தெலங்கானா இளம்பெண் லண்டனில் கொலை - தாயுடன் பேசிய சிறிது நேரத்தில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், UGC
- எழுதியவர், அமரேந்திர யர்லகடா
- பதவி, பிபிசி செய்திகள்
“எங்கள் மகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்று லண்டனுக்கு அனுப்பிவைத்தோம். இப்படி நடக்கும் என்று கனவிலும் நினைக்கவில்லை. என் மகளின் உடலை அங்கேயே காக்க வைக்காமல் நல்லபடியாக சீக்கிரம் அனுப்புங்கள்,'' என்று கைகூப்பி கெஞ்சுகிறார் ரமாதேவி.
அண்மையில் லண்டனில் படுகொலை செய்யப்பட்ட தேஜஸ்வினி ரெட்டியின் தாயார்தான் ரமாதேவி.
மகள் எப்படி இறந்தாள் என்றே தெரியவில்லை. என்ன நடந்தது என்பது குறித்து எந்தத் தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இறந்த மகளின் உடல் எப்போது வரும் என்றும் தெரியவில்லை என பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்காமல் கண்ணீர் வடிக்கிறார் ரமாதேவி.
தெலங்கானாவைச் சேர்ந்த தேஜஸ்வினி ரெட்டி லண்டன் வெம்ப்லி பகுதியில் கடந்த 13ஆம் தேதி காலை படுகொலை செய்யப்பட்டார்.
அவர் சமையலறையில் இருந்தபோது பிரேசிலைச் சேர்ந்த 23 வயது இளைஞர் அவரைக் கத்தியால் குத்தியதாகவும், அதில் படுகாயமடைந்த தேஜஸ்வினி பின்னர் உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவருடன் இருந்த ஜனகத்தைச் சேர்ந்த அகிலா என்ற இளம்பெண் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
லண்டனில் உள்ள பிபிசி செய்தியாளர் ககன் சபர்வால், இந்தக் கொலை தொடர்பான விவரங்களை அறிய அங்குள்ள போலீஸாரிடம் பேசினார்.
அவருக்கு மின் அஞ்சல் மூலம் பதில் அளித்த லண்டன் போலீசார், இந்த கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
“தேஜஸ்வினி கொலை தொடர்பாக கடந்த 15ஆம் தேதி கெவின் அன்டோனியோ லொரென்சோ டி மொரைஸ் என்ற 23 வயது இளைஞரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம்.
ஜூன் 13ஆம் தேதி காலை 9.59 மணிக்கு இந்தக் கொலைச் சம்பவம் குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நீல்ட் கிரசென்ட் குடியிருப்பு பகுதியில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வாகனத்துடன் போலீசார் விரைந்தனர். அப்போது, தேஜஸ்வினியும், மற்றொரு 28 வயது பெண்ணும் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்டனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் தேஜஸ்வினி உயிரிழந்தது கண்டறியப்பட்டது.
மற்றொரு இளம் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இதுகுறித்து தேஜஸ்வினியின் குடும்பத்தினரிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். இந்தக் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மேலும் இரண்டு பேரைக் கைது செய்த நிலையில், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்," என்று லண்டன் போலீசார் பிபிசியிடம் கூறினர்.
இந்தக் கொலை எதற்காக நடந்தது என்பது தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சோகத்துடன் காத்திருக்கும் பெற்றோர்
தேஜஸ்வினி ரெட்டியின் குடும்பத்தினர் ரங்காரெட்டி மாவட்டம் துர்கயாஞ்சல் நகராட்சிக்கு உட்பட்ட பிராமணப்பள்ளியில் வசித்து வருகின்றனர். பிபிசி செய்தியாளர் ஒருவர் அவர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்றார்.
அந்த வீட்டில் மிகவும் சோகமான சூழல் நிலவுகிறது. தேஜஸ்வினியின் தாய் ரமாதேவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதுகொண்டிருக்கின்றனர். மகள் இறந்த செய்தியை ஜீரணிக்க முடியாமல் தவிக்கிறார் தாய் ரமாதேவி.
உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் பலர் அங்கு வந்து அவர்களுக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.
தேஜஸ்வினி ரெட்டியின் தம்பி பவன் குமார் ரெட்டி ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். விஷயம் தெரிந்தவுடன் அவர் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துள்ளார்.

வெளிநாட்டில் படிக்க விரும்பிய தேஜஸ்வினி
முதலில் தேஜஸ்வினி ரெட்டி தில்சுக் நகரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தார். அதன் பிறகு ஒரு வருடம் வேலை செய்தார்.
“எனது தங்கைக்கு முன்பெல்லாம் வெளிநாட்டில் படிக்கவேண்டும் என ரொம்ப ஆசை. பிஎஸ்சி பட்டம் பெற்ற நிலையில், அவர் ஒரு வருட ஓய்வுக்குப் பின்னர் விடாமுயற்சியுடன் படிப்பைத் தொடர விரும்பினார்," என்று தேஜஸ்வினி ரெட்டியின் தம்பி பவன் குமார் ரெட்டி பிபிசியிடம் தெரிவித்தார்.
“அமெரிக்கா செல்லவேண்டும் என்பதே அவருடைய முதல் விருப்பம். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அவர் அங்கு செல்ல முடியவில்லை. அதனால்தான் அவர் பிரிட்டனுக்குச் சென்று படிக்க விரும்பினார்.”
கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேஜஸ்வினி லண்டன் நகருக்குச் சென்றதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அங்கு கிரீன்விச் பல்கலைக்கழகத்தில் 'டேட்டா சயின்ஸ்' பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றார். இந்த ஆண்டு ஜனவரியில்தான் அவர் தனது படிப்பை முடித்தார்.
ஓர் உணவு விடுதியில் பகுதி நேர வேலை செய்து கொண்டே அவர் படித்தார்.

பட மூலாதாரம், UGC
கொலை நடந்த நாளில் என்ன நடந்தது?
இந்தக் கொலைச் சம்பவம் குறித்த விவரங்களை லண்டனில் வசிக்கும் சிவராமி ரெட்டி என்ற உறவினர், தேஜஸ்வினி குடும்பத்தினரிடம் விளக்கினார்.
“பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் சமையலறையில் இருந்த தேஜஸ்வினியை கத்தியால் குத்தியுள்ளார். உடனே அவரிடமிருந்து தப்ப முயன்ற தேஜஸ்வி, தன்னுடன் அறையில் தங்கியிருந்த அகிலா என்ற தோழியை உதவிக்கு அழைத்துள்ளார். தேஜஸ்வினியின் அலறல் சத்தத்தைக் கேட்டபடியே, பிரேசில் நாட்டு இளைஞரைத் தடுக்க அகிலா முயன்றிருக்கிறார். அதே நேரம் தேஜஸ்வினி கீழே விழுந்துவிட்டார்," என சிவராமி ரெட்டி தெரிவித்துள்ளார்.
வேறு இடத்தில் தங்கி பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டிருந்த தேஜஸ்வினி, படிப்பு முடிந்த பின் கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் ஜனகம் பகுதியைச் சேர்ந்த தனது தோழி அகிலாவுடன் வெம்ப்லியில் உள்ள இந்தப் புதிய குடியிருப்புக்கு வந்துள்ளார்.
இந்தக் குடியிருப்பு கட்டடத்தில் தனித்தனியாக அறைகள் உள்ளன. குடியிருப்பில் வசிக்கும் பலரும் பயன்படுத்தும் வகையில் ஒரு பொதுவான சமையல் அறையும் உள்ளது. தேஜஸ்வினியும், அகிலாவும் ஒரே அறையில் தங்கியிருந்தனர்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த அந்த இளைஞரும், அவரது காதலியும் இதே குடியிருப்பில் உள்ள மற்றொரு அறையில் தங்கி இருந்தனர். அவர்கள் பத்து நாட்களுக்கு முன்புதான் லண்டன் நகருக்கு வந்துள்ளனர். படிப்பதற்காக அவர்கள் வந்ததாகத் தெரிவித்திருந்தாலும் வேறு எந்த விவரங்களும் தெரியவில்லை.

வீட்டை விற்று மகளை லண்டனுக்கு அனுப்பிய தந்தை
தேஜஸ்வினியின் தந்தை ஸ்ரீனிவாஸ் ரெட்டி மின்பொருட்கள் பழுதுபார்க்கும் வேலை செய்து வருகிறார். அவருடைய அம்மா ரமா தேவி இல்லத்தரசியாக இருக்கிறார்.
தன் மகனும் மகளும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்று ஸ்ரீனிவாஸ் ரெட்டி எப்போதும் ஒரு விருப்பத்துடன் இருந்துள்ளார்.
“என் மகன் ஆஸ்திரேலியாவில் வேலை செய்கிறான். தேஜஸ்வினியை உயர் கல்வி கற்பதற்காக லண்டனுக்கு அனுப்பிவைத்தோம். மகள் படிக்கவேண்டும் என்பதற்காகவே ஹயாத் நகரில் உள்ள வீட்டை விற்றுவிட்டேன்" என்கிறார் தேஜஸ்வினியின் தந்தை ஸ்ரீனிவாஸ் ரெட்டி.
கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று தேஜஸ்வினி இந்தியா வந்ததாகவும், மீண்டும் தசரா தினத்தன்று லண்டனுக்கு திரும்பி சென்றதாகவும் கூறினார்.
திருமண ஏற்பாடுகளைச் செய்ய சொன்ன மகள்
"தேஜஸ்வினியின் படிப்பு கடந்த ஜனவரி மாதம் முடிந்தது. இதையடுத்து மே மாதமே இந்தியாவுக்கு வர அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அவருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் வரன் தேடிவந்த நிலையில், பொருத்தமான வரன் கிடைத்த பின் இந்தியா வர முடிவெடுத்த தேஜஸ்வினி, அது வரை லண்டனில் வேலை பார்க்க முடிவு செய்தார். இது தான் அவரது வருகை தள்ளிப் போனதுக்கான காரணம். இல்லை என்றால் அவர் கடந்த மாதமே இங்கு வந்திருப்பார்," என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், UGC
கடைசியாக பெற்றோரைத் தொடர்பு கொண்ட தேஜஸ்வினி
தேஜஸ்வினியின் தாயார் ரமாதேவி பிபிசியிடம் பேசிய போது, தனக்கு இது போன்ற ஆபத்து நேரும் என்று அவர் எப்போதும் கூறவில்லை என்றும், அவர் மிகவும் தைரியமானவர் என்பது மட்டுமல்லாமல் யாரிடமும் சண்டை போடும் பழக்கமற்றவர் என்றும் கூறினர்.
அவர் கடைசியாகத் தன்னுடன் பேசிய போது, பணத்துக்காக மிரட்டல் விடுக்கும் சம்பவங்களைப் பற்றிப் பேசியதாகவும், அது போன்ற நேரங்களில் பணம் கொடுத்தால் விட்டுவிடுவார்கள் எனத் தெரிவித்ததாகவும் ரமாதேவி கூறினார்.
“செவ்வாய்க் கிழமை காலை வழக்கம் போல போன் செய்து பேசினார். அப்போது, 'எப்படி இருக்கீங்க, என்ன பண்றீங்க' என்று கேட்டார். அதற்கு நான், "நாங்கள் நல்லா இருக்கோம்," என்றேன். தொடர்ந்து பேசிய அவர், தனது தோழியுடன் தற்போது தங்கியுள்ள இடம் நன்றாக இருப்பதாகவும் தேவையான வசதிகள் அங்கு இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், லண்டனில் தற்போது வெயில் அதிகமாக இருக்கிறது என்று தெரிவித்த தேஜஸ்வினி, அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும் என்பதால் மீண்டும் பின்னர் பேசுவதாகவும் கூறினார். இது தான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள் என ரமாதேவி தெரிவித்தார்.
தேஜஸ்வினியின் உடலை பிரிட்டன் அரசு விரைவில் அனுப்பி வைக்க வேண்டும் என்பதே தற்போது அவரது ஒரே வேண்டுகோளாக இருக்கிறது.
இதற்கிடையே, லண்டனில் உள்ள அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தேஜஸ்வினியின் உடலைப் பெற்று இந்தியாவுக்கு அனுப்பத் தேவையான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றளனர்.
இதற்காக, அனைவரும் இணைந்து ஒரு தொகையை வசூல் செய்து செலவு செய்துவருகின்றனர்.
தேஜஸ்வினியின் உடலை இந்தியா கொண்டு வர உதவவேண்டும் என இப்ராகிம்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் மஞ்சிரெட்டி கிஷன் ரெட்டி, அமைச்சர் கே.டி.ராமராவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதுமட்டுமின்றி, தேஜஸ்வினியின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் வெளியுறவுத்துறை உதவக் கோரி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












