம், எனவே இப்போது இந்தத் திட்டத்தின் பணிகளை இண்டர் ஸ்டேட் கேஸ் சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செய்யும் என்று அவர் கூறினார். இந்த நிறுவனம் பாகிஸ்தானின் பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

இந்த நிறுவனத்திற்கு சர்வதேச அனுபவம் இல்லை என்றார். அதாவது வெளியில் இருந்து எந்தப் பொருளையும் இறக்குமதி செய்யவில்லை.

எரிவாயு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 50,000 கோடி ரூபாய் உள்ளது, அதன் மூலம் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார் காலிக் கயானி.

இரான் எல்லையில் இருந்து குவாதர் வரை அமைக்கப்படும் எரிவாயு குழாய் 158 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1,300 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை அமல்படுத்த பாகிஸ்தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றல், இரான் சர்வதேச நடுவர் மன்றத்திற்குச் செல்லலாம், அங்கு பாகிஸ்தானுக்கு அபராதம் விதிக்க முடியும் என்றும் காலிக் கயானி கூறினார்.

தாமதம் காரணமாக இரான் இன்னும் அங்கு செல்லவில்லை என்றாலும், எப்போது வேண்டுமானாலும் அங்கு செல்லலாம் என்றும் அவர் கூறினார். இதைத் தவிர்க்க பாகிஸ்தான் தனது பக்கத்தில் குழாய் பதிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இரானில் இருந்து வரும் எரிவாயு எவ்வளவு மலிவாக இருக்கும்?

பாகிஸ்தான்-இரான் எரிவாயுத் திட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரு தரப்பிலிருந்தும் தாக்குதலுக்குப் பிறகு இராஜதந்திர மட்டத்தில் இந்த பிரச்னை தீர்க்கப்பட்டது

இந்தத் திட்டத்தால் பாகிஸ்தானுக்கு கிடைக்கும் எரிவாயு குறித்த கேள்விக்கு, ஜி.ஏ. சப்ரி, இந்தத் திட்டம் குறித்த ஆரம்பப் பணிகள் நடைபெற்றபோது, தினமும் ஒரு பில்லியன் கன அடி எரிவாயு கிடைக்கும் என்று பேசப்பட்டது, ஆனால் இந்தியா இந்தத் திட்டத்தைத் விட்டு வெளியேறியபோது, அந்த அளவு குறைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு 750 மில்லியன் கன அடி எரிவாயு கிடைக்கும் என்று காலிக் கயானி கூறினார்.

இரானில் இருந்து குவாடாரை அடையும் எரிவாயு, குவாடரின் தேவையை விட அதிகமாக உள்ளது, ஏனெனில் குவாடரின் எரிவாயு தேவை வெறும் 100 மில்லியன் கன அடி தான். எனவே மீதமுள்ள எரிவாயு நாட்டின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும். குவாடாரில் இருந்து தெற்கு-வடக்கு பைப்லைன் வரை குழாய் மூலம் கொண்டு வரப்படும். ரஷ்யாவின் உதவியுடன் இந்த குழாய் அமைக்கப்படுகிறது.

கிஸ்தானிய நுகர்வோருக்கு இந்த எரிவாயுவின் விலையை மதிப்பிடும்போது, இந்த எரிவாயு இறக்குமதி செய்யப்படும் எல்.என்.ஜி.யை விட 30 முதல் 40 சதவீதம் குறைவாக இருக்க வேண்டும், அப்போதுதான் உள்ளூர் நுகர்வோருக்கு பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும் என்றார் சப்ரி.

“உள்ளூர் எரிவாயுவை விட இது விலை உயர்ந்ததாக இருக்கும் என்று அவர் கூறினார், ஏனெனில் உள்ளூர் எரிவாயு பழைய எரிவாயு வயல்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. அதனால் இது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்என்ஜியை விட மலிவானதாகவும், நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படும் உள்ளூர் எரிவாயுவை விட விலை அதிகமாகவும் இருக்கும்,” என்று காலிக் கயானி கூறினார்.

இத்திட்டம் நிறைவடைந்ததும் இந்த எரிவாயுவின் விலை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

இந்தத் திட்டத்தில் பணிபுரியும் மாநிலங்களுக்கு இடையேயான எரிவாயு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அதன் கருத்தைக் கேட்டபோது, அவர்கள் பிபிசியின் எழுத்துப்பூர்வ கேள்விகளுக்கு பதிலளிக்க நேரம் கேட்டனர். ஏனென்றால், இந்தத் திட்டம் பற்றிய தகவல்களை வழங்குவதற்கான முறையான செயல்முறை உள்ளதாகக் கூறினர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)