தினமும் திக்திக் நிலையில் ஆர்சிபி; இன்றைய போட்டி ஏன் முக்கியமானது?

பட மூலாதாரம், Getty Images
ஆமதாபாத்தில் நேற்று டாஸ் போட முடியாத அளவுக்கு பெய்த கனமழையால் ஆட்டம் கைவிடப்பட்ட பிறகு இரு அம்சங்கள் உறுதி செய்யப்பட்டன.
முதலாவதாக ஐபிஎல் தொடரிலிருந்து குஜராத் டைட்டன்ஸ் அணி வெளியேற்றப்பட்டது, இரண்டாவதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிப்பது உறுதியாகியுள்ளது.
மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி 13 போட்டிகளில் 11 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது, ஆனால், நிகர ரன்ரேட் மைனஸ் 1.063 ஆகச் சரிந்துள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 16-ஆம் தேதி சன்ரைசர்ஸ் அணியுடன் குஜராத் அணி மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வென்றாலும் குஜராத் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாது என்பதால் இது வெறும் சம்பிரதாய முறைக்காகவே போட்டி நடக்கும்.
ஆனால், சன்ரைசர்ஸ் அணி வென்றால், 16 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேறும். 2022ம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்குள் வந்த பின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லாமல் முதல்முறையாக குஜராத் அணி வெளியேறி இருக்கிறது.
கொல்கத்தா அணி 13 போட்டிகளில் 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரடே்டை 1.428 என வலுவாக வைத்துள்ளது. தனது கடைசி லீக்கில் ராஜஸ்தான் அணியை சந்திக்கிறது கொல்கத்தா அணி.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வென்று, மற்றொரு லீக்கிலும் ராஜஸ்தான் வென்றால், 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துவிடும். ஒருவேளை ராஜஸ்தான் அணி தனக்கிருக்கும் கடைசி இரு லீக் ஆட்டங்களில் ஒன்றில் வென்று கொல்கத்தாவிடம் தோற்றால் 18 புள்ளிகளுடன் முடிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், சன்ரைசர்ஸ் அணி 18 புள்ளிகள் பெற வாய்ப்பிருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றில் 2-ஆவது இடம், 3-ஆவது இடத்தைப் பிடிக்க 2 அணிகளுக்குள் கடும் போட்டி ஏற்படும். ஆர்சிபி, அணி தானாகவே போட்டியிலிருந்து வெளியேறும்.
ஒருவேளை கொல்கத்தா அணி ராஜஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்தால், ராஜஸ்தான் அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்திலும், கொல்கத்தா அணி 19 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தையும் பிடிக்கும்.
ஒருவேளை கொல்கத்தாவை வெல்லும் ராஜஸ்தான், மற்றொரு லீக்கில் பஞ்சாப்பிடம் தோற்றால், 18 புள்ளிகளுடன் முடிக்கும். அப்போது கொல்கத்தா அணி தோற்றாலும், தானாகவே 19 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். 18 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி முடிக்கும்.
சன்ரைசர்ஸ் அணியின் வெற்றி, தோல்விகளைப் பொறுத்து ராஜஸ்தான் அணி நிலை முடிவாகும். இப்போதுள்ள நிலையில் சன்ரைசர்ஸ், சிஎஸ்கே அணிகளின் நிகர ரன்ரேட்டைவிட ராஜஸ்தான் அணியின் நிகர ரன்ரேட்தான் மோசமாக 0.349 என்று குறைவாக இருக்கிறது.
சிஎஸ்கே நிகர ரன்ரேட் 0.528 ஆகவும், சன்ரைசர்ஸ் ரன்ரேட் 0.406 ஆக இருக்கிறது. ஆதலால் அடுத்ததாக ராஜஸ்தானுக்கு மிகப்பெரிய வெற்றிகள் கிடைத்தால்தான் முதலிடத்தைப் பிடிக்க முடியும். ஒரு வெற்றி கிடைத்தாலும், அது நிகர ரன்ரேட்டில் சன்ரைசர்ஸ், அணியைவிட உயர்த்தும் அளவுக்கு இருக்க வேண்டும். அல்லது சன்ரைசர்ஸ் அணி இரு லீக் ஆட்டங்களில் ஒன்றில் தோற்க வேண்டும். இவ்வாறு நடந்தால், ராஜஸ்தான் அணி முதல் இரு இடங்களில் ஏதாவது ஒன்றைப் பிடிக்க முடியும்.
தற்போதைய சூழலில் ப்ளே ஆப் சுற்றில் 3 இடங்களைப் பிடிக்க ராஜஸ்தான், சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், லக்னெள, ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஆர்சிபி அணிக்கு தினமும் ‘திக்திக்’ நிலை
ஆர்சிபி அணி தற்போது 13 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் வலுவாக 5வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியைவிட சிறப்பாக 0.387 வைத்திருந்தும் 5-Eவது இடத்தில் ஆர்சிபி இருக்கிறது. வரும் சனிக்கிழமை நடக்கும் கடைசி லீக்கில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி வென்றால் 14 புள்ளிகளுடன் முடிக்கும்.
இது ப்ளே ஆஃப் சுற்றுக்கு கணிதரீதியாக போதும் என்றாலும் நிதர்சனத்தில் போதாதது. ஒருவேளை லக்னெள, சன்ரைசர்ஸ் அணிகள் தங்களின் கடைசி லீக் ஆட்டங்களில் தோல்வி அடைந்தால், ஆர்சிபி அணி நிகர ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப் சுற்றில் 4-ஆவது இடத்தைப் பிடிக்கலாம்.
அதனால் செவ்வாய்க்கிழமை முதல் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் அந்தந்த அணிகளுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஆர்சிபி அணிக்கும் முக்கியமானது. உதாரணத்துக்கு லக்னௌ அணி அடுத்து வரும் இரண்டு போட்டிகளிலும் வென்றால் ஆர்சிபி அணி தனது கடைசி போட்டியில் வென்றாலும் பிளேஆப் செல்ல வாய்ப்பில்லை. செவ்வாய்க்கிழமை நடக்கும் போட்டியில் டெல்லி அணி வென்றால் ஆர்சிபியின் வாய்ப்பு அதிகமாகும்.

பட மூலாதாரம், Getty Images
சிஎஸ்கே அணிக்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல் என்ன?
சிஎஸ்கே அணி தற்போது 13 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் 0.528 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது. இன்னும் ஆர்சிபி அணியுடன் மட்டும் ஒரு போட்டி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே தோற்றால் 14 புள்ளிகளுடன் முடித்தாலும், நிகர ரன்ரேட் பெரிதாகக் குறையாது. மோசமான தோல்வியைச் சந்தித்தால்தான் சிஎஸ்கே நிகர ரன்ரேட் அடிவாங்கும். ஒருவேளை ஆர்சிபியை வென்றால் சிஎஸ்கே அணி 16 புள்ளிகளுடன் வலுவான நிக ரன்ரேட்டில் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும். ஆர்சிபி வெளியேற்றப்படும்.
ஒருவேளை ஆர்சிபி அணியிடம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தால், சன்ரைசர்ஸ் அல்லது லக்னெள அணிகளில் ஏதாவது ஒன்று தங்களுக்கு இருக்கும் இரு லீக் ஆட்டங்களில் ஒன்றில் தோற்று 14 புள்ளிகளோடு முடிக்க வேண்டும். அவ்வாறு நடந்தால், நிகர ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றில் 3-ஆவது இடத்தைப் பிடிக்கும். 4-ஆவது இடத்துக்கு ஆர்சிபி, சன்ரைசர்ஸ், லக்னெள அணிகள் போட்டியிடும்.
அதனால் சிஎஸ்கே அணிக்கும் மற்ற அணிகளின் வெற்றி தோல்வி முக்கியமானதாக இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
ராஜஸ்தானுக்கு எந்த இடம்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது 12 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்தாலும், நிகர ரன்ரேட்டில் 5-ஆவது இடத்தில் இருக்கும் ஆர்சிபியைவிட குறைவாக 0.349 எனக் குறைவாக இருக்கிறது. ராஜஸ்தான் அணி தனக்கிருக்கும் 2 லீக் ஆட்டங்களில் கட்டாய வெற்றி பெற்றால் 20 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கலாம்.
ஒருவேளை ஒரு ஆட்டத்தில் வென்று, கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றால் 18 புள்ளிகளுடன் ராஜஸ்தான் அணி முடிக்கும். அதேசமயம், 14 புள்ளிகளுடன் இருக்கும் சன்ரைசர்ஸ் அணி தனக்கிருக்கும் 2 லீக் ஆட்டங்களிலும் வெல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு சன்ரைசர்ஸ் இரு வெற்றிகள் பெற்றால், ராஜஸ்தான் அணி 2-ஆவது இடம் பெறுவது சிக்கலாகிவிடும். ஏனென்றால் ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் அணிகள் தலா 18 புள்ளிகளுடன் முடிக்கும். நிகர ரன்ரேட்டில் தற்போது ராஜஸ்தானைவிட அதிகமாக சன்ரைசர்ஸ் வைத்திருப்பதால், 18 புள்ளிகளுடன் முடிக்கும் போது சன்ரைசர்ஸ் வலுவான ரன்ரேட்டைப் பெற்று 2வது இடத்தைப் பிடிக்கும். ராஜஸ்தான் அணி 3வது இடத்துக்கு தள்ளப்படும்.
ஒருவேளை ராஜஸ்தான் அணி தனக்கிருக்கும் 2 லீக் ஆட்டங்களிலும்அதிர்ச்சித் தோல்வி அடைந்தால் 16 புள்ளிகளுடன் மைனஸ் ரன்ரேட்டில் முடிக்கும். அப்போது சிஎஸ்கே அணி ஒருவேளை ஆர்சிபியை வென்று 16 புள்ளிகளோடு முடித்தால் 3வது நிகர ரன்ரேட்அடிப்படையில் 3-ஆவது இடத்தைப் பிடிக்கலாம். 4வது இடத்துக்கு லக்னெள அணியுடன் ராஜஸ்தான் நிகர ரன்ரேட்டில் போராடும். லக்னெள அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் இரண்டிலும் வென்றால் ராஜஸ்தான் அணியுடன் கடைசி இடத்துக்கு சண்டையிடும், ஒருவேளை ஒன்றில் தோற்று, ஒன்றில் வென்றால், ராஜஸ்தான் அணி ப்ளே ஆஃப்பில் கடைசி இடத்தைப் பிடிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
சன்ரைசர்ஸ் அணிக்கு 2-ஆவது இடம் கிடைக்குமா?
சன்ரைசர்ஸ் அணி 12 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே அணியைவிட குறைவாக 0.406 என இருப்பதால் 4வது இடம். இன்னும் இரு லீக் ஆட்டங்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு இருக்கின்றன. இதில் இரண்டிலும் சன்ரைசர்ஸ் அணி வென்றால் 18 புள்ளிகளுடன் வலுவான நிக ரன்ரேட்டை பெற்று முடிக்கும்.
ராஜஸ்தான் அணியும் தனக்கிருக்கும் கடைசி 2 லீக் ஆட்டங்களில் வலுவான வெற்றியுடன் சன்ரைசர்ஸ் நிகர ரன்ரேட்டை முறியடிக்கும் ரன்ரேட்டுடன் முடித்தால் 2-ஆவது இடத்தைப் பிடிக்கலாம். இல்லாவிட்டால் சன்ரைசர்ஸ் அணி 2வது இடம் பெறும்.
ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி தனக்கிருக்கும் 2 லீக் ஆட்டங்களில் ஒன்றில் வென்று, மற்றொன்றில் தோற்றால், 16 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் முடிக்கும். அப்போது, சிஎஸ்கே அணியும் 16 புள்ளிகளுடன் இருந்தால், நிகர ரன்ரேட்டில் இரு அணிகளுக்கும் 3வது மற்றும் 4வது இடத்துக்கு போட்டி ஏற்படும்.
ஒருவேளை சிஎஸ்கே அணி 14 புள்ளிகளுடன் முடித்தால் சன்ரைசர்ஸ் அணி தானாகவே 3வது இடத்தை உறுதி செய்யும்.
ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி தனக்கிருக்கும் 2 லீக் ஆட்டங்களிலும் தோற்றால் 14 புள்ளிகளுடன் முடிக்கும். சிஎஸ்கே அணி 16 புள்ளிகள் பெற்றிருந்தால் 3வது இடத்தை பிடித்துவிடும். ஒருவேளை சிஎஸ்கே அணியும் 14 புள்ளிகள் பெற்றிருந்தால், ஆர்சிபி, சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் இடையே 3 மற்றும் 4வது இடத்துக்கு கடும் போட்டி ஏற்படும்.
இதில் லக்னெள அணி கடைசி இரு ஆட்டங்களில் வென்றால் புள்ளிக்கணக்கில் 16 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை லக்னெள அணி ஒரு ஆட்டத்தில் வென்று, மற்றொன்றில் தோற்றால் 14புள்ளிகளோடு 3வது மற்றும் 4வது இடத்துக்கு சன்ரைசர்ஸ், சிஎஸ்கே, ஆர்சிபி அணிகளுடன் மல்லுகட்டும்.

பட மூலாதாரம், Getty Images
லக்னெளவுக்கு 2 வெற்றிகள் தேவை
லக்னெள அணி 12 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட்டில் 0.769 என்ற குறைவாக இருக்கிறது. லக்னெள அணி தனக்கிருக்கும் இரு லீக் ஆட்டங்களில் வென்று 16 புள்ளிகளுடன் இருந்தால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு போட்டியிடலாம். ஆனால் நிகர ரன்ரேட் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், ஆர்சிபி அணியைவிட உயர்வாக இருக்க வேண்டும். அதற்கு லக்னெள அணிக்கு இரு பிரமாண்ட வெற்றிகள் அவசியம். ஒருவேளை நிகர ரன்ரேட்டை பெரிதாக உயர்த்தாமல் 16 புள்ளிகள் பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றில் இடம் பெற காத்திருக்க வேண்டும்.
அதாவது 4-ஆவது இடத்தைப் பிடிக்கும் போட்டியில் சிஎஸ்கே கடைசி லீக்கில் தோற்றால் 14 புள்ளிகளுடன் முடிக்கும். சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை 16 புள்ளிகள் அல்லது 18 புள்ளிகள் பெற்றால் 2 அல்லது 3வது இடத்தைப் பிடிக்கலாம். கடைசி இடத்துக்கான போட்டியில் லக்னெள அணி 16 புள்ளிகளைப் பெற்றிருந்தால், சிஎஸ்கே அணியை தள்ளிவிட்டு நிகர ரன்ரேட் மோசமாக இருந்தாலும், 4வது இடத்தைப் பிடிக்க முடியும்.
ஒருவேளை லக்னெள அணி 14 புள்ளிகள் மட்டும் பெற்றால், சிஎஸ்கே, ஆர்சிபி, டெல்லி அணிகளும் 14 புள்ளிகள் பெற்றால், நிக ரன்ரேட் அடிப்படையில் சிஎஸ்கே 4வது இடத்தைப் பிடிக்கும். லக்னெள அணி வெளியேறும்.
ஆதலால் லக்னெள அணி இன்று நடக்கும் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்திலும், மும்பைக்கு எதிரான ஆட்டத்திலும் பெரிய வெற்றிகள் பெற வேண்டும். சிஎஸ்கே அணியும், ஆர்சிபியுடன் தோற்க வேண்டும். இவை நடந்தால், சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேற்றப்படும். ஒருவேளை சிஎஸ்கே அணி வென்றால் 16 புள்ளிகள், வலுவான நிகர ரன்ரேட்டுடன் லக்னெளவுக்கு சிக்கலாகிவிடும். சன்ரைசர்ஸ் அணியின் முடிவுக்காக லக்னெள காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












