சர்வதேச பெண் குழந்தைகள் நாள்: 'நான் ஏன் என் இரண்டு மகள்களை கொன்றேன்?' - ஒரு தாயின் கண்ணீர் வாக்குமூலம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
(பிபிசி தமிழில் சென்ற ஆகஸ்ட் மாதம் வெளியான இந்தக் கட்டுரை சர்வதேச பெண் குழந்தைகள் நாளான இன்று மறுபகிர்வு செய்யப்படுகிறது.)
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர், தனக்கு தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகள் பிறந்ததால், உறவினர் மற்றும் கிராம மக்களின் தொடர் கேலிக்கு ஆளாகி, ஒரு கட்டத்தில் தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தார். முடிவில், குழந்தைகள் இறந்தும் அவர் மட்டும் உயிரோடு இருக்கிறார்.
கைது செய்யப்பட்ட தாய் வாசுகி(பெயர் மாற்றப்பட்டுள்ளது), தன்னுடைய இயல்பு நிலையில் இருந்து தான் தனது குழந்தைகளை கொலை செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம் வைக்கப்பட்டது. பெண் குழந்தைகள் மீதான பாகுபாடு நவீன காலத்திலும் எவ்வாறு நீடிக்கிறது என்பதை உணர்த்தும் வழக்காக வாசுகியின் வழக்கை பார்க்கவேண்டும் என தீர்மானித்த நீதிபதி பரதசக்ரவர்த்தி, வாசுகி தனது மற்ற இரண்டு பெண் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்கவேண்டும் , படிக்க வைக்கவேண்டும் என்ற உத்தரவாதத்துடன் அவருக்கு விடுதலை அளித்தார். நவீன காலத்து நல்லதங்காளாக வாசுகி இருப்பதாக கூறினார் நீதிபதி பரதசக்ரவர்த்தி.
நல்லதங்காள் என்ற பெண் நாட்டார் தெய்வம் தமிழகத்தின் பல இடங்களில் குலதெய்வமாக வணங்கப்படுகிறது.
கதையின்படி, ஒரு காலத்தில் வாழந்த நல்லதங்காள் என்ற பெண் கணவரால் நிராகரிக்கப்படுகிறாள், தனக்கு பிறந்த ஏழு குழந்தைகளை வறுமை காரணமாக வளர்ப்பதற்கு சிரமப்பட்டு, தனது அண்ணனின் வீட்டுக்குச் செல்கிறாள். அண்ணன் இல்லாத நேரத்தில் அவனது வீட்டில் உதவி கிடைக்காமல் அண்ணியால் அவமானப்படுத்தப்படுகிறாள். கொடுமைதாளாத நல்லதங்காள், தனது குழந்தைகளை ஒவ்வொன்றாக பாழடைந்த கிணற்றில் வீசிவிட்டு தானும் விழுந்து தற்கொலை செய்துகொள்கிறாள்.
பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு என வாய்ப்புகள் பெருகியுள்ள காலத்திலும் கூட நல்லதங்காளை போல, தனது குழந்தைகளை தானே கொலை செய்யும் நிலைக்கு தாய் வாசுகி தள்ளப்பட்டதாக நீதிபதி பரதசக்ரவர்த்தி கருதியுள்ளார். வாசுகி பிபிசி தமிழிடம் தனது மனக்குமுறலை பகிர்ந்துகொண்டார்.

பட மூலாதாரம், Getty Images
அவரது கதை அவரது மொழியில்:
நானும் வீட்டுக்காரரும் கூலிவேலைக்கு போறோம். என்னோட வீட்டுக்காரர் குடும்பத்திலோ, என்னுடைய குடும்பத்திலோ காசு பணம் கொடுத்து உதவரத்துக்கு யாரும் இல்ல. தினக் கூலி வேலையில கிடைக்கிற வருமானத்திலதான் நாங்க வாழறோம். தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகள் எனக்கு பொறந்துச்சு. எங்க ஊர்ல என்னை பத்தி புரளி பேசறது பலருக்கு பொழப்பா இருந்துச்சு. பெண் குழந்தைகள பெத்தவ, இவ ராசி இல்லாதவனு சொந்தங்களும், ஊர்மக்களும் என் காதுபடவே பேசுனாங்க. எனக்கு ஆறுதல் சொல்லறவங்க யாருமே தென்படல.
பெண் குழந்தையை வளக்கறது பெரிய சுமையா பாக்கற சமூகத்திலதான இன்னைக்கும் நாம இருக்கிறோம். முதல் குழந்தை பொண்ணு சரி, இரண்டாவது குழந்தை பொண்ணா பொறந்துச்சு அப்பவே எனக்கு கஷ்டம்தான், இருந்தாலும், மூணாவது பையனா பொறந்திறுமுனு நம்பிக்கை இருந்துச்சு... நான் கர்ப்பமா இருந்தப்போ, எனக்கு என்ன குழந்த பொறக்கும்னு எனக்கு இருந்த எதிர்பார்ப்ப விட, என்னை சுத்தி இருக்கிறவங்கதான் ரொம்ப மும்மரமா இருந்தாங்க.
எல்லா பொண்ணுங்களும், தன்னோட வயித்தில இருக்கிற குழந்த பொண்ணா இருந்தாலும், பையனா இருந்தாலும், அந்த குழந்த நல்லபடியா பொறக்கனும்னுதான் ஆசப்படுவாங்க. அப்படிதான் நானும் நினைச்சேன். ஆனா, மூணாவது குழந்த பொறந்து கொஞ்ச நாள்ல எனக்கு ஏற்பட்ட மனசோர்வுக்கு அளவு இல்ல. என்ன பாக்கவந்தவுங்க, எனக்கு தெரிஞ்சவங்க, ஊர்காரங்கனு பலரும் எங்கிட்ட ஏதோ, குறைபாடு இருக்காறமாதிரி சொன்னாங்க..
கர்ப்பமாக இருக்கிற சமயத்துல,பொறக்கப்போற குழந்த ஆணா, பொண்ணா எந்த குழந்த பொறக்கணும்னு எந்த பொம்பளையும் முடிவு பண்ண முடியாது. இத எத்தன பேருகிட்ட சொல்லமுடியும்? சொன்னாலும், யாரும் அத கேக்கரவங்க இல்ல... பொண்ணா பொறந்தா அவள கட்டிக் கொடுக்கரவரைக்கும் பிரச்னதானு சொல்றாங்க...
உண்மையா சொல்றேன்..அன்னைக்கு என்னோட இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்திறலாம்னு நான் எப்படி முடிவு எடுத்தேன்னு எனக்கே புரியல...எனக்கு சுயநினைவே இல்லனுதான் நினைக்கிறன்.....
இப்ப இருக்கற காலத்துல பொண்ணுங்களுக்கு பாதுகாப்பு இல்ல... நாம பாத்து வளத்துனாலும்.. ஏதாவது வயசு கோளாறு பிரச்னையில அது சிக்கினா பெரிய விஷயமா ஊரு பாக்கும்...நாளைக்கு அந்த பொண்ணு வேற யாரையாவது விரும்புச்சுனா அது குடும்பத்துல பிரச்னயா மாறும்...அதவிட அந்த பொண்ணு வேற காரணத்துல தற்கொலை செஞ்சு செத்துபோச்சுனாகூட.. ஊர் சும்மா இருக்காது... அந்த பொண்ணு ஏதோ தப்பு பண்ணிட்டா... வயித்துல குழந்த இருந்திருக்கும்னு சொல்லுறவங்கதான் அதிகம்..பொண்ணுக மேல வெறுப்பு இல்ல..சுத்தி நடக்கற சூழல் மேல இருக்கற வெறுப்புதானு நினைக்கிறேன்...
குடும்பத்தில நம்மகூட இருக்கறவங்க நேரடியா எதுவு சொல்லமாட்டாங்க... வெளியில இருக்கறவங்க நம்மகிட்ட ஜாடையா சொல்வாங்க.. எனக்கு மூணும் பொண்ணா பொறந்துச்சு..அதனால என்னைய டைவர்ஸ் பண்ணிட்டு, வீட்டுகார்ரு வேற கல்யாணம் பண்ணறத பத்தி ஜாடையா பேசுனாங்க... கிராமத்து ஸ்டைல நிறைய பேசுவாங்க... எனக்கு வேற வழி தெரியல...குழந்தைகளுக்கு விஷத்த கொடுத்துட்டு நானும் குடிச்சிட்டேன்... ஆஸ்ப்பித்ரீல என்னைய மட்டும் காப்பாத்தீட்டாங்க..ரெண்டு புள்ளைங்களும் செத்துப்போச்சு...என்னோட வீட்டுக்காரு வேற கல்யாணம் பண்ணல.. கோவமா பேசுவாரு அவ்ளோதான்.. அப்போ நான் வெளியில போயிருவேன்...
படிச்ச பொண்ணா இருந்தாலும், படிக்காத பொண்ணா இருந்தாலும், ஒரு பொண்ணுக்கு தொடர்ந்து பெண் குழந்தயா பொறந்தா, அக்கம் பக்கம் இருக்கறவங்க, சொந்தகாரங்க குத்திக்காட்டி பேசுவாங்க.. என்ன.. தைரியமான பொண்ணா இருந்தா அத சமாளிச்சிருவாங்க...புத்திசாலிதனம் இல்லாதவங்க தோத்துப்போறாங்க...
அது எப்படி உன் குழந்தைக்கு விஷம் கொடுத்தது உனக்கு தெரியாதானு நீங்க கேக்கலாம்...நானும் தோத்துப்போயிட்டேன்...அதனாலதான புத்தி கொழம்பி கொன்னுட்டேன்..
என்னோட குழந்தைகளுக்கு விஷத்த கொடுத்தபோ நான் நானாவே இல்ல... இந்த மாதிரி கஷ்ட காலத்தில,

பட மூலாதாரம், Getty Images
ஒரு பொண்ணு ஒரு முடிவு எடுக்கறதுக்கு, அவ மட்டுமே காரணம் இல்ல...அவளோட வசதி, அவளுக்கு அக்கம் பக்கம் இருக்கறவங்க பேசற பேச்சு, அவளோட சூழல்னு எல்லாமேதான் காரணம்... இதல்லாம் சேத்துதான் என்ன அந்த முடிவு எடுக்க தள்ளுச்சு..எனக்கு ரொம்ப மனஅழுத்தம் இருந்துச்சு...
நான் இன்னும் அந்த அழுத்தத்துல இருந்து வெளியில வரவேஇல்ல...அதே அழுத்தத்தில்தான் இருக்கறேன்..ஆனா குழந்தைக்காக, அவளோட சிரிக்கறேன்.
நான் இருக்கற ஊருலதான் கடைசிவரைக்கும் வாழ போறேன்..இங்க இருக்கறவங்க பலரோட முகத்தில முழிக்ககூட எனக்கு விருப்பம் இல்ல..நான் காலையில சீக்கிரமா குழந்தைக்கு சாப்பாடு செஞ்சிட்டு. வேலைக்கு போயிருவேன்... இருட்டுகட்டுன பொறவுதான் வீட்டுக்கு வருவேன்...மத்தபடி முன்ன மாதிரி யாரையும் பாக்கவோ,பேசவோ மாட்டேன்... வீட்டுக்கு சீக்கிரம் வந்தாகூட, உடனே கதவ சாத்திக்கிட்டு, உள்ளயே இருந்திருவேன்... எனக்கு இன்னும் தைரியம் வரல...
என்னோட புள்ளைளுக்கு என் கையிலே வெசத்த கொடுத்தது எப்போதுமே மறக்கமுடியாது...அதுக எந்த பாவமும் செய்யல....
நீதிபதி முன்னாடி கண்ணீர்விட்டு எனக்கு நேர்ந்த பிரச்னைய சொன்னேன். கேஸ் நடக்கற சமயத்தில நான் கர்பமானேன்...பெண் குழந்ததான் பொறந்துச்சு...நான் குடும்ப கட்டுப்பாடு பண்ணிட்டேன், எனக்கு நாலாவது பொறந்ததும் பொண்ணுதான்.. அதனால இனி எந்த தவறும் செய்யமாட்டேனு நீதிபதிகிட்ட சொல்லிட்டேன்... ஆண் குழந்தையாக இருந்தாலும், பெண் குழந்தையாக இருந்தாலும் எல்லாம் ஒன்னுதானு நான் நம்புறேன். அதனால இப்ப இருக்கற ரெண்டு புள்ளைகள படிக்கவப்பேன்.
சின்ன பொண்ண பால்வாடியில சேர்த்திருக்கோம், பெரியவ பக்கத்துல இருக்கற கவர்மண்ட் ஸ்கூல 5ம்வகுப்பு படிக்கறா.
ஒன்னு மட்டும்தான் நெசம்....அக்கம் பக்கம் பேசறதுக்கு காதுகொடுத்து வாழக்கைய தொலைக்ககூடாதுனு..நமக்குன்னு பொறந்தது நம்ம குழந்தனு புரிஞ்சிது...

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













