புது கார் வாங்கப் போறீங்களா? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
நமக்கென சொந்தமாக ஒரு கார். அதில் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்ச்சியாக வார விடுமுறைகளைக் கழிக்க வேண்டும்.
நம் சமூகத்தில் உள்ள நடுத்தரக் குடும்பங்களில் தவறாமல் இருக்கும் ஆசை இது.
நீண்ட கால உழைப்பில் சேமித்து வைத்த பணத்திலோ அல்லது வாகனக் கடன் மூலமோ, ஏதாவது ஒரு வகையில் ஒரு காரை வாங்கிவிட வேண்டுமென்று விரும்பி ஒரு வழியாக கார் வாங்கும் அளவுக்கான நிதிநிலையை எட்டிவிட்டோம். கார் வாங்கப் போகிறோம்.
சரி, எந்த காரை வாங்கலாம், எப்படிப் பார்த்து வாங்குவது, புது கார் வாங்கும்போது அதில் என்னென்ன அம்சங்களையெல்லாம் கவனிப்பது?
இப்படி பற்பல கேள்விகள் உங்கள் மனதுக்குள் எழும். அவை அனைத்துக்கும் விடையளிக்க முயல்கிறது இந்தக் கட்டுரை.
கார் வாங்குவது எதற்காக?
கார் வாங்கும்போது, அதை என்ன தேவைக்காக வாங்குகிறீர்கள், அதை அடிக்கடி ஓட்டப் போகிறீர்களா அல்லது அவ்வப்போது வார விடுமுறையில் குடும்பத்துடன் செல்வதற்காக மட்டும் பயன்படுத்தப் போகிறீர்களா என்பன போன்ற அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
“காரை வாங்குபவர்கள், முதலில் அதை ஊர்ப்புறங்களில் பயன்படுத்தப்போகிறார்களா, நகரத்தில் ஓட்டப் போகிறார்களா என்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். "
"ஒரு நாளில் எத்தனை முறை கார் பயன்படுத்துவார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் அதற்கு ஏற்ற காரை வாங்க வேண்டும், வாரத்தில் ஒன்றிரண்டு முறை என்றால் அதற்கேற்ற காரை வாங்க வேண்டும்,” என்கிறார் டார்க் மேக்ஸ் ஆட்டோமோடிவ் நிறுவனத்தின் உரிமையாளரும் கார்கள் குறித்த வல்லுநருமான அஷ்வின் ராஜ் வர்மா.

பட மூலாதாரம், Getty Images
கார் அடிக்கடி ஓட்டுபவரா? எப்போதாவது ஓட்டுபவரா?
காருக்கு பயன்படுத்தும் எரிவாயுவை பொறுத்தவரை ஒவ்வொரு வகையான பயன்பாட்டிற்கும் வசதியான எரிவாயு வகைகள் உண்டு.
நாம் தினசரி கார் பயன்படுத்துபவராக, அதுவும் மிக மிக அதிகமாகப் பயன்படுத்துபவராக இருந்தால், அந்தந்த தேவைகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு என தேவைக்கு ஏற்ற எரிவாயுவை கொண்ட கார்களை வாங்கலாம்.
கார்களை பொறுத்தவரை “ஒரு நாளைக்கு சராசரியாக 50 கி.மீ வரை அதாவது, ஒரு மாதத்திற்கு 1,500 கி.மீ அல்லது அதற்கும் குறைவாக மட்டுமே ஓட்டுபவராக இருந்தால், பெட்ரோல் அல்லது அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு போன்ற எரிவாயு பயன்பாடு கொண்ட வாகனத்தை வாங்க வேண்டும்,” என்று கூறுகிறார் அஷ்வின் ராஜ்.
மேலும், அப்படிப்பட்ட தேவைக்காக தொடக்க நிலையிலான கார் வாங்க விரும்புபவர்கள் 1.2 லிட்டர் இன்ஜின் திறன் கொண்ட கார்களை தேர்வு செய்யலாம் என்று கூறுகிறார்.
அதுவே, “ஒரு மாதத்தில் 1,500 கிலோமீட்டருக்கும் அதிகமாக ஓட்டக்கூடியவர்கள் என்றால், டீசல் வாகனம் அல்லது அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு வாகனத்தை வாங்குவது சிறந்த தேர்வாக இருக்கும். அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு இரண்டுக்குமே நல்ல தேர்வுதான்,” என்றும் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
கார் வாங்கும்போது மைலேஜ் மீது கட்டாயம் கவனம் செலுத்த வேண்டுமா?
கார் என்று இல்லை, எந்த வாகனமாக இருந்தாலும் சரி, நடுத்தர குடும்பத்தினர் முதலில் கவனிப்பது வாகனத்தின் மைலேஜ் எவ்வளவு என்பதைத்தான்.
அப்படிப் பார்ப்பது சரியா எனக் கேட்டதற்கு, நூறு சதவீதம் சரி என்கிறார் அஷ்வின் ராஜ்.
“நாம் வாங்கும் வாகனம் நமது நிதிநிலைக்கு ஏற்ப மைலேஜ் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது நியாயம்தானே!”
“நாம் வாங்கும் காரை பொறுத்தவரை, முக்கியமாக இரண்டு விஷயங்களில் நம்மை நாமே சமாதானம் செய்துகொள்ளக்கூடாது. அதில் முதன்மையான மைலேஜ். இரண்டாவதாக பாதுகாப்பு.இந்த இரண்டையுமே பூர்த்தி செய்யக்கூடிய வசதிகளைக் கொண்ட காரை வாங்குவதுதான் சிறந்த முடிவு,” என்கிறார் அஷ்வின்.
சராசரியாக ஒரு சிறிய குடும்பத்திற்காக வாங்கக்கூடிய காம்பாக்ட் செடான் வகை வாகனத்தில், “பெட்ரோல் பயன்பாடு கொண்ட கார்களில் சாதாரணமாக, நகரத்திற்குள் 15 கிமீ வரைக்கும் நெடுஞ்சாலைகளில் 20கிமீ வரைக்கும் மைலேஜ் கொடுத்தால் ஏற்புடையதாக இருக்கும்.”
அதுவே டீசல் வாகனமாக இருந்தால், “நகரங்களில் சாதாரணமாகவே 18கிமீ வரையிலும் நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது 25 கிமீ வரையிலும்கூட மைலேஜ் கொடுக்கும்,” என்று கூறுகிறார் அவர்.
ஒரு கார் வாங்கும்போது, அந்த வாகனத்தின் அளவு மற்றும் வகைக்கு ஏற்ப சராசரி மைலேஜ் அளவு என்ன என்பதைப் பார்த்து, அது பூர்த்தியாகிறதா என்பதைக் கவனிப்பதோடு, நாம் என்ன தேவைக்காக வாங்குகிறோமோ, அந்தத் தேவைக்கு ஏற்ற எரிவாயு பயன்பாடு கொண்ட காராக தேர்வு செய்ய வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
கார்களின் பாதுகாப்பு அம்சங்களில் எதையெல்லாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்?
கார் வாங்கும்போது, ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம், பார்க்கிங் சென்சார், ரிவர்ஸ் கேமரா, ஏர்பேக், சீட்பெல்ட் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் கவனிக்க வேண்டியவை.
ஆனால், இப்போது வரக்கூடிய வாகனங்கள் பெரும்பாலும் இத்தகைய பாதுகாப்பு வசதிகளுடன் தான் சந்தைக்கே வருகின்றன எனக் கூறுகிறார் அஷ்வின்.
அதையும் தாண்டி, காரின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள “பாதுகாப்பு குறித்த ரேட்டிங்கை கவனிக்கலாம். காரின் கட்டமைப்பு பாதுகாப்பானதா என்பதைத் தெரிந்துகொள்ள NCAP Safety Crash எனப்படும் ரேட்டிங்கை பார்க்க வேண்டும்,” என்கிறார் அவர்.
இந்த ரேட்டிங்கை பொறுத்தவரை, 4 நட்சத்திரங்களுக்கு மேலான ரேட்டிங்கை பெற்ற கார்கள் மிகச் சிறப்பான பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டவை.
ஆனால், “மலிவு விலை, மைலேஜ் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்படும் வாகனங்களில், அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக இருந்தாலும்கூட அவற்றுக்கு இந்த ரேட்டிங் முறையைப் பார்த்து வாங்குவது பொருந்தாது,” எனவும் அஷ்வின் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
“ஒருவேளை கார் ஓட்டுபவர்கள் நகரங்களுக்குள் ஓட்டுவதைவிட அதிக அளவில் நெடுஞ்சாலைகளில் ஓட்டுவார் என்றால் இத்தகைய உயர்தர பாதுகாப்பு அம்சங்கள் வரை பார்க்க வேண்டியது அவசியம்.”
அல்லது, “குடும்பத்தினருடன் அவ்வப்போது வெளியே செல்லும் பழக்கம் கொண்டவர்கள், நகருக்கு உள்ளேயே அதிகம் ஓட்டுபவர் என்றால், அவ்வளவு உயர்தரமான பாதுகாப்பு ரேட்டிங்குகளை பார்க்க வேண்டியதில்லை. ஏனெனில், அதன் அளவுக்குச் செல்லும்போது அந்தக் கார்களின் விலையும் அதற்கு ஏற்ப அதிகமாகத்தான் இருக்கும்,” என்கிறார் அஷ்வின்.
கார் வாங்கும் குடும்பத்தின் அளவையும் கருத்தில் கொள்ள வேண்டுமா?
கார்களை பொறுத்தவரை, ஹேட்ச்பேக், செடான், எஸ்யுவி எனப் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு வகையும் ஒவ்வோர் அளவில் இருக்கும். கார் வாங்கப் போகிறவர்கள், அவர்களது குடும்பம் எவ்வளவு பெரியது என்பதையும், அவர்கள் எவ்வளவு அதிகமாக அந்தக் காரில் ஒட்டுமொத்த குடும்பமாகப் பயணிப்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
“கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என நான்கு அல்லது அதற்கும் சிறிய அளவிலான குடும்பமாக இருந்தால், ஹேட்ச்பேக் அல்லது செடான் அளவிலான காரே போதுமானது. அதிலேயே 5 பேர் வரை பயணிக்க முடியும்.
அதுவே, 6 பேர் அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கையில் குடும்பத்தின் அளவு இருந்தால், அவர்கள் எஸ்யுவி பக்கம் செல்வது சரியான தேர்வாக இருக்கும்,” என்கிறார் அஷ்வின்.
மேலும், “குடும்பத்தில் சிறு குழந்தைகள் அல்லது 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் இருந்தால், காருக்குள் நெருக்கியடித்து உட்காரும் வகையில் இல்லாமல், இட வசதி அதிகமாக இருக்கும் கார்களை வாங்குவது சரி.”
குறிப்பாக, “முதியவர்கள் இருக்கும் குடும்பங்களுக்கு ஹேட்ச்பேக் அல்லது செடான் கார்களைவிட காம்பாக்ட் எஸ்யுவி வகை கார்கள் பொருத்தமாக இருக்கும். அவர்கள் சிறு கார்களில் உள்ளே புகுந்து உடலை மடக்கி உட்கார்ந்து, வெளியேறுவது கடினமாக இருக்கும்.
வசதியாக உட்கார்ந்து பயணிக்க முடியும். பின் சீட்டில் சௌகர்யமாக கால்களை நீட்டி உட்காரும் வசதி இருக்க வேண்டும். ஏறி, இறங்குவது சிரமமானதாக இருக்கக் கூடாது.
அதற்கு, காம்பாக்ட் எஸ்யுவி வகை கார்கள் நல்ல தேர்வாக இருக்கும். அதில், அவர்கள் அத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய தெவை இருக்காது,” என்றும் விளக்கினார் அஷ்வின்.
இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு குடும்பத்தில் 6 பேருக்கும் மேல் இருப்பார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் தினசரி அந்த காரில் ஒட்டுமொத்தமாக பயணிக்கும் தேவை இருக்காது.

பட மூலாதாரம், Getty Images
சராசரியாக மாதத்தில் ஒருநாள்தான் அவர்கள் கூட்டாகப் பயணிப்பதாக இருப்பார்கள். அப்படி இருந்தால், “அவர்கள் மாதத்தில் ஒரு நாள் பயணிப்பதற்கு வாடகைக்கு எஸ்யுவி காரை எடுத்துக்கொண்டு சென்று கொள்வதும் மற்ற பயன்பாடுகளுக்கும் சிறிய காரை வாங்கிக் கொள்வதும் லாபகரமானதாக இருக்கும்,” என்று கூறுகிறார் அஷ்வின்.
ஆக, பெரிய குடும்பமாக இருந்தாலும்கூட அனைவருமே அடிக்கடி ஒன்றாகப் பயணிப்பதாக இருந்தால் மட்டுமே எஸ்யுவி போன்ற பெரிய கார்கள் தேவைப்படும்.
இல்லையென்றால், செடான் முதல் காம்பாக்ட் எஸ்யுவி வரையிலான கார் வகைகளுக்கு உள்ளாகவே நமக்குத் தேவையான காரை தேர்வு செய்துகொள்வது சிறந்த தேர்வாக இருக்கும்.
கார் லோன் போட்டு வாங்குவது சரியா? மொத்த பணமும் கொடுத்து வாங்குவது சரியா?
நீண்டகால பயன்களைச் சிந்திக்கையில், கார் வாங்கும்போது வங்கிக் கடன் பெற்று, மாதந்தோறும் இ.எம்.ஐ கட்டும் வகையில் வாங்கிக் கொள்வதே நல்ல தேர்வு என்கிறார் கார்களுக்கான பிரத்யேக யூட்யூப் சேனலான ‘ரோட்ஸ் & ரெவ்ஸ்’ என்ற சேனலின் நிறுவனரும் ஆட்டோமொபைல் செய்தியாளருமான சுரேந்தர் முத்து.
“சராசரியாக 10 லட்சம் ரூபாய் செலவில் ஒரு காம்பாக்ட் செடான் வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அந்தத் தொகை கையில் இருந்தாலும்கூட, அதை மொத்தமாக கார் வாங்குவதற்குக் கொடுத்துவிடாமல், அந்தத் தொகையை வேறு எங்காவது லாபகரமாக முதலீடு செய்துவிட்டு, மாதந்தோறும் இ.எம்.ஐ கட்டும் வகையில் வங்கிக் கடன் பெற்று வாங்குவதே நல்ல முடிவு.
காருக்காக மொத்த தொகையைச் செலவழிக்காமல், அதை வேறு எதிலாவது முதலீடு செய்யும்போது அதன்மூலம் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆகவே கையில் மொத்தமாக பணம் இருந்தாலும் வங்கிக்கடன் பெற்று வாங்குவதே நல்ல முடிவு,” என்கிறார் சுரேந்திர்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், “கார் பயன்படுத்தும் விகிதம் குறைவாக இருந்தாலும்கூட, அதன் தேவை இருந்தால் வாங்கிக் கொள்வதே நல்ல முடிவு,” என்றும் கூறுகிறார் அவர்.
“வாரத்தில் ஒருமுறைதான் கார் பயன்படுத்துவோம் என்பதற்காக வாடகைக்கு கார் எடுத்துக்கொள்ளலாம் என நினைத்து, கையில் பணம் இருக்கும்போது அதை வாங்காமல் விடுவது நல்ல முடிவா எனப் பார்த்தால் இல்லை.
அதற்குப் பதிலாக, நீண்டகால அளவில் பார்க்கும்போது காரின் தேவை வாரத்திற்கு ஒருமுறை இருப்பதாக இருந்தாலே, அடுத்தடுத்த ஆண்டுகளில் அதன் தேவை இன்னும் அதிகரிக்கும். அப்போது நம் தேவைக்காக கார் வாங்க நினைப்போம். ஆனால், அதன் விலை முன்பைவிட அதிகமாகியிருக்கும்.
மாறாக, அந்தச் சிந்தனை இருக்கும்போதே நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற காரை வாங்கிக் கொள்வது, அடுத்த 10 அல்லது 15 ஆண்டுகளுக்குப் பலனளிக்கும்,” என்று தெரிவித்தார்.
இனி கார் வாங்கச் செல்லும்போது மைலேஜ், பாதுகாப்பு, இட வசதி, குடும்பத்தின் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கு ஏற்ற சிறந்த காரை தேர்வு செய்யுங்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












