ரஜினியின் ஸ்டைல், குரல், மேனரிசங்களை யூடியூப், மேடை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தலாமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவகுமார் ராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர் ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் அவரது புகைப்படம், பெயர், குரலை பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கை யார், யாருக்கெல்லாம் பொருந்தும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற இயற்பெயரை உடைய நடிகர் ரஜினிகாந்த் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் 'சூப்பர் ஸ்டாராக' உள்ளார்.
வசூல் ரீதியாகவும் தொடர்ந்து முன்னிலை வகித்தவர் ரஜினி காந்த். தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் அவரின் பெயர் பிரபலமடைந்தது. இன்றும் ரஜினியின் ஸ்டைல், குரல், நடை, உடை பாவனைகளை அப்படியே பிரதிபலிக்கும் இளைஞர்கள் ஏராளம்.
தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதுமே நடிகர் ரஜினிகாந்த் பிரபலமாக திகழும் நிலையில் அவரது சார்பில் வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"பல்வேறு தளங்களில் செயல்படும் நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் பெயர், புகைப்படம், குரல் உள்ளிட்டவற்றை அவரது அனுமதியின்றி பயன்படுத்துகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
ஆகவே, ரஜினியின் பெயர், புகைப்படம், குரலை ஒப்புதல் இன்றி வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்," என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளியான பாடல்களை அவரது அனுமதியின்றி வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற அறிவிப்பு வெளியானதும் மேடைக் கலைஞர்களிடையே உண்டான அதே சூழல் இப்போதும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இளையராஜாவின் இசையைப் போலவே நடிகர் ரஜினியின் ஸ்டைல், குரல், நடை, உடை பாவனைகளை அப்படியே பிரதிபலிப்பதன் மூலம் வாழ்வாதாரம் ஈட்டும் மேடைக் கலைஞர்கள் ஏராளம்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த கோபி என்பவர் சிறு வயது முதலே மேடை நிகழ்ச்சிகளில் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலை பிரதிபலிப்பவர். திரைப்படங்களில் ரஜினிகாந்த் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களைப் போல வேடமிட்டு, மேடைகளில் தோன்றும் இவர், ரஜினி பாடல்களுக்கு நடனமாடி மக்களை மகிழ்விப்பவர். சுமார் 45 வயதான கோபிக்கு, ரஜினிகாந்த் வேடமணிந்து மேடைகளில் தோன்றுவதும், நடனமாடுவதுமே வாழ்வாதாரம்.
இவரைப் போன்ற மேடைக் கலைஞர்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பால் தங்களது வாழ்வாதாரத்திற்கு ஊறு நேரிடுமோ என்று அச்சப்படுகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்தின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விடை காண, ரஜினி சார்பில் அந்த அறிக்கையை வெளியிட்ட வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதியை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.
"வர்த்தக ரீதியில் தங்களது பொருட்களை மக்களிடையே விளம்பரப்படுத்த ரஜினியின் பெயர், புகைப்படம், குரல் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவோருக்கு மட்டுமே அது பொருந்தும். மேடை கலைஞர்கள், ரஜினி போல் மிமிக்ரி செய்யும் கலைஞர்கள் போன்றவர்களுக்கு இது பொருந்தாது. குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக மட்டுமின்றி, மக்களையும் மகிழ்விக்கும் அவர்கள் வழக்கம் போல் அதனைத் தொடரலாம்," என்றார்.
"யூடியூப் போன்ற டிஜிட்டல் தளங்களில் ரஜினியின் ஸ்டைல், குரல், மேனரிசங்களை காப்பியடித்து விளம்பரம் தேடுவது கூடாது. சில யூடியூப் சேனல்களில் ரஜினி போல் பேசி மக்களைக் கவர்ந்து, இறுதியில் எங்களது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள். வணிக நோக்கம் கொண்டது என்பதால் அது இனி கூடாது," அவர் திட்டவட்டமாக கூறினார்.
தனியார் நிறுவனம் ஒன்று நடிகர் ரஜினியின் கார்ட்டூன் படம், அவர் உச்சரித்த பட வசனங்கள் போன்றவற்றைக் கொண்டு அவர்கள் தயாரித்துள்ள பொருளே நடிகர் ரஜினியின் தேர்வு என்று கூறும் விளம்பரத்தை வழக்கறிஞர் சுப்பையா இளம்பாரதி சுட்டிக்காட்டினார். நடிகர் ரஜினியிடம் அனுமதி பெறப்படாததால் அந்த நிறுவனத்தின் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












