மோதியை 'பாஸ்' என புகழ்ந்த அல்பனீஸ் - இவர்களின் நெருக்கத்துக்கு இதுதான் காரணம்

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோதி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்திய வம்சாவளி மக்களிடையே பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார். அப்போது ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஆண்டனி அல்பனீஸும் (உள்ளூரில் ஆல்பனேஸீ என அழைக்கப்படுகிறார்) உடனிருந்தார்.

சிட்னியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இரு பிரதமர்களும் "லிட்டில் இந்தியா கேட்வே" எனப்படும் நுழைவாயிலுக்கு அடிக்கல் நாட்டினர்.

"பிரதமர் ஆண்டனி அல்பனீஸை இந்திய மண்ணில் ஆமதாபாத் நகரில் வரவேற்கும் வாய்ப்பு இந்த ஆண்டு எனக்கு கிடைத்தது. இன்று அவர் "லிட்டில் இந்தியா" நுழைவாயிலுக்கு அடிக்கல்லை நாட்ட எனக்கு வாய்ப்பளித்தார்.

அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்று மோதி அப்போது கூறினார்.

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரதமர் மோதி உரையாற்றிய போது குவிந்திருந்த இந்திய வம்சாவளியினர்

அல்பனீஸ் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பது இந்தியர்கள் மீது அவருக்கு இருக்கும் பாசத்தை காட்டுகிறது என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ், "மோதி இஸ் பாஸ்," என்று கூறினார்.

கிரிக்கெட்டில் உள்ள சுவாரஸ்யம் நட்பிலும் உள்ளது - மோதி

2014ஆம் ஆண்டு ஒருமுறை தான் ஆஸ்திரேலியா வந்தபோது, ​​ இந்திய பிரதமரின் அடுத்த வருகைக்காக ஆஸ்திரேலியா 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதில்லை என்று உறுதியளித்ததாக பிரதமர் மோதி தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே உள்ள விளையாட்டு மூலமான தொடர்பு குறித்துப் பேசிய மோதி, நீண்ட காலமாக கிரிக்கெட் இரு நாடுகளையும் இணைத்து வந்துள்ளது. ஆனால் இப்போது டென்னிஸ் மற்றும் திரைப்படங்கள் இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் இணைக்கின்றன என்று கூறினார்.

"இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை காமன்வெல்த், கிரிக்கெட் மற்றும் கறி ஆகிய 3-சி வரையறுக்கும் ஒரு காலம் இருந்தது. பின்னர் 3D- அதாவது டெமாக்ரஸி, டயஸ்போரா மற்றும் தோஸ்தி (நட்புறவு) இருந்தது. ஆனால் இப்போது அது 3E – அதாவது எனர்ஜி, எஜூகேஷன் மற்றும் எக்கானமிக்கு மாறியுள்ளது.

'கிரிக்கெட் போட்டியில்' எவ்வளவு சுவாரசியம் உள்ளதோ அந்த அளவிற்கு மைதானத்திற்கு வெளியேயும் எங்கள் நட்பில் சுவாரசியம் உள்ளது," என்று அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதியும், ஆஸி. பிரதமர் அல்பனீசும் கைகுலுக்கிக்கொண்டனர்

ஷேன் வார்ன் பற்றிய நினைவுகள்

மறைந்த கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னை நினைவுகூர்ந்த பிரதமர் மோதி, "ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன் கடந்த ஆண்டு மறைந்தபோது, ​​ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து கோடிக்கணக்கான இந்தியர்களும் துக்கம் அனுசரித்தனர். நெருக்கமான யாரையோ இழந்தது போல் இருந்தது,” என்று குறிப்பிட்டார்.

“நமது இந்தியாவும் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்று உங்களுக்கு ஒரு கனவு உள்ளது. உங்கள் இதயத்தில் இருக்கும் கனவு என் இதயத்திலும் உள்ளது.”

"கொரோனா தொற்றுநோய் தாக்கியபோது தடுப்பூசி இயக்கம் மிக வேகமாக செயல்படுத்தப்பட்ட நாடு. மிக வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு. ஸ்மார்ட் போன் டேட்டா நுகர்வில் உலகில் முதலித்தில் உள்ள நாடு. பால் உற்பத்தியில் இன்று முதலிடத்தில் உள்ள நாடு. இணைய பயன்பாட்டில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு. இன்று உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் உள்கட்டமைப்பைக் கொண்ட நாடு. உலகின் மூன்றாவது பெரிய சிவில் விமானச் சந்தை கொண்ட நாடு. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக மாறும் இலக்குடன் முன்னேறி வரும் நாடு.

அதுதான் இந்தியா."

"இந்தியாவில் திறமைக்கு குறைவில்லை இந்தியாவில் வளங்களுக்கும் பஞ்சமில்லை. இன்று உலகின் மிகப்பெரிய மற்றும் இளமையான டேலண்ட் ஃபேக்ட்ரி இந்தியாவில் உள்ளது,” என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோதி

பிரிஸ்பேனில் திறக்கப்படவுள்ள துணை தூதரகம்

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் புதிய துணை தூதரகம் திறக்கப்படும் என்று பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

"இந்தியா தனது ஜி-20 தலைவர் பதவியின் கருப்பொருளை தீர்மானிக்கும் போது, ​​அது சொல்கிறது – ஒன் எர்த் (ஒரே பூமி), ஒன் ஃபேமிலி (ஒரே குடும்பம்), ஒன் ஃப்யூச்சர்(ஒரே எதிர்காலம்),” என்று அவர் கூறினார்.

"சுற்றுச்சூழலைப் பாதுகாக்க இந்தியா சூரிய சக்திக்கு பெரிய இலக்குகளை நிர்ணயிக்கும் போது, ​​அது சொல்கிறது – ஒன் சன் (ஒரு சூரியன்), ஒன் வேர்ல்ட்( ஒரு உலகம்), ஒன் க்ரிட்(ஒரு மின்தொகுப்பு)."

“உலக சமூகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று இந்தியா விரும்பும் போது, ​​அது சொல்கிறது – ஒன் எர்த்(ஒரே உலகம்), ஒன் ஹெல்த்(ஒரே ஆரோக்கியம்).”

”இன்று இந்தியா 'உலக நன்மைக்கான சக்தி' என்று அழைக்கப்படுகிறது. எங்கு பேரிடர் ஏற்பட்டாலும், இந்தியா உதவ தயாராக உள்ளது.”

"சமீபத்தில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு பேரழிவை ஏற்படுத்தியபோது, 'ஆபரேஷன் தோஸ்த்' மூலம் இந்தியா உதவிக்கரம் நீட்டியது."

"நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் இந்தியாவுக்கு வரும்போதெல்லாம், சில ஆஸ்திரேலிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை உங்களுடன் அழைத்துவாருங்கள். இது இந்தியாவை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் அவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கும்,” என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவில் பிரதமர் மோதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய பிரதமர் மோதியும், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீசும்

பிரதமர் மோதி தான் பாஸ் - அல்பனீஸ்

பிரதமர் மோதியை வரவேற்ற ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் இந்த மேடைக்கு வந்திருந்தபோது தாம் அவரை பார்த்தாகவும், நரேந்திர மோதிக்கு கிடைத்த வரவேற்பு அவருக்குக்கூட கிடைக்கவில்லை என்றும் கூறினார். ’மோதி இஸ் பாஸ்’ என்று அவர் தெரிவித்தார்.

"கடந்த ஆண்டு நான் இந்தியா வந்திருந்தேன். அவை எனக்கு மறக்க முடியாத தருணங்கள். குஜராத்தில் ஹோலி கொண்டாடினேன். டெல்லியில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினேன். நான் செல்லும் எல்லா இடங்களிலும் ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான தொடர்பை உணர்ந்தேன்," என்று அவர் கூறினார்.

“இந்தியாவைப் புரிந்து கொள்ளவேண்டுமானால் ரயில் மற்றும் பேருந்தில் பயணம் செய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: