You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூய்மைப் பணியாளர்களின் 165 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி?
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கடந்த 165 நாட்களாக போராட்டம் நடத்திவந்த நிலையில், அமைச்சர் சேகர் பாபு நடத்திய பேச்சு வார்த்தையையடுத்து அந்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
அவர்களது எந்தெந்தக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருக்கின்றன? போராட்டம் முடிவுக்கு வந்தது எப்படி?
சென்னை மாநகராட்சியின் மண்டலங்கள் 5 மற்றும் 6-இல் (ராயபுரம், திரு.வி.க. நகர்) தூய்மைப் பணிகளை முழுமையாகத் தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.
இதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 1,900க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
சென்னை மாநகராட்சி அமைந்துள்ள 'ரிப்பன் மாளிகை' முன்பாக போராட்டம் துவங்கியது.
அதற்குப் பிறகு, மெரினா கடற்கரை, முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் நினைவிடம், உழைப்பாளர் சிலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆளும் தி.மு.கவின் தலைமையகமான அண்ணா அறிவாலயம், கூவம் நதி எனப் பல்வேறு இடங்களில் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தத் தொழிலாளர்கள் போராடிவந்தனர். இந்தப் போராட்டங்களின்போது அவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்துவந்தது.
ரிப்பன் மாளிகைக்கு முன்பாக போராட்டம் நடத்தியபோது பேச்சு வார்த்தை நடத்தப்பட்டாலும் அதில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை.
இதனால் தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடிவந்தனர். பிறகு, அம்பத்தூரில் உள்ள கல்யாணபுரம் பகுதியில் இருக்கும் உழைப்போர் உரிமை இயக்கத்தின் அலுவலகத்தில் 12 பெண் தூய்மைப் பணியாளர்கள் 3 கட்டங்களாக கடந்த 57 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில்தான் ஜனவரி 12-ஆம் தேதியன்று உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர்களை நேரில் சந்தித்தார் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு. அப்போது அவருடன் சென்னை மாநகர மேயர் ஆர். ப்ரியா, சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) அதிகாரிகள் ஆகியோரும் உடன் வந்தனர்.
அப்போது அவரிடம் இரு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதாவது, முன்பிருந்ததைப் போலவே (சுய உதவிக் குழு மூலம்) மீண்டும் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்றும் நாளொன்றுக்கு 761 ரூபாய் ஊதியமாக வழங்க வேண்டுமென்றும் தூய்மைப் பணியாளர்கள் கோரினர்.
இதற்குப் பிறகு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. "இந்த மாத இறுதிக்குள், அனைவரும் முன்பிருந்ததைப் போலவே மீண்டும் பணியமர்த்தப்படுவார்கள். இவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை மீண்டும் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்." என்றார் சேகர் பாபு.
இதற்குப் பிறகு தூய்மைப் பணியாளர்களின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பத்தூரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்களில் ஒருவரான அஸ்ரப் பேகம், தங்களது கோரிக்கைகள் அனைத்தையும் அரசு நிறைவேற்றித் தருவதாக வாக்களித்திருப்பதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
"எல்லாக் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவோம் என அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த மாத இறுதிக்குள் நாங்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப முடியுமென்றும் அவர் கூறினார். ஆனால், நாங்கள் ஜனவரி 20-ஆம் தேதிக்குள் எங்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கோரியிருக்கிறோம். அதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் தெரிவித்திருக்கிறார்," என்கிறார் அஸ்ரப் பேகம்.
இதுதவிர, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக 10,000 ரூபாயும் வழங்கப்பட்டிருக்கிறது.
பிரச்னையின் பின்னணி
சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 10 மண்டலங்களில் தூய்மைப் பணி ஏற்கெனவே தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ஐந்து மண்டலங்களில் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களை தனியார் வசம் ஒப்படைக்க மாநகராட்சி முடிவுசெய்தது.
அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த இரு மண்டலங்களிலும் தூய்மைப் பணி தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டது.
"ஆகஸ்ட் 1-ஆம் தேதி பணிக்குச் சென்றபோது ஒப்பந்தப் பணி என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே வேலை, இல்லையென்றால் வேலை இல்லை," என அதிகாரிகள் தெரிவித்த நிலையில், அன்றைய தினமே அவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
முதலில் சென்னை மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள ரிப்பன் மாளிகை முன்பு சுமார் 2,000 தொழிலாளர்கள் போராட்டத்தில் அமர்ந்தனர். அவர்களிடம் அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் எவ்வித ஒப்பந்தமும் எட்டப்படாத நிலையில், அவர்கள் காவல்துறையினரால் அகற்றப்பட்டனர். இதற்குப் பிறகு பல கட்டங்களாக வெவ்வேறு இடங்களில் போராட்டங்களை நடத்தினர்.
பத்தாண்டுகளுக்கு முன்பாக பணியில் சேரும்போது சுமார் 6,000 ரூபாயாக இருந்த தங்களுடைய ஊதியம், பத்தாண்டுகளில் படிப்படியாக சுமார் 23,000 ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில், மீண்டும் தனியாரிடம் சேர்ந்தால் அது 16,000 ரூபாயாக குறையும் என அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.
இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்தில் தமிழக அமைச்சரவை கூடி தூய்மைப் பணியாளர்களுக்கு என சில திட்டங்களை அறிவித்தது.
அதன்படி,
1. தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது ஏற்படும் தொழில்சார்ந்த நோய்களைக் கண்டறியவும் சிகிச்சை அளிக்கவும் தனித் திட்டம் நிறைவேற்றப்படும்.
2. தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால் தற்போது நல வாரியத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவியுடன் கூடுதலாக 5 லட்ச ரூபாய்க்கு காப்பீடு இலவசமாக ஏற்படுத்தித் தரப்படும்.
3. தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினர் சுய தொழில் தொடங்கும்போது அத்தொழிலுக்கான திட்ட மதிப்பீட்டில் 35% தொகை மானியமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ. 3,50,000 வரை இந்த மானியம் வழங்கப்படும்.
4. தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்காக புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
5. நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு, 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
6. நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த நகராட்சி, மாநகராட்சிகளின் மூலம் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதலில் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக மற்ற நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். - ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இருந்தபோதும், முன்பிருந்ததைப் போலவே தங்களை பணியில் சேர்க்கும்படி கோரி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்த போராடிவந்தனர்.
இனி என்ன நடக்கும்?
இப்போது 5, 6 ஆகிய இரு மண்டலங்களிலும் ஒரு தனியார் நிறுவனமே தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
"இந்த இரு மண்டலங்களிலும் ஏற்கனவே 1953 பேர் பணியாற்றிவந்தனர். இவர்களில் சுமார் 500 பேர் தனியார் நிறுவன பணியை ஏற்றுக்கொண்டு சேர்ந்துவிட்டனர். 1,401 பேர் மட்டுமே தொடர்ந்து போராடிவந்தனர். இந்த 1,401 பேரும் இந்த மாத இறுதிக்குள் முன்பிருந்த விதிகளின்படி மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இவர்களுக்கு தினமும் 761 ரூபாய் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக அரசு தெரிவித்திருக்கிறது'' என்கிறார் உழைப்போர் உரிமை இயக்கத்தின் கு. பாரதி.
பணி நிரந்தரம் என்ற கோரிக்கையைப் பொறுத்தவரை அந்தக் கோரிக்கை தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. வழக்கின் முடிவைப் பொறுத்து அரசு முடிவெடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு