சோம்நாத் கோவில் சிலையில் இஸ்லாமியக் கவிஞர் கண்ட 'அதிசயம்' - உண்மையில் நடந்ததா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மிர்சா ஏபி பெய்க்
- பதவி, பிபிசி உருது, டெல்லி
உலகம் முழுவதிலும் ஒருவரின் கல்வித் தகுதியும், திறமையும், அவர் படித்து பெற்ற பட்டங்களால் அளவிடப்படுகிறது. ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் துணைக்கண்டத்தில் ஒருவரின் கல்வித் தரம், அவர் "குலிஸ்தான்" மற்றும் "போஸ்தான்" புத்தகங்களைப் படித்திருந்தாரா என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.
இந்த இரண்டு புத்தகங்களும் எந்த விதத்திலும் பட்டப்படிப்புக்கு குறைந்தது அல்ல.
மேலும் பல முக்கிய பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகளில் அவர்கள் வயதுக்கு வருவதற்குள் குலிஸ்தான் மற்றும் போஸ்தான் ஆகியவற்றைப் படித்ததாக அல்லது அவற்றை மனப்பாடம் செய்ததாக பெருமையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு புத்தகங்களும் சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு பதின்மூன்றாம் நூற்றாண்டில் அபு முகமது முஸ்லே உதின் பின் அப்துல்லா ஷிராஸி என்பவரால் எழுதப்பட்டன. அதன் வரிகள் எழுதப்பட்ட நாணயங்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன.
அவர் பொதுவாக ஷேக் ஸாதி அல்லது ஸாதி ஷிராஸி என்று அழைக்கப்படுகிறார்.
அவர் இரானில் உள்ள ஷிராஸ் நகரத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவரது பெயரில் ஷிராஸ் இடம்பெற்றுள்ளது.
குலிஸ்தானின் "பனி ஆதம் ஆசாயி யக் திக்ரந்த்" என்ற கவிதை வரி இரானின் நாணயத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த வரியின் பொருள் என்னவென்றால், ’எல்லா மனிதர்களும் ஒருவருக்கொருவர் ஒரு பகுதியாக உள்ளனர்’ என்பதாகும்.
2005 இல் நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைமையகத்திற்கு இரானால் வழங்கப்பட்ட கம்பளத்தில் இந்த முழு கவிதையும் எழுதப்பட்டுள்ளது.
"ஐ.நா. உள் வாசல் சுவரை அலங்கரிக்கும் வகையில் பிரமாண்டமான ஒரு கம்பளம் தொங்கவிடப்பட்டுள்ளது. இது இரான் நாட்டு மக்கள் அளித்த அன்பளிப்பு. பிரபல பாரசீகக் கவிஞர் ஸாதியின் அற்புதமான வார்த்தைகள் இதில் எழுதப்பட்டுள்ளன,” என்று இது குறித்து, ஐ.நா முன்னாள் பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
700 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு கவிஞர் மிகவும் முக்கியமானவராகவும் சமகாலத்தவராகவும் இருக்கும்போது அவரை புல்புல்-இ-ஷிராஸ் (நைட்டிங்கேல் ஷிராஸ்) என்றும் "சொற்களின் தீர்க்கதரிசி" என்றும் ஏன் அழைக்கக்கூடாது என்று கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பாரசீகப் பேராசிரியர் முகமது ஷகீல் வினவுகிறார்.

பட மூலாதாரம், Alamy
ஆரம்ப கால வாழ்க்கை
ஸாதி என்பதன் அர்த்தம் அதிர்ஷ்டசாலி என்பதாகும். "பெயரைப் போலவே பணி" என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இன்றுவரை அவரது புகழ் இருக்கிறது என்று முகமது ஷகீல் கூறினார்.
ஷேக் ஸாதியின் வாழ்க்கையைப் பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் அவர் தனது புத்தகங்களில் தன்னைப் பற்றி கூறியவற்றின் அடிப்படையில் அவரது வாழ்க்கையைப் பற்றிய ஒரு நல்ல வரைபடம் கிடைப்பதாகவும், அதுவே போதுமானது என்றும் அவர் கூறினார்.
பாரசீக வரலாற்று நூலான "சனாதித்-இ-ஆசம்" இல் அவரது பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. அவர் கி.பி 1200 இன் முதல் தசாப்தத்தில் ஷிராஸில் பிறந்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் மற்ற வரலாற்றாசிரியர்கள் அவரது வயதை 81-82 என்று குறிப்பிட்டு, அவர் 1210 இல் பிறந்தார் என்றும் 1291-92 இல் காலமானார் என்றும் எழுதியுள்ளனர்.
பிரபல உருது கவிஞரும் வரலாற்றாசிரியருமான அல்தாஃப் ஹுசைன் ஹாலி தனது "ஹயாத்-இ-ஸாதி" என்ற புத்தகத்தில், "அவரது கல்வி அவரது தந்தையால் தொடங்கப்பட்டது. கல்வியை விட ஆன்மீகத்தின் மீது அவரது தந்தைக்கு நாட்டம் அதிகம் இருந்தால், ஸாதியும் ஆன்மீகத்தின் பால் ஈர்க்கப்பட்டார்,” என்று எழுதியுள்ளார்.
தந்தையின் மறைவுக்குப் பிறகு அன்றைய மிகப் பிரபலமான கல்வி நிறுவனமான மதரஸா நிஜாமியாவுக்கு கல்விகற்கச்சென்றபோது அவருக்கு கல்வி மீது ஆர்வம் ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
மாணவ பருவத்தில் சூஃபி நடனம்
ஷேக் ஸாதி சிறுவயதிலிருந்தே சூஃபி இயல்புடையவர் என்று ஹாலி எழுதுகிறார்.
அவரது மாணவர் வாழ்க்கையில் அவர் ’வஜ்த் வ சமா’ (சூஃபி கவ்வாலி மற்றும் நடனம்) கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டார்.
அவரது ஆசிரியர் இப்னு ஜௌஸி அத்தகைய கூட்டங்களுக்குச் செல்வதை தடை செய்தார். ஆனால் ஸாதி அதை மிகவும் விரும்பினார். எனவே இந்த விஷயத்தில் யாருடைய அறிவுரையும் அவர் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.
ஒரு நாள் ஒரு மஜ்லிஸில் அவர் ஒரு கரகரப்பான குரல்கொண்ட கவ்வாலி பாடகரை சந்தித்தார். நிர்பந்தத்தின் பேரில் அந்த விரும்பத்தகாத நிகழ்ச்சியில் இரவு முழுவதும் கழித்தார்.
நிகழ்ச்சி முடிந்ததும் ஸாதி தனது தலைப்பாகையையும், தனது சட்டைப் பையில் இருந்து ஒரு தினாரையும் (உள்ளூர் கரன்சி) எடுத்து அந்தப் பாடகருக்கு வழங்கினார்.
ஸாதியின் காலத்தில் புத்தகங்களை வெளியிடும் வழக்கம் அவ்வளவாக இருக்கவில்லை.
மக்கள் அறிவு மற்றும் ஞானம் பற்றிய விஷயங்களை எவ்வாறு நிர்வகிப்பார்கள் என்று அமெரிக்க தத்துவஞானியும் கவிஞருமான வால்டோ எமர்சன் வினவுகிறார்.
”நூலகமும், அச்சகமும் இல்லாத நாட்டில் மக்கள் அறிவையும் ஞானத்தையும் வாய்வார்த்தையால் வாக்கியங்களில் வெளிப்படுத்தினர்” என்று அவர் எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Alamy
ஞானம் மற்றும் நம்பிக்கையின் கவிஞர்
ஞானத்தின் இதுபோன்ற விஷயங்கள் ஸாதியிடம் அதிக அளவில் காணப்படுகின்றன.
அவரது எழுத்து பொதுவாக தாக்கம் ஏற்படுத்துவதாக இருந்தது என்றும்
வெளிப்படையான நகைச்சுவை உணர்வு அதில் காணப்பட்டதாகவும் எமர்சன் எழுதுகிறார்.
ஸாதியின் எழுத்துக்கள் முன்னேற்றத்திற்கான நம்பிக்கையைத் தூண்டுகின்றன என்று அவர் கூறுகிறார்.
அவரை பிரபல ஆங்கிலக் கவிஞர் லார்ட் பைரனுடன் ஒப்பிடும் அவர், "பைரனின் வறண்ட பாணிக்கும், ஸாதியின் இன்பமான ஞானத்திற்கும் எவ்வளவு வித்தியாசம்?" என்று குறிப்பிட்டுள்ளார்.
"அவர் பாரசீக மொழியில் எல்லா வகுப்பினருடனும் பேசுகிறார். ஹோமர்,
ஷேக்ஸ்பியர், செர்வாண்டஸ் மற்றும் மொன்டேய்ன் போல எப்போதைக்கும்
நவீனமானவராக உள்ளார்," என்று எமர்சன் எழுதுகிறார்.

பட மூலாதாரம், MOHAMMED SHAKEEL
கஜலின் தீர்க்கதரிசி
கவிதையின் மூன்று தீர்க்கதரிசிகளில் ஷேக் ஸாதி "கஜலின் தீர்க்கதரிசி" என்று அழைக்கப்படுகிறார்.
"இப்போது எந்த நபியும், தேவ தூதரும் வரமாட்டார் என்றாலும் கவிதைக்கு மூன்று தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்கள், அப்யாத்தின் (கவிதையின் ஒரு வடிவம்) ஃபிர்தௌசி, கஸீதாவின் (புகழ்ச்சிக் கவிதை) அன்வரி மற்றும் கஜலின் ஸாதி," என்று பிரபல பாரசீகக் கவிஞர் ஜாமி எழுதியுள்ளார்.
கடந்த நூற்றாண்டில் இருந்து கிழக்கில் அவரது செல்வாக்கு குறைந்துள்ளது. ஆனால் கிழக்குப்பகுதி கவிஞர்களின் புகழ் மேற்கு நாடுகளில் அதிகரித்துள்ளது, மேலும் ஸாதியின் எழுத்துக்கள் ஹஃபீஸ் மற்றும் ரூமியுடன் ஒப்பிடப்படுகிறது என்று பேராசிரியர் ஷகீல் பிபிசியிடம் தெரிவித்தார்.
கவிதையில் மட்டுமின்றி உரைநடையிலும் தனது அழியாத முத்திரையை பதித்தவர் ஸாதி என்றும், மனிதநேயம் தேவைப்படும் போதெல்லாம் அவரது வார்த்தைகள் மக்களுக்கு வழிகாட்டும் என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க தத்துவஞானியும், எழுத்தாளரும், கவிஞருமான ராஃப் வால்டோ எமர்சன், ஸாதி பற்றிய தனது தகவல் ததும்பும் கட்டுரையில், ’பல காரணங்களால் அவரை மேற்கத்திய உலகிற்கு அறிமுகப்படுத்த தாமதமாகிவிட்டதாக’ வருத்தம் தெரிவித்தார்.
”இதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவர் சிறிது காலத்திற்கு முன்பாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் இலக்கியத்தின் திசையும் வேகமும் வேறாக இருந்திருக்கும்,” என்று அவர் தெரிவித்தார்.
"ஸாதிக்கு ஹஃபீஸ் போல கற்பனை வளம் இல்லை என்றாலும், அவரிடம் புத்திசாலித்தனம், நடைமுறை உணர்வு மற்றும் ஒழுக்க உணர்வு உள்ளது. அவருக்கு கற்பிக்கும் குணம் உள்ளது. மேலும் ஃபிராங்க்ளினைப் போல ஒவ்வொரு சம்பவத்தின் தார்மீக அம்சத்தை பிரித்தெடுக்கும் திறனும் உள்ளது. அவர் நட்பு, அன்பு மற்றும் அமைதியின் கவிஞர்," என்று அவர் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்,

பட மூலாதாரம், MAKTAB JAMIA
சுற்றுலாவில் இபின் படூடாவுடன் ஒப்பீடு
அவர் 30 வருடங்களை கல்வியிலும், 30 வருடங்களை பயணம் மற்றும் சுற்றுலாவிலும், 30 வருடங்களை ஷிராஸில் தனிமையிலும் செலவிட்டார் என்று ஸாதி பற்றி கூறப்படுகிறது.
"இபின் படூடா மற்றும் ஷேக் ஸாதியை தவிர கிழக்கிலிருந்து வந்த வேறு எந்த சுற்றுலாப் பயணிகள் பற்றியும் நான் கேள்விப்பட்டதில்லை. அவர் இந்தியா, ஆசியா கோச்சக் (துருக்கியின் ஒரு பகுதி), எத்தியோப்பியா, எகிப்து, சிரியா, பாலஸ்தீனம், ஆர்மேனியா, அரேபியா, இரான் மற்றும் இராக்கிற்கு பயணம் செய்தார்,” என்று அவரது பயணத்தைப் பற்றி, சர்கோரா வஸ்லியை மேற்கோள் காட்டி குவாஜா அல்தாஃப் ஹுசைன் ஹாலி எழுதியுள்ளார்.
ஆனால் ஷேக் ஸாதி இந்தியாவுக்கு நான்கு முறை வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளதால் அவரது கூற்று மிகைப்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது.
கிழக்கில் உள்ள கொராசன், துர்கிஸ்தான் மற்றும் தாதார் ஆகிய இடங்களுக்குச் சென்று பால்க் (ஆப்கானிஸ்தான்) மற்றும் காஷ்கர் (சீனா) ஆகிய இடங்களில் அவர் தங்கியதாக "குலிஸ்தான்" மற்றும் "போஸ்தான்" ஆகியவற்றில் அவர் எழுதியவற்றை குறிப்பிட்டு அல்தாஃப் ஹுசைன் ஹாலி எழுதியுள்ளார்.
தெற்கே சோம்நாத் வரை சென்று அங்கு நீண்ட காலம் தங்கி மேற்கு இந்தியாவில் சுற்றித் திரிந்து கடல் மார்கமாக அவர் அரேபியா சென்றார்.

பட மூலாதாரம், GALLICA DIGITAL LIBRARY
அவர் மங்கோலியர்கள் மற்றும் மேலைநாட்டு வீரர்களால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
அவர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை குலிஸ்தானில் இப்படி எழுதியுள்ளார்:
’டமாஸ்கஸ் மக்கள் மீது கோபம் கொண்டு அவர் பாலஸ்தீன காடுகளில் வாழத்தொடங்கினார். அங்கு கிறிஸ்துவர்களிடம் அகப்பட்டுக்கொண்டார். அப்போது திரிபோலி நகரின் பாதுகாப்பிற்காக அகழி தோண்டப்பட்டு வந்தது. யூத கைதிகளுடன் சேர்ந்து அவரும் தோண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்.
அதே நேரத்தில், ஹலாப் (சிரியா) நாட்டிலிருந்து ஒரு நபர் அப்பகுதியை கடந்து சென்றார். அவர் ஷேக்கை அடையாளம் கண்டு, பத்து தினார் செலுத்தி சிறையில் இருந்து விடுவித்தார். 100 தினார்களுக்கு தனது சொந்த மகளையும் திருமணம் செய்து வைத்தார்.
ஷேக் இந்தப் பெண்ணுடன் சிறிதுகாலம் செலவிட்டார். ஆனால் மனைவியின் மோசமான நடத்தை அவரை எரிச்சலூட்டியது. ஒருமுறை அவருடைய மனைவி, "என் அப்பா பத்து தினார் கொடுத்து வாங்கியவர் நீங்கள்,” என்று ஸாதியிடம் ஏளனமாகச் சொன்னார்.
"நிச்சயமாக நான் பத்து தினார்களுக்கு வாங்கப்பட்டேன். 100 தினாருக்கு உங்களிடம் விற்கப்பட்டேன்,” என்று ஷேக் பதில் சொன்னார்.
அவர் பெரும்பாலான சந்நியாசிகள் போலவே வீடற்றவராக இருந்தார். பயணத்தின் போது அதிக சிரமங்களை எதிர்கொண்டார். அவர் எங்கு சென்றாலும் வேலை செய்தார். பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்) மற்றும் சிரியாவின் நகரங்களில் தண்ணீர் நிரப்பி, குடிக்கக்கொடுக்கும் பணியை ஷேக் பலகாலம் செய்ததாக "நஃப்கதுல் அனஸ்"ல் எழுதப்பட்டுள்ளது.
"குலிஸ்தான்"-ல், அவர் தனது துன்பத்தைப் பற்றி எழுதுகிறார், "நான்
மனிதர்களிடமிருந்தும். வானத்திலிருந்தும் பெற்ற துன்பங்களைப் பற்றி ஒருபோதும் குறை கூறவில்லை. ஆனால் ஒரு காலத்தில் என் காலில் செருப்பு இருக்கவில்லை. காலணிகள் வாங்கும் திறனும் இல்லை. எனவே தைரியம் என்னை விட்டுப்போய்விட்டது. இக்கட்டான நிலையில் ஜமா மசூதியை அடைந்தபோது அங்கு கால்களே இல்லாத ஒரு மனிதரைக் கண்டேன். செருப்பில்லாத என் கால்களுக்காக அப்போது கடவுளுக்கு நன்றி கூறினேன்.”
இந்தியாவிற்கு பயணம் மற்றும் சோம்நாத் கோவிலின் நிலை
இந்தியாவைப் பற்றிய குறிப்பு போஸ்தானின் எட்டாவது அத்தியாயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் எழுதுகிறார், "நான் சோம்நாத்தை அடைந்தபோது, ஆயிரக்கணக்கான மக்கள் ஒரு சிலையை வழிபட தொலைதூரங்களில் இருந்து வருவதையும், தங்கள் வேண்டுதல்களை முறையிடுவதையும் கண்டேன். ஒரு உயிரினம் ஏன் உயிரற்ற ஒன்றை வணங்குகிறது என்று நான் ஆச்சரியப்பட்டேன்."
”இதைப்பற்றி அறிய நான் ஒரு பிராமணரிடம் நட்பாகி அவரிடம் இந்தக்கேள்வியை கேட்டேன். அந்த பிராமணர் கோவில் அர்ச்சகர்களுக்கு தகவல் கொடுத்தார். எல்லோரும் வந்து என்னை சூழ்ந்து கொண்டார்கள். நிலைமையை புரிந்துகொண்ட நான், "இந்த சிலையால் நானே மயங்கிவிட்டேன். நான் இங்கு புதியவன், அதன் ரகசியங்கள் எனக்குத் தெரியாது. அதை உணர்ந்து வழிபடுவதற்காக நான் உண்மையை அறிந்துகொள்ள விரும்புகிறேன்," என்று அந்தக் கூட்டத்தின் தலைவரிடம் சொன்னேன்.
அவருக்கு அது பிடித்தது. இரவு என்னை கோவிலில் தங்கச் சொன்னார். நான் இரவு முழுவதும் அங்கேயே இருந்தேன். அதிகாலையில் அப்பகுதியின் எல்லா ஆண்களும், பெண்களும் அங்கு கூடினர். சிலை ஆசீர்வதிப்பது போல் கைகளை உயர்த்தியது. மக்கள் ‘ஜெய் ஜெய்’ என்று கோஷமிட்டனர்.

பட மூலாதாரம், Alamy
”மக்கள் சென்றதும் பிராமணர் சிரித்துக்கொண்டே இப்போது ஏதாவது சந்தேகம் இருக்கிறதா என்று கேட்டார். நான் சத்தமாக அழ ஆரம்பித்தேன். என் கேள்விக்காக நான் வெட்கப்படுவதாக சொன்னேன். எல்லோரும் கருணையுடன் என் கைகளை பிடித்து சிலைக்கு அருகே அழைத்துச்சென்றனர். நான் அதன் கைகளில் முத்தமிட்டேன். சில நாட்களுக்கு பிராமணர் போல இருந்தேன்.”
“கோவிலில் அனைவருக்கும் என்மீது நம்பிக்கை அதிகரித்தது. ஒரு நாள் இரவு எல்லோரும் சென்றதும், நான் கோவிலின் கதவை மூடிவிட்டேன். சிலை இருக்கும் மேடைக்கு அருகே சென்று கவனமாக பார்க்க ஆரம்பித்தேன். அங்கே ஒரு திரைச்சீலையைக் கண்டேன். அதற்கு பின்புறம் ஒரு பூசாரி மறைத்து அமர்ந்திருந்தார்.அவரது கையில் ஒரு கயிறு இருந்தது. அவர் கயிறை இழுக்கும்போது சிலையின் கை உடனடியாக உயர்கிறது. இது சாதாரண மக்களால் ஒரு அதிசயமாக கருதப்படுகிறது."
“அந்தப் பூசாரி ரகசியம் வெளிப்பட்டதைக் கண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அவர் என்னைக் கொன்றுவிடுவாரோ என்று பயந்து நானும் அவர் பின்னாலேயே ஓடி அவரைப்பிடித்து கிணற்றில் போட்டேன். பின்னர் அங்கிருந்து தப்பி யேமன் வழியாக ஹிஜாஸ் (அரேபியா) வந்தடைந்தேன்.”
ஆனால் பாரசீக இலக்கியத்தின் பல விமர்சகர்கள் ஸாதி ஒருபோதும் இந்தியாவுக்குப் பயணம் செய்யவில்லை என்று கூறுகிறார்கள். இது செவிவழிக் கதை என்றும் சொந்த அனுபவத்தின் கதை அல்ல என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
"டெல்லியின் அரசர் பால்பனின் காலத்தில் இளம் அமீர் குஸ்ரோவும் அவரது நண்பர் ஹசன் தெஹ்லவியும், முல்தானில் இளவரசர் முகமதுவின் அரசவையுடன் இணைந்திருந்தனர். மேலும் இருவரும் ஸாதியின் அபிமானிகளாகவும் அவரை பின்பற்றுபவர்களாகவும் இருந்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து இளவரசர், ஸாதியை இங்கு வருமாறு அழைத்தார். வயது முதிர்வு காரணமாக தனது இயலாமையை ஸாதி வெளிப்படுத்தினார். பின்னர் அவரது வழியைப் பின்பற்றிய ஹசன் தெஹல்வி, ’இந்தியாவின் ஸாதி’ என்று அழைக்கப்பட்டார். குஸ்ரோ வேறு பாதையில் சென்றுவிட்டார்,” என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான அக்லாக் அகமது ஆஹன் பிபிசியிடம் கூறினார்.
ஹாலியின் "ஹயாத்-இ-ஸாதி" என்ற புத்தகம் உருது மொழியில் ஸாதி பற்றிய முதல் புத்தகம் என்றும் வரலாற்றின் பல விஷயங்கள் அதில் தெளிவாக இல்லை என்றும் பேராசிரியர் குறிப்பிட்டார். "ஸாதி பிறப்பதற்கு கிட்டதட்ட 200 ஆண்டுகளுக்கு
முன்பே அழிந்து போன சோம்நாத்தை அவர் எப்படி பார்த்திருக்க முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

பட மூலாதாரம், ARCHIVE.ORG
குலிஸ்தானை எழுதினார்
ஸாத் ஜாங்கிக்குப் பிறகு அவரது மகன் குத்லாக் கான் அபுபக்கர் அரியணையில் அமர்ந்ததால், ஸாதி தனது நாட்டிற்குத் திரும்பிய பிறகு தனிமையை ஏற்றுக்கொண்டார். குத்லாக் இரானை செழிப்பாகவும் வளமையாகவும் ஆக்கினாலும்கூட, அவரது அரசவையில் அறிஞர்களின் உடையில் அறிவற்றவர்கள் இருந்தனர் மற்றும் கற்றவர்கள் தங்கள் கருத்தைக்கூற பயந்தனர்.
தான் கல்வி கற்று உலகம் முழுவதும் பயணம் செய்தும் குறிப்பிடத்தக்க பணி எதுவும் செய்யவில்லை என்று ஸாதி வருந்தத் தொடங்கினார்.
அவர் தனிமையில் வாழத் தொடங்கினார். ஆனால் ஒரு நண்பரின் வற்புறுத்தலின் பேரில் அவர் தனது உறுதிமொழியை உடைத்து வீட்டை விட்டு வெளியே வந்தார். வசந்த காலத்தில் ஷிராஸில் உள்ள பாக்-இ-பஹிஷத்திற்கு ஷேக் ஸாதியை அந்த நண்பர் அழைத்துச்சென்றார்.
அங்கு அவருக்காக பூக்களை பறித்து கொடுத்தார். ஆனால் ஷேக் ஸாதி அவற்றை கவனிக்கவில்லை.
கவிஞரும் தத்துவஞானியுமான கயாமின் பாணியில் ஸாதி, அந்த விஷயங்களின் தற்காலிகத் தன்மையைக் குறிப்பிட்டு, அந்த மலர்களைப்போல வாடிப்போகாத, தகவல்கள் நிறைந்த மற்றும் சுவாரசியமான ஒரு புத்தகத்தை எழுதுவேன் என்று தனது நண்பரிடம் கூறினார் என்று எழுத்தாளர் ஜோபின் பக்தார் குறிப்பிடுகிறார்.
தனது படைப்புக்கு "குலிஸ்தான்" (பூந்தோட்டம்) என்று பெயர் வைத்த ஸாதி, அது நிலைத்தன்மை பெறும் என்றார்.
ஒரு பூவின் ஆயுட்காலம் ஐந்து அல்லது ஆறு நாட்கள். ஆனால் தன் படைப்பு எப்போதும் பசுமையானது என்று அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஸாதி இறந்த தேதி யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் அவரது "குலிஸ்தான்" புத்தகம் முடிந்த நாளில் அவரது கல்லறையில் பெரிய கூட்டம் நடத்தப்படுகிறது.
மேலும் உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த அங்கு வருகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












