பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற தன்மை - தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா?

தங்க நகைகள்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இந்தியாவின் மும்பையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகள்
    • எழுதியவர், டெபுலா கெமோலி
    • பதவி, பிபிசி உலக சேவை

பங்குச் சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற சூழலின் காரணமாக, தங்கத்தில் முதலீடு செய்வதை வர்த்தகர்கள் பாதுகாப்பானதாக கருதுவதால், சமீப காலமாக உலகளவில் தங்கத்தின் விலை உயர்ந்து, வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

நிதி சிக்கல்கள் அல்லது நிதிச் சூழல் மோசமாக உள்ள காலங்களில், தங்கம் நம்பகமான மற்றும் உறுதியான சொத்தாக கருதப்படுகிறது.

ஆனால் தங்கத்தில் முதலீடு செய்வது உண்மையாகவே பாதுகாப்பானதா?

கடந்த ஒரு நூற்றாண்டில், உலகளாவிய வர்த்தகக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்றாக அதிபர் டிரம்பின் சுங்க வரிகள் கருதப்படுகின்றன.

அதன் எதிர்வினையாக, தங்கத்தின் விலை கடந்த வாரம் 3,167 டாலரைத் தாண்டி, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சுங்க வரிகள் மற்றும் வர்த்தகப் போர்கள் குறித்த அச்சங்களால், தங்கத்தின் விலையில் இந்த ஆண்டில் பலமுறை மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரச் சூழலில் மாற்றம் ஏற்படும் நேரங்களில் தங்கத்தின் விலை அடிக்கடி உயரும்.

பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையும் போது, திடீரென "தங்கத்துக்கான தேவை" அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அந்த நேரத்தில், தங்கத்தை பாதுகாப்பான சொத்தாகக் கருதும் பல முதலீட்டாளர்கள் தங்கம் வாங்க ஆவலுடன் இருப்பதைக் காணலாம்.

எனவே, யாரெல்லாம் தங்கம் வாங்குகிறார்கள் ?

தங்கக் கட்டிகள்

பட மூலாதாரம், Reuters

"அரசாங்கங்கள், தனிப்பட்ட முதலீட்டாளர்கள் அல்லது சில்லறை முதலீட்டாளர்கள்" என இந்தக் கேள்விக்கு பதிலளிக்கிறார் பெல்ஃபாஸ்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதார வரலாற்றாசிரியர் முனைவர் பிலிப் ஃப்ளையர்ஸ்.

"மக்கள் பங்குகளில் முதலீடு செய்வதை விட்டு, தங்கத்தில் முதலீடு செய்ய திரும்புகிறார்கள்," என்று அவர் குறிப்பிடுகிறார்.

"அதுதான் உண்மையில் தங்கத்தின் விலைகளை உயர்த்துகிறது."

நிதிச் சந்தையில் உலகளாவிய நிச்சயமற்ற சூழல் உள்ளபோது, காலம் காலமாக மக்கள் 'விரும்பி வாங்கும்' முக்கிய உலோகமாக தங்கம் உள்ளது.

2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 பெருந்தொற்று பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் விளைவாக தங்கத்தின் விலை திடீரென அதிகரித்தது.

இருப்பினும், நிதிச் சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற சூழல் தங்கத்தையும் பாதிக்கக்கூடும்.

ஜனவரி 2020ம் ஆண்டில், கோவிட் -19 பரவத் தொடங்கியபோது, ​​​​தங்கத்தின் விலை உயர்ந்தது. ஆனால் அந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விலை குறையத் தொடங்கியது.

"தங்கம் ஒரு 'பாதுகாப்பான' முதலீடு என்பதால், அதில் எந்த ஆபத்தும் இல்லையென்று பொருள் இல்லை" என்று விளக்குகிறார் முனைவர் ஃப்ளையர்ஸ்.

ஆனால் பொருளாதார நிச்சயமற்ற காலங்களில், தங்கம் இன்னும் நம்பகமான முதலீடாகக் கருதப்படுகிறது.

அதன் மதிப்பின் காரணமாக மட்டுமல்லாமல், வரலாற்றிலும் பல்வேறு கலாசாரங்களிலும் தங்கம் உயர்ந்த மதிப்புடன் பார்க்கப்படுகின்றது. எனவே, எளிதாக வர்த்தகம் செய்யக்கூடியதாகவும் உள்ளது.

தங்க முகமூடி
படக்குறிப்பு, துட்டன்காமனின் தங்க முகமூடி

பண்டைய எகிப்தில் துட்டன்காமனின் தங்க முகமூடி முதல் இந்தியாவின் பத்மநாபசுவாமி கோவிலின் தங்க சிம்மாசனம் வரை, வரலாற்று ரீதியாக மத மற்றும் அடையாள முக்கியத்துவம் வாய்ந்ததாக தங்கம் விளங்குகிறது.

தங்கள் செல்வத்தை பாதுகாப்பாகச் சேமிக்கும் நம்பகமான வழியாக, பலரும் தங்கத்தை கருதுவதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.

உலக நிதிச் சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களால், வீட்டில் உள்ள தங்க நகைகள் மற்றும் பொருட்களின் மதிப்பு பெரும்பாலும் பாதிக்கப்படுவதில்லை.

ஆனால் பெரியளவில் முதலீடு செய்யும்போது, முக்கிய நிதி நிறுவனங்கள் எடுக்கும் முடிவுகள் அதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

சமீபத்தில் தங்கத்தின் விலை அதிகரித்ததை குறித்துப் பேசிய போது, "பல நாடுகளின் மத்திய வங்கிகள் பெருமளவில் தங்கத்தை வாங்கியிருக்கக்கூடும் என்பதே காரணமாகத் தோன்றுகிறது" என்கிறார் ஃப்ளையர்ஸ்.

பங்குச் சந்தையில் நிச்சயமற்ற சூழல் நிலவும்போது, பங்குகளில் முதலீடு செய்யாமல், தங்களது பொருளாதார இருப்பை வலுப்படுத்தும் நோக்கில் மத்திய வங்கிகள் பெரும்பாலும் தங்கத்தை மொத்தமாக வாங்குகின்றன.

அப்போது தங்கத்தில் முதலீடு செய்வது சில நேரங்களில் ஆபத்தானதாக இருக்கலாம்.

"தங்கத்தின் விலை மேலும் உயரும் என எண்ணி முதலீடு செய்வது இன்னும் ஆபத்தானதாகவே உள்ளது. ஏனெனில் பங்குச் சந்தைகள் சீரடைந்து, அரசாங்கங்கள் தெளிவாக செயல்படத் தொடங்கினால், மக்கள் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்வதை விட்டு விலகத் தொடங்குவார்கள்" என்கிறார் ஃப்ளையர்ஸ்.

மேலும், "தங்கத்தில் முதலீடு செய்வது போன்ற விஷயங்களை நீண்ட கால நோக்கில் செய்ய வேண்டும் என நான் கூறுவேன்," என்றும் குறிப்பிட்டார் ஃப்ளையர்ஸ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு