You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பாகுபலி' புகழ் ராஜமௌலி இயக்கத்தில் பெருவெற்றி பெற்ற 5 முக்கிய திரைப்படங்கள்
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
"ராஜமௌலியை, இந்தியாவின் 'ஜேம்ஸ் கேமரூன்' என சொல்கிறார்கள்…தெரியுமா?"
"நன்றி, அதை எனக்கான பாராட்டாகவே பார்க்கிறேன். ராஜமௌலி தனக்கென ஒரு திரைப்பட பாணியை உருவாக்கியுள்ளார். பார்வையாளர்களின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படத்தக்கூடிய ஒரு பாணி"- டைட்டானிக், அவதார் போன்ற திரைப்படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், எஸ்.எஸ்.ராஜமௌலி குறித்து ஒரு ஆவணப்படத்தில் இவ்வாறு பேசியிருப்பார்.
'பாகுபலி 1' (2015) மூலம் 'பான் இந்தியா திரைப்படம்' என்ற வார்த்தையை பிரபலப்படுத்தியவர் இயக்குநர் ராஜமௌலி. அதற்குப் பிறகு அவர் இயக்கி, வெளியான 'பாகுபலி 2' (2017), 'ஆர்ஆர்ஆர்' (2022) திரைப்படங்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தன.
குறிப்பாக, 'பாகுபலி' திரைப்படம், 2019இல் லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் அரங்கத்தில் திரையிடப்பட்டது. 154 ஆண்டுகள் பழமையான இந்த அரங்கத்தில் இந்தியப்படம் ஒன்று திரையிடப்பட்டது அதுவே முதல் முறை. அதேபோல, 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் (2023) 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ''நாட்டு நாட்டு'' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.
'பாகுபலி 1 மற்றும் 2' திரைப்படங்களுக்கு பிறகே ராஜமௌலி இந்தியா முழுவதும் அறியப்படும் ஒரு இயக்குநராக மாறியிருந்தாலும் கூட, அதற்கு முன் அவர் எடுத்த திரைப்படங்கள் வெவ்வேறு இந்திய மொழிகளில் ரீமேக் மற்றும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அவை வெற்றியும் பெற்றுள்ளன.
இன்று (அக்டோபர் 10) பிறந்தநாள் காணும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, பாகுபலிக்கு முன் இயக்கிய சில திரைப்படங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
1. விக்ரமார்குடு (2006)
ராஜமௌலியின் இயக்கத்தில், அவரது தந்தை கே.வி. விஜயேந்திர பிரசாத்தின் கதையில், எம்.எம். கீரவாணியின் இசையில், ரவி தேஜா கதாநாயகனாக நடித்து 2006இல் வெளியான 'விக்ரமார்குடு' திரைப்படம் தெலுங்கு சினிமாவில் பெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான 'சிறுத்தை' (2011), இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் 'ரவுடி ரத்தோர்' (2012), கன்னடத்தில் கிச்சா சுதீப் நடிப்பில் 'வீர மடகரி' (2009), வங்கதேச பெங்காலி மொழியில் 'உல்டா பால்டா 69' (2007), இந்திய பெங்காலி மொழியில் 'பிக்ரம் சிங்க' (2012) என இத்திரைப்படத்தின் வெவ்வேறு வடிவங்களும் பெரும் வெற்றி பெற்றன.
"விக்ரமார்குடு திரைப்படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்துவிட்டார்கள், அனைத்தையும் பார்த்துவிட்டேன். ஆனால், ரவி தேஜா அளவுக்கு, அந்தக் கதாபாத்திரத்தை யாரும் சிறப்பாக செய்யவில்லை" என ஒரு திரைப்பட விழாவில் பேசியிருந்தார் விஜயேந்திர பிரசாத்.
அதே சமயம், விக்ரமார்குடு திரைப்படத்தில் 'கதாநாயகி' சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து சில விமர்சனங்கள் எழுந்தன. 'கவர்ச்சிக்காக மட்டுமே ஆபாசமான முறையில் அனுஷ்காவின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது' என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
2. மகதீரா (2009)
ராஜமௌலி- கே.வி. விஜயேந்திர பிரசாத்- எம்.எம். கீரவாணி கூட்டணியில் உருவான மற்றொரு வெற்றிப் படம் இது.
நடிகர் ராம் சரணை தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாது, தமிழ் மற்றும் மலையாள திரையுலகிலும் பிரபலப்படுத்திய திரைப்படம் மகதீரா.
தமிழில் 'மாவீரன்' என்ற பெயரிலும், மலையாளத்தில் 'தீரா- தி வாரியர்' என்ற பெயரிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது. ஜப்பானிலும் இத்திரைப்படத்தின் மொழிமாற்று வடிவம் வரவேற்பைப் பெற்றது.
வரலாற்றுப் புனைவு கதாபாத்திரங்கள் மற்றும் மறுபிறவி எனும் அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு, பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட மகதீரா திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து அதேபோன்ற சில திரைப்படங்கள் அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவில் உருவாகின. ஆனால், அவை இந்தளவு வரவேற்பைப் பெறவில்லை.
"மகதீரா திரைப்படம் வெளியான போது, அது எனது திரை வாழ்வில் மிக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக இருந்தது. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பும் இருந்தது. அதற்கு முன் நான் எடுத்த 6 திரைப்படங்களில் இல்லாத ஒரு பயம், பதற்றம் எனக்கு அப்போது இருந்தது." என ஒரு நேர்காணலில் கூறியிருப்பார் இயக்குநர் ராஜமௌலி.
அதேபோல, தனது திரைவாழ்வில் தனக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்த திரைப்படம் 'மகதீரா' தான் என நடிகர் ராம்சரணும் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருப்பார்.
3. மரியாத ராமண்ணா (2010)
மகதீரா திரைப்படத்தின் மிகப்பெரும் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு 'மாஸ்- மெகா பட்ஜெட்' திரைப்படத்தை ராஜமௌலி இயக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தபோது, அதற்கு நேர்மாறாக வெளியான திரைப்படம் தான் 'மரியாத ராமண்ணா'.
காரணம், இப்படத்தில் கதாநாயகனாக நடித்தவர் தெலுங்கு சினிமாவின் நகைச்சுவை நடிகர் சுனில். திரைப்படமும் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது.
கதை மிகவும் எளிதானது, "கதாநாயகன் ராமு, ஒரு அப்பாவி. நகரத்தில் பணக்கஷ்டத்தில் தவிக்கும் அவன், சொந்த ஊரில் இருக்கும் ஒரு பூர்வீக நிலம் குறித்து அறிகிறான். அதை விற்க ஊருக்கு வரும் அவனை பழைய பகை துரத்துகிறது. ஒரு கட்டத்தில் பகையாளிகளின் வீட்டில் தஞ்சம் புகும் அவன், வெளியே வந்தால் மரணம் என்ற நிலையில் சிக்கிக்கொள்கிறான். அதன் பிறகு எப்படி தப்பித்தான்".
தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படம், தமிழில் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' (2014) என்ற பெயரில், சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றது. மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது.
"மகதீரா திரைப்படத்திற்கு நாங்கள் பல மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. எனவே அடுத்து ஒரு எளிமையான திரைப்படத்தை தான் எடுக்க வேண்டுமென அப்போதே முடிவு செய்துவிட்டேன். 'மரியாத ராமண்ணா' திரைப்படம் எங்கள் மொத்த குழுவிற்கும் ஒரு புத்துணர்ச்சியை அளித்தது" என ஒருமுறை குறிப்பிட்டிருந்தார் ராஜமௌலி.
4. ஈகா (2012)
'பான் இந்தியா திரைப்படம்' என்ற தனது கனவுக்கான முன்னோட்டமாகவே 'ஈகா' திரைப்படத்தைக் கருதினார் ராஜமௌலி. காரணம் தனது முந்தைய படங்களைப் போல அல்லாமல், ஒரே சமயத்தில் தெலுங்கு- தமிழ் என இருமொழிகளிலும் உருவானது இத்திரைப்படம்.
இருப்பினும், சந்தானம் நடித்திருந்த சில நகைச்சுவை காட்சிகள் தவிர்த்து, பிற காட்சிகள் தெலுங்கிலிருந்து 'மொழிமாற்றம்' தான் செய்யப்பட்டன என்ற விமர்சனமும் எழுந்தது.
ஆனால், தெலுங்கில் 'ஈகா' பெற்ற வெற்றிக்கு சற்றும் குறைவில்லாத ஒரு வெற்றியை தமிழில் வெளியான 'நான் ஈ' பெற்றது. குறிப்பாக வில்லன் கிச்சா சுதீப்பின் நடிப்பும் கதாபாத்திரமும் வெகுவாக பாராட்டப்பட்டது.
'வில்லனால் கொல்லப்படும் கதாநாயகன், ஒரு 'ஈ'-யாக மறுபிறவி எடுத்து பழிவாங்க வருகிறான்' என்ற கதை மிகவும் சுவாரசியமாக இருந்தாலும், அது 'காக்ரோச்' என்ற ஆஸ்திரேலிய குறும்படத்தின் கதை என்றும், 'ஃப்ளுக்' (1995) என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இயக்குநர் ராஜமௌலி இதை மறுத்தார்.
ஒரு பான் இந்திய இயக்குநராக தன்னால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை தனக்கு கொடுத்தது 'ஈகா' தான் என சில நேர்காணல்களில் குறிப்பிட்டிருப்பார் ராஜமௌலி.
5. சிம்ஹாத்ரி (2003)
ராஜமௌலியின் பிற வெற்றிப்படங்களைப் போலவே, அவரது இரண்டாவது திரைப்படமான 'சிம்ஹாத்ரியும்' தமிழ் உள்பட வேறு சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், தமிழில் விஜயகாந்த் நடித்து 'கஜேந்திரா' (2004) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இத்திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
'கஜேந்திரா' திரைப்படத்தின் கதை ரஜினியின் 'பாட்ஷா' திரைப்படத்தை நினைவுபடுத்துவதாகவும், 'பாட்ஷா' படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவே 'கஜேந்திரா' படத்தையும் இயக்கியது படத்தை மேலும் சுவாரஸ்யமற்றதாக மாற்றிவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், தெலுங்கில் சிம்ஹாத்ரி திரைப்படம் இயக்குநர் ராஜமௌலிக்கும் நடிகர் ஜூனியர் என்டிஆருக்கும் தனி அடையாளத்தைப் பெற்றுக்கொடுத்தது. அதேபோல, கன்னடத்தில் 'கன்டீரவா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, ஓரளவு வரவேற்பைப் பெற்றது.
'தோல்வியைச் சந்திக்காத இயக்குநர்' என ராஜமௌலி கொண்டாடப்பட்டு வந்தாலும் கூட, அவருடைய பெரும்பாலான படங்களில் 'கவர்ச்சி பாடல்கள்' இடம்பெறுவதும், பெண் கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்படும் விதமும் ('விக்ரமார்குடு' நீரு கதாபாத்திரம் (அனுஷ்கா), 'பாகுபலி 1' அவந்திகா கதாபாத்திரம் (தமன்னா)) விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.
அதேபோல, பாகுபலி திரைப்படங்களில் பழங்குடியினரின் சித்தரிப்பும், 'காளகேயர்' என்ற பிரிவினரைச் சித்தரித்த விதமும் விமர்சிக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு