'ரஜினி தத்தெடுத்த தந்தை' - யார் இந்த பாலம் கல்யாணசுந்தரம்?

பட மூலாதாரம், ANBUPAALAM/WEBSITE
- எழுதியவர், திவ்யா ஜெயராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, களக்காடு பஞ்சாயத்திற்குட்பட்ட தமிழகத்தின் ஒரு கடைக்கோடி குக்கிராமத்தில் பிறந்த ஒருவரை அமெரிக்காவின் பில் கிளிண்டன் சந்திக்க விரும்பினார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவர் தான் பாலம் கல்யாணசுந்தரம்!
சமூக சேவகரான பாலம் கல்யாணசுந்தரம் தன்னுடைய சமூக சேவைக்காக ஏற்கெனவே பல விருதுகளை பெற்றுள்ளார். தற்போது இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம ஸ்ரீ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
'ஐம்பது லட்சம் மதிப்பிலான தன்னுடைய பூர்வீக சொத்துகள், வாழ்நாள் முழுவதும் தான் கல்லூரியில் பணியாற்றி சம்பாதித்த முப்பது லட்சம் ரூபாய் பணம், பணி ஓய்விற்கு பின் கிடைத்த பணிக் கொடை என தன் வாழ்நாளில் தனக்கு கிடைத்த அத்தனை பணத்தையும் ஏழைகளுக்காக அளித்தவர் பாலம் கல்யாணசுந்தரம்' என பாலம் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிபிசி தமிழ் அவரை தொடர்புகொண்டு பேசியபோது, "1939ஆம் ஆண்டு கலக்காடு பகுதியில் வசதிகள் நிறைந்த ஓர் குடும்பத்தில் பிறந்தவன் நான். என் அம்மாதான் என்னுடைய உலகம். வாழ்க்கையில் எவ்வளவு வசதிகள் இருந்தாலும் எப்போதும் பணத்தின் மீது ஆசைக்கொள்ளாமல் மற்ற உயிர்களுக்கு உதவி செய்து வாழ வேண்டும் என்று ஒருமுறை அவர் என்னிடம் அழுத்தமாக கூறினார். அப்போது முதல் பிறருக்கு உதவி செய்வதே என்னுடைய விருப்பமாக மாறியது. சிறுவயதில் கைசெலவுக்காக அம்மா கொடுக்கும் காசை சேர்த்து வைத்து உடன் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்யத் துவங்கினேன். அப்போது எனக்கு 14 வயதுதான், " என்கிறார் பாலம் கல்யாணசுந்தரம்.

பட மூலாதாரம், ANBUPAALAM
அவர் தொடர்ந்து பேசும்போது, "1963ல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் நடைபெற்று வந்தது. அந்த சமயத்தில் பிரதமர் நேரு நாட்டு மக்களிடம் தங்களால் இயன்ற பொருள் உதவிகளை செய்யுமாறு கேட்டிருந்தார். நான் என்னுடைய பத்து சவரன் தங்க சங்கிலியை போர்கால நிதியுதவியாக அளிக்க சென்றேன். அங்கே இருந்த அதிகாரிகள் என்னை பாராட்டியதுடன் பத்திரிக்கையாளர்களிடமும் இதை தெரிவிக்குமாறு கூறி அனுப்பிவைத்தனர். அப்படி நான் சந்திக்க சென்ற ஒரு பத்திரிக்கை நிறுவனத்தில், `நீங்கள் அளித்திருக்கும் நிதி பாராட்டுக்குரியதுதான்.
ஆனால் இது உங்களுடைய குடும்ப சொத்தாக தெரிகிறது. நீங்கள் சுயமாக சம்பாதித்து ஏதாவது உதவி செய்திருக்கிறீர்களா` என்று கேள்வியெழுப்பினர். அந்த கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்தது. அதற்கு பின்னர்தான் வாழ்நாளில் சம்பாதிக்கும் பணம் முழுவதும் ஏழைகளுக்காக கொடுக்க வேண்டுமென்று முடிவெடுக்க வைத்தது," என்கிறார்.
மேலும், M.A (Litt)., M.A (His)., M.A (G.T)., உட்பட பல படிப்புகளில் கோல்டு மெடல் வாங்கியுள்ளேன். அதன் பின் 1971ஆம் ஆண்டு முதல் 1998 காலகட்டம் வரை தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டத்தில் உள்ள குமரகுரு கல்லூரியில் நூலகராக பணியாற்றி வந்தேன். அந்த 35 ஆண்டுகளில் நான் மொத்தம் சம்பாதித்தது முப்பது லட்சம். அதிலிருந்து ஒரு ரூபாய் கூட எனக்காக நான் எடுத்து கொள்ளவில்லை. அனைத்தையும் உதவி தேவைப்படுபவர்களுக்கு வழங்கினேன். என் சொந்த செலவிற்கு தேவைப்படும் பணத்திற்கு இரவு நேரங்களில் ஓட்டல்களில் சப்ளையராக வேலை செய்தேன் என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Anbupaalam website
அவர் தொடர்ந்து பேசுகையில்,
"ஒருகட்டத்தில் நான் செய்து வந்த உதவிகள் குறித்து வெளியுலகிற்கு தெரிய வந்தது. நான் செய்து வந்த சமூக சேவையை நம்பி பலரும் தேடி வந்து நிதியளிக்க துவங்கினர். அதனால் இனி முறையான திட்டமிடலுடன் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென கருதி 1998ஆம் ஆண்டு 'பாலம்' என்ற அமைப்பை நிறுவி தற்போது வரை நடத்தி வருகிறேன். மக்களுக்காக உதவி செய்ய நினைப்பவர்களுக்கும், உதவி தேவைப்படுபவர்களுக்கும் பாலமாக இருக்க துவங்கினேன்," என்கிறார்.
ஏழைகளுக்கு உதவும் இவரது சமூக சேவையை பாராட்டி கடந்த ஆயிரம் ஆண்டுகளில் உலகம் இப்படியொரு மனிதரை கண்டிருக்காது என 1999ஆம் ஆண்டு அமெரிக்கா இவருக்கு ‘Man of the Millennium Award‘ என்னும் விருது அளித்து சிறப்பித்தது.
இந்த விருது பத்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருதுடன் அவருக்கு 6.5 மில்லியன் அமெரிக்க டாலர்(இந்திய மதிப்பில் 30 கோடி ரூபாய்) பணத்தையும் அமெரிக்கா வழங்கியது. அந்த பணம் முழுவதையும் இவர் குழந்தைகளுக்கான நலனுக்காக வழங்கினார் என்று பாலம் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ரஜினியும், பில் கிளிண்டனும்
இவரை பற்றி கேள்விபட்ட நடிகர் ரஜினிகாந்த் இவரை தனது தந்தையாக தத்தெடுத்து கொண்டு தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு சில மாதங்கள் மட்டுமே தங்கியிருந்த பாலம் கல்யாணசுந்தரம் மீண்டும் தன்னுடைய இடத்திற்கே வந்துவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, "ரஜினியும் அவரது மனைவியும் குழந்தைகளும் என் மீது அதிகப்படியான பாசம் வைத்துள்ளனர். வாழ்வில் எனக்கு அனைத்து சந்தோஷங்களும் கிடைத்தும் தந்தை என்று ஒருவர் இல்லாதது பெரிய குறையாக இருக்கிறது. எனவே நீங்கள் என்னுடன் இருந்து அந்த குறையை தீர்க்கவேண்டும் என்று கூறி என்னை அவர் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
அந்த வீட்டில் என்னை மிகவும் வசதியாக பார்த்துக்கொண்டனர். ஆனால் அங்கே சென்ற பின் தினமும் என்னிடம் உதவி தேடி வரும் மக்களை என்னால் பார்க்க முடியவில்லை. அது எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. என்னுடைய இயல்பை இழந்தது போல் இருந்தது. அதனால் என் நிலையை எடுத்துக்கூறி என்னுடைய இடத்திற்கே நான் திரும்ப செல்கிறேன் என்று கூறினேன். ரஜினிக்கு அதில் வருத்தம் இருந்தாலும் என்னை புரிந்துகொண்டு அனுப்பி வைத்தார்," என்று கூறுகிறார்.
அவர் மேலும் கூறும்போது, "2005ஆம் ஆண்டில் சுனாமியால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வந்திருந்தார். அப்போது அரசியல் சார்ந்தவர்களை தவிர்த்து இரு நபர்களை சந்திக்க விரும்புவதாக அவர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். அதில் ஒருவர் அப்துல்கலாம், மற்றொருவர் நான். ஆனால் அப்போது எனக்கு அவசர வேலை ஒன்று வந்துவிட்டதால் நான் ஊருக்கு சென்றுவிட்டேன். பில் கிளிண்டன் அப்துல் கலாமை மட்டும் பார்த்துவிட்டு திரும்பினார்," என்று தெரிவிக்கிறார் பாலம் கல்யாணசுந்தரம்.
தன் வாழ்க்கை பயணம் குறித்து பேசும் அவர், 'மக்கள் சேவை செய்வதற்கு திருமணம் தடையாக இருக்கும் என்று நினைத்த நான் கடைசிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது எனக்கு வரும் ஓய்வூதிய பணத்தில் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். நான் இளம்வயதில் ஒருவேகத்தில் எடுத்த முடிவினால் பின்னாளில் எனக்கு இப்படியொரு புகழும், பெயரும் கிடைக்குமென நான் அப்போது சற்றும் எதிர்பார்க்கவில்லை' என்று நெகிழ்கிறார்.
இவருடைய சுயசரிதை தற்போது திரைப்படமாக எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஹிந்தியில் அமிதாப் பச்சனும், தமிழில் ரஜினிகாந்தும் நடிக்கவிருக்கிறார்கள். அந்த படத்திற்காக தனக்கு அளிக்கபடவிருக்கும் ராயல்டி தொகையையும் மக்களுக்கு தான் அளிக்க போகிறேன் என ஏற்கெனவே பாலம் கல்யாணசுந்தரம் அறிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












