3வது முறை கலைந்த கரு, வயிற்றில் துணி கட்டி 9 மாதம் நடித்த பெண் - சமூக அழுத்தம் பெண்களை எப்படி பாதிக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழ்
மூன்றாவது முறையாக கரு கலைந்த பெண் குடும்பத்தினருக்குப் பயந்து 9 மாதங்கள் வயிற்றில் துணி கட்டி நடித்து வந்த நிலையில், உண்மை வீட்டிற்குத் தெரிவதற்கு முன் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக மருத்துவர்களிடம் கூறிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருவுற்று குழந்தை பிரசவிப்பது என்பது பெண்களுக்கு உடலில் இயற்கையாக உள்ள ஓர் அமைப்பாக இருந்தாலும், பெண்கள் குழந்தை பெற்றெடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனரா? ஒரு தம்பதியால் கருத்தரிக்க முடியாமல் போகும்பட்சத்தில், அப்பெண் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெரும் அழுத்ததுக்கு உள்ளாகிறாரா?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடந்துள்ள இரண்டு நிகழ்வுகள் இந்தக் கேள்வியை அழுத்தமாக முன்வைக்கின்றன.
சம்பவம் 1 - வயிற்றில் துணி கட்டி 9 மாதங்கள் கர்ப்பிணியாக நடித்த பெண்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆன 23 வயது பெண் ஒருவருக்கு 2 முறை கருத்தரித்து, கரு வயிற்றில் தங்காமல் கலைந்து போனது. இதையடுத்து அப்பெண் 3-வது முறையாகக் கருவுற்றார். 5 மாதங்களுக்குப் பிறகு அவருக்கு மீண்டும் கரு கலைந்தது. இதற்கிடையே அப்பெண்ணின் கணவர் வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார். ஆனால், தனக்கு மீண்டும் கரு கலைந்து கணவரது வீட்டிற்குத் தெரிந்தால் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று எண்ணி அப்பெண் பயந்துள்ளார்.
இதனைச் சமாளிக்க வயிற்றில் துணியை வைத்துக்கொண்டு நடிக்கத் தொடங்கினார். அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்து வருவதாகக் காட்டிக்கொண்டார். 9 மாதங்கள் கடந்த நிலையில் குழந்தை பிரசவத்திற்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட நாள் நெருங்கியதும், தனக்குக் குழந்தை பிறப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர்.
அங்கு அப்பெண்ணை அழைத்துச் சென்று ஸ்கேன் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் முயன்றபோது தான் கருத்தரிக்கவில்லை தனது வயிற்றில் துணியை வைத்து கர்ப்பிணி போல் நடித்து வந்ததாகக் கூறியுள்ளார். தான் மூன்றாவது முறையாகக் கருத்தரித்தும் கரு தங்கவில்லை என்ற விஷயம் வீட்டிற்குத் தெரிந்தால் என்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் எனப் பயந்து கர்ப்பம் தரித்தது போல நடித்து வந்ததாக மருத்துவர்களிடம் கூறினார். மேலும் தன்னை இதிலிருந்து காப்பாற்றவும் வீட்டில் கேட்டால் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறும்படியும் கேட்டு மருத்துவர்களிடம் கெஞ்சியுள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் குடும்பத்தினரிடம் நிலைமையை எடுத்துக் கூறுவதாகக் கூறி அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறினர். மேலும் மருத்துவர்களிடம் குடும்பத்தினர் கேட்டபோது அவர்கள் நடந்த சம்பவத்தை விளக்கினர். தகவலறிந்து மருத்துவமனை வந்த பெண் காவலர் மற்றும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் அப்பெண்ணிற்கு ஆலோசனை வழங்கினர்.
"இதுபோன்று செய்வது தவறு என்று எடுத்துரைத்த மருத்துவர்கள், கருத்தரிக்க நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. அதற்கேற்ப நீங்கள் சிகிச்சை எடுத்திருக்கலாம். ஆனால் இவ்வாறு செய்வது ஒரு காலத்தில் வீட்டிற்குத் தெரியாமல் போய்விடுமா என்று மருத்துவர்கள் பெண்ணிடம் கேட்டதற்குப் பிரசவம் நேரம் நெருங்கும் போது தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன்” என்று அப்பெண் கூறியதாக காவலர் ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பின்னர் அப்பெண்ணிற்கும் குடும்பத்தினருக்கும் மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் உரிய அறிவுரைகள் வழங்கி அனுப்பிவைத்தனர்.
சம்பவம் 2 - செயற்கை கருவூட்டல் முறையில் இரட்டை குழந்தை பெற்ற பெண் தற்கொலை

பட மூலாதாரம், Getty Images
புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தனர். இதனால் அவர்கள் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற்றெடுக்க முயன்றனர். அதன்படி தனியார் கருத்தரிப்பு மருத்துவமனை மூலமாக கடந்த மே மாதம் ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் பிறந்தன.
இந்த வழக்கை விசாரணை செய்த புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் உதவி ஆய்வாளர் சிவப்பிரகாசம் பிபிசியிடம் கூறுகையில், "குழந்தை பெற்ற பிறகு புதுச்சேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு 31 வயதான ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) சென்றுள்ளார். இதனிடையே குழந்தை பராமரிப்பதில் அப்பெண் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். மேலும் குழந்தைகள் 7 மாதம் குறைப் பிரசவத்தில் பிறந்ததால் தாய்ப்பால் கொடுப்பதில் தாய்க்கு சிரமம் இருந்துள்ளதாக தெரிகிறது. மேலும் குழந்தையை சரிவர பராமரிக்க முடியாமல் போவது குறித்தும், வீட்டிலுள்ள தனது தாயிடம் கூறி அப்பெண் அழுதுள்ளார். தொடர்ந்து குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற அச்சம் உள்ளிட்ட காரணங்களால் அவர் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாகத் தனது பெற்றோர் வீட்டில் தங்கி குழந்தைகளைப் பராமரித்து வந்த அப்பெண் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது," என்கிறார் அவர்.
மேலே குறிப்பிட்ட இரண்டும் வெவ்வேறு சம்பவங்களாக இருந்தாலும் இரண்டுக்கும் அடிப்படை குழந்தை பெற்றெடுத்து வளர்ப்பதே ஆகும்.
உளவியல் நிபுணர்கள் சொல்வது என்ன?
ஒரு பெண் பிறந்ததே திருமணமாகி, அடுத்த தலைமுறைக்கு வாரிசை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே என்ற எண்ணம் இருக்கிறது. இவ்வாறு பெண்களை குடும்பத்தில் இனப்பெருக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தும் முறை இன்று வரை நீடித்தது வருவதாக உளவியல் நிபுணர் ஷர்மிலி ராஜகோபாலன் பிபிசியிடம் பகிர்ந்துள்ளார்.
"சமுதாயத்தில் வெகுஜன மனநிலை (Mass Mentality) ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போது ஆண், பெண் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பாக ஒரு கருத்தை குடும்பமும், சமுதாயமும் நமக்குள் செலுத்துகின்றன. அதன்பின்னர் வளரும் போது நமக்கென்று தனித் தன்மையை உருவாக்க வேண்டும். ஆனால் நாம் சமுதாயம் சொல்கின்ற ஆளாக மட்டுமே மாறுகிறோம்.
இவ்வாறு ஒரு பெண் முழுமையான ஆளாக மாறும் போது, உடல் ரீதியான மாற்றம் மட்டுமே நடக்கிறதே தவிர உளவியல் ரீதியாக எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. மேலும் வெகுஜன மனநிலை உருவாகும் போது ஒரு பெண் எல்லாரும் சொல்வதைக் கேட்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்.
ஆண், பெண் இருவருக்கும் சமுதாயத்தில் கட்டமைக்கப்பட்ட விஷயங்களை வெகுஜன மனநிலையில் உள்ள உறுதியான நம்பிக்கையாகப் பார்க்கின்றனர். அதிலிருந்து வெளியே யோசிப்பதற்குக் கூட பெண்கள் பயப்படுகின்றனர். இதில் அவர்களுக்கு ஏற்படும் பயம் மிகவும் ஆழ்ந்த பயமாக உள்ளது," என்கிறார் உளவியலாளர் ஷர்மிலி ராஜகோபாலன்.
இந்த ஆழ்ந்த பயம் நம்மை நம் வசத்தில் வைத்துக்கொள்ளாது. வெகுஜன மனநிலையின் வசத்தில் நம்மை இழுக்கும் என்று கூறும் நிபுணர் ஷர்மிலி, ஒரு பெண் 9 மாதங்கள் வரை குழந்தை இருப்பது போல் பொய்யாக நடித்திருக்கிறார் என்றால் அவருடைய வசத்தில் அப்பெண் இல்லை என்று அவர் கூறுகிறார்.
"இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணிற்கு அவரது குடும்பம், மற்றும் சமுதாயம் குழந்தை பெற்றால் தான் தாய்மை என்று அனைத்தையும் நம்பி தனக்கென்று தனித்தன்மையை அவர் உருவாக்காமல் இருந்திருக்கிறார். அவ்வாறு அவர் தனக்குள் உருவாக்காத காரணத்தினால் தான் இந்த வெகுஜன மனநிலை அவர்களை என்ன வேண்டுமென்றாலும் செய்யத் தூண்டும்.
ஆணாதிக்கம் என்று சொல்லும்போது அது குறித்த அனைத்து கோபங்களும் ஆண்கள் மீது செல்லும் போது பெண்ணியம் என்று ஒன்று உருவாகிறது. இந்த ஆண்களே இப்படிதான், எங்களை இப்படி ஆக்கிவிட்டார்கள், அதற்கு எதிராக ஒன்று சேரப் போகிறோம் என்று பெண்ணியம் எழுகிறது. ஆனால் ஆணாதிக்கம் ஆண்களிடம் மட்டும் இல்லை. ஆணாதிக்கம் என்பது ஒரு வாழ்க்கை முறை என்று சொல்லலாம். அதேபோன்று பெண்களைப் பெண்களும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இதுபோன்ற சம்பவங்களில் அந்தந்த குடும்பத்தில் உள்ள மாமியார் ஆண்களைப் போலத்தான் நடந்துகொள்கின்றனர்.
ஓர் ஆண், குழந்தையைப் பார்க்கும் போது ஒருவிதமான உணர்வு ஏற்படுகிறது என்றால் அவனுக்குள் தாய்மை அல்லது பெண் ஆற்றல் (feminine energy) உள்ளது. அதேபோன்று ஒரு பெண் தனியாக வேலை செய்கிறார் என்றால் அவளுக்குள் ஆண் ஆற்றல் (masculine energy) உள்ளது. ஆணாதிக்கம் செலுத்தும் போது ஒருவருக்குள் இருக்கும் ஆண் ஆற்றல், பெண் ஆற்றலை முழுவதும் அடக்கி வைத்துவிடுகிறது," என்று கூறுகிறார் ஷர்மிலி.
செயற்கை கருவூட்டலில் பெண்களுக்குக் கொடுக்கப்படும் அழுத்தம்

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து பேசிய அவர், "திருமணமாகி குழந்தை இல்லை என்றால் உடனே மருத்துவரைச் சென்று பார்க்கின்றனர். இதற்காகக் கொஞ்ச காலம் காத்திருப்பதில்லை. அதற்கேற்ப அறிவியலும் வளர்ந்துள்ளதால் உடனே செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற முயல்கின்றனர். அதை பயன்படுத்துவது தவறில்லை. ஆனால் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது முக்கியமானது.
தற்போதைய சூழலில் நிறையப் பெண்கள் அழுத்தம் மற்றும் கட்டுப்பாட்டால் செயற்கை கருவூட்டல் முறையில் குழந்தை பெற இந்த சமுதாயத்தால் தள்ளப்படுகின்றனர்.
இரண்டாவது விஷயத்தில், தாய்க்குள் ஒரு ஸ்திரத்தன்மை இல்லை என்றால் இன்னொரு குழந்தைக்கு இந்த ஸ்திரத்தன்மையைக் கொடுக்க முடியாது. அதுமட்டுமின்றி குழந்தை பெற அந்த பெண்ணிற்கு 7 ஆண்டுகள் தாமதமானது. குழந்தை பெற்றதற்குப் பிறகு தன்னை தனக்குப் பிடிக்காமல் இருக்கும்போது தன்னுடைய குழந்தையை வெறுக்கத் தொடங்குவார்கள். இதை மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு (Postpartum Depression) என்று அழைப்பார்கள். ஆனால் அவரது மன உளைச்சலுக்கு அவை மட்டும் காரணமில்லை.
இத்தனை காலம் குழந்தை இல்லாமல் வலிமையற்ற நிலையிலிருந்த அவர், குழந்தை பெறும் போது மேலும் வலிமையற்ற சூழலுக்கு உடலளவிலும் மனதளவிலும் தள்ளப்படுகிறார். இதனால் அந்த பெண் மன அழுத்தத்தின் உச்சத்திற்குச் சென்றிருப்பார். அதனால் தான் இவ்வாறு செய்திருக்கக் கூடும்," என உளவியல் நிபுணர் ஷர்மிலி ராஜகோபாலன் கூறுகிறார்.
அறிவியல் ரீதியாக வளர்ந்தாலும் பழமையின் பிடியில் இருக்கும் சமுதாயம்
உலகத்தை விரல் நுனியில் வைத்துப் பார்க்கும் அளவிற்கு அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளது. அது மனிதர்களை அதிவேகமான தொழில்நுட்பம் மூலம் அடுத்தடுத்த நூற்றாண்டிற்குக் கொண்டு செல்கிறது. ஆனால் இவை ஒருபுறமிருக்க பழமையின் பிடிப்பு மற்றும் அதனுடைய வலை மனிதர்களை சில விஷயங்களில் முன்னேற விடாமல் தடுப்பதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், பெண்ணிய சிந்தனையாளருமான அ. அருள்மொழி பிபிசி தமிழிடம் கூறினார்.

"இந்த பெண் வயிற்றில் துணியைக் கட்டிக்கொண்டு நடித்ததைத் திரைப்படத்தில் பார்த்திருக்கலாம். அதே போன்று தற்கொலை செய்து கொண்ட மற்றொரு பெண் எவ்வளவு கடினமான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு குழந்தை பெற்றெடுப்பதும், வளர்ப்பதும் பிரச்னைக்கு உரியதாகிவிட்டால் அந்த குழந்தையை வளர்க்கும் மொத்த சுமையும் தாய் மீது தான் இந்த சமூகம் திணிக்கிறது. தற்போது சில இளைஞர்கள் குழந்தை பொறுப்பை அவர்களும் ஏற்கிறார்கள், குழந்தையைக் கவனிக்கின்றனர். அப்படி தந்தை ஒருவர் குழந்தைக்காகத் தனது வாழ்வைத் தியாகம் செய்கிறார் என்றால் அதைப் போற்றுதலுக்கு உரிய விஷயமாகப் பார்க்கின்றனர். அதே விஷயத்தை ஒரு தாய் செய்யும்போது குழந்தைக்கு அவர் செய்யாமல் யார் செய்வார்கள் என்று மிக இயல்பாகவும் எந்தவித மதிப்பீடு இல்லாமல் கணிக்கப்படுகிறது," என்கிறார்.
குழந்தை பிறப்பு என்பது பெண்ணின் மிகப்பெரிய கடமையாக கருதும் இந்த சமுதாயம், அந்தக் குழந்தையை வளர்ப்பதில் மட்டும் உரிமை கொண்டாடுவதாகக் கூறுகிறார் அருள்மொழி.
"இதைப்பற்றி சமூகத்தில் எல்லா இடங்களிலும் பேச வேண்டும். இவை பற்றிய புரிதலை அனைவரிடத்திலும் கொண்டு செல்ல வேண்டும். தற்போதைய சூழலில் நிறையப் பெண்கள் திருமணம் வேண்டாம் என்ற நிலைக்கு நகர்கின்றனர். அதற்கான காரணம் இந்த குழந்தை பெறுதல் பற்றிய பயமும், தன்னுடைய எதிர்கால வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கனவுகள் எதையும் அடைய முடியாமல் போய்விடும் என்ற அச்சமும் தான்.
குழந்தை முக்கியமென்று இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் குடும்பத்தினர், இந்த குழந்தை பெற்றெடுத்து வளர்ப்பதால் உன்னுடைய வளர்ச்சி பாதிக்கப்படாமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று உறுதி செய்யவேண்டும். அவ்வாறு செய்யாமல் படிக்க வைத்தது தவறு, வேலைக்கு அனுப்பியது தவறு என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த முரண்பாட்டை எதிர்கொள்ள முடியாமல் திரும்பத் திரும்ப குடும்பம், சமூகம் மற்றும் ஆணாதிக்க பிடிமானத்துக்கு உள்ளாகும் பெண்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு இவ்வாறான தவறான முடிவுகளை எடுத்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் பெண்களை குறை கூறுவது தவறானது. இந்த சமூகம் ஆணுக்காக அவர்களுடைய வம்சங்களை, வாரிசுகளைப் பெற்றுக் கொடுப்பது மட்டுமே பெண்களுடைய கடமை என்ற போக்கு மாற்றப்பட்டால் இந்த பிரச்னைகளுக்கு முடிவு வரும்," என்கிறார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அ.அருள்மொழி.
பெண்களை பிள்ளை பெற்றுத்தரும் மறு உற்பத்தி ஆற்றலாகப் பார்க்கிறார்கள்

இந்த விவகாரம் தொடர்பாக பெண்ணிய எழுத்தாளர் வ.கீதா பிபிசி தமிழிடம் கூறுகையில், "பிள்ளை பெறும் ஆற்றல், உயிரை வாழ வைக்கும் ஆற்றல் பெண்களுக்கு எதிராக எப்படித் திருப்பப்படுகிறது. பெண்களுக்கு மட்டுமே அமைக்கப்பட்ட அந்த ஆற்றல் பெண்களுக்கு எதிராக இந்த சமுதாயத்தில் எப்படி உருவாகிறது. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆதிக்க நிலையில் உள்ள ஆண்களால் பெண்கள் ஒடுக்கப்படுவதற்குக் காரணம் இந்தப் பிள்ளை பெறும் ஆற்றலின் மீது தங்களுடைய அதிகாரத்தைச் செலுத்து விரும்புகின்றனர். பெண்ணின் கருவுறும் ஆற்றலை ஒருவரது வம்சம் தழைக்கவும், சாதி இன விருத்தி செய்து பிள்ளையைப் பெற்றுத்தர ஒரு மறு உற்பத்தி ஆற்றலாக மட்டுமே பார்க்கின்றனர்," என்கிறார் அவர்.
"குழந்தை பெற்றுத் தரமுடியாமல் போனால் சமுதாயத்தில் தகுதியும் மதிப்பும் இருக்காது என்று கருதி, எப்படியாவது செய்துவிட வேண்டும் என்று தன்னைத்தானே வருத்திக் கொள்கிறாள். இப்படிப்பட்ட அழுத்தம் மற்றும் சுமையைச் சுமந்து கொண்டே வாழ்வதால் பல நேரங்களில் பிள்ளை பெற்றுத் தருவதை தலையாய கடமையாகப் பார்த்து இதில் உடன்பட்டுச் செல்கிறாள்.
பெண் அடிமைத்தனத்தின் மிக முக்கியமான கூறாக பார்ப்பது பெண்கள் கருவுரும் ஆற்றல் மீது ஆண்கள் சேர்க்கும் அதிகாரம். பெண்கள் அறியாமை காரணமாக, வேறு வழி இல்லாததின் காரணமாக, தனித்து வாழக்கூடிய பெண், திருமணமாகாத பெண், பிள்ளை பெற மறுக்கின்ற பெண்களுக்கு மதிப்பில்லாத காரணத்தினால் தான் இவை மாறாமல் இருக்கின்றன," என கீதா தெரிவிக்கிறார்.
மேற்கத்திய நாடுகளில் பெண்ணிய நோக்கில் வரலாறு எழுதும் எழுத்தாளர்கள் சொல்லுவது குறித்து கூறும் கீதா, புரட்சிகரமான மாற்றம் என்ன என்பதற்கு வரலாற்றில் பல புள்ளிகளைச் சொல்லமுடியும். அதில் மிக முக்கியமானது, கருத்தடை சாதனங்கள் பற்றிய அறிவும், அதனைப் பற்றிய அறிவியல்பூர்வமான பார்வை பெண்களிடம் வந்து சேர்ந்ததுதான்” என்கிறார்.
"ஏனென்றால் காதலுக்கும் திருமணத்திற்கும் உண்டான உறவை அவை உடைத்தது. காதலித்தவர்களைத் திருமணம் செய்து கொண்டு பிறகு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் வாழலாம் என்ற நிர்ப்பந்தம் மற்றும் பிள்ளைக்காகத் திருமணம் செய்து கொள்வதை அது உடைத்தெறிந்தது. இதனால் பெண்கள் சுயமாக முடிவெடுக்கக்கூடிய சூழலை இவை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
தற்போதைய சூழலில் பேசப்படாத மிகப் பெரிய பிரச்னையாகச் சமுதாயத்தில் இருப்பது, எந்த அளவிற்கு பெண்கள் விஷயத்தில் குடும்பங்கள் செயலற்று இருக்கிறது என்பது தான்," எனத் தெரிவித்தார் வ.கீதா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













