கோஹினூர் வைரத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவது உண்மையில் சாத்தியமா?

கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜுபைர் அகமது
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கோஹினூர் வைரம் உள்ளிட்ட இந்தியாவுக்கு சொந்தமான விலைமதிப்பற்ற கலைப்பொருட்கள் பலவும் பிரிட்டனில் இருக்கின்றன. இவற்றை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், உண்மையில் அது சாத்தியமா?

கோஹினூர் வைரம் மற்றும் பிற விலைமதிப்பற்ற கலைப்பொருட்களை பிரிட்டனில் இருந்து திரும்பக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை கடந்த காலங்களில் அடிக்கடி எழுப்பப்பட்டது. இந்தக் கோரிக்கை நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா?

கடந்த மாதம் திப்பு சுல்தானின் வாள் மற்றும் பிற கலைப்பொருட்கள் லண்டனில் 147 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.

பிரிட்டனில் அரிய இந்திய கலைப்பொருட்கள் பல அடங்கிய பெரிய பொக்கிஷமே உள்ளது. அவற்றை இந்தியாவுக்கு கொண்டு வர இந்திய அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்தத் தொன்மையான பொக்கிஷங்களை மீட்டுக் கொண்டுவர மோதி அரசும் முயற்சி செய்து வருகிறது. பிபிசி செய்தியாளர் ஜுபைர் அகமது, அரசாங்கம் என்ன சவால்களை இந்த விஷயத்தில் எதிர்கொள்கிறது, கொள்ளையடிக்கப்பட்ட அந்தத் தொன்மையான பொக்கிஷங்களை பிரிட்டன் எப்போதாவது இந்தியாவுக்கு திருப்பித் தரும் வாய்ப்பு உள்ளதா என்பனவற்றை இந்தக் கட்டுரையில் ஆராய முற்பட்டுள்ளார்.

விலைமதிப்பற்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது மிகப்பெரிய குற்றம்

ஹிட்லரின் யூத இன அழித்தொழிப்பில் தப்பிப் பிழைத்தவர்கள் அடிக்கடி சொல்லும் விஷயம்: ‘நாஜிக்கள் யூதர்களை கொத்துக் கொத்தாகக் கொல்வதோடு மட்டும் நிற்கவில்லை. யூதர்களின் ஆயிரக்கணக்கான கலைப் படைப்புகளையும், தொன்மைவாய்ந்த பொருட்களையும் களவாடினர்.’

குற்றவுணர்ச்சியில் சிக்கியிருந்த ஐரோப்பா, இந்த இனப் படுகொலையைத் தடுக்க முடியாமல் போனதற்காக வருந்தியது. ஆனால், இரண்டாம் உலகப்போர் முடிந்ததும், அமெரிக்கா யூதர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலைப் படைப்புகளை மீட்டு அவர்களிடம் திருப்பி ஒப்படைக்கும் முயற்சிகளை மேற்கொண்டது.

அமெரிக்க ராணுவத்தின் வழிகாட்டுதலில் ஏழு லட்சம் கலைப் படைப்புகள் அடையாளம் காணப்பட்டு அவை எங்கிருந்து கொள்ளையடிக்கப்பட்டனவோ அந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டன. இவற்றில் பெரும்பான்மையான கலைப் படைப்புகளின் உரிமையாளர்கள் யூதர்கள்.

கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், Getty Images

இந்த முயற்சிகள் இத்தோடு நிற்கவில்லை. 1985இல் ஐரோப்பிய நாடுகள் யூதர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கலைப் படைப்புகளையும் பழைமை வாய்ந்த பொருட்களையும் கண்டறிந்து அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கத் தொடங்கின. 1998இல் 39 நாடுகள் இதற்கான ஓர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.

ஆனால், மத்தியக் காலங்களில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைக் கைப்பற்றி, அடிமைப்படுத்திய ஐரோப்பிய நாடுகள், அங்கிருந்து கொள்ளையடித்த பொருட்களைத் திருப்பித்தர எந்த முனைப்பையும் காட்டவில்லை.

ஆசிய, ஆப்பிரிக்க மக்கள் அடிமைப்படுத்தப்பட்டு, அவர்களது விலைமதிப்பற்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது மிகப்பெரிய குற்றம் என்ற சிந்தனை ஐரோப்பிய நாடுகளில் சமீப காலமாக முக்கியத்திவம் பெற்று வருகிறது. இத்தகைய குற்றத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடு இந்தியாதான்.

கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், Getty Images

இருண்ட வரலாறு

முதலில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியும், 1857ஆம் ஆண்டின் கிளர்ச்சிக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்தியாவிலிருந்து விலைமதிப்பற்றப் பொருட்கள், ஓவியங்கள், ஆடைகள், சிலைகள், நகைகள், வைரங்கள், மணிக் கற்கள் போன்றவற்றைக் கொள்ளையடித்தனர், அல்லது வலிந்து கைப்பற்றினர். சில பொருட்கள் அவர்களுக்குப் பரிசுகளாகக் கொடுக்கப்பட்டன, மீதமுள்ளவற்றை ஒப்பந்தங்கள் மூலம் கைப்பற்றினர்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் காலம், ‘இருண்ட கால’மாகப் பார்க்கப்படுகிறது.

பிபிசியுடனான ஒரு நேர்காணலில், வலதுசாரி கருத்தாளரான டாக்டர் சுவ்ரோகமல் தத்தா, இந்த விஷயத்தைப் பற்றிப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார். பிரிட்டிஷ் அரசு தனது கடந்தகாலக் குற்றங்களுக்காக வருத்தப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது எனக் கூறினார்.

“இந்தியாவின் விலைமதிப்பற்ற பாரம்பரிய பொருட்களை பிரிட்டிஷ் அரசு திருப்பித் தரவில்லையெனில், அவர்கள் கொத்தடிமை முறை, அடிமைத்தனம், காலனியாதிக்கம், மற்றும் இன அழித்தொழிப்பை ஆதரிப்பதாக உலகித்திடம் ஒப்புக்கொள்ள வேண்டும். இதைவிட, தனது இருண்ட வரலாற்றைச் சரிசெய்துகொள்ள பிரிட்டனுக்கு வேறு சந்தர்ப்பம் கிடைக்காது. இது இப்போது நடக்கவில்லையெனில் எப்போதுமே நடக்காது,” என்றார்.

கோஹினூர் வைரம்
படக்குறிப்பு, பிபிசியுடனான ஒரு நேர்காணலில், வலதுசாரி கருத்தாளரான டாக்டர் சுவ்ரோகமல் தத்தா, இந்த விஷயத்தைப் பற்றிப் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டார்.

‘India Pride Project’ எனும் சிறிய பொதுமக்கள் இயக்கம் இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்கப்பட்ட பொருட்களைத் திருப்பிக் கொண்டுவர முயல்கிறது. இது சென்னையைச் சேர்ந்த எஸ் விஜயகுமார், மற்றும் சிங்கபூரை சேர்ந்த கொள்கை நிபுணர் அனுராக் சாக்சேனா ஆகியோரால் 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

“ஒரு நாட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளைத் திருப்பித் தந்தாலொழிய அந்நாட்டிற்கு முழுமையான சுதந்திரம் கொடுத்ததாகாது,” என்கிறார் தத்தா.

கொள்ளையடிக்கப்பட செல்வம், சொத்துகள் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ பட்டியலை இதுவரை இந்தியா தயாரிக்கவில்லை. அவற்றின் மதிப்பும் இதுவரை கணக்கிடப்படவில்லை.

இந்திய தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், தொல்லியல் துறையிடம் அந்தப் பொருட்களின் பட்டியல் இல்லையென்றும் ஆனால் அந்தப் பொருட்களின் எண்ணிக்கை ஆயிரங்களில் இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

ஒரு கணிப்பின்படி பிரிட்டனில் மட்டும் 30,000 இந்திய பழம்பொருட்கள் இருக்கின்றன. ஆனால் அவையனைத்தும் விலைமதிக்க முடியாதவையாதலால், அவற்றின் மதிப்பைக் கணிப்பது சாத்தியமல்ல.

“இது இந்தியாவின் பாரம்பரியம், இது நமது கலாசாரத்தோடு தொடர்புடையது,” என்கிறார் தத்தா.

இந்தியாவின் விலை மதிப்பற்ற பொருட்கள்

இந்தியாவால் விலைமதிப்பற்ற இந்தப் பொருட்களை திருப்பிக் கொண்டுவர முடியுமா என்பதப் பார்ப்பதற்கு முன் , பிரிட்டனில் இருக்கும் விலைமதிப்பற்ற சில இந்தியப் பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம்.

கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், Getty Images

கோஹினூர் வைரம்

பிரிட்டிஷ் அரச நகைகளில் இருக்கும் மிகப் பிரபலமான இந்திய பொக்கிஷம் கோஹினூர் வைரம். 1849ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த போருக்குப் பிறகு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் கைப்பற்றப்பட்டு விக்டோரியா மகாராணிக்கு பரிசாக வழங்கப்பட்டது.

சுல்தான்கஞ் புத்தர் சிலை

இந்த புத்தர் சிலை செப்பினால் ஆனது. இது 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அதிமுக்கியமான சிலை. இப்போது விக்டோரியா ஆல்பெர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது.

கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், Getty Images

அமராவதி ஸ்தூபியின் புடைப்புச் சிற்பங்கள்

அமராவதி ஸ்தூபியிலிருந்து எடுக்கப்பட்ட கல்லால் ஆன புடைப்புச் சிற்பத் தொகுதிகள், புத்தரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை விவரிப்பவை. இவை இப்பொது லண்டனில் இருக்கும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளன.

திப்பு சுல்தானின் வாள்

லண்டனில், ஒரு தனியார் சேகரிப்பில் உள்ள இது இந்திய பாரம்பரியத்தின் முக்கியமான பகுதி.

சிவாஜியின் வாட்கள்

சத்ரபதி சிவாஜியின் மூன்று பிரபலமான வாட்கள் ‘பவானி’, ‘ஜகதம்பா’, ‘துல்ஜா’.

இவை தற்போது பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் உரிமையில் உள்ளன. லண்டனில் புனித ஜேம்ஸ் அரண்மனையில் வைக்கப்பட்டுள்ளன. ‘தி இந்து’ நாளிதழுடைய அறிக்கை ஒன்றின்படி மஹாராஷ்டிர அரசாங்கம், இவற்றைத் திருப்பிக் கொண்டு வருவதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளது.

திப்பு சுல்தானின் புலி

இது மதிப்புமிக்க ஓர் இயந்திர பொம்மை. ஒரு புலி, ஆங்கிலேய சிப்பாய் ஒருவனைக் கொல்வது போன்று வடிவமைக்கப்பட்டது.

மைசூர் பேரரசின் அரசரான திப்பு சுல்தானுக்காக வடிவமைக்கப்பட்டது. தற்போது இது வேல்ஸின் போவிஸ் கோட்டையில் வைக்கப்பட்டுள்ளது.

திப்பு சுல்தான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திப்பு சுல்தானின் புலி

அமராவதி பளிங்கு கைப்பிடிச் சுவர்கள்

பிரிட்டிஷ் அருங்காட்சியகம் அமராவதி ஸ்தூபியிலிருந்து எடுக்கப்பட்ட பளிங்கினால் ஆன கைப்பிடிச் சுவர்களையும் கொண்டுள்ளது. இவை கி.மு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த காட்சிகளைச் சித்தரிப்பவை.

பஞ்சாப் அரசரின் கிரீடம்

சீக்கிய பேரரசின் கடைசி அரசரான மகாராஜா ரஞ்சித் சிங்கின் கிரீடம் பிரிட்டனில் ராஜாங்க சேகரிப்பு அறக்கட்டளையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிரீடம் விலைமதிப்பற்ற பல வைரங்கள் மற்றும் மணிக்கற்களால் அலங்கரிக்கப்பட்டது.

கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், Getty Images

சோழப் பேரரசின் வெண்கல சிலைகள்

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் சோழப் பேரரசின் வெண்கல சிலைகள் அடங்கிய தொகுப்பு ஒன்று உள்ளது.

அற்புதமாக வடிவமைக்கப்பட்ட இந்தச் சிலைகள், 9ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை.

அவை சோழப் பேரரசு காலத்தில் வழிபாடு செய்யப்பட்ட கடவுள்கள், புனிதர்களாகக் கருதப்பட்ட மனிதர்களின் சிலைகள்.

பானி தானி ஓவியங்கள்

லண்டனில் உள்ள நேஷனல் கேலரியில் ‘பானி தானி’ என்றழைக்கப்படும் ராஜஸ்தானி மினியேச்சர் ஓவியம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஓவியம் 18ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. இது கிஷன் கர் அரண்மனை நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு பெண்ணைச் சித்தரிக்கிறது.

கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், Getty Images

இவை தவிர பிரிட்டன் வசம் இன்னும் ஆயிரக்கணக்கான விலைமதிப்பற்ற, இந்தியாவின் அரிய பொக்கிஷங்கள் உள்ளன. அவை முக்கியமாக பிரிட்டிஷ் அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழக நூலகங்கள், தனியார் சேகரிப்புகள், பிரிட்டிஷ் கிரீட நகைகளுடன் வைக்கப்பட்டுள்ளன.

“இந்தியாவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் எண்ணிக்கை சுமார் 25,000 முதல் 30,000 வரை இருக்கும் என்று நினைக்கிறேன். இது இன்னும் அதிகாரப்பூர்வமாக கணக்கிடப்படாததால் அதைவிட அதிகமாகவும்கூட இருக்கலாம்," என்கிறார் தத்தா.

இந்தியாவின் தொன்மையான பொருட்களை திருப்பிக் கொண்டு வர முடியுமா?

இந்தியாவின் பல முந்தைய அரசுகள், இதற்கு முன்பும்கூட கோஹினூர் வைரம் மற்றும் பிற விலைமதிப்பற்ற கலைப்பொருட்களை திருப்பித் தருமாறு பிரிட்டிஷிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், அதில் வெற்றி கிடைக்கவில்லை.

ஆனால், கோஹினூர் வைரத்தைப் போன்ற சர்ச்சைக்குரிய ஒன்றை மீண்டும் கொண்டு வருவது சாத்தியமில்லை என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ஹர்ஷ் திரிவேதி, இந்தியா இந்த விஷயத்தில் இரண்டு பெரிய சவால்களைச் சந்திக்கும் என்கிறார்.

அவரைப் பொறுத்தவரை, “முதல் சவால் சிக்கலான சட்ட நடைமுறைகள். திருடப்பட்ட அல்லது சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட கலைப்பொருட்களை திரும்பக் கொண்டு வருவதற்கான சட்ட நடைமுறை மிகவும் சிக்கலானதாக இருக்கும்.

கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், Getty Images

மேலும், இது பல்வேறு அதிகார வரம்புகள், சட்ட செயல்முறைகளை உள்ளடக்கியது. சட்டப்பூர்வ உரிமையை நிரூபிப்பது, அந்தக் கலைப்பொருட்கள் திருடப்பட்டது அல்லது சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டது என்பதற்கான ஆதாரம் உள்ளிட்ட பல சட்டரீதியான தடைகளை இந்தியா சந்திக்க நேரிடும்.

“இரண்டாவது சவால், அரசியல் மற்றும் ராஜ்ஜீயரீதியிலானது. அதற்கு நாடுகளுக்கு இடையிலான இணக்கமான அரசியல், ராஜ்ஜீய உறவுகள் இருக்க வேண்டும். காலனித்துவ காலத்தில் பெறப்பட்ட கலைப்பொருட்களை உள்ளடக்கிய விஷயம் என்பதால் இது மிகவும் சவாலானதாக இருக்கும். ஏனெனில், இது காலனித்துவ சக்திக்கும் அதனால் கைப்பற்றப்பட்ட நாட்டுக்கும் இடையிலான தீர்க்கப்படாத பிரச்னைகளை உள்ளடக்கியது.

சட்டத்தின் கண்ணோட்டத்தில் பார்த்தால், கோஹினூர் வைரத்தை மட்டுமாவது இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வரும் முடிவை அரசு கைவிட்டதைப் போல் தெரிகிறது. கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டுவரக் கோரி, 2016இல் ஒருவர் உச்ச நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்திய அரசு தனது பதிலில் கோஹினூர் மீது பிரிட்டிஷ் உரிமை கொண்டாடுவதை ஏற்றுக்கொண்டது. கோஹினூர் வைரம், இந்தியாவுடன் பிணைக்க முடியாத வரலாற்றை பிரிட்டன் கொண்டிருப்பதற்கு சான்றாக விளங்குகிறது.

கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், Getty Images

நடராஜர் சிலை நம்பிக்கை ஒளியைக் குறிக்கிறதா?

நடராஜர் சிலை

பட மூலாதாரம், Getty Images

கோஹினூர் வைரத்தின் இணையற்ற அழகும் அதனுடன் தொடர்புடைய கதைகளும் உலகெங்கிலும் உள்ள மக்களைக் கவர்ந்துள்ளது. இந்திய மக்களுக்கு இதுவோர் உணர்வுபூர்மான பிரச்னை. கோஹினூர் மற்றும் பிற இந்திய கலைப்பொருட்கள் மற்றும் சொத்துகளைத் திரும்பக் கொண்டுவர அரசு நிச்சயமாக முயலும் என்று இந்திய மக்கள் நம்புவதாக, பிரதமர் மோதிக்கு நெருக்கமானவர்கள் நம்புகிறார்கள்.

“இந்தியாவில் முந்தைய அரசுகள் இத்தகைய துணிச்சலான முயற்சியை மேற்கொள்வதற்கு, அரசியல்ரீதியிலான விருப்பம் இல்லாமல் இருந்தன. ஆனால் இப்போது நிலைமை நிறைய மாறிவிட்டது. இப்போது நம்மிடம் ஒரு சக்திவாய்ந்த தேசியவாத அரசு உள்ளது. அதனால்தான் மோதி அரசின்மீது மக்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர்,” என்கிறார் டாக்டர் தத்தா.

ஆனால், இந்தியா ஆதாரங்களையும் ஆவணங்களையும் சேகரித்துக்கொண்டு பிரிட்டன் நீதிமன்றத்தை நாடவேண்டும். லண்டனில் உள்ள பிரிட்டிஷ் சட்ட நிபுணர் சரோஷ் ஜெய்வாலா கூறுவது போல், “பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் அந்தக் கலைப்பொருட்களின் சட்டப்பூர்வ உரிமையை இந்தியாவால் நிரூபிக்க முடிந்தால் மட்டுமே இந்தியா தனது கலைப்பொருட்களைத் திரும்பப் பெற முடியும். இது மிகவும் கடினமான பணி. அதற்குத் தெளிவான ஆதாரங்கள் தேவைப்படும்,” என்கிறார் டாக்டர் தத்தா.

கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், Getty Images

நம்பிக்கை ஒளி இன்னும் மிச்சமிருக்கிறது. பிரிட்டிஷ் நீதிமன்றத்தில் சிக்கலான, தனித்துவமான வழக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கான பெருமை சரோஷ் ஜெய்வாலாவையே சேரும். தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோவிலில் இருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட நடராஜர் சிலை குறித்த வழக்கு அது.

அதுகுறித்து ஜெய்வாலா பேசியபோது, “இந்தச் சிலை இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு கடத்தப்பட்டது. ஜெய்வாலா அண்ட் கம்பெனி தமிழக அரசுடன் இணைந்து செயல்பட்டு வெற்றிகரமாக நடராஜர் சிலையை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது. இந்திய சட்டம் என்ற தனித்துவமான யோசனையின் அடிப்படையில் நாங்கள் வெற்றி பெற்றோம்.

நடராஜர் சிலை ஒரு மதிப்புமிக்க சிலை. இது சட்டத்தின்படி, ஒரு ‘நபரோ, நிறுவனமோ நடராஜர் சிலையின் சொந்த இல்லமாகக் கருதப்படும் தமிழ்நாட்டிலுள்ள அதன் கோவிலுக்குத் திரும்ப வேண்டுமென தாமாக வழக்கு போட முடியும்.

இந்த நடராஜர் சிலை தமிழ்நாட்டில் உள்ள விஸ்வநாத சுவாமி கோவிலில் இருந்து பிரிட்டனுக்கு கடத்தப்பட்டு விற்கப்பட்டது. இப்போது அந்தக் கோவிலுக்கு அந்தச் சிலை திருப்பிக் கொண்டு வரப்பட்டுவிட்டது.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் 240 பழங்கால தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் தெரிவித்தார்.

சுதந்திரம் அடைந்ததிலிருந்து 2015 வரை இருபதுக்கும் குறைவான கலைப்பொருட்களே இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன எனவும் பழங்கால கலைப்பொருட்கள் கடத்தப்படுவதும் தற்போது குறைந்துள்ளாகவும் அவர் கூறினார்.

சர்வதேச அருங்காட்சியக கண்காட்சியின் தொடக்க விழாவில் பேசிய அவர், “பண்டைய கலாசாரத்தைக் கொண்ட பல நாடுகள் இந்தப் பிரச்னையோடு பல ஆண்டுகளாகப் போராடி வருவதாகவும்” அவர் கூறினார்.

கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், Getty Images

விலைமதிப்பற்ற சிலைகளை மீண்டும் கொண்டுவர எடுக்கும் முயற்சி

இந்தியா பழைமையான கோவில்களைக் கொண்ட நாடு. பல நூற்றாண்டுகளாக அரிய, விலை மதிப்பற்ற சிலைகள், கலைப்பொருட்கள் தொடர்ந்து திருடப்பட்டு நாட்டிற்கு வெளியே கடத்தப்படுகின்றன.

இரண்டு சாதாரண குடிமக்கள் இந்தியாவில் உள்ள, இந்து, புத்த, சமண மத கோவில்களுக்குச் சொந்தமான சிலைகள், கலைப்பொருட்களை மீண்டும் கொண்டு வருவதறான பிரசாரத்தை ஆரம்பித்தனர்.

விஜய் குமார், அனுராக் சக்சேனா ஆகிய இருவரும் இந்த முயற்சியை 2013ஆம் ஆண்டு #BringOurGodsHome என்ற ஹேஷ்டேக்குடன் தொடங்கி, ‘இந்தியாவின் பெருமைமிகு திட்டம்’ எனப் பெயரிட்டனர்.

நியூ சௌத் வேல்ஸ் ஆர்ட் கேலரியில் இருந்து விருதாச்சலம் அர்த்த நாரீஷ்வரர், ஆஸ்திரேலியாவின் நேஷனல் கேலரியில் இருந்து ஸ்ரீபுரந்தன் நடராஜர், லண்டனில் இருந்து நாலந்தா புத்தர், பிரமஹா பிராமணி, டோலிடோ அருங்காட்சியகத்தில் இருந்து விநாயகர், ஆசியாவை சேர்ந்த புன்னன் ஜல்லூர் நடராஜ், பாஸ் ஸ்டேட் அருங்காட்சியகம் போன்றவற்றில் இருந்து சொசைட்டி நியூயார்க், அலிங்கனா மற்றும் திருப்பாம்பரம் சிலைகள், போன்ற பல பொருட்களை இந்தியாவுக்கு திரும்பிக் கொண்டு வந்ததாக விஜய் குமார் கூறுகிறார்.

கோஹினூர் வைரம்
படக்குறிப்பு, இந்தியாவின் பெருமைமிகு திட்டம் என்ற முயற்சியின் கீழ் பல கலைப்பொருட்களை இந்தியாவுக்கு திரும்பிக்கொண்டு வந்ததாக விஜய் குமார் கூறுகிறார்.

கலைப்பொருட்களைத் திரும்பப் பெறுவதற்கான ஏற்பாடுகள் என்ன?

இரண்டாம் உலகப் போரின் முடிவில், திருடப்பட்ட கலைப் பொருட்களைத் திரும்பப் பெறுவது குறித்த சர்வதேச சட்டத்தின் தேவைக்காக அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கலாசார கலைப் பொருட்களில் நிபுணரும் ஐரோப்பாவில் உள்ள பான்னெலி எரெர்டே கலை மற்றும் கலைப்பொருட்கள் கவனிப்புக் குழுவின் ஆலோசகருமான பேராசிரியர் மன்னிலியோ ஃப்ரிகோ, “கொள்கையளவில் இந்த விஷயங்களில் நடைமுறைப்படுத்தக்கூடிய இரண்டு முக்கிய சர்வதேச ஒப்பந்தங்கள் உள்ளன,” என்கிறார்.

இந்த ஒப்பந்தங்கள் கலாசார சொத்துகளின் பாதுகாப்பை மட்டுமல்ல, கட்டடக்கலை, வரலாற்று நினைவுச் சின்னங்கள், பாரம்பரிய தகவல்கள், கையெழுத்துப் பிரதிகள், கலை படைப்புகள், புத்தகங்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

ராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் திருடப்பட்ட கலாசார சொத்துகளைத் திரும்பப் பெறுவதற்கான கடமையையும் அவை தீர்மானிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் பிரிட்டனும் பங்கு பெற்றுள்ளன. இந்தியா 1958இல் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பிரிட்டன் 2917இல் கையெழுத்திட்டது.

இரண்டாவது பன்னாட்டு ஒப்பந்தம்(யுனெஸ்கோ) 1970இல் நிறைவேற்றப்பட்டது. இது சாமாதான காலத்தில் திருடப்பட்ட சொத்துகள், பொருட்கள் தொடர்பானது. பேராசிரியர் மன்னிலியோ ஃபிகோ, “இந்த ஒப்பந்தம் கலாசார சொத்துகளை வலியுறுத்துகிறது. இந்த ஒப்பந்தம் கலாசார சொத்துகளை சட்டவிரோதமாகக் கடத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நாடுகளை வலியுறுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம் திருடப்பட்ட கலாசார சொத்துகளைத் திரும்பப் பெறுவதே ஆகும்.

யுனெஸ்கோ மாநாட்டின் ஓட்டைகளை அடைக்கவும் பலவீனங்களைச் சரி செய்யவும் 1995இல் ரோம் நாட்டில் மற்றோர் ஒப்பந்தம் கையெழுத்தானது.

சட்டவிரோதமான, திருடப்பட்ட பொருட்களின் உரிமையாளர்களுக்கு இந்த ஒப்பந்தம் பொருந்தும். எனவே திருடப்பட்ட கலைப்பொருட்களின் உரிமையாளர் அவற்றைத் திருப்பித் தந்தாக வேண்டியது கட்டாயம். இந்த ஒப்பந்தம் உரிமைகோரல்களை மேற்கொள்வதற்கான கால வரம்பையும் தீர்மானிக்கிறது. கலாசார கலைப்பொருட்களைப் பெறுவதற்கு உரிய செயல்முறையைப் பின்பற்றுவதை வலியுறுத்துகிறது.

செப்டம்பர் 23, 2021 அன்று, இந்த சர்வதேச ஒப்பந்தங்களின்படி, 2003ஆம் ஆண்டு இராக் ஆக்கிரமிப்பின்போது திருடப்பட்ட 17,000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை அமெரிக்கா திருப்பியளித்தது.

ஆனால், இந்த மரபுகள் அனைத்தும் இடைக்காலத்தில் திருடப்பட்ட கலாசார கலைப் பொருட்களுக்குப் பொருந்தாது.

அதாவது நவீன இந்தியாவில் திருடப்பட்ட கலாசார கலைப்பொருட்களைத் திருப்பிக் கொடுக்குமாறு கோரப்படும். ஆனால், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, பிரிட்டிஷ் ராஜ் ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து திருடப்பட்ட முந்தைய கலாசார பொருட்கள் இந்த சர்வதேச உடன்படிக்கையின்கீழ் வரவில்லை.

கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், Getty Images

கலைப்பொருட்களை திருப்பி ஒப்படைக்க சட்டப்பூர்வமான வழிகளே இல்லையா?

லண்டனை சேர்ந்த வழக்கறிஞரும் பிரிட்டிஷ் சட்ட வல்லுனருமான சரோஷ் ஜெய்வாலா, “சட்டரீதியிலான பாதை இன்னும் திறந்துதான் உள்ளது. ஆனால், அது சவால்களும் சிரமங்களும் நிறைந்துள்ளது. இந்தியா விரும்பினால், கலாசார கலைப்பொருட்களை மீட்டெடுப்பதற்கான ஆதாரங்களுடன் பிரிட்டனில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம்,” என்று கூறுகிறார்.

“பிரிட்டிஷ் அரசு கலைப்பொருட்களை இந்தியாவுக்கு திருப்பித் தர ஒப்புக்கொண்டால், அவ்வாறு செய்ய எந்தச் சட்டத்தையும் இயற்ற வேண்டிய அவசியமில்லை. அதேபோல், கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திருப்பித் தருமாறு பிரிட்டிஷ் அரசுக்கு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டால், அதைத் திருப்பித் தந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்,” என்றும் அவர் கூறினார்.

டெல்லியில் உள்ள மூத்த வழக்கறிஞரும், இந்த விவகாரங்களில் நிபுணருமான ரஜத் பரத்வாஜ் இதுகுறித்துப் பேசியபோது, அரசு சட்ட, அரசியல் வாய்ப்புகளைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்.

மேலும், “இந்தக் கலைப்பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டதா அல்லது கொள்ளையடிக்கப்பட்டதா என்பதற்கு ஆவண ஆதாரம் இல்லையென்றால், அது சர்ச்சைக்குரிய தகவலாகவே எடுத்துக்கொள்ளப்படும். கோஹினூர் வைரத்தையும் பிற விலைமதிப்பற்ற கலைப்பொருட்களையும் மீண்டும் கொண்டு வருவதற்கான அனைத்து சட்ட, அரசியல் வாய்ப்புகளையும் அரசாங்கம் ஆராய வேண்டும். அவை நம் நாட்டின் சொத்துகள்.

இந்தியா தேவைப்பட்டால் சர்வதேச நீதிமன்றத்தையும் அணுக வேண்டும்,” என்கிறார் பரத்வாஜ்.

கோஹினூர் வைரம்

பட மூலாதாரம், Getty Images

மேலும், “இந்தக் கலைப்பொருட்கள் பரிசளிக்கப்பட்டனவா அல்லது சூரையாடப்பட்டனவா என்பதற்கான உண்மைகள்/சாட்சிகள் மற்றும் ஆவண ஆதாரங்களை ஆய்வு செய்த பிறகு இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,” என்றும் கூறினார் அவர்.

சூழ்நிலை படிப்படியாக மாறி வருகிறது. ‘அடிமைப்படுத்தப்பட்ட’ நாடுகளில் இருந்து திருடப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட கலைப்பொருட்களை திருப்பித் தரும் நேரம் வந்துவிட்டது என்பதை ஐரோப்பிய காலனித்துவ சக்திகள் இப்போது உணர்ந்துள்ளன. ஒரு காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளுக்கு திருடப்பட்ட பொருட்களை திருப்பித் தருவதற்காக பல ஐரோப்பிய நாடுகள் சட்டங்களை உருவாக்குகின்றன.

மன்னிலியோ ஃப்ரிகோவின் கூற்றுப்படி, திருடப்பட்ட அல்லது கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை திருப்பித் தருவதற்கு ஐரோப்பிய நாடுகள் சட்டங்களை உருவாக்குவது அவசியம். அவரது கூற்றுப்படி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், போர்ச்சுகல் போன்ற நாடுகளில் பொது சேகரிப்பில் உள்ள கலைப்பொருட்களைத் திருப்பித் தர ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும்.

குறைந்தபட்சம் சம்பந்தப்பட்ட கலைப்பொருட்கள் பொது சேகரிப்பிலுள்ள நாடுகளிலாவது (பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், போர்ச்சுகல் போன்ற நாடுகளில்) சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். ஆனால், பிரிட்டன் அத்தகைய பாதையை நோக்கிச் செல்வதற்குரிய வகையில் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

பேராசிரியர் மன்னிலியோ ஃப்ரிகோ, “எனக்குத் தெரிந்தவரை, பிரிட்டன் இதுதொடர்பாக எந்தச் சட்டத்தையும் இயற்றவில்லை. எனவே, எந்தவொரு கோரிக்கையும் வழக்கு வாரியாகவே பரிசீலிக்கப்படும். மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போல் இல்லாமல், கலைப்பொருட்களைத் திருப்பித் தருவதற்கு பிரிட்டன் பொருத்தமான சட்ட மூலோபாயம் எதையும் பின்பற்றவில்லை.," என்கிறார்.

கோஹினூர் வைரம்

இதுவொரு தார்மீக பிரச்னை

இந்தியாவில் உள்ள பல வல்லுநர்கள், கலைப்பொருட்களை மீண்டும் கொண்டு வருவதை சட்டம் அல்லது அரசியல் தொடர்பான பிரச்னையாகப் பார்க்கக்கூடாது என்று வாதிடுகின்றனர்.

ஐரோப்பாவில் உள்ள முன்னாள் காலனித்துவ சக்திகள் குறித்து உரையாற்றும்போது அனுராக் சக்சேனா “இதுவொரு தார்மீக பிரச்னை” என்று இதைக் குறிப்பிடுகிறார்.

“நம் வாழ்வையும் இயற்கை வளங்களையும் பாரம்பரியத்தையும் பறித்தீர்கள். எங்களின் உயிரையோ அல்லது இயற்கை வளங்களையோ உங்களால் திருப்பித் தர முடியாது. ஆனால், குறைந்தபட்சம் எங்களது பாரம்பரியத்தையாவது நீங்கள் திருப்பித் தர வேண்டும்,” என்று அனுராக் சக்சேனா கூறுகிறார்.

வலதுசாரி சிந்தனையாளரும் மோதி அரசாங்கத்தின் ஆதரவாளருமான டாக்டர் சுவ்ரோகமல் தத்தாவும் பாரம்பரியத்தை நிபந்தனையின்றி திரும்பப் பெறுவது பற்றிப் பேசுகிறார்.

“பல ஐரோப்பிய நாடுகள் தஙகளுடைய முன்னாள் காலனி நாடுகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட சொத்துகளைத் திருப்பித் தருகின்றன. ஏனெனில் அவர்கள் தங்கள் கடந்த கால கொடுமைகளுக்காக வெட்கப்படுகிறார்கள்.

அப்படிச் செய்வதிலிருந்து பிரிட்டனை தடுப்பது எது? பிரிட்டன் அத்தகைய நடவடிக்கையை எடுத்தால், அது நமது கடந்த காலத்தின் காயங்களை ஆற்றலாம். குறைந்தபட்சம், நமது வலி மிகுந்த நினைவுகளுக்கு ஓரளவுக்கேனும் மருந்தாக உதவும்,” என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: