ஆஸ்திரேலியாவுக்கு இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் செல்ல என்ன காரணம்?

பட மூலாதாரம், AVANI WINES
- எழுதியவர், செரீ லான் முல்லன்
- பதவி, பிபிசி செய்திகள், மும்பை
ரோஹித் சிங் பேசுவது, அவருடைய அம்மா பேசுவதைப் போல இல்லை. அவர் பேசும் விதமே வேறு மாதிரியாக இருக்கிறது.
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்தின் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்தவர் அவர்.
அவருடைய குடும்பம் மார்னிங்டன் தீபகற்பத்தில் வசித்து வருகிறது. மார்னிங்டன் தீபகற்பம் கடற்கரைகளுக்கு என்றே பெயர் பெற்ற ஒரு பகுதி.
மெல்போர்ன் நகரில் இருந்து அங்கே செல்ல சுமார் ஒரு மணிநேரம் பயணிக்கவேண்டும்.
கடந்த 1990ல் ரோஹித் சிங்கின் குடும்பம் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தனர்.
ரோஹித்தின் பெற்றோர் ஆஸ்திரேலியாவில் அவானி என்ற ஒயின் விற்பனை செய்யும் சிறிய நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ரோஹித் அவர்களுக்கு உதவியாக இருந்து வருகிறார்.
கடந்த தசாப்தத்தில் தெற்கு ஆசிய சமூகத்தினரின் எண்ணிக்கை மெல்போர்னில் கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், அதனால் 'ஒயினுடன் கூடிய விருந்து' நிகழ்ச்சிகளை அவானி நிறுவனம் நடத்திவருகிறது.
இந்நிகழ்ச்சிகளில், பொதுமக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள 'பைனாட் நோய்ர்' என்ற ஒயின் மற்றும் தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பிரபலமான உணவாக இருக்கும் மீன் பொளிச்சது, வட இந்தியாவில் பிரபலமான 'தால் மக்னி' (பருப்புகள் கொண்டு செய்யப்பட்ட க்ரேவி) போன்ற உணவுகள் பரிமாறப்படுகின்றன என்றும் ரோஹித் சிங் கூறுகிறார்.
உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையில் புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் நாடான ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மட்டும் சுமார் 7,10,000 பேர் வசிக்கின்றனர்.
அவர்களை நம்பியே இது போன்ற 'ஒயினுடன் கூடிய விருந்து' நிகழ்ச்சிகளை ரோஹித் சிங்கின் குடும்பத்தினர் நடத்திவருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளில் இந்தியர்களின் எண்ணிக்கை ஆஸ்திரேலியாவில் மிகவேகமாக அதிகரித்து வருகிறது.
ஆஸ்திரேலிய அரசு கடந்த முறை பொதுமக்கள் கணக்கெடுப்பு நடத்தியதில், அந்நாட்டில் வாழும் புலம்பெயர்ந்த மக்களில் இரண்டாவது இடத்தில் இந்தியர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இதில் சீனர்களை விஞ்சிய இந்தியர்கள், அந்நாட்டுக்கு வந்த ஆங்கிலேயர்களுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் வாழும் மக்களாக இருக்கின்றனர்.
தொழில்நுட்பத் துறையில் திறன்வாய்ந்த நபர்கள் ஆஸ்திரேலியாவுக்கு அதிக எண்ணிக்கையில் தேவைப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து ஏராளமானோர் அந்நாட்டுக்குச் செல்கின்றனர்.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாகவும் அந்நாட்டில் இந்தியர்களின் அனுபவங்கள் குறித்த கட்டுரைகளை தொகுத்து வரும் ஆர்த்தி பெடிஜெரி என்ற பத்திரிக்கையாளர், தமது குடும்பம் ஆஸ்திரேலியாவுக்குக் கடந்த 1960ல் வந்ததாகவும், அப்போது மிகவும் அரிதாகவே இந்தியர்களை அங்கே பார்க்க முடிந்ததாகவும், பொதுவெளியில் இந்தியர்களைப் பார்ப்பதே எப்போதாவது தான் நடக்கும் என்றும் கூறுகிறார்.
"ஒரு தெருவில் நாங்கள் நடந்து சென்றால், எங்களைப் போன்ற மற்றொரு இந்தியரைக் காண்பதே மிகவும் அரிதான நிகழ்வாக இருந்தது," என்கிறார் அவர்.
ஆனால் இன்று நிலைமை அப்படியில்லை. "பல்வேறு துறைகளில் அவர்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர். மேலும் பல சொந்த தொழில்களையும் நடத்திவருகின்றனர். அரசியலிலும் தற்போது இந்தியர்களின் பங்களிப்பு தொடங்கியுள்ளது," என்கிறார் அவர்.
அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசில், டேனியல் மூக்கி உள்ளிட்ட நான்கு பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
இதில் டேனியல் மூக்கி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இருப்பினும், ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் அதிகம்.
ஐரோப்பியர்களைத் தவிர ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டவர்களுக்கான சரியான பிரதிநிதித்துவம் ஆஸ்திரேலிய அரசில் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
கல்வி, கலாசாரம், வாழ்க்கைமுறை, வேலைவாய்ப்புகள் என பல அம்சங்கள் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை இணைப்பதாக பத்திரிக்கையாளர் பெடிஜெரி கூறுகிறார்.
சிட்னியில் அண்மையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, 'மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியும், கிரிக்கெட்டும், திரைப்படங்களும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மக்களை எப்படி ஒன்றிணைக்கின்றன என்பதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தியதில் பிரதமர் நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சி கடந்த 2014ம் ஆண்டு முதல் பெரும் பங்காற்றியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
2014 நவம்பர் மாதம் நரேந்திர மோதி முதன் முதலில் ஆஸ்திரேலியப் பயணம் மேற்கொண்ட போது, 30 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் அங்குச் சென்றது அதுவே முதல் முறை எனக் கருதப்பட்டது.
சிட்னி நகருக்கு அவர் கடந்த மாதம் மேற்கொண்ட பயணத்தின் போது, மாணவர்கள் கல்வி கற்பதற்காக அந்நாட்டுக்குச் செல்வது குறித்த புதிய உடன்படிக்கை ஒன்று நிறைவேறியது. இந்த உடன்படிக்கையின் படி, மாணவர்களும், கல்வி மற்றும் பல்வேறு துறை சார் வல்லுநர்களும் இருநாடுகளுக்குள்ளும் எளிமையாகப் பயணம் மேற்கொள்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டன.
இதே போல் கடந்த ஏப்ரல் மாதம் கையெழுத்திடப்பட்ட ஒரு உடன்படிக்கையின் பயன்களை அறுவடை செய்வதற்காக பொருளாதார கூட்டுறவு குறித்து இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் (உள்ளூரில் ஆல்பனேஸீ என அழைக்கப்படுகிறார்) இந்தியாவுக்கு முதன் முறையாக ஒரு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது இருநாட்டு பிரதமர்களும் இணைந்து, பொருளாதார ஒத்துழைப்பு, இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பாதுகாப்புத் துறையில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
"அடிக்கடி இப்படி பிரதமர்களும், அமைச்சர்களும் சந்தித்துக் கொண்டதில் இருநாடுகளுக்கும் இடையேயான உறவுகள் வேகமாக மேம்படத் தொடங்கின. இது போல் முன்னெப்போதும் நடந்ததில்லை," என்கிறார் சர்வதேச அரசுகளின் கொள்கைகள் குறித்து ஆராய்ச்சி செய்யும் கட்ஸ் என்ற நிறுவனத்தின் பிரதீப் எஸ் மேத்தா.
தலைவர்களுக்கு இடையேயான இந்த கூட்டணி என்பது இந்த இரண்டு நாடுகளுக்கும் மிகப்பெரிய நன்மைகளை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மேலும், இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைப்பதிலும் இந்த தலைவர்களின் சந்திப்பு மிக முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்குமான உறவு என்பது பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்கிறது.
பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கோண்டுவானா என ஒரு பெருங்கண்டம் இருந்த போது, தற்போதைய இந்த இரண்டு நாடுகளும் ஒரே நிலப்பரப்பாக இருந்தன.
அண்மைக்கால புலம்பெயர்வு என்பது, இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆண்ட போது, கடந்த 1800களில் தங்களது பணியாளர்களாக இந்தியர்களை அங்கு அழைத்துச் சென்ற போது தொடங்கியது.
இதே போல் 1900களில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.
வெள்ளையர்களைத் தவிர யாரும் ஆஸ்திரேலியாவுக்கு வரக்கூடாது என இனவெறியுடன் கூடிய ஒரு சட்டம் கடந்த 1973ல் ரத்து செய்யப்பட்ட பின், மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் அங்கு செல்லத் தொடங்கினர்.
"அதற்குப் பின்னரும் புலம்பெயர்ந்த மக்களை வரவேற்பதில் பாரபட்சம் காட்டும் நாடாகவே ஆஸ்திரேலியா நீடித்தது; மருத்துவர்கள், செவிலியர்கள், கல்விப் பணியாளர்கள் போன்ற தொழில்நுட்பத் திறன் பெற்றவர்களை மட்டுமே அந்நாட்டுக்கு வர அரசு அனுமதித்தது.
அதுவும் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது," என்கிறார் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த இந்தியர்கள் (Indian diaspora in Australia) என்ற ஆங்கில புத்தகத்தை எழுதிய ஜெயந்த் பாபட்.
அதன் பின் 2006ல் தான் ஒரு உண்மையான மாற்றம் நிகழ்ந்தது.
அப்போதைய ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவார்ட் தலைமையிலான அரசுதான் முதல் முறையாக இந்திய மாணவர்களுக்கு விசா அளிப்பதிலும், பின்னர் அவர்களை அந்நாட்டு நிரந்தர குடிமக்களாக அங்கீகரிப்பதிலும் எளிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது.
அதன் பின்னர் தான் அங்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது.
"தற்காலிக குடியுரிமையுடன் ஆஸ்திரேலியாவில் வசிப்பவர்களில் இந்திய மாணவர்கள் இன்றும் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர்.
அவர்கள் படிப்பை முடித்துவிட்டு பட்டம் பெற்ற பின், அவர்களில் பலருக்கு ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை அளிக்கப்படும்," என ஜெயந்த் பாபட் சொல்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் சில நேரங்களில் பதற்றம் ஏற்படுத்திய நிகழ்வுகளும் நடந்தன.
2000களின் பிற்பகுதியில், சிட்னி மற்றும் மெல்போர்னில் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட பல வன்முறைத் தாக்குதல்கள் உலக அளவில் தலைப்புச் செய்திகளாக இடம்பெற்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆஸ்திரேலியாவில் வசித்துவந்த ஏராளமான இந்திய புலம்பெயர்ந்த மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆஸ்திரேலிய அரசுக்கு எதிராக இந்தியாவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது.
அதன் பின் தான் ஆஸ்திரேலிய அரசு இறங்கி வந்தது.
இந்த பிரச்னையைச் சரி செய்யும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு, மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
ஆனால், இப்போதும் அவ்வப்போது இந்தியர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் ஆஸ்திரேலிய சமூகத்திற்கு மிகவும் தேவையான பன்முக கலாசாரத்தை கொண்டு வந்து பொருளாதாரம் வளர உதவியதாக, குடியேற்றத்துக்கு ஆதரவாக பேசுபவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்தோர் குறித்த கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
மிகக்குறைந்த ஊதியம் பெற்று ஆஸ்திரேலியர்களின் வேலைகளைப் பறித்துக் கொண்டு தங்களின் வளங்களைப் பெருக்குவதாகவும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.

பட மூலாதாரம், MEDIALAB
இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சிலர், அவர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பற்றி அந்நாட்டு மக்களுக்குக் கற்பிப்பதன் மூலம் ஆஸ்திரேலிய மக்களை, அனைவரையும் ஒருங்கிணைத்து வாழும் மக்களாக மாற்றும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்று சிட்னி நகரில் வாழ்ந்து வரும் 24 வயதான திவ்யா சக்சேனா என்பவர், பரதநாட்டியம், கதகளி போன்ற இந்திய பாரம்பரிய நடனங்களை ஆஸ்திரேலிய மக்களிடையே பரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சிட்னியில் வாழும் இந்திய புலம்பெயர்ந்த மக்களில் ஏராளமான படைப்பாளிகள் இருப்பதாகவும், அவர்கள் தெற்காசிய சமூகங்களுக்கு இடையே நிலவும் பாகுபாடுகளை உடைக்க முயற்சி செய்கிறார்கள் என்பதுடன், அவர்களுடைய வணிக நடவடிக்கைகளுக்கும் உதவுவதாகவும் திவ்யா சக்சேனா கூறுகிறார்.
சிட்னியில் வசிக்கும் ரோவி சிங் என்ற பெண் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்.
அவர் ஒப்பனைக் கலைஞராக இருந்து வருகிறார்.
அவர் தெற்காசிய பாரம்பரியத்தினால் ஈர்க்கப்பட்டு, மிகத் துடிப்பான தோற்றங்களை உருவாக்குவதில் நிபுணராகவும் விளங்குகிறார்.
அவருக்காக அண்மையில் ஒரு நடன நிகழ்ச்சிக்கு திவ்யா சக்சேனா ஏற்பாடு செய்திருந்தார்.
"எங்கள் பெற்றோரின் தலைமுறை இங்கே வந்து வாழ்க்கையைத் தொடங்கியது.
அவர்கள் ஒரு நிலையான வேலைக்குச் செலவதன் மூலம் குழந்தைகளை சிறப்பாக வளர்க்க முடியும் என எண்ணினர்.
அதனால் அவர்கள் ஒரு நிலையான வேலைக்காக வாழ்க்கை முழுவதையும் செலவிட வேண்டியிருந்தது.
ஆனால் எனது தலைமுறை இளைஞர்கள் அது போன்ற சுமையைச் சுமக்கவேண்டிய நிலையில் இல்லை," என திவ்யா சக்சேனா கூறுகிறார்.
"எங்கள் எண்ணப்படி விருப்பமான வாழ்க்கையை வாழும் சுதந்திரத்தை நாங்கள் பெற்றுள்ளோம். இன்னும் துடிப்பாகச் செயல்பட்டு, எதிர்கால சந்ததியினரை வரவேற்கும் நாடாக ஆஸ்திரேலியாவை மாற்ற முயற்சிக்கிறோம்." என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












