சுனில் சேத்ரி: மெஸ்ஸி, ரொனால்டோ வரிசையில் உள்ள இந்திய கால்பந்து அணியின் 'மந்திர ஆட்டக்காரர்'

 சுனில் சேத்ரி

பட மூலாதாரம், Getty Images

கடந்த செவ்வாய்க்கிழமை குவைத் அணியை வீழ்த்தி தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியா வென்றது. இந்த வெற்றியின் மையமாக இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இருந்தார்.

கால்பந்து உலகில் இந்திய அணிக்காக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சுனில் சேத்ரி பங்களித்து வருகிறார். சுனில் சேத்ரியின் கால்பந்து பயணத்தை விளையாட்டு எழுத்தாளர் கெளதம் பட்டாச்சார்யா கவனித்து வருகிறார்.

'உங்கள் நாடு உண்மையில் கால்பந்து விளையாடுகிறதா?'

ஃபிஃபா உலகக்கோப்பை தொடர்பான செய்திகளுக்காக பயணிக்கும் இந்திய கால்பந்து எழுத்தாளர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி இது.

கால்பந்தாட்ட சுற்றுலாவின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா புகழ் பெற்றிருந்தாலும், கிரிக்கெட் மோகம் கொண்ட நாடு என்ற அடையாளத்தை இந்தியாவால் கைவிட முடியவில்லை. ஆனால், இந்த இடத்தில்தான் சுனில் சேத்ரி தனித்து நிற்கிறார்.

கால்பந்து வரலாற்றில் தவிர்க்க முடியாதவராக உருவெடுத்த சுனில்

சுனில் சேத்ரி, 38 வயதான இந்த கோல் மிஷின், கடந்த மூன்று வாரங்களில், இன்டர்கான்டினென்டல் கோப்பை, தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் போன்ற தொடர்களில் தனது நாட்டை முன்னின்று வழிநடத்திச் சென்றார்.

தற்போது விளையாடும் கால்பந்து வீரர்களில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

சுனில் 142 போட்டிகளில் 93 கோல்கள் அடித்துள்ளார். முதல் இரண்டு இடங்களில் முறையே கிறிஸ்டியானோ ரொனால்டோ (200 போட்டிகளில் 123 கோல்கள்) மற்றும் லியோனல் மெஸ்ஸி (175 போட்டிகளில் 103 கோல்கள்) உள்ளனர்.

ஒட்டு மொத்த கால்பந்து வரலாற்றில் பார்த்தாலும்கூட சுனில் சேத்ரி நான்காவது இடத்தில் உள்ளார். அவருக்கு முன்பாக மூன்றாவது இடத்தில் இரானிய கால்பந்து ஜாம்பவான் அலி தேயி, 148 போட்டிகளில் 109 கோல்களை அடித்து முன்னிலையில் உள்ளார்.

தலைசிறந்த 10 கால்பந்து வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது சுனிலை மேலும் தனித்துவமாக்குகிறது. ஏனெனில் இந்தப் பட்டியலில் கால்பந்து விளையாட்டிற்கு புகழ்பெற்ற ஹங்கேரிய வீரர் ஃபெரெங்க் புஸ்காஸ் ஆறாவது இடத்திலும் (84 கோல்கள்), போலந்தின் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி எட்டாவது இடத்திலும் (79 கோல்கள்) உள்ளனர்.

இதை சுனிலின் பின்னணியோடு ஒப்பிட்டு பாருங்கள். 50 ஆண்டுகளுக்கு முன் 1970இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா வெண்கலம் வென்றதே முக்கிய சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா பெற்ற கடைசி வெற்றியாக இருந்தது. அந்த நேரத்தில் அவர்களின் ஃபிஃபா தரவரிசை 100-க்கு அருகில் இருந்தது.

ஆனால், தற்போது இந்திய அணி ஆசிய கோப்பையில் இரண்டு முறை இறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்று அந்த வரலாற்றை மாற்றியது.

இப்படியான சூழலில்தான் சுனில் தனித்து மிளிர்ந்து இந்தியாவை பெருமைப்படுத்துகிறார். சுனிலின் சாதனைகள் முழுமையாக அங்கீகரிக்கப்படாமலும் இல்லை. ஃபிஃபா கடந்த ஆண்டு சுனிலை பற்றி கேப்டன் ஃபென்டாஸ்டிக் (Captain Fantastic) என்ற ஆவணப்படத்தை எடுத்தது. அது ஃபிஃபா+ சேனலில் உள்ளது.

தெற்காசிய சாம்பியன்ஷிப்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 9ஆவது முறையாக இந்தியா பதக்கம் வென்றது.

சுனிலை பற்றிய அனைத்து உரையாடல்களும் ரொனால்டோ, மெஸ்ஸி உடனான கோல் போட்டியில் அவரும் இருக்கிறார் என்பதிலேயே முடிவடையும்.

"ரொனால்டோவின் திறமைகளை நீங்கள் கொண்டிருக்க முடியாது அல்லது அவரைப் போல் கோல் அடிக்க முடியாது. ஆனால் நீங்கள் அவரைப் போல கடினமாக உழைப்பதை யாராலும் தடுக்க முடியாது" என பிரபல பிரிட்டிஷ் பயிற்சியாளர் பாப் ஹூட்டன் கூறியதை சுனில் ஒருமுறை குறிப்பிட்டார்.

சுனில் சேத்ரி சிறந்த கோல் விகிதத்தை எப்படி தொடர்ந்து தக்க வைத்துள்ளார்?

கடந்த செவ்வாயன்று பெங்களூரில் குவைத்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஷூட் அவுட்டிற்குப் பிறகு இந்தியா வென்ற தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்களில்தான் இதுவரை 25 சதவீத கோல்களை சுனில் அடித்துள்ளார்.

இந்த கோல்கள், 18 நட்புரீதியான போட்டிகள், 13 கண்டங்களுக்கு இடையிலான கோப்பை போட்டிகள், ஒன்பது ஃபிஃபா உலகக் கோப்பை தகுதிப் போட்டிகள், ஒரு நேரு கோப்பை, ஏ.எஃப்.சி (AFC) போட்டிகள், கிங்ஸ் கோப்பை ஆகியவற்றில் அடிக்கப்பட்டவை.

தெற்காசிய சாம்பியன்ஷிப் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த ஹாட்ரிக் கோல் உட்பட இதுவரை நான்கு ஹாட்ரிக்குகளை சுனில் அடித்துள்ளார்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் நெருக்கடியான கட்டத்தில் அணிக்கு கோல் அடிப்பதில் முக்கியமானவராக சுனில் இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டியே அதற்கு சாட்சி.

தொடக்க போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஹாட்ரிக் கோலுடன் தன் கோல் கணக்கைத் தொடங்கிய சுனில் ஒட்டுமொத்தமாக 6 கோல்கள் அடித்துள்ளார்.

இது அவரது ஆட்டத்தில் தனித்துவமான நிலைத்தன்மையைக் காட்டுவதோடு சுனிலுக்கு பிறகு அந்த இடத்தை நிரப்புவது யார் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

சுனிலின் வெற்றிக்குப் பின்னணியில் சர்வதேச கால்பந்து உலகில் அவரது நீண்ட அனுபவமும், விளையாட்டு நெறியும் இருப்பது வெளிப்படையானது.

எடுத்துக்காட்டாக, 2022-23 சீசன் சுனிலுக்கு சர்வதேச கால்பந்து உலகில் 18ஆவது ஆண்டு. 2005ஆம் ஜூனில் முதல் போட்டியில் சுனில் அறிமுகமானார். அதே ஆண்டில் மெஸ்ஸியும், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரொனால்டோவும் அறிமுகமானார்கள்.

சிறுசிறு தியாகங்களைச் செய்வதுதான் தன்னைத் தொடர்ந்து செல்ல வைப்பதாக கடந்த ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை தகுதிப் போட்டியின்போது சுனில் தெரிவித்தார்.

"இது நான் என்ன சாப்பிடுகிறேன், எவ்வளவு தூங்குகிறேன் என்பதைப் பொறுத்தது. அது மாதிரியான நல்ல வாழ்க்கை கடவுளின் அருளால் எனக்குக் கிடைத்துள்ளது.

பிரியாணியை தவிர்த்து ப்ரோக்கோலியை சாப்பிடுவது எனக்குப் பெரிய விஷயமல்ல. நான் விளையாடத் தொடங்கிய அதேநேரத்தில் பலர் என்னுடன் தொழில்முறை கால்பந்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள். சிலர் என்னைவிட சிறப்பாகவும் விளையாடினர். ஆனால், அவர்களால் விளையாட்டுக்குத் தேவையான உடற்தகுதியைத் தக்கவைக்க முடியவில்லை,’’ என்றார் சுனில்.

சுனில் சேத்ரிக்கு பிறகு யார்?

சர்வதேச மற்றும் க்ளப் போட்டிகளில் அவரது பல ஆண்டுக்கால அனுபவம் உடலைப் பற்றி சிறப்பாகப் புரிந்துகொள்ளவும், தன்னுடைய தொழில்முறை கால்பந்து வாழ்க்கையை நீட்டிப்பதற்கான சிறு மாற்றங்களைச் செய்யவும் சுனிலுக்கு உதவியது.

முந்தைய இந்தியன் சூப்பர் லீக் தொடரில் 'மந்திர ஆட்டக்காரராக' கருதப்படும் சுனில், தனது கிளப் அணியான பெங்களூரு எஃப்.சிக்கான தொடக்க லெவனில் தேர்வு செய்யப்படுபவராக இருக்கவில்லை. அவர் சூப்பர் சப்(ஆட்டத்தின் ப்ளேயிங் லெவனில் இல்லாத, ஆனால் மாற்று ஆட்டக்காரராக வந்து குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்) ஆக வந்து அடிக்கடி விளையாடினார்.

 சுனில் சேத்ரி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுனில் சேத்ரி

இது தனது தேசிய கடமையை ஆற்றுவதற்காக அவரை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவியது. முன்பிருந்த வேகத்தோடு அவர் செயல்படாமல், பின் வரிசையில் பதுங்கியிருந்து, தேவைப்படும் நேரத்தில், குறுகிய நேரத்தில் வெடித்துச் சிதறும் வகையிலான விளையாட்டை வெளிப்படுத்தினார்.

தோஹாவில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கான வாய்ப்பு குறித்து ஜனவரி மாதம் பேசிய சுனில், "இது நம்முடைய முன்னேற்றத்திற்குச் சான்று. அதேநேரம், நம் இலக்கை நோக்கி நகர்வதற்கான சிறிய படி.

ஜப்பான், இரான், சௌதி அரேபியா போன்ற முன்னணி ஆசிய அணிகளை எடுத்துக் கொண்டால், அவர்கள் எப்போதும் சிறந்த மற்றும் உயர்ந்த தரவரிசையில் உள்ள அணிகளுடன் விளையாட விரும்புவதை நீங்கள் பார்க்கலாம். அப்படித்தான் நாமும் மேம்படுவோம். ஆசிய கோப்பையில் முன்னணி அணிகளுடன் நாம் விளையாடுவோம். அப்போதுதான் நாம் எந்தளவுக்கு முன்னேறியுள்ளோம் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்,’’ என்று கூறினார்.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 48 அணிகள் பங்கேற்கும் 2026 ஃபிஃபா உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் தொடங்க உள்ளன.

இந்தத் தொடரின் ஒரு பகுதியாகவும் சுனில் சேத்ரி நிச்சயம் இருப்பார். ஆனால், அவர் ஓய்வு பெறுவதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை.

ஆனால், சுனிலுக்கு பிறகு யார்?

இதற்கான பதில் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் உட்பட யாரிடமும் இல்லை.

ஏன், ரசிகர்களிடம்கூட அதற்கான பதில் இல்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: