ஈயத்தை இனி தங்கமாக மாற்றலாம் - விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு

ஈயத்தில் இருந்து தங்கம், தங்கம், முக்கியச் செய்திகள், ஆராய்ச்சி, செர்ன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லார்ஜ் ஹார்டோன் கொலிடர் என்பது உலகின் மிகப்பெரிய துகள் முடுக்கியாகும்
    • எழுதியவர், அம்ரிதா துர்வே
    • பதவி, பிபிசி மராத்தி

சுவிட்சர்லாந்தில் ஈயத்தை தங்கமாக மாற்றும் ஆய்வில் வெற்றி பெற்றுள்ளனர் ஆய்வாளர்கள்.

சுவிட்சர்லாந்தில் லார்ஜ் ஹார்டோன் கொலிடர் திட்டத்தில் பணியாற்றும் இயற்பியலாளர்கள் இந்த சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளனர்.

அணு இயற்பியல் தொடர்பான ஆலிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சி அணு ஆய்வுக்கான ஐரோப்பிய அமைப்பான செர்ன் (CERN) -ன் ஆய்வகத்தில் நடத்தப்பட்டது.

1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட செர்ன், பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து எல்லைக்கு அருகே, ஜெனீவாவில் அமைந்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் இங்கே ஆய்வு செய்ய வருகின்றனர். குறிப்பாக அணு இயற்பியல் குறித்த ஆய்வுகளுக்காக இங்கே அதிகம் வருகின்றனர்.

அங்கே அமைந்துள்ள லார்ஜ் ஹார்டோன் கொலிடர் என்பது உலகின் மிகப்பெரிய துகள் முடுக்கியாகும் (Particle Accelerator).

துகள் முடுக்கி என்றால் என்ன?

துகள் முடுக்கி என்பது நீண்ட சுரங்க வடிவிலான அமைப்பாகும். அதில் ஆராய்ச்சியாளர்கள் எலக்ட்ரான்கள், ப்ரோட்டோன்கள், அயனிகள் போன்ற மிகச்சிறிய துகள்களை உருவாக்கவும், அவற்றை அதிக வேகத்தில் ஒன்றுடன் மற்றொன்றை மோத வைக்கவும் இயலும்.

2012-ஆம் ஆண்டு அடிப்படை துகள் (fundamental particle) என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸன் இங்கே தான் கண்டுபிடிக்கப்பட்டது.

செர்னின் மற்றொரு முக்கியமான, ஆர்வமூட்டும் விசயம் என்னவென்றால், 1989-ஆம் ஆண்டு இங்கே பணியாற்றிக் கொண்டிருக்கும் போதுதான் டிம் பெர்னர்ஸ் - லீ, வேர்ல்ட் வைட் வெப்பை (www) கண்டுபிடித்தார். பிற்காலத்தில் இது, நவீன இணைய தொழில்நுட்பங்களுக்கு வழிவகை செய்தது.

ஈயத்தில் இருந்து தங்கம், தங்கம், முக்கியச் செய்திகள், ஆராய்ச்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2012-ஆம் ஆண்டு அடிப்படை துகள் (fundamental particle) என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸன் இங்கே தான் கண்டுபிடிக்கப்பட்டது

ஈயத்தில் இருந்து தங்கம் எப்படி உருவாக்கப்பட்டது?

தங்கத்தின் சில பண்புகளை ஒத்த பண்புகள் ஈயத்திலும் இருப்பதால், இந்த ஆராய்ச்சிக்கு ஈயத்தை ஆய்வாளர்கள் பயன்படுத்தினார்கள்.

ஈய அணுவில் மொத்தம் 82 ப்ரோட்டோன்கள் உள்ளன. தங்கத்தில் அதன் எண்ணிக்கை 79.

இந்த ஆராய்ச்சிக்காக செர்னில் செயல்பட்டு வரும் மிகப்பெரிய துகள் முடுக்கியை ஆய்வாளர்கள் பயன்படுத்தினார்கள்.

இந்த துகள் முடிக்கியில் ஈயத்தின் அயனிகள், ஒன்றுடன் ஒன்று அதிக வேகத்தில் மோத வைக்கப்பட்டன. ஒரு சில அயனிகள் மோதின. ஒரு சில மோதவில்லை. இந்த துகள்களின் வேகம் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்திற்கு இணையாக இருந்தது.

ஈயத்தில் இருந்து தங்கம், தங்கம், முக்கியச் செய்திகள், ஆராய்ச்சி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

இந்த ஆய்வின் போது, சில ஈய அணுக்கள் ஒன்றோடு ஒன்று நெருங்கி வந்தன. இந்த துகள்கள் எலக்ரிக் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் என்பதால், அவை ஒன்றுக்கொன்று நெருங்கி வந்த போது, மின்காந்த மின்னூட்டங்களைக் கொண்ட ஒரு புலம் உருவானது.

இதன் காரணமாக ஈய அணுவில் இடம் பெற்றிருந்த 82 ப்ரோட்டோன்களில் மூன்று ப்ரோட்டோன்கள் வெளியேறின. இதனால் 79 ப்ரோட்டோன்களைக் கொண்ட தங்க அணுக்கள் உருவாகின. ஆனால் இவை மைக்ரோ நொடிகளுக்கு மட்டுமே நீடித்தது.

இந்த அயனிகள் மேலும் வெடித்துச் சிதறின.

இவை அனைத்தையும் வெற்றுக்கண்களால் காண இயலாது. இவை அனைத்தும் சில நொடிகளில் நடந்தன. ஆனால் அதிநவீன கருவிகள் மூலம் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மே 8-ஆம் தேதி அன்று செர்ன் தன்னுடைய ஆய்வு முடிவை வெளியிட்டது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதர உலோகங்களை தங்கமாக மாற்ற இயலுமா என்ற ஆராய்ச்சியை பல ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர் ஆய்வாளர்கள். ஆனால் செர்ன் ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய கண்டுபிடிப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இதற்கு முன்பும், செயற்கை முறையில் தங்கம் தயாரிக்கப்பட்டாலும், ஆலிஸ் திட்டம் நுட்பமான மாற்றங்களை புதிய முறையில் உருவாக்கி பதிவு செய்த முதல் பரிசோதனையாகும்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு