சேத்தன் சிங்: மும்பை ரயிலில் 4 பேரை சுட்டுக் கொன்ற இவர் யார்? என்ன காரணம்? விடை தெரியாத கேள்விகள்

பட மூலாதாரம், SOCIAL MEDIA
கடந்த திங்கட்கிழமை ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்ற ரயிலில் ஆர்பிஎஃப் வீரர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் ஆர்பிஎஃப் ஏஎஸ்ஐ திகாராம் மீனா மற்றும் மூன்று பயணிகள் உயிரிழந்தனர்.
துப்பாக்கி சூடு நடந்த போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதில் ஆர்பிஎஃப் வீரர் சேத்தன் சிங் சவுத்ரி ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை.
வீடியோவில் தெரிவித்துள்ள கருத்துகளின் அடிப்படையில், இந்த சம்பவம் வெறுப்பு வன்முறையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஆனால், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன்பு அந்த வீரர் வெறுப்புணர்வுடன் எப்போதும் பேசியதில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், DHARMENDRA SINGH/BBC
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த உள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சேத்தன் சிங் சவுத்ரி ஒரு ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் என்றும், சம்பவம் நடந்த போது ரயிலில் தனது பணியில் ஈடுபட்டு இருந்ததாகவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு ரயில்வே காவல் ஆணையர் பேசும் போது, "அவர் (சேத்தன் சிங்) உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இது குறித்து அவர் ஏற்கெனவே அவருடன் பணியாற்றுபவரிடம் தெரிவித்திருக்கிறார். அதிகாலை 5 மணியளவில் அவர் திகாராம் மீனா என்ற காவல் துணை உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர் அவர் கண்ணில் தென்பட்டவர்கள் மீதெல்லாம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர்," என்று கூறியுள்ளார்.
சேத்தன் சிங்குடன் ரயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த அவரது சக ஊழியர் கன்ஷ்யாம் ஆச்சார்யாவும், துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு, சேத்தன் தனது உடல்நலக்குறைவு குறித்துத் தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், DHARMENDRA SINGH/BBC
சேத்தனின் குடும்பத்தினர் என்ன சொல்கின்றனர்?
இந்த சம்பவம் குறித்து சேத்தன் சிங் சவுத்ரியின் குடும்பத்தினர் கூறுகையில், தொலைக்காட்சியில் செய்தி வெளியான பின்பு தான் இந்த துப்பாக்கி சூடு குறித்துத் தங்களுக்குத் தெரியவந்ததாகக் கூறியுள்ளனர். மேலும், இந்தத் தகவலைக் கேட்டதும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்ததுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட சேத்தன் சிங்கின் சகோதரர் லோகேஷ் சவுத்ரியின் மனைவி ப்ரீத்தி, சேத்தன் சிங் சவுத்ரியின் உடல்நிலை குறித்து பிபிசிக்கு விரிவான தகவல்களை அளித்துள்ளார்.
ப்ரீத்தி சிங் கூறுகையில், "சில ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டின் வாசலில் தவறி விழுந்ததால் அவருக்கு (சேத்தன் சிங்) தலையில் காயம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு கடுமையான தலைவலி தொடங்கியது. தலையில் வீக்கம் இருந்திருக்கலாம் என மருத்துவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை பரிசோதித்தபோது தலையில் ரத்தக்கட்டிகள் உறைந்திருந்தது தெரியவந்தது," என்றார்.
இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். பின்னர் அவர் இந்த விஷயங்களை மறந்துவிட்டு, வழக்கமான வாழ்க்கையை வாழத் தொடங்கியுள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து மருந்துகளை எடுத்துவந்துள்ளார். விடுமுறை நாட்களில் அவர் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த போது, வீட்டில் யாருடனும் எதுவும் பேசுவதில்லை என்றும், அவருடைய உடல்நிலை சரியாகி விட்டது என்று கூறிவந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
"அவருடைய உடல்நிலை சரியாகிவிட்டது என்று தான் நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தோம். ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என நாங்கள் ஒருநாளும் எதிர்பார்க்கவில்லை. எப்போது என்ன நடக்கும் என யாருக்குத் தெரியும்?" என்று ப்ரீத்தி கேள்வி எழுப்பினார்.
துப்பாக்கி சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சேத்தன் சிங்கின் தந்தை பச்சு சிங் சவுத்ரி 2007 ஆம் ஆண்டு பணியில் இருந்தபோது உயிரிழந்ததால் சேத்தன் சிங்கிற்கு 2009 ஆம் ஆண்டு ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை கிடைத்தது.
ப்ரீத்தி சிங் கூறுகையில், "முன்பு அவரது குழந்தைகளும் குடும்பத்தினரும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைனியில் வசித்து வந்தனர். ஆனால் குஜராத்திற்கு அவர் மாற்றப்பட்டபின் குடும்பத்தை அவரால் அங்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. அதனால் அவரது குடும்பத்தினர் மதுராவில் வசித்துவருகின்றனர்," என்றார்.

பட மூலாதாரம், DHARMENDRA SINGH/BBC
சேத்தனின் சக ஊழியர் என்ன சொன்னார்?
சேத்தன் சிங்குடன் ரயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மற்றொரு கான்ஸ்டபிள் கன்ஷ்யாம் ஆச்சார்யாவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு முன்னர் என்ன நடந்தது என்பதை அவர் விரிவாக விசாரணை அதிகாரிகளிடம் பகிர்ந்துகொண்டார். இது குறித்து என்டிடிவி விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது.
சூரத் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 2:53 மணிக்கு மும்பை செல்லும் ரயிலில் சேத்தன் சிங் சவுத்ரி, ஏஎஸ்ஐ திகாரம் மீனா(58), கான்ஸ்டபிள் நரேந்திர பர்மர் (58) ஆகியோருடன் ஏறியதாக ஆச்சார்யா கூறியுள்ளார்.
சிங் மற்றும் மீனா ஆகியோருக்கு குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியில் பாதுகாப்புப் பணி வழங்கப்பட்டிருந்தது. பர்மரும், ஆச்சார்யாவும் ஸ்லீப்பர் கோச்சில் நியமிக்கப்பட்டனர்.
"ரயிலில் ஏறிய அரை மணி நேரம் கழித்து, ஏஎஸ்ஐ மீனாவைச் சந்திக்க அவர் பணியில் ஈடுபட்டிருந்த கோச்சிற்கு வந்தேன். அப்போது சேத்தன் சிங் மற்றும் மூன்று டிக்கெட் பரிசோதகர்கள் உடன் இருந்தனர். ஏஎஸ்ஐ மீனா, சேத்தன் சிங்குக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார். காய்ச்சல் பாதிப்பு இருந்ததா என்பதைத் தெரிந்துகொள்ள நான் அவரைத் தொட்டுப்பார்த்தேன். ஆனால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. இருப்பினும், சேத்தன் சிங் அடுத்த ரயில் நிலையத்தில் இறங்க விரும்பினார். ஆனால் அதற்கு ஏஎஸ்ஐ திகாராம் மீனா அனுமதிக்கவில்லை. வேலை நேரம் முடிய இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது என்றும், அதை முடித்துவிட்டுச் செல்லுமாறும் கூறிக்கொண்டே இருந்தார்," என்று ஆச்சார்யா போலீசாரிடம் தெரிவித்தார்.
மேலும், "சேத்தன் சிங் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை. இதையடுத்து ஏஎஸ்ஐ திகாராம் மீனா தரப்பில், எங்கள் இன்ஸ்பெக்டர் வரவழைக்கப்பட்டு மும்பை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார்," என அவர் கூறினார்.
இதையடுத்து, கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளும், சேத்தன் தனது பணியை முடித்துவிட்டு மும்பையில் சிகிச்சை பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். இதை திகாராம் மீனா சேத்தனுக்கு விளக்க முயன்றார். ஆனால் இதையெல்லாம் அவர் காது கொடுத்துக் கேட்கவில்லை.
இதற்கிடையே, சேத்தனுக்கு குளிர்பானம் கொடுக்க மீனா அழைத்தார் ஆனால் அவர் குளிர்பானம் குடிக்கவில்லை.
ஆச்சார்யா தொடர்ந்து பேசுகையில், "ஏஎஸ்ஐ மீனா சேத்தனின் துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு அவரை ஓய்வெடுக்கச் சொன்னார். அதன் பின் நான் சேத்தனை B4 கோச்சுக்கு அழைத்துச் சென்று காலியான இருக்கையில் படுக்கச் சொன்னேன். மேலும், நான் அவருக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்துகொண்டேன். ஆனால் சேத்தன் சிங் சிறிது நேரம் மட்டும் தூங்கினார். அவரால் நீண்ட நேரம் தூங்கமுடியவில்லை," என்றார்.
"பத்து நிமிடங்களுக்குப் பிறகு எழுந்து நின்ற போது அவரது முகத்தில் கோபம் தெரிந்தது. எனது துப்பாக்கியைத் தருமாறு கேட்டார். நான் அதைத் தர மறுத்தபோது, அவர் எனது கழுத்தை நெரிக்க முயன்றார். பின்னர் என்னிடமிருந்து துப்பாக்கியை எடுத்துச் சென்றார்."

பட மூலாதாரம், DHARMENDRA SINGH/BBC
கன்ஷியாம் ஆச்சார்யாவின் துப்பாக்கியை சேத்தன் சிங் எடுத்துச் சென்றது பற்றி, உடனடியாக தனது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, ஏஎஸ்ஐ மீனா மற்றும் கன்ஷ்யாம் ஆச்சார்யா ஆகியோர் சேத்தன் சிங் சவுத்ரியிடம் சென்று, துப்பாக்கியை மாற்றியது பற்றித் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, சேத்தன் சிங் சவுத்ரி, ஆச்சார்யாவின் துப்பாக்கியை திருப்பிக் கொடுத்தார்.
பின்னர், "சேத்தன் சிங்கின் முகம் கோபத்தில் சிவந்தது. ஏஎஸ்ஐ மீனா அவரைச் சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் அவரிடம் சேத்தன் சிங் வாக்குவாதம் செய்தார். நாங்கள் பேசியதை அவர் கொஞ்சம் கூட காது கொடுத்துக் கேட்கவில்லை. அதனால் நான் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிட்டேன்.
ஆனால் அப்போது சேத்தன் சிங், அவரது துப்பாக்கியின் பாதுகாப்பு அமைப்பை மாற்றியதைப் பார்த்தேன். அவர் துப்பாக்கியால் சுடப்போகிறார் என்பது அப்போதே நன்றாகத் தெரிந்தது. உடனே, இதை நான் ஏஎஸ்ஐ திகாராம் மீனாவிடம் தெரிவித்தேன். இதையடுத்து, அவர் சேத்தன் சிங்கை அமைதிப்படுத்த முயன்றார்," என்கிறார் கன்ஸ்யாம் ஆச்சார்யா.
இதைத் தொடர்ந்து, அதிகாலை 5:25 மணிக்கு வைதர்ணா நிலையத்துக்கு ரயில் வந்தவுடன், ஏஎஸ்ஐ மீனா சுடப்பட்டதாக ஆச்சார்யாவுக்கு ஆர்பிஎஃப்-ல் பணிபுரியும் மற்றொரு நபரிடமிருந்து வந்த அழைப்பில் பதற்றத்துடன் தகவல் தெரிவிக்கப்பட்டது.
"ஏஎஸ்ஐ மீனா சுடப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன், நான் பி 5 கோச்சை நோக்கி ஓடினேன். ஆனால் ரயில் பயணிகள் அச்சத்துடனும், பதற்றத்துடனும் அந்த ரயில் பெட்டியிலிருந்து தப்பி ஓட முயன்றனர். சேத்தன் சிங் ஏஎஸ்ஐ மீனாவை சுட்டுக் கொன்றதாக என்னிடம் சொன்னார்கள். நான் நரேந்திர பர்மரை அழைத்தேன். அவரது உடல்நிலை குறித்து விசாரித்து, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது," என்கிறார் ஆச்சார்யா.
துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி எழும் சந்தேகங்கள் என்னென்ன?
ஒருபுறம், சேத்தன் சிங் சவுத்ரியின் மனநிலை மற்றும் நோய் பாதிப்பு குறித்து ரயில்வே போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் தகவல் அளித்து வருகின்றனர்.
சேத்தன் சிங்கின் பழக்கவழக்கங்கள் பற்றியும் பல கேள்விகளுக்கு இன்னும் தெளிவான பதில்கள் இல்லை.
அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ரயில்வே அதிகாரிகள் அவருக்கு உதவும் வகையில் ஓய்வளிக்கவோ, சிகிச்சை அளிக்கும் நடவடிக்கை எடுக்கவோ தவறினார்களா என்பதுதான் இதில் மிகப்பெரிய கேள்வி.
ரயில்வே அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், ஏன் இதுவரை அவர்களிடமிருந்து இருந்து எந்த விளக்கமும் வரவில்லை?
சேத்தன் சிங் சவுகான் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தார் என்பது ரயில்வேக்கு தெரிந்திருந்தால், எந்த அடிப்படையில் அவருக்கு ஆயுதங்கள் வழங்க முடிவு எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கும் பதில் இல்லை.
B5 கோச்சில் என்ன நடந்தது என்பதை நேரடியாக கண்களால் பார்த்த அனைத்து பயணிகளும், அங்கே என்ன நடந்தது என்பது குறித்துப் பேச ஏன் இதுவரை முன்வரவில்லை என்பது இந்த முழு சம்பவத்தைச் சுற்றிலும் தீர்க்கப்படாத கேள்வியாக உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












