'தெருநாய் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களாலும் பிரச்னைதான்' - தவறு எங்கே நடக்கிறது?

வளர்ப்பு நாய்களால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் வளர்ப்பு நாய்கள் கடிப்பதாலும் ரேபிஸ் மரணங்கள் பதிவாகியுள்ளன (கோப்புப் படம்)
    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவைத் தொடர்ந்து தெருநாய் பிரச்னை பற்றி விவாதம் இந்தியா முழுவதும் சூடுபிடித்துள்ளது.

ஆனால், பிரச்னைக்குக் காரணம் தெருநாய்கள் மட்டுமல்ல, வளர்ப்பு நாய்களும்தான் என்கிறார் பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி.

ஒருமுறை அதிகாலை வேளையில் மருந்தகம் ஒன்றுக்குச் சென்றிருந்த போது, தனது வளர்ப்பு நாயுடன் வந்திருந்த நபர் ஒருவர், அதனுடனேயே மருந்து வாங்கச் சென்றார்.

குழந்தையை அழைத்து வந்திருந்த வாடிக்கையாளர் ஒருவர், சற்று எரிச்சலடைந்து, அதைத் தனியாக வேறு இடத்தில் கட்டி வைத்துவிட்டு வருமாறு சற்று கடினமான குரலில் வலியுறுத்தினார்.

இதேபோல, கிழக்கு கடற்கரை சாலையில் மற்றுமொரு சம்பவத்தைக் கண்டேன். பிரபல உணவகம் ஒன்றுக்கு பார்சல் உணவு வாங்க வந்திருந்த ஒருவர், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் நிறைந்திருந்த இடத்தில், தான் உடன் அழைத்து வந்திருந்த வளர்ப்பு நாயைக் கட்டி வைத்துவிட்டு, உணவகத்தின் உள்ளே சென்றார்.

வாசலில் இருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு தரப்பினர் அதைக் கொண்டு கொள்ளவில்லை. ஆனால், சிலர் அந்த நாய் அங்கிருப்பதை ஓர் அபாயமாகக் கருதி, முன்னெச்சரிக்கையாக விலகி நிற்பதையும், இன்னும் சிலர் அருகில் இருந்த தனது வாகனத்தைக் கூட எடுக்க முடியாமல் சிரமப்பட்டதையும் கண்டேன்.

வளர்ப்பு நாய்களால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிகம் பாயும் பண்புகளைக் கொண்ட நாய்களுக்கு முகக்கவசம் அணிந்து அழைத்து வர வேண்டுமென்று சென்னை மாநகராட்சி விதிமுறை கூறுகிறது

இந்த இரு சம்பவங்களில் மட்டுமின்றி, சென்னை நகரில் வெளியே அழைத்து வரப்படும் பெரும்பாலான வளர்ப்பு நாய்களுக்கு வாயில் மஸ்ஸில் என்று அழைக்கப்படும் முகக்கவசம் போடப்படுவது இல்லை என்பதைக் காண முடிந்தது.

அதேவேளையில், இப்படியாக நாய்களை வீட்டிலிருந்து வெளியில் அழைத்து வருவோரில் பலரும் சுற்றத்தில் இருக்கும் பிறரின் அசௌகரியம் குறித்துச் சிந்திப்பதில்லை என்கிறார் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி.

'தடுப்பூசி பற்றிய அக்கறையற்ற நிலைமை'

"தெருநாய்கள் மட்டுமின்றி நல்ல பராமரிப்பில் வளர்க்கப்படும் நாய்கள் கடிப்பதாலும் ரேபிஸ் நோய் பரவி வருவதைக் காணும் போதே, இந்தப் பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம்" என்கிறார் மருத்துவர் குழந்தைசாமி.

கடந்த 2024 ஜனவரி முதல் 2025 ஆகஸ்ட் மாதம் வரையிலான பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகத்தின் தரவுகள்படி, தமிழ்நாட்டில் 64 ரேபிஸ் மரணங்கள் பதிவாகி இருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தி கூறுகிறது.

அதில், வளர்ப்பு நாய்கள் கடித்ததால் சுமார் 15 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்தத் தரவுகளின்படி, இருவர் தடுப்பூசி போடப்பட்ட நாய்கள் கடித்து மரணித்து இருந்தாலும், பிற மரணங்களுக்குக் காரணமாக இருந்த நாய்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இத்தகைய நிலைமை, "தடுப்பூசிகளைச் சரியாகப் போட வேண்டும் என்பது குறித்து பொறுப்புகூட இல்லாமல் பல நாய் உரிமையாளர்கள் இருப்பதைக் காட்டுவதாக" கூறுகிறார் குழந்தைசாமி.

அவரது கூற்றுப்படி, வளர்ப்பு நாய்களுக்கு முதல் தவணை ரேபிஸ் தடுப்பூசியை மூன்று மாதத்திலும், இரண்டாவது தவணையை 4 மாதம் முடிந்தவுடனும் போட வேண்டும்.

"இவற்றோடு, ஒவ்வோர் ஆண்டும் தொடர்ச்சியாக அதற்கான பூஸ்டர் தடுப்பூசியைப் போட வேண்டும். இதுதான் வளர்ப்புப் பிராணிகளை வைத்திருப்பதற்கான சட்டம் கூறும் விதிமுறை. ஆனால், அதை அனைவரும் முறையாகப் பின்பற்றுவதில்லை. இதனால், அபாயம் மேலும் அதிகரிக்கிறது," என்கிறார் அவர்.

வளர்ப்பு நாய்களால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?
படக்குறிப்பு, பொது சுகாதாரத் துறையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி

வளர்ப்பு நாய்கள் குறித்த சட்ட விதிகள் யாவை?

வளர்ப்புப் பிராணிகளின் உரிமையாளர்கள் கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன. குறிப்பாக, கடந்த ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, சென்னை மாநகராட்சியில் வளர்க்கப்படும் நாய்களுக்கு உரிமம் வாங்கியிருக்க வேண்டியது அவசியம்.

ஆனால், அது நடைமுறையில் சரிவர கடைபிடிக்கப்படுவது இல்லை என்கிறார் குழந்தைசாமி. "முன்பெல்லாம் வளர்ப்பு நாய்களின் கழுத்தில் வட்ட வடிவிலான இரும்பு டாலர் ஒன்று தொங்குவதைப் பார்த்திருப்போம். அந்த டாலரில் ஒரு குறியீட்டு எண் இருக்கும்.

அந்த எண்ணை வைத்து, எந்தப் பஞ்சாயத்தின் கீழ், எந்த உரிமையாளரின் பேரில் அந்த நாய் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அத்தகைய முறையான பதிவுகளை நாய் வளர்ப்பவர்கள் இப்போது கடைபிடிப்பதில்லை."

கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிமுறைகளின்படி, வெளிநபர்களிடம் அச்சமூட்டும் வகையில், திடீரென பாயும் பண்புகளைக் கொண்ட நாயாக இருந்தால், அவற்றைக் கட்டுப்படுத்த உதவும் கயிறு அல்லது செயின் இல்லாமலோ, மஸ்ஸில் எனப்படும் முகக்கவசம் இல்லாமலோ அழைத்து வரக்கூடாது.

ஆனால், பெரும்பாலும் முகக்கவசம் இல்லாமல்தான் வளர்ப்பு நாய்கள் வெளியில் அழைத்து வரப்படுகின்றன என்று கூறும் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி, அதற்கு முற்றிலுமாக உரிமையாளர்களையே குற்றஞ்சாட்டிவிட முடியாது என்றும் கூறுகிறார்.

வளர்ப்பு நாய்களால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், A.R.Praveen Kumar

படக்குறிப்பு, நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி

"நாய் மூலமாகப் பிரச்னை ஏற்பட்ட பிறகுதான் இத்தகைய விதிமுறைகளே கொண்டு வரப்பட்டன. அவற்றை முன்னமே கொண்டு வந்திருந்தால் பாதிப்புகள் தவிர்க்கப்பட்டு இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த விதிமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுகின்றனவா என்பது கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை," என்று அவர் விமர்சிக்கிறார்.

அரசாங்கம் விதிமுறைகளை வகுப்பதோடு நிற்காமல், அவற்றை அனைவருக்கும் கொண்டு சேர்க்கத் தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், அதைப் பின்பற்றத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுமென வலியுறுத்துகிறார் நாய் நடத்தையியல் நிபுணர் ஸ்ரீதேவி.

'பிரச்னை நாய்களிடம் அல்ல; உரிமையாளர்களிடமே'

நாய்களை குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசும் ஸ்ரீதேவி, "குழந்தைகள் குதூகலிக்கும் போது எப்படி தன்னிலை மறந்து ஓடி விளையாடுகிறார்களோ, அப்படித்தான் நாய்களும் செய்கின்றன. ஆனால், அவை அப்படி முன்பின் தெரியாத நபர் மீது தாவுவதால் எதுவும் ஆகாது என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருக்க முடியாது" என்றார்.

எனவே, அப்படியான நடத்தைகளைக் கொண்ட நாய்களைக் கட்டுப்படுத்தி வைக்க வேண்டியது உரிமையாளரின் பொறுப்பு என்று அவர் வலியுறுத்துகிறார். "இந்தப் பொறுப்புணர்வு இல்லாமல் செயல்படுவோர்தான் அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் பொறுப்பாக வேண்டும், நாய்கள் அல்ல.

ஏனெனில், பிற உயிரினங்களைப் போலவே அவையும் கோபம், மகிழ்ச்சி என அனைத்தையும் சிந்திக்காமல் காட்டக்கூடிய விலங்குதான். அவற்றைக் கட்டுப்படுத்தும் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டிருக்க வேண்டியது உரிமையாளரின் கடமை" என்று விளக்கினார்.

வளர்ப்பு நாய்களால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்ப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நாய் வளர்த்து வரும் கவிதா, ஸ்ரீதேவியின் கருத்துடன் உடன்படுகிறார்.

"எனது செல்லப்பிராணி ஆபத்தற்றது என்று நான் நம்பலாம். அதனுடன் பழகிய அனுபவமற்ற, முன்பின் தெரியாத நபர் ஒருவரும் அப்படியே நம்ப வேண்டுமென்று நான் எதிர்பார்க்க முடியாது," என்பதை வலியுறுத்துகிறார்.

அதே நேரம், "அரசாங்கமும் விதிமுறைகளை அறிவிப்பதோடு நிற்காமல் அவற்றை அனைவருக்கும் தெரியப்படுத்தவும், பின்பற்றத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் வழி செய்ய வேண்டும்" என்று கோருகிறார் கவிதா.

வளர்ப்பு நாயை வெளியே அழைத்து வரும்போது, அவை பிறருக்கு ஆபத்து விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென்ற கருத்துடன் உடன்படும் நாய் உரிமையாளரான கவிதா, நாய்களை செயின் போட்டு, வாயை முகமூடியால் மறைத்து அழைத்து வர வேண்டும் என்பதோடு மற்றுமொரு கூற்றை வலியுறுத்துகிறார்.

நாய்களைப் பொறுத்தவரை, பெரும்பாலும் சிறுநீர் மற்றும் மலம் கழிக்கவே வெளியே அழைத்து வரப்படுகின்றன. அப்படியிருக்கும் சூழலில், அவற்றை அப்புறப்படுத்தத் தேவையான உபகரணங்களையும் கொண்டு வர வேண்டுமென்று விதிமுறை உள்ளதாகக் குறிப்பிட்டார் மருத்துவர் குழந்தைசாமி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அதை வலியுறுத்திப் பேசிய கவிதா, "தனது நாயாகவே இருந்தாலும், அதன் கழிவை மிதிப்பதற்கு ஒருவர் தயாராக இருப்பாரா? அதேபோலத்தான் அனைவருக்கும் இருக்கும் என்பதைப் புரிந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என்கிறார் அவர்.

இதுமட்டுமின்றி, நாய்களின் மலத்தில் உள்ள டேப்வோர்ம் கிருமிகளால் தொற்றுநோய் பரவும் ஆபத்துள்ளதை விவரிக்கும் மருத்துவர் குழந்தைசாமி, "ரேபிஸ் மட்டுமின்றி இதுவும் ஆபத்தானது. ஆகவே, நாய்களை வெளியே அழைத்து வரும் உரிமையாளர்கள் அவற்றின் மலத்தை அப்புறப்படுத்தவும் தயாராக வர வேண்டும்," என்று அறிவுறுத்தினார்.

உரிமையாளர்கள் விதிகளைப் பின்பற்றுவது முறையாகக் கண்காணிக்கப்படுகிறதா என்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த தமிழ்நாடு விலங்குநல வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி மருத்துவர் சொக்கலிங்கம், "வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் வகுக்கப்பட்ட பிறகு, அவை கடைபிடிக்கப்படுவதை நகராட்சி நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

அதோடு, "இந்த விஷயத்தில், வளர்ப்பு நாய்கள் விற்பனை, அவற்றை நடத்தும் முறை உள்பட பலவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் பின்பற்றப்படவில்லை என்றால் என்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பவை உள்பட பல வழிகாட்டுதல்கள் அடங்கிய விரிவான அறிக்கை உருவாக்கப்பட்டு வருகிறது" என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு