கடைசி நாள் ஆட்டம்: இமாலய இலக்கை அடைந்து இந்தியா சாதனை படைக்குமா? 1979 வரலாறு திரும்புமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
லண்டனில் நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடைசி நாளான இன்று இந்திய அணி வெற்றிக்கு இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது, கைவசம் 7 விக்கெட்டுகள் இருப்பதால், வெற்றிக்காக ஆஸ்திரேலியா, இந்திய அணிகள் கடுமையாகப் போராடும்.
ஏற்கெனவே 2021இல் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிராக கோப்பையை இந்திய அணி தவறவிட்டது. அதுபோல் இந்த முறை நடந்துவிடக்கூடாது என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் ஆட்டத்தைக் கையாளும் எனத் தெரிகிறது.
விராட் கோலி 44 ரன்களுடனும், அஜிங்க்யா ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளனர். 444 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணி இதுவரை 3 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்துள்ளது, இன்னும் 280 ரன்கள் மட்டுமே வெற்றிக்குத் தேவைப்படுகிறது.
சாதனை படைக்குமா இந்திய அணி
ஒருவேளை டெஸ்ட் அரங்கில் இந்த இமாலய இலக்கை இந்திய அணி சேஸிங் செய்துவிட்டால், உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை சேஸிங் செய்த அணியாக இந்தியா புகழ்பெறும்.
இதற்கு முன் 2003, மே 6-ம் தேதி ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 418 ரன்கள் இலக்கை மேற்கிந்தியத்தீவுகள் அணி சேஸிங் செய்ததே அதிகபட்சம். அதன்பின் 418 ரன்களுக்கு மேல் 4வது இன்னிங்ஸில் எந்த அணியும் இதுவரை வெற்றிகரமாக சேஸிங் செய்தது இல்லை.
ஒருவேளை இந்திய பேட்ஸ்மேன்கள் இன்னும் 280 ரன்களை எட்டி, சேஸிங் செய்துவிட்டால் அது உலக கிரிக்கெட் வரலாற்றில் அழிக்கமுடியாத பொன் எழுத்துகளால் பொறிக்கப்படும்.
கடைசி நாள் ஆட்டம் எப்படி இருக்கும்
கடைசி நாள் ஆட்டம் யார் பக்கம் மாறும் என்று உறுதியாகக் கூற முடியாததால் பரபரப்பாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நாளில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும், அதிலும் புதிய பந்தில் 40 ஓவர்கள் வரை ஆஸ்திரேலியா வீசும் என்பதால், இந்திய பேட்ஸ்மேன்கள் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.
ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெறுவதற்கு இன்னும் 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறது. விராட் கோலி, ரஹானே, ஜடேஜா, பரத், ஷர்துல் தாக்கூர் ஆகியோரை வெளியேற்றினால்தான் ஆஸ்திரேலிய அணிக்கும் நம்பிக்கை கிடைக்கும். ஆதலால் ஆஸ்திரேலிய அணிக்கும் வெற்றி எளிதாகக் கிடைத்துவிட வாய்ப்பில்லை.

பட மூலாதாரம், Getty Images
இன்று ஆட்டம் தொடங்கி, பந்தில் உள்ள பாலிஷ் தேயும் வரை இந்திய பேட்ஸ்மேன்கள் கவனத்துடன் ஆட வேண்டும். அதிலும் ஆட்டம் தொடங்கியவுடன் வீசப்படும் முதல் 15 ஓவர்கள் மிக முக்கியம். இந்த ஓவர்களை கடந்துவிட்டால், இந்திய பேட்ஸ்மேன்களை அசைத்துப் பார்ப்பது கடினமாகத்தான் இருக்கும்.
ஆடுகளத்தில் பந்து அதிகமாக ஸ்விங் ஆகவில்லை. ஆனால் சமனற்ற வகையில் பவுன்ஸ் ஆவது மட்டுமே இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். இந்திய அணிக்கு 280 ரன்களை எட்டுவதற்கு கடைசி நாள் முழுவதும் இருப்பதால், நிதானமாக ஆட்டத்தைக் கையாண்டு, விக்கெட்டுகளை மட்டும் இழக்காமல் ஆடினால் ஆட்டம் வசப்பட்டுவிடும்.
ரிஷப் பந்த் ஆட்டம் நினைவிருக்கா!
2021ஆம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டியில் 328 ரன்களை சேஸிங் செய்தபோது ரிஷப் பந்த், களத்தில் அட்டைபோல் ஒட்டிக்கொண்டு பேட் செய்து 89 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது ஹேசல்வுட், கம்மின்ஸ், ஸ்டார்க் ஆகியோர் பந்துவீசியும் ரிஷப் பந்த் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. ஏராளமான அடிகளை உடலில் தாங்கிக்கொண்டு வலியோடு பேட் செய்து, ரிஷப் பந்த் அந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
அதேபோன்ற வலி தாங்கிய ஒரு வெற்றியை, விராட் கோலி, ரஹானே மற்றும் அவர்களுக்கு அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் பெற்றுக் கொடுத்தால் இந்திய அணி வரலாற்று வெற்றி பெறும்.
ஷமியின் நம்பிக்கை
இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கூறுகையில், “2021இல் நியூசிலாந்திடம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இழந்துவிட்டோம். இந்த முறை நிச்சயம் தவறு செய்யமாட்டோம்," என்று கூறினார்.
மேலும், "கடைசி நாளில் சிறப்பாக பேட் செய்து 100 சதவீதம் போட்டியை வெல்வோம் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. 280 ரன்கள் பெரிய இலக்கு அல்ல. பேட்ஸ்மேன்கள் பந்தை மட்டும் கவனித்து சிறப்பாக ஆடினால் போதும், இலக்கை பற்றி யோசிக்கத் தேவையில்லை.
இதை ஏன் இவ்வளவு நம்பிக்கையுடன் கூறுகிறேன் என்றால், வெளிநாடுகளில் இதுவரை நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளோம். குழுவாக ஒன்று சேர்ந்து நம்பிக்கையுடன் அணுகிவிட்டால் அதில் வெற்றி கிடைத்துவிடும்,” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
444 ரன்கள் இலக்கு
நான்காவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 84.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 173 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கும், இந்திய அணி 296 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நெருக்கடி தரும் பந்துவீச்சு
இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 3வது நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் சேர்த்து. 296 ரன்கள் முன்னிலையுடன் இருந்தது. லாபுஷேன் 41, கிரீன் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் நேற்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில், காலை நேரத்தில் ஆடுகளத்தின் ஈரப்பதம், புதிய பந்தைப் பயன்படுத்திய உமேஷ் யாதவின் பந்துவீச்சு போன்ற காரணிகளால் லாபுஷேன் 41 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரே, க்ரீனுடன் சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடினர்.
முதல் இன்னிங்ஸைவிட 2வது இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டுக் கோப்புடனும், நெருக்கடியாகவும் பந்துவீசியதால், ரன் சேர்க்க ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். சிங்கில் ரன் எடுக்கவும், பவுண்டரி அடிக்கவும் சரியான தருணத்தை எதிர்பார்த்தனர், இந்திய பந்துவீச்சாளர்கள் மிகக் குறைவாகவே பந்துவீச்சில் தவறுகளைச் செய்தனர்.
ரவீந்திர ஜடேஜா வீசிய ஓவரில் பந்தை “லீவ்” செய்த கேமரூன் க்ரீன், பேட்டை உயரே தூக்கிப் பிடித்தார். ஆனால் பந்து, பேட்டின் ஓரத்தில் பட்டு, அவரின் கால் கேப்பில் பந்து ஸ்டெம்பில் பட்டு போல்டாகியது. கிரீன் 25 ரன்னில் துரதிர்ஷ்டமாக ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்து வந்த ஸ்டார்க், கேரேயுடன் சேர்ந்தார். இருவரும் சேர்ந்து வேகமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினர். அலெக்ஸ் கேரே அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க இந்தியப் பந்துவீச்சாளர்கள் நீண்டநேரம் போராடினர். ஆனால், ஸ்டார்க் தன்னுடைய பேட்டிங் திறமையால் 7 பவுண்டரிகள் விளாசி ரன்களை சேர்த்தார்.
ஏழாவது விக்கெட்டுக்கு இருவரும் 93 ரன்கள் சேர்த்தநிலையில் பிரிந்தனர். கடைசி வரிசையில் ஓரளவுக்கு பேட் செய்யக்கூடிய ஸ்டார்க் 41 ரன்களில் ஷமி பந்துவீச்சில் ஸ்லிப்பில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் கம்மின்ஸ் 5 ரன்கள் சேர்த்த நிலையில் ஷமி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தவுடன் ஆட்டத்தை டிக்ளேர் செய்ய முடிவு செய்தார். கேரே 66 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 84.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்து, இந்திய அணிக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், ஷமி, உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பட மூலாதாரம், Getty Images
ரோகித் சர்மா நல்ல தொடக்கம்
இந்திய அணி 444 ரன்கள் என்னும் இமாலய இலக்கைத் துரத்தி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ரோகித் சர்மா, கில் இருவரும் நல்ல தொடக்கம் அளித்தனர்.
முதல் இன்னிங்ஸை போல் இல்லாமல் ரோகித் சர்மா கால்களை நகர்த்தி அழகான கவர்டிரைவ் ஷாட்களையும், பேக்ஃபுட்டில் புல்பேக் ஷாட்களையும் ஆடினார்.
இடுப்புக்கு மேலே வந்த பந்துகளை லாகவமாக லெக் திசையில் தள்ளி பவுண்டரிகளை சேர்த்தார். ரோகித் சர்மாவின் ஆட்டம் 2வது இன்னிங்ஸில் பார்க்க அழகாக இருந்தது.
கில் அவுட் சர்ச்சை
சுப்மன் கில் தனது இயல்பான ஆட்டத்துக்கு வந்து இரு பவுண்டரிகளை விளாசினார். போலந்து வீசிய ஓவரில் பவுன்ஸராக வந்த பந்தை கில் பேட்டில் பட்டு ஸ்லிப்பில் இருந்த க்ரீன் கேட்ச் பிடித்தார். ஆனால் இந்த கேட்ச் சர்ச்சைக்குரியதாக இருந்தது.
கேமரூன் கிரீன் பந்து தரையில் பட்டபின் அதை கேட்ச் பிடிக்காமல் எடுத்தாரா அல்லது, தனது கைவிரல்களை அடியில் தாங்கி, கேட்ச் பிடித்தாரா என்பது சந்தேகத்துக்குரியதாக இருந்தது.
பந்து தரையில் பிட்ச் ஆவதற்கு முன்பாகவே கிரீன் கேட்ச் பிடித்தாரா அல்லது தரையில் பிட்ச் ஆன பின் பிடித்தாரா என்பதற்கு முழுமையான ஆதாரங்கள் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
சந்தேகத்தின் பலன் யாருக்கு
சந்தேகத்தின் பலனை எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகவே வழங்கிட வேண்டும். ஏனென்றால், பேட்ஸ்மேன்களுக்கு அடுத்த வாய்ப்பு என்பது இல்லை, பந்துவீச்சாளர்களுக்கு அடுத்தடுத்து ஓவர்கள் இருப்பதால், பலன் பெற வேண்டியது பேட்ஸ்மேன்தான்.
ஆனால் கீரின் கைவிரல்கள் தரையில் இருப்பதால், பந்தை தாங்கிப் பிடித்து கேட்ச் பிடித்தார் என்று தீர்மானித்து 3வது நடுவர், கில்லுக்கு அவுட் வழங்கினார். இதைப் பார்த்த கேப்டன் ரோகித் சர்மா “நோ” என்று கூறி அதிருப்தி அடைந்தார்.
மேலும் ஆட்டமிழந்து சென்ற சுப்மன் கில் ட்விட்டரில், “கேமரூன் கிரீன் கேட்ச் பிடித்த காட்சி புகைப்படத்தைப் பதிவிட்டு, இன்னும் அதிகமாக ஆய்வு செய்திருக்க வேண்டும் என்ற ரீதியில் ஸ்கேனிங் அடையாளத்தைப் பதிவிட்டு அதிருப்தியை வெளியிட்டார்.
கில் ஆட்டமிழந்து சென்றதற்கு அரங்கில் இருந்த இந்திய ரசிகர்கள் மிகுந்த அதிருப்தி தெரிவித்து “சீட்”(ஏமாற்றுவேலை) “சீட்” என்று அரங்கில் அமர்ந்தவாறு சத்தமிட்டனர். அதிலும் கேமரூன் க்ரீன் பந்துவீச வந்தபோது ரசிகர்கள் “சீட், சீட்” என்று அவரைப் பார்த்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கில் அவுட் பற்றி இவர்கள் என்ன சொல்கிறார்கள்
ஆட்டத்தை வர்ணித்த வர்ணனையாளர்கள் சஞ்சய் மஞ்சரேக்கர், பிராட் ஹேடின் இருவரும் இரு வேறு கருத்துகளைத் தெரிவித்தனர். சஞ்சய் மஞ்சரேக்கர் கூறுகையில், “கிரீன் பிடித்தது அருமையான கேட்ச்தான் என்றாலும், பந்து தரையில் பிட்ச் ஆகி பிடிக்கப்பட்டதா என்பதை காட்சியை உறைய வைத்துத் தெரிவித்திருக்கலாம். பல்வேறு கோணங்களில் டிவி நடுவர் ஆய்வு செய்திருக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹேடின் “,கிரீன் பிடித்தது உண்மையான கேட்ச். தரையில் அவரின் விரல்கள் இருக்கும் நிலையில்தான் கேட்ச் பிடித்தார்” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறுகையில், “இந்தக் காட்சியை நேரில் பார்த்தபோதும், டிவி ரீப்ளேவில் பார்த்தபோதும் அற்புதமான கேட்சாக இருந்தது.
ஆனால், டிவி ரீப்ளே காட்சியைப் பார்த்தபோது, என்னால் இது சிறந்த கேட்சா அல்லது தரையில் பிட்ச் ஆன பின் பிடிக்கப்பட்டதா என்று கூற முடியவில்லை. பந்தின் சில பகுதி தரையிலும், மற்ற பகுதிகள் கேமரூன் க்ரீன் கைவிரல்களிலும் இருந்தன. இதை டிவி நடுவர் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்திருக்கலாம்,” எனத் தெரிவித்தார்.
இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுகையில், “க்ரீன் கேட்ச் பிடித்தபோது, பந்து தரையில் பட்டுள்ளதாகவே நான் நம்புகிறேன். அவரது கைவிரல்கள் தரையில் இருந்தன, பந்து விரல்களில் இருந்தது என்றாலும், பந்து தரையில் படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பட்டுவிட்டது என்றாலே பந்து தரையில் பட்டுவிட்டது என்றுதான் அர்த்தம். ஆனால் 3வது நடுவர் முடிவெடுப்பதில் சிரமப்பட்டார்,” எனத் தெரிவித்தார்.
தேவையில்லாத ஷாட்டில் ஆட்டமிழந்த புஜாரா
அடுத்து வந்த புஜாரா, ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இருவரும் சீராக ரன்களை சேர்த்தனர். புஜாராவும் பந்துகளை வீணடிக்காமல் ரன்களை சேர்த்ததால் ரன் சேர்ப்பு வேகமெடுத்தது. ரோகித் சர்மா அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார், ஒரு சிக்ஸரும் அடித்து அரை சதம் நோக்கி நகர்ந்தார். இருவரின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைக் கடந்தது.
கம்மின்ஸ் வீசிய பந்தை புஜாரா எதிர்கொண்டார். பவுன்ஸராக வீசப்பட்ட அந்தப் பந்தை மேல் நோக்கி தட்டிவிட்டு பவுண்டரிக்கு அனுப்ப புஜாரா முயன்றார். ஆனால், பந்து வேகமாக பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் தஞ்சமடைந்து. புஜாரா தேவையில்லாமல் ஷாட் ஆடி 25 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் நேதன் லேயன் பந்தில் ஸ்வீப் ஷாட் ஆட ரோகித் சர்மா முயன்று கால் கேப்பில் வாங்கி 43 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இருவரும் 5 பந்துகள் வேறுபாட்டில் ஆட்டமிழந்து சென்றதால் இந்திய அணி லேசாகச் சறுக்கியது.
நான்காவது விக்கெட்டுக்கு விராட் கோலி, ரஹானே ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். குறிப்பாக கோலி தனது வழக்கமான கவர் டிரைவ் ஷாட்களில் சில பவுண்டரிகளை விளாசினார்.
கடைசிநாளில் கோலி ‘கிங்’ தான்! ஆனால்...
விராட் கோலி எப்போதுமே கடைசிநாளில் பேட் செய்வதை விரும்பக்கூடியவர். கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து 9 இன்னிங்ஸ்களில் கடைசிநாளில் பேட் செய்து 584 ரன்களை கோலி குவித்துள்ளார்.
இதில் அவரது சராசரி 93.33 ஆகும். கடைசிநாளில் பேட் செய்து கோலி இதுவரை 3 சதங்களையும், 3 அரைசதங்களையும் விளாசியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் கோலியின் கடும் பிரயத்தனம் ஒருமுறைகூட வெற்றியில் முடியவில்லை, 3 முறை இந்திய அணி தோல்வியையும், 6 முறை ஆட்டத்தை டிராவும் செய்திருக்கிறது.
ரஹானேவை பொறுத்தவரை கடைசிநாளில் இதுவரை 13 இன்னிங்ஸ் ஆடி 220 ரன்கள் சேர்த்துள்ளார். ஆனாலும் முதல்நாளில் ரஹானே சேர்த்த 89 ரன்கள்தான் இந்திய அணியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது. ஆகையால், ரஹானேவின் ஆட்டம் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
1979 வரலாறு திரும்புமா
இந்தியா, இங்கிலாந்துக்கு எதிராக 1979ஆம் ஆண்டு விளையாடிய டெஸ்ட் போட்டியை வரலாற்றில் மறக்க முடியாது.
சுனில் கவாஸ்கரின் இரட்டை சதம் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித் தரும் நிலையில் ஆட்டம் டிரா ஆனது. 1979, ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 4ம் தேதிவரை இதே ஓவல் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து இடையே டெஸ்ட் போட்டி நடந்து.
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 305 ரன்களிலும், இந்தியா 202 ரன்களிலும் ஆட்டமிழந்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 8 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
438 ரன்கள் இலக்கோடு பயணித்த இந்திய அணிக்கு சுனில் கவாஸ்கர் இரட்டை சதம் அடித்து 221 ரன்கள் சேர்த்தார். சேட்டன் சவுகான் 80, வெங்சர்க்கர் 52 ரன்கள் எனக் கைகொடுக்க இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 429 ரன்கள் சேர்த்தது.
வரலாற்று வெற்றிக்கு இந்திய அணிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் டிரா ஆனது. இதுபோல் இந்த முறையும் டிரா ஆகுமா அல்லது இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்பது கோடிக்கணக்கான இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












