பெண்கள் கருத்தரிக்காமலே போனால் உலகம் என்னவாகும்? செயற்கை கருப்பையின் புதிய கண்ணோட்டம்

பெண்கள் கருத்தரிக்காமல் போனால் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர்,
    • பதவி, பிபிசி ரீல்ஸ்

பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் அவசியம் இல்லாமல் போனால் என்னவாகும்? பெண்களுக்கு பதில், ஒரு சிறிய கருவி கருவுற்று குழந்தையைப் பெற்றெடுத்தால் எப்படி இருக்கும்? என்ன? அறிவியல் புனைகதையைப் போல் இருக்கிறதா? உலகெங்கிலும் ஆய்வுக்கூடங்களில் விஞ்ஞானிகள் இதனை சாத்தியமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

மனித கருப்பையை ஒத்திருக்கும், அதைப் போலவே செயல்படும் கருவிகளை உருவாக்கும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இதன் தற்போதைய இலக்கு, பிரசவ தேதிக்கு வெகு முன்னரே பிறக்கும் குழந்தைகளின் நலன் பேணுவது.

நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் முழுதாக வளராததால் இக்குழந்தைகளை சாதாரண இன்க்யூபேட்டர்களில் வைத்துப் பராமரிக்க முடியாது.

இத்தொழில்நுட்பம் முந்திப்பிறந்த ஆட்டுக்குட்டிகளை வைத்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருகிறது.

செயற்கை கருப்பைகள் எப்படி செயல்படுகின்றன?

இத்தொழில்நுட்பத்தை பற்றிப் பேசும் சிங்கப்பூர் தேசிய பல்கலையின் பேறுகால மருத்துவத்துறையைச் சார்ந்த ஆராய்ச்சியாளர் மேத்தியூ கெம்ப், இம்முறையில் சிசுவின் நாபிக்கொடியில் கேத்தீட்டர்கள் எனப்படும் மெல்லிய குழாய்களை இணைத்து, அதில் ரத்தம் செலுத்தப்படும், என்கிறர். "இதன்மூலம் நாம் சிசுவிற்கு பிராண வாயு பரிமாற்றத்தை வழங்குகிறோம். இதனை நிகழ்த்துவது சிசுவின் இதயம்தான். இதனால், நுரையீரலின் துணை இல்லாமலேயே சிசுவிற்கு ஆக்சிஜன் வழங்குகிறோம்," என்கிறார்.

தங்கள் குழு, சிசுவின் இதயத்தையே ரத்த ஓட்டம் நிகழ்த்தப் பயன்படுத்தியதாகச் சொல்கிறார், எய்ந்தோவன் தொழில்நுட்பப் பல்கலைகழகத்த்கின் பயோமெடிக்கல் பொறியியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஃப்ரான்ஸ் வான் த வோஸ். "அதனால் இது சிறிய ஆனால் தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் மிகவும் நுட்பமான கருவி," என்கிறார் வான் த வோஸ்.

சிசுக்களைப் போன்ற ரோபோக்களை உருவாக்கி, அவற்றை மாதிரிகளாக வைத்து இந்த ஆராய்ச்சியை செய்து வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.

கருப்பைக்கு வெளியே மனிதர்களை உருவாக்க முடியுமா?

பெண்கள் கருத்தரிக்காமலே போனால் உலகம் என்னவாகும்?

உயிருள்ள மனித சிசுக்களை வைத்து சோதனை முயற்சிகள் செய்வதற்கு இன்னும் 10 ஆண்டுகள் பிடிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஏனெனில், மருத்துவத்துறையில் புதிதாக ஒரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினால், அது நடைமுறையில் இருப்பதைவிடவும் மேம்பட்டதாக இருக்கவேண்டும், என்கிறார் கெம்ப். "23 வாரங்களில் பிறக்கும் குழந்தைகள் பிழைக்கும் விகிதம் இப்போது 40% அல்லது 50%. அதனால் அதனை விடவும் சிறப்பாக செயல்படும் தொழில்நுட்பம் நமக்குத் தேவை," என்கிறார் அவர்.

சில சமீபத்தைய ஆராய்ச்சிகள் இத்துறையின் எல்லைகளை விரிவாக்கியிருக்கின்றன. முதன்முறையாக, ஒரு செயற்கை கருப்பையில் ஆரோக்கியமான எலிகளின் சிசுக்களை 11 நாட்களுக்கு வளர்த்திருக்கிறார்கள். இதன்மூலம் அவற்றின் உள்ளுறுப்புகள் எப்படி உருவாகின்றன என்று கண்காணித்தனர். இயற்கையான கருப்பையில் இது சாத்தியமில்லை.

மனித சிசு வடிவத்தை ஒத்திருக்கும் பிற விலங்குளின் சிசுக்களை வைத்தும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணத்திற்கு முயல்.

"இவை மிகவும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டன. இது உற்சாகமூட்டும் செய்தி. ஏனெனில், இதன் மூலம் இம்முறையை மனித சிசுக்களுக்கும் பயன்படுத்தலாம் என்ற சாத்தியக்கூறு புலப்பட்டிருக்கிறது," என்கிறார் வீஸ்மன் அறிவியல் நிறுவனத்தின் மூலக்கூறு மரபியல் துறை ஆராய்ச்சியாளர் ஜேக்கப் ஹன்னா.

முயலின் சிசுவை வளர்ப்பதற்கு செயற்கை கருப்பைக் கருவிகளில் வெகு சில மாற்றங்களே தேவைப்பட்டன என்று கூறும் ஹன்னா, இதையே மனித சிசுக்களுக்கும் பயன்படுத்த முடியும் என்று தாம் கணிப்பதாக கூறுகிறார். "இதைத்தான் நாங்களும் மற்ற சோதனைக்கூடங்களும் செய்ய முயற்சித்து வருகிறோம்." என்கிறார் அவர்.

இது நடந்தால் உலகம் என்னவாகும்?

பெண்கள் கருத்தரிக்காமல் போனால் என்ன ஆகும்?

பட மூலாதாரம், Getty Images

இத்தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால் எத்தகைய மாற்றங்களை அது கொண்டு வரும்? என்ற கேள்வியை, தமது நூல்களின் மூலம் எதிகொள்கிறார் எழுத்தாளர் ஹெலன் செஜ்விக்.

தனது நூலில் தாம் ஒரு புதிய உலகத்தை கற்பனை செய்ததாக கூறுகிறார் செஜ்விக். அந்த உலகத்தில் கையடக்கமான செயற்கை கருப்பை என்ற கண்டுபிடிப்பு, சமூகத்தால் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இவர் ஒரு உயிரியல் பொறியாளராக பணியாற்றி இருக்கிறார். அறிவியல் பின்புலத்தில் இருந்து வருகிறார்.

"நான் இதனை ஒரு தீர்வாக முன் வைத்தேன். குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் உயிரை இது காக்கும். குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத மக்களின் வாழ்க்கையை இது மாற்றும். ஆனால் நம் முன் மிகப் பெரிய கேள்விகளும் இருக்கின்றன. வழக்கமான கருத்தரித்தல் மற்றும் தொழில்நுட்பத்துக்கு மாறாக ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தால், அது யார் வசம் இருக்க வேண்டும்? யார் அதை கட்டுபடுத்துவது? அது யாருக்கானது? இது மக்களின் மீது திணிக்கப்பட்ட கூடுமா?" என்கிறார் செஜ்விக்.

பொதுவாக கருப்பை இருப்பவர்கள் தான் கருத்தரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது அனைவருக்கும் கிடைத்தால் அது பாலினச் சமன்பாட்டில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்கிறார் ஓஸ்லோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த உயிரியல் நெறிமுறை ஆராய்ச்சியாளர் அன்னா ஸ்மாய்தோர்.

"இது பாலியல் பாத்திரங்களை நெகிழச் செய்யக்கூடும் ஆனால் இது எதிர்மறையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. சமூக வழமைகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யவேண்டிய அழுத்தத்தை பெண்கள் இன்னும் சந்தித்துக் கொண்டிருக்கும் சமூகத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அறிவியல் கண்டுபிடிப்புகள் மட்டுமே புரட்சியை கொண்டு வந்து விடாது. இந்த கண்டுபிடிப்புகளின் மீதான சமூகத்தின் எதிர்வினைதான் அதனை நிகழ்த்தும்," என்கிறார் அவர்.

சிக்கலானதா? பயனுள்ளதா?

பெண்கள் கருத்தரிக்காமலே போனால் உலகம் என்னவாகும்?

பட மூலாதாரம், Getty Images

இத்தொழில்நுட்பத்தில் இருக்கும் நெறிமுறை சிக்கல்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

"கர்ப்ப காலம் முழுவதும் ஒரு சிசு, மனித உடலுக்கு வெளியே வளர முடியும் என்கிற இந்த தொழில்நுட்பம் சாத்தியப்படுமானால், துவக்கத்திலேயே அதன் நம்பகத்தன்மை பற்றி ஆலோசிக்க வேண்டும்," என்கிறார் செஜ்விக்.

முதல் டெஸ்ட் டியூப் குழந்தை பிறந்த 1970களில் அதற்கான எதிர்ப்பும் அதைப் பற்றிய கவலைகளும் இருந்தன. குழந்தைப் பேற்றில் அறிவியல் இந்த அளவுக்கான ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிரான நிலைப்பாடு இருந்தது, என்கிறார் அன்னா ஸ்மாய்தோர்.

"பல சமயங்களில் ஒரு விஷயத்தை மக்கள் ஆபத்தானது என்று கருதி விட்டால் பின்னர் அது பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டால் கூட அவர்கள் கருத்தை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். இந்த தொழில்நுட்பத்தின் செயற்கைத்தனத்தினாலும், மனிதனின் இயற்கையான உயிரியல் வடிவத்துக்கு எதிரான போக்கினாலும் இந்த பார்வை எழுகிறது," என்கிறார் அவர்.

"நெறிமுறைகளை சமரசம் செய்து கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் பெரிய பயன்களை நமக்கு அளிக்கும். யாரோ ஒருவர் அணுகுண்டு தயாரிக்கக் கூடும் என்பதற்காக அணு இயற்பியலை, நாம் தடை செய்ய மாட்டோம். யாராவது ஒரு ஆபத்தான நோயை உருவாக்கக் கூடும் என்பதற்காக நாம் வைரஸ் ஆராய்ச்சிகளை முற்றிலுமாக தடை செய்யமாட்டோம்," என்கிறார் ஜேக்கப் ஹன்னா.

"அதே போல தான் இதுவும். இதை பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். மனம் திறந்த விவாதங்களில் ஈடுபட வேண்டும். ஏனெனில் இத்தொழில்நுட்பம் நமக்கு மிகப்பெரிய பலன்களை அளிக்கக் கூடியது," என்கிறார் ஹன்னா.

இது அவசியமானதுதானா?

பெண்கள் கருத்தரித்தல்

பட மூலாதாரம், Getty Images

சமீபத்தில் இத்தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலாளிகள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படையாகக் தெரிவித்திருந்தனர். கருவுருதல் எனும் மிகப்பெரிய பளுவினைக் குறைக்கவும், பாலின சமத்துவத்தை கொண்டு வரவும் இதை அவர்கள் ஆதரிப்பதாக தெரிவித்திருந்தனர்.

இக்கருவிகளை இயக்குவது மிகவும் சிக்கலானது. மிகவும் திறன் வாய்ந்த பணியாளர்கள் பலர் இதற்கு தேவைப்படுவார்கள், பெருமளவு பொருட்செலவும் ஏற்படும், இவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும், என்கிறார் மேத்யூ கெம்ப். "கல்வி, மருத்துவம், குழந்தை நலன் போன்ற மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு இந்த பொருளை செலவிடுவது இதனைவிட சிறந்ததாக இருக்கும்," என்கிறார்.

இது பெண்களுக்கு விடுதலை தருமா?

ஆனால், பெண்கள் கருத்தரித்து குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றால், என்ன நடக்கும்?

ஒவ்வொரு பெண்ணும் இதற்கு வெவ்வேறு வகையில் பதிலளிக்கக் கூடும், என்கிறார் செஜ்விக்.

"தனிப்பட்ட முறையில் எனக்கு இது மிகச்சிறந்த விஷயமாக இருக்கும். ஆனால் பல பெண்களுக்கு இது பேரிழப்பாக இருக்கும். இத்தொழில்நுட்பத்தின் உருவாக்கத்தில் பெண்கள் முக்கியமான பங்காற்ற வேண்டும் என்பதும் அவசியம். பெண்களின் உடலுக்குள் என்ன நடக்க வேண்டும் என்பதை ஆணாதிக்க போக்குகள் கட்டுப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அது தனிப்பட்ட பெண்களின் தேர்வாக இருக்க வேண்டும்," என்கிறார் அவர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: